Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 31

                                                        
லி பொறுக்காத வாசுகி பாம்பு விஷத்தைக் கக்க... மற்றொரு விபரீதமும் அங்கு நிகழ்ந்தது! ஆம், கடலில் இருந்தும் கறுமையான 'ஆலம்' என்ற ஒரு வகை விஷம் பொங்கிற்று. வாசுகிப் பாம்பு உமிழ்ந்த நீல நிற விஷத்தை, 'காளம்' என்பர்.
இரண்டு விஷமும் சேர்ந்து, கடும் வெப்பத்துடனும் புயல் வேகத்துடனும் கூடிய கரிய புகையாக உலகைச் சூழ்ந்தது. அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள், செய்வதறியாது அங்கும் இங்கும் ஓடினர். வாசுகியின் தலைப் பக்கம் நின்ற அசுரர்களில் பலர் ஆலகால விஷத்தின் வெப்பத்தால் எரிந்து சாம்பலாயினர். இன்னும் சிலர், தீயில் வெந்து கோரமான தோற்றம் பெற்றனர்!
இப்படி பொங்கி வந்த ஆலகால விஷத்தைக் கண்டு, பிரம்மனும் திருமாலும் திகைத்தனர். இறுதியில், 'சிவ பெருமானால்தான் இந்த ஆபத்தில் இருந்து உலகைக் காப்பாற்ற இயலும்' என்ற முடிவுடன் அனைவரும் கயிலாய மலையை அடைந்து சிவனாரைச் சரணடைந் தனர். அவர்களைக் காத்தருளுமாறு அன்னை உமையவளும் பரமேஸ்வரனை வேண்டினாள்.
மகேஸ்வரன், தன் நிழலில் இருந்து தோன்றிய பேரழகு மிக்க 'சுந்தரன்' எனும் அணுக்கத் தொண்டரை அழைத்து, ஆலகால விஷத்தைத் திரட்டிக் கொண்டு வருமாறு கூறினார் (இவரே ஆலால சுந்தரர் எனும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாகத் தோன்றி தேவாரப் பாடல்களை அருளியவர்).
அதன்படி ஆலகால விஷத்தை, கருநாவற்பழம் அளவுக்கு திரட்டிய சுந்தரர், அதை ஒரு பாத்திரத்தில் வைத்து எடுத்து வந்து சிவனாரிடம் அளித்தார். உடனே தேவர்கள், ''எங்களை மிரளச் செய்த இந்தக் கொடிய விஷம், தற்போது தங்கள் கையில் கட்டுண்டு கிடக்கிறது. அதை வெளியில் விடாமல், தங்கள் திருமேனியிலேயே அடக்கி எங்களைக் காத்தருள வேண்டும்!'' என்று சிவ பெருமானை துதித்து வேண்டினர்.
உடனே சிவபெருமான் அந்தக் கொடிய விஷத்தை அமிர்தம் போலக் கருதி உட்கொண்டார். அந்த விஷம் உள்ளே இறங்கினால், சகல லோகங்களும் அழியுமே என்று எண்ணிய உமையம்மை... விஷம், சிவனாரின் கழுத்திலேயே தங்கும்படி செய்தாள். விஷத்தை அமிர்தமாக்கியவள் அம்பிகை. ஆதலால் அவளுக்கு அமுதாம்பிகை, அமிர்தேஸ்வரி என்றெல்லாம் பெயர் உண்டு. அபிராமி அந்தாதியில் 'அருந்திய நஞ்சை அமுதாக்கிய அம்பிகை' என்று பாடுகிறார் அபிராமி பட்டர்.
கொடிய விஷம் தங்கியதால், சிவனாரின் கண்டம் (கழுத்து) நீலமாயிற்று. எனவே, நீலகண்டர், விஷாபகரணர் என்றெல்லாம் திருநாமம் பெற்றார் பரமனார். 'அபகரணம்' என்றால் ஏற்றுக் கொள்ளுதல்; எடுத்துக் கொள்ளுதல் என்று பொருள். விஷத்தை விரும்பி ஏற்று அருந்தியதால் பரமனாருக்கு இப்பெயர் வந்தது என்றும் சொல்லலாம். விஷாபகரண மூர்த்தியுடன் அருள்பாலிக்கும்போது, 'விஷதோஷ ப்ரணாசினி' என்று திருநாமம் பெறுகிறாள் அம்பிகை.
