Saturday, 23 September 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 2

ஓம் கணானாம் த்வா கணபதிஹூம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமச்ர வஸ்தமம் I
ஜ் யேஷ்ட ராஜம் பிருஹ்மனாம் பிருஹ்மணஸ்பத
ஆன: ச்ருண் வன் னூதிபி: ஸீதஸாதனம் II
- ரிக்வேதம் 2-23-1                         
பொருள்: ஓம்! தேவ கணங்களுக்குத் தலைவனாகி, கணபதி எனப் பெயர் பெற்ற உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் பெரும் மதிப்புக்குரிய அறிவாற்றலில் சிறந்த கவிசிரேஷ்டர்; ஞானச்செல்வர்; ஒப்பற்ற புகழ் படைத்தவர். வேதத்துக்கு வேதநாயகராக விளங்குபவரே, எங்களது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்து, உமது இதயத்தில் எங்களுக்கு இடம் அளிப்பீராக!
விநாயகர் வழிபாடு இந்து சமயத்துக்கு தொன்மையானது. பிள்ளையார் பூஜையின்றி எந்த ஒரு வழிபாடோ,  யாகமோ, எதுவும் தொடங்குவ தில்லை. விநாயகர் எல்லா வினைகளையும் இடர்களையும் அகற்றுபவர். ஆதலால், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், முதல் வழிபாடு அவருக்குத்தான்.
இந்து சமயத்தின் ஆறு வகை வழிபாட்டுப் பிரிவில்- காணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் ஆகிய அனைத்திலும் விநாயகரை வணங்கிய பின்னரே தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடங்குவர். இதில், காணாபத்யர் ஸ்ரீகணபதியை மட்டுமே வணங்குவர்.
விநாயக அவதாரம் குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோமா?
ஒருமுறை, சிவபெருமானும் உமாதேவியும் கயிலை மலையிலுள்ள வசந்த மண்டபத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவற்றில் பிரணவத்தின் ஓவியமும் இருந்தது. அளவிடற்கரிய பெருமை வாய்ந்த பிரணவத்தை, உலக மக்கள் யாவரும் புறக்கண்ணாலும்  தரிசித்து வழிபடுவதற்கு ஏற்ற வகையில், ஒரு தெய்வப் பிறப்பைத் தோற்றுவிக்க வேண்டும் என இருவரும் மனதுக்குள் எண்ணினர். சிவபெருமான் களிறு (ஆண் யானை) வடிவத்தையும், உமாதேவியார் பிடி (பெண் யானை) வடிவத்தையும் அடைந்து பிரணவ விநாயகரைத் தோற்றுவித்தனர்.
உலகில் துக்கமும் நோயும் பிடியாதிருக்கும் பொருட்டு கணபதியை அருளினாராம் சிவபிரான். ஸ்ரீவிநாயகரின் அவதாரச் சிறப்பை மிக அற்புதமாகப் போற்றுகிறார் திருஞானசம்பந்தர்.
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
என்றும், 'இப்பார் பெருத்து மிக்கதுக்கமும் பேரா நோய் தாம் ஏயாமைப் பிரிவு செய்தவன்’ எனவும் பாடுகிறார் அவர். 'தனது திருவடியை வழிபடும் அன்பர்களின் இடர்களைக் களைந்து இன்பம் அளிப்பதற்கு வந்தவர். உலகில் பெருகி வரும் துக்கத்தையும் நீங்காத நோயையும் அணுகாமல் இருக்கவும், அடியார் இன்பமுறவும் தோன்றினார் விநாயகர்’ என்கிறார் திருஞானசம்பந்தர். காஞ்சி புராணமோ, நல்லார்க்கும் வானோர்க்கும் நண்ணும் இடையூறு களை- தொல்லைகளைப் போக்க விநாயகரின் அவதாரம் நிகழ்ந்தது என்கிறது.
கந்த புராணம், காஞ்சி புராணம், சுப்ரபேதாகமம், சம்பந்தர் தேவாரம் ஆகியன, கணபதியின் தோற்றம் குறித்து ஒரேவிதமாகவே குறிப்பிடுகின்றன. விநாயகர் புராணத்திலோ அவரது அவதாரம் குறித்து 5 கதைகள் உண்டு.
திருக்கதைகள் மட்டுமா? விநாயகரின் திரு வடிவமும், அவரின் திருநாமங்களும்கூட மகத்துவமானவை! கணபதியையே பரம் பொருளாகக் கொண்ட காணாபத்யர், மற்ற தெய்வங்களையும் கணபதிக்குள் காண்பார்கள். கணேசரின் நாபி- பிரம்ம சொரூபம்; முகம்- விஷ்ணு அம்சம்; முக்கண்கள்- சிவாம்சம்; இடது பாகம்- சக்தி அம்சம்; வலது பாகம்- சூரிய அம்சம் என்பார்கள்.
அதேபோல், கணபதி எனும் திருப் பெயரில் க- மனம் மற்றும் வாக்கு; ண- மனம், வாக்கு ஆகியவற்றைக் கடந்த நிலை; பதி- மனம், வாக்கு இரண்டுக்கும் தலைவன் (ஈசன்) என்று பொருள்.
க- அறிவு; ண- வீடு; கணேசர் அறிவுக்கும் வீட்டுக்கும் உரிய தெய்வம் என்றும் பொருள் கூறுவர். அதேபோன்று, விநாயகர் என்றால், தனக்கு வேறு ஒரு தலைவன் இல்லாதவர் என்று பொருளாம். வினைகளுக்கும் செயல்களுக்கும் தலைவர் என்றும் கூறலாம்.
தேவர்கள் எவருக்கும் இல்லாத, அளவில்லாத ஆற்றல் வாய்ந்தவர் விநாயகர். அவர், தம்மை வழிபடும் அடியார்களின் இடையூறுகளை நீக்கி, இன்பத்தில் ஆழ்த்துகிறார். அதாவது இருள்மயமான ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றை அகற்றி, ஒளிமயமான பரமாகாச மண்டலத்தில் விடுபவர், பிள்ளையார்.
சிவபிரானின் புதல்வரான கணபதி, தந்தையைப் போன்றே செம்மை நிறம் உடையவர். பிள்ளையாரின் ஒடிந்த கொம்பு, கிரீடம், ஒடியாதிருக்கும் ஒற்றைக் கொம்பு, தும்பிக்கை, பேழை வயிறு ஆகியவற்றை முறையே இயைந்து நோக்கினால், அவரின் திருவுரு ஓங்கார வடிவமாக அமைந்திருப்பதை உணரலாம். மந்திரங்களில், பிரணவ மந்திரமாக விளங்கும் தெய்வம் அவர்!
ஆமாம்... எழுத்துகளுக்கெல்லாம் 'அகரம்’ மூலமும் முதலும் ஆவது போல், உலகுக்கெல்லாம் மூலமும் முதலும் ஆகிய இறைவன் விநாயகர்.
உலகுக்கு முதல் நாதம் ஓங்காரமே! அந்த நாதத்தின் திருவுருவே ஞானநாயகனாகிய விநாயகர். 'ஓம்’ என்ற ஒலியுலக வித்தே கணபதி.
- பிள்ளையார் வருவார்...

No comments:

Post a Comment