Sunday, 10 September 2017

ராஜயோகம் கைகூடும்!

வினை தீர்க்கும் விநாயகனே..!

'ராஜகணபதியை மனதாரப் பிரார்த்தித்தால், கல்யாண மாலை விரைவில் கிடைக்கும்; சீரும் சிறப்புமாக வாழலாம்’ என்பது ஈரோடு மாவட்ட பக்தர்களின் நம்பிக்கை.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பெருந்துறை. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் ராஜபரிபாலனம் செய்தபடி, அனைவருக்கும் அருளும் பொருளும் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீராஜகணபதி.
துவக்கத்தில் சிறியதொரு கொட்டகையில் இருந்து, தரிசனம் தந்து கொண்டிருந்தார் ஸ்ரீராஜ கணபதி. பிறகு, இவரின் பேரருளால் வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த அன்பர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ள... தற்போது அற்புதமாக, அழகுறத் திகழ்கிறது ஆலயம்.
இந்த வழியே செல்லும் பேருந்துகள் அனைத் தும் கோயில் வாசலுக்கு அருகிலேயே நின்று செல்வது வசதியாக உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீராஜகணபதிக்கு தினமும் பாலபிஷேகம் செய்து பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம். அமாவாசை மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களில், இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில், ஸ்ரீராஜகணபதிக்கு நைவேத்தியம் படைத்து வணங்கினால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்; உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமாம்.
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து ஸ்ரீராஜகணபதிக்கு மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்; இல்லறம் சிறக் கும் என்பது நம்பிக்கை. இதனால் இவருக்கு கல்யாண கணபதி என்றும் திருநாமம் உண்டாம்!
இந்தக் கோயிலில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபால முருகன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இங்கேயுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு ராகுகால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவளை வணங்கித் தொழுதால், எதிரிகளின் தொல்லை ஒழியும்; வீண் பயத்தில் இருந்து விடுதலை பெறலாம். வியாழக்கிழமை களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது. இவரை வணங்கினால், கல்வி-கேள்வி களில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும்!
ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி திருநாளில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீராஜ கணபதியைக் காணக் கண்கோடி வேண்டும். எண்ணற்ற பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால், கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்து, ஸ்ரீராஜகணபதியை வணங்கிச் செல்வார்கள். இந்த நாளில் மகா கணபதி ஹோமம், பிரமாண்டமாக நடைபெறும். இந்த யாகத்தில் பங்கேற்று ஸ்ரீராஜகணபதியைத் தரிசித் தால், ராஜயோகம் கூடி வரும்; நல்லன வெல்லாம் நம்மைத் தேடி வரும், என்கின்றனர் பக்தர்கள்!  
அதேபோல், தைத் திருநாளுக்கு மறுநாள், ஸ்ரீகணபதிக்கு விசேஷ அலங்காரமும் ஹோமமும் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் படையலிட்டு வழிபடுவார்கள். அப்போது வைக்கும் கோரிக்கைகள் யாவற்றையும் தட்டாமல் நிறைவேற்றித் தந்தருள்வாராம் ஸ்ரீராஜகணபதி.
நீங்களும் ஸ்ரீராஜகணபதியை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் ராஜயோகம் கைகூடும்!

No comments:

Post a Comment