தம் கழுத்தில், ஒரு நீலமணியைப் போல விஷத்தை நிலை நிறுத்திய சிவனார் பிறகு, மயக்கம் கொண்டவர் போல் ஒரு திருவிளையாடல் புரிந்தார். மயக்கத்துடன் அவர் சயனித்ததைக் கண்ட தேவர்கள் கலங்கினர்.
அதாவது, ஓர் ஏகாதசி திருநாளில் விஷம் உண்ட சிவபெருமான், துவாதசி திருநாள் முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பிறகு, திரயோதசி அன்று... மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் அதாவது பிரத் உஷத் காலத்தில் எழுந்து, தமது சூலத்தைச் சுழற்றி, டமருகத்தை ஒலித்தபடி சந்தியா நிருத்தம் எனும் நடனம் ஆடினார்.
இரவும், பகலும் சந்திக்கும் அதிகாலை வேளை, 'உஷத் காலம்' எனப்படும். இந்த வேளையை பகல் பொழுதின் முகம் என்பர். இதன் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. ஆகவே இது, 'உஷத் காலம்' எனப்படும். இதைப் போல பகலும் இரவும் சந்திக்கும் மாலைப் பொழுது, 'பிரத் உஷத் காலம்' எனப்படும். இந்தப் பொழுதின் அதிதேவதை, மற்றொரு மனைவியான 'பிரத் உஷா'.
'பிரத் உஷத் காலம்' என்பதே தற்போது பேச்சு வழக்கில், 'பிரதோஷ காலம்' எனப்படுகிறது. இந்த இரவின் முகத்தை, 'ரஜ்னி முக வேளை' என்றும் அழைப்பர். பிரத் உஷாவுக்கு 'சாயா' என்றொரு பெயரும் உண்டு. ஆகவே இந்த வேளையை, 'சாயங்காலம்' என்றும் அழைப்பர். அப்போது, உலக உயிர்களை அவள் காப்பதால் (ரட்சிப்பதால்) 'சாயரட்சை' என்றும் கூறப்படுகிறது.
பிரதோஷ காலத்தை தோஷமற்ற, குற்றமற்ற காலம் என்றும் அப்போது, சிவபெருமானை வழிபடுவதால், தோஷங்கள், பாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பர்.
அம்பிகை காணுமாறு இறைவன் ஆடிய சந்தியா நிருத்தத்தை பிரதோஷ நடனம் என்றும் கூறுவர். இதைக் கண்ட பூரிப்பில் நந்திதேவரின் உடல் பருத்ததால், கயிலாயமே மறைந்தது போலாயிற்று; பெருமானின் திரு நடனத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையேதான் காண முடிந்ததாம்! இதை நினைவு கூரும் வகையில் பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புகளுக் கிடையே சிவனை தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. மேலும், பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானையும் வணங்கினால்தான் பிரதோஷ தரிசன வழிபாட்டின் பலன் கிடைக்கும்.
காரணாகமத்தில் விஷாபகரண மூர்த்தியின் வடிவம் விவரிக்கப் படுகிறது. இவர், ஜடா மகுடத்துடன் மூன்று கண்களும், நான்கு கரங்களும் கொண்டு திகழ்கிறார். பின் கரங்கள் இரண்டிலும் பரசு (கோடரி) மற்றும் மான். முன் வலக் கரம் விஷ பாத்திரம் ஏந்தியும், இடக் கரம் வரத முத்திரையுடனும் திகழ்கிறது. இந்தப் பெருமான் விஷம் அருந்த முற்படுபவராகக் காட்சி தருகிறார். பெருமானை தழுவியிருக்கும் அம்பிகை, அவரின் கழுத்தை தம் வலக் கரத்தால் பற்றி... விஷத்தை கண்டத்திலேயே நிலைநிறுத்த முயற்சிக்கும் தொனியில் காட்சி தருகிறாள்.
விஷபாகரண மூர்த்தியின் மற்றொரு திருவடிவம் உண்டு. இதில்... முன் வலக் கரத்தில் விஷ பாத்திரம் ஏந்தி, முன் இடக் கரத்தால் தேவியை (அவளின் அச்சத்தை நீக்க) அணைத்தபடி காட்சி தருவார். பெருமானின் பின் இரு கரங்களில் திரிசூலமும் மணியும் திகழ, இடப வாகனத்தில் அமர்ந்து காட்சியளிப்பார்.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment