Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 41

                                       சண்டேச அனுக்ரஹர்
தொடர்ச்சி...

த்தரகாமிக ஆகமத்தின்படி, தேவியுடன்... சந்திரசேகர கோலம் தாங்கி அமர்ந் திருப்பார் சிவபெருமான். அவர் முன் கூப்பிய கரங்களுடன் நிற்பார் சண்டேசர் அல்லது அமர்ந்தும் இருப்பார். சிவபெருமான், தம் வலக் கரத்தில் இருக்கும் பூமாலையை,இடக் கையால் சண்டேசரின் தலையைச் சுற்றிக் கட்டுவது போல் விளங்குவார். பூர்வகாரண ஆகமும், சில்பரத்னமும் இந்த முறையிலேயே சண்டேச அனுக்ரஹரின் வடிவைக் காட்டுகின்றன.
மகேஸ்வர வடிவங்களில், நாயனார் ஒருவரது வரலாற்றுடன் தொடர்பு உடையது இது மட்டுமே! சண்டேசர்... ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பெறுகிறார் சூரியன்- தேஜஸ் சண்டர்; விநாயகர்- கும்பச் சண்டர்; சுப்ரமண்யர்- சுமித்ர சண்டர்; சிவன் கோயில்களில் த்வனி சண்டர். சிவ பூஜையில்- பஞ்சாவரண பூஜையில் 3- வது ஆவரணத்தில் ஆதி சண்டர் வருகிறார்.
மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் ரதத்தில் சண்டேஸ்வரர் சிற்பம் காணப்படுகிறது. இறைவன், சண் டேசரை தம் தோளுடன் நெருக்கமாக அணைத்து அன்பைப் புலப்படுத்தும் பாவனையில் திகழ்கிறது இந்தச் சிற்பம். கங்கை கொண்டசோழபுரத்தில் உள்ள சிற்பமும் அற்புதமானது. மதுரை, சுசீந்தரம், சிதம்பரம், காஞ்சி ஸ்ரீகயிலாயநாதர் கோயில் ஆகிய இடங்களிலும் ஸ்ரீசண்டேச அனுக்ரஹரின் திருவடிவைக் காணலாம்.
சிதம்பரம் கோயிலில் உள்ள ஸ்ரீஆதிசண்டர் நான்கு முகங்களுடன் விளங்குகிறார். திருவாரூரில் எமதர்மனே சண்டேசர் பொறுப்பை ஏற்றுள்ளார். சேய்ஞலூரில் அருள் பாலிக் கும் ஸ்ரீசண்டேசர் பிறை, சடை, குண்டலம் மற்றும் கங்கை ஆகிய சிவ சின்னங்களுடன் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது
ஏகபாத மூர்த்தி
சிவபெருமான், தாம் படைத்த உலகம் தடைபடாமல் இயங்க... படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்ரஹம்) ஆகிய ஐந்தொழில்களை (பஞ்ச கிருத்தியம்) இடைவிடாது நடத்த... பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ் வரன், சதாசிவன் எனும் ஐந்து மூர்த்திகளைப் படைத்துள்ளார். இந்த மூர்த்திகளுக்கென்று தேவியர்களையும், தனித் தனி உலகத்தையும் படைத்து அளித்துள்ளார்.
ஐந்து மூர்த்திகளில் ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய மூவரும் சிவபெருமானாகவே வணங்கப்படுகின்றனர். இதில், ருத்திரருக்குச் செய்யப்படும் பூஜைகள் சிவ பெருமானையே அடைகின்றன. ருத்திரன் எப்போதும் சிவனாரின் இதயத்திலேயே ஒடுங்கியிருப்பவர். ஆதலால், ருத்திரனுக்கென்று தனியே ஓர் உருவம் அமைக்காமல், சிவபெருமானின் திருவுருவையே ருத்திரனாகக் கருதி, அவருடன் பிரம்மன் மற்றும் மகாவிஷ்ணு ஆகியோரையும் சேர்த்து, 'மும்மூர்த்திகளாக' வழிபடுகிறோம்.
சிவபெருமான், தம் வல பாகத்தில் இருந்து பிரம்மனையும், இட பாகத் திலிருந்து திருமாலையும் இதயத்தின் மத்தியில் இருந்து ருத்திரரையும் தோற்றுவித்தார். பராசக்தி, தம் அம்சமாக சரஸ்வதி, லட்சுமி, உமை ஆகியோ ரைப் படைத்தருளினாள். இந்த முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகளுக்குரிய தேவிகள் ஆயினர்.
பிரம்மன்- ஞான வாளையும்; விஷ்ணு- சக்கரத்தையும்; ருத்திரர்- திரிசூலத்தையும் பெற்றனர். மேலும், பிரம்மனுக்கு அட்ச (ஜப) மாலையையும், விஷ்ணுவுக்கு சங்கையும், ருத்திரருக்கு கேடயத்தையும் அருளினாள் பராசக்தி. 'பிரம்மனின் உலகம்- சத்ய லோகம்; விஷ்ணுவின் உலகம்- வைகுண்டம்; ருத்திரனின் உலகம்- ஸ்ரீபவனம் எனப்படும். எனினும், சிவ பெருமானே... மூவரையும் படைத்தமுதல்வனா கவும், அவர்களை இயக்குபவராகவும், தானே மும்மூர்த்தியராகவும் திகழ்கிறார்' என்கிறது சிவமகாபுராணம். இந்த தகவல், தேவார திருமுறை களிலும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் சீர்காழி தலத்தில் பாடிய திரு எழு கூற்றிருக்கை எனும் சித்திரக் கவியில், 'இருவரோடு ஒருவனாகி நின்றனை...' என்றும், 'படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை' என்றும் போற்றுகிறார். 'மூவரானார் மூவுலகம் ஏத்தும் முதல்வரானார்...' என்று திருநாவுக்கரசர் பாடுகிறார்.
மனிதர்களது ஒரு வருடம்- தேவர்களுக்கு ஒரு நாள்.மனிதனின் 365 வருடங்கள்- தேவர்களுக்கு ஓர் ஆண்டு. இது போன்று 12,000 ஆண்டுகள் கழிந்தால், தேவர்களுக்கு ஓர் ஊழிக் காலம் முடிவடையும். இப்படி 4,000 ஊழிக் காலங் கள் (அதாவது, நான்கு கோடியே எண்பது லட்சம் தேவ வருடங்கள்) கழிந்தால், பிரம்மனுக்கு ஒரு பகல் பொழுது முடிவடையும். (இதே கணக்கை வேறு விதமாகவும் கூறுவதுண்டு)
அப்போது, கடல் பொங்கி எழும். பெருமழை பொழிந்து, எங்கும் வெள்ளக் காடாக மாறும்; உலகம் நீரில் மூழ்கி அழியும். இதுவே பிரளய காலம் எனப்படும்.
இந்தப் பிரளய காலத்தில், அனைத்து அண்டங்களும் நீரில் மூழ்கும்; நீரை, நெருப்பு எரிக்கும்; அந்த நெருப்பு காற்றில் கலக்கும்; காற்று விண் வெளியில் ஒடுங்கும்!
இந்த வேளையில்... சிவபிரானின் வல பாகத் தில் பிரம்மனும், இட பாகத்தில் திருமாலும், இதயத்தில் ருத்திரனும் ஒடுங்குவர். இந்த நிலையில்சிவபெருமான், ஏக பாதராக- ஒற்றைக் காலுடன் காட்சியளிப்பார். இந்தத் திருவடிவமே ஏகபாத மூர்த்தி!
இகம்- பரம் என்ற இரண்டு நிலைகளை சிவபெருமானின் திருவடிகள் குறிக்கின்றன. ஊழிக்காலம் முடிந்ததும், 'பரம்' ஒன்றே நிலை
பெற்றிருக்கும். இதை உணர்த்தும் வகையில், ஒற்றைத் திருவடியுடன் விளங்குவார் சிவ பெருமான். மேலும், பிரளயக் காலத் தில் அனைத்து உயிர்களும் சிவபெரு மானிடம் சரணடைகின்றன.
அவை அனைத்தும் தன் திருவடியில் லயம் அடைய (ஒடுங்க) வேண்டி ஏகபாத மூர்த்தியாக விளங்குகிறார் சிவபெருமான். இது, ஓர் அற்புத திருவடிவமாகும்.
பின் வலக் கரத்தில்- சூலம்; இடக் கரத்தில்- மழு, முன் வலக் கரத்தில்- அபயம்; இடக் கரத்தில்- வரத முத்திரையுடன் திகழ்கிறார் ஏகபாத மூர்த்தி. புலித்தோல் உடுத்தி, மணிகளால் ஆன மாலையை அணிந்து, ஜடையில்-சந்திரன் மற்றும் கங்கையுடன் விளங்குகிறார் இவர்.
விஸ்வகர்ம சிற்ப சாஸ்திரத்தில், ஏகபாத மூர்த்தி 16 கரங்கள் உடைய வராகக் காட்டப் படுகிறார்.
மதுரை- ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நந்தி மண்டபத்தில் தூண் ஒன்றில் உள்ள ஏகபாத மூர்த்தி சிற்பம் அற்புதமானது; வேறு எங்கும் காண்பதற்கு அரியது!
(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment