Saturday, 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 55


                                                                      பைரவர்
ரக்த ஜ்வால ஜடாதரம் சசிதரம் ரக்தாங்க தேஜோமயம்
டக்கா சூல கபால பாசக தரம் ரக்ஷகரம் பைரவம்
நிர்வாணம் சுநவாஹனம் த்ரிநயனஞ் சாநந்த கோலாஹலம்
வந்தே பூத பிசாச நாத வடுகம் கேஷ்த்ரஸ்ய பாலம் சுபம்

பொருள் சிவந்த ஜுவாலைகளுடன் கூடிய ஜடாமுடியில் சந்திரன் திகழ, சிவந்த மேனியுடன் ஒளிமயமாக விளங்குபவர்; உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை ஏந்தியவர்; உலகைக் காப்பவர்; (பாவிகளுக்கு) பயங்கரமான தோற்றம் உடையவர்; நாயை வாகனமாகக் கொண்டவர்; மூன்று கண்களை உடையவர்; எப்போதும் ஆனந்த வடிவில் மிகுந்த கோலாகலத்துடனும் பூத- பிசாசுக் கூட்டங்களுக்குத் தலைவனாகவும் திகழும்... வடுகரும், கேஷ்த்திர பாலகருமான பைரவரை வணங்குகிறேன்!
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களு மாக விளங்கினார். எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர். இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார். அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
இன்னொரு கதையும் சொல்வர்.
திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்!

இதில் சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு பண்ணினார். 'பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி' என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்தாராம் பைரவர். மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால், ''முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அளித்தீர். இப்போது நீரே நான்முகனாகி விட்டீர். எனவே அவனை மன்னியுங்கள்!'' என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டார்.
''வேதம் ஓதுவோருக்கு இனி நீரே அரசன்; அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு! யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு'' என்று அருளினார் ஈசன். எனவே, பிரம்மன் தனது நான்கு முகங்களாலும் வேதங்களை ஓதிக் கொண்டே இருப்பதால், வேதன், வேதி, வேதா, வேதபுரோகிதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
படிப்பு மற்றும் அறிவினால் வித்யாகர்வம் வந்து விடுகிறது; ஆணவமும் செருக்கும் உண்டாகிறது; இறுமாப்பு மற்றும் அகங்காரம் தலைதூக்கி விடுகிறது. இதனால் பொய்யும் புரட்டும் அதிகமாகி, பிற உயிர்களுக்குத் துன்பத்தையும் தீமையையும் ஏற்படுத்தி விடுகிறது. இவற்றையெல்லாம் சிவபெருமான் நீக்கினார் என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.
தனது உக்கிரத்தில் இருந்து பைரவ மூர்த்தியை சிருஷ்டித்து பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்குவதற்காக அவனது தலையை கொய்தார் அல்லவா சிவபெருமான்! இந்த பைரவ மூர்த்தியை பிரம்மசிரக் கண்டீஸ்வரர் என்று அழைப்பர்.
சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதன்மையானது கண்டியூர். இங்கு பிரம்மனது ஒரு தலையை கண்டித்து, துண்டித்ததால் இந்த ஊருக்கு கண்டியூர் என பெயர் அமைந்ததாம்! தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர்.
இங்கு மேற்கு பார்த்த சந்நிதியில் சிரக்கண்டீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள்- மங்களநாயகி.
பிரம்மனின் தலையைக் கொய்த பைரவரின் வடிவம் இங்கு உள்ளது. பிரம்மன், இங்கு திருக்குளத்தை (பிரம்ம தீர்த்தம்) அமைத்து, சிவனாரை வழிபட்டான் என்பர். கண்டியூர் வீரட்டனாத்து மகாதேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரம்மசிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் திருக்கோயிலில் உள்ளது. இதில் ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மன். எட்டு கரங்களில் ஒரு கரத்தில், பிரம்மனின் தலையையும் வில், மான், மழு, அம்பு, சூலம், பாசம் ஆகியவற்றை ஏந்தியபடி இன்னொரு கரத்தில் வியோம முத்திரையுடன் தரிசனம் தருகிறார் பைரவர்! சடையில் பாம்புகள்; முகத்தில் கடுங்கோபம்; வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்தும் காட்சி தருகிறார்.
காஞ்சிக்குத் தெற்கில் உள்ள பெருநகர் என்பது பிரம்மன் சிவபெருமானை வழிபட்ட பிரம்ம நகரம். இங்கு உள்ள தனிச் சந்நிதியில் பைரவ சிவன் வடிவம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது.
வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து அவரிடம் உலகைக் காக்கும் பொறுப்பை அளித்தார் சிவபெருமான். எதிரிகளுக்கு பயத்தையும் தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்!
பைரவர் என்றால் பயங்கரமானவர் என்று பொருள். பெண்களுக்குக் காவலாக இருந்து தர்மத்தைக் காப்பதால் இவர் பைரவர் என்பாரும் உண்டு. பைரவர் என்பது மருவி வைரவர் ஆனதாகச் சொல்வர். வைரம் போல் திடமான தேகம் கொண்டவர்; பக்தர்களுக்கு வைரம் போன்ற உறுதியான கோட்டையாக இருந்து காவல் தெய்வமாக விளங்குபவர் என்பதற்காகவும் வைரவர் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
தலை மீது ஜ்வாலா முடி; மூன்று கண்கள் மற்றும் மணிகளால் கோர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிந்தும் காணப்படுகிறது பைரவரின் வடிவம்! பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு; முன்னிரு கரங்களில் சூலம், கபாலம்! காவல் தெய்வம் என்பதால், காவலுக்கு உதாரணமாக சொல்லப்படும் நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இவரது வாகனமான நாய் இவருக்குப் பின்னே குறுக்காகவும், சில இடங்களில் நேராகவும் உள்ளது. சில தலங்களில், நான்கு நாய்களுடன் காட்சி தருகிறார் பைரவர்!
வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்கின்றனர்.
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment