சங்கர நாராயணர் |
காச்யப முனிவரின் புதல்வர்களில் வாசுகி, ஆதிசேஷன் ஆகியோர் நாக அரசர்களாகத் திகழ்பவர்கள். சிவனாரை வழிபட்டுத் தவமியற்றிய வாசுகி, அவரது கழுத்தில் நாக ஆபரணமாக விளங்கும் பேறு பெற்றார். திருமாலை வேண்டி தவம் இருந்த ஆதிசேஷன், அவருக்கு படுக்கையாக- பாம்பணையாக (சிங்காதனமாகவும்) விளங்கும் பாக்கியம் பெற்றார்.
முன்னோர் உபதேசித்தபடி சங்கனும் பதுமனும் தங்களது வழிபாடுகளைத் தொடர்ந்தனர். காலப் போக்கில்... இருவருக்கும் இடையே, 'சிவன்- விஷ்ணு இருவரில் பெரியவர் யார்?' என்று சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து, நாக அரசர்களிடம் கருத்து கேட்டனர். அவர்களோ, ''இதை ஆராய்ந்து சொல்லும் வல்லமை எங்களுக்கு இல்லை. பூவுலகில் உள்ள மகா முனிவர்களை சந்தித்து விளக்கம் கேளுங்கள்'' என்று வழிகாட்டினர்.
சங்கனும் பதுமனும் பூலோகத்துக்கு வந்தனர். புனித நதிகளில் நீராடி, பல ஆலயங்களை தரிசித்தவர்கள், காசி தலத்தை அடைந்தனர். அங்கு, தவம் இருக்கும் ரிஷிகளை வணங்கி, தங்களது சந்தேகத்துக்கான விளக் கத்தை வேண்டினர். 'சிவபெருமானே பெரியவர்; அவரே பரம்பொருள்' என்று விளக்கிய ரிஷிகள், சாஸ்திர நூல்களையும் ஆதாரங்களாகக் காட்டினர். ஆனால், பதுமன் இதை ஏற்கவில்லை.
எனவே, ''நீங்கள் தேவலோகம் சென்று இந்திரனிடம் விளக்கம் பெறுங்கள்'' என்றனர் முனிவர்கள். அதன்படி தேவலோகம் வந்தவர் களை, தேவகுருவான வியாழ பகவானிடம் அழைத்துச் சென்றான் தேவேந்திரன். ''நீங்கள் சரியான நேரத்தில் என்னைத் தேடி வந்தீர்கள்!'' என்று கூறி, அவர்களுக்கு விளக்கம் அளித்தார் வியாழ பகவான் ''ஒருமுறை, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார் மகாவிஷ்ணு. அவரது தவத்தில் மகிழ்ந்த சிவனார், பெருமாளுக்குக் காட்சியளித்து எத்தகைய நபரையும் மயக்கும் சக்தியை அவருக்கு வழங்கினார். இதனால், மாயன் எனும் பெயர் பெற்றார் பெருமாள். அது மட்டுமா? சிவபெருமான் தன் மேனியில் இடப்பாகத்தை திருமாலுக்கு அளித்து, 'அரியும் சிவனும் ஒன்றே' என்று சொல்லும் விதமாகக் காட்சியளித்தாராம்.
பிறிதொரு தருணத்தில், 'ஞானம்- செல்வம் இரண்டை யும் தரும் வடிவம் இது' என்று உமாதேவிக்கு எடுத்துரைத்
தாராம் சிவனார். உடனே அம்பிகை, 'அந்தக் கோலத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கும் அருளுங்களேன்' என்று வேண்டினாள். 'கடும் தவத்தின் மூலமே அந்த பாக்கியத்தைப் பெற முடியும்' என்றார் சிவனார். அதன்படி, பொதிய மலைச் சாரலில் உள்ள புன்னை வனம் சென்று, அங்கு புற்று வடிவில் இருக்கும் சிவனாரை பூஜித்துக் கடுந்தவம் புரிகிறாள் உமாதேவி. தேவர்கள்- மரங்களாக இருந்து பூஜைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், தேன் முதலானவற்றைத் தந்தனர்; தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் விளங்கி பால் அளிக்கின்றனர். அக்னி- விளக்கொளியானது; வாயு- அந்த இடத்தை சுத்தம் செய்தது. முனிவர்களும் கந்தர்வர்களும் வேதம் மற்றும் வாத்தியங்களை முழங்கும் திருப்பணியைச் செய்கின்றனர். தேவியைப் போலவே இன்னும் பலரும் சிவனாரின் அந்த அற்புத கோலத்தை (சங்கர நாராயண) தரிசிக்க தவம் செய்கிறார்கள். நீங்களும் அங்கு சென்று தவம் புரியுங்கள்'' என்றார் தேவ குரு.
இதையடுத்து சங்கன், பதுமன் இருவரும் புன்னை வனம் வந்து தவம் புரிந்தனர். இவர்களது தவம் குறித்து திருமாலிடம் கேட்டார் ஆதிசேஷன். உடனே, ''பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒருவரே; எம்முடன் இணைந்த உருவத்தில் இவர்களுக்குக் காட்சி தந்து அருளுவார் சிவபெருமான்'' என்றார் மகாவிஷ்ணு.
அவரது வாக்கு பலித்தது! ஆடி மாத பௌர்ணமி திருநாளில், திருமாலுடன் இணைந்த சங்கர நாராயண திருக்கோலத்தைக் காட்டி அருளினார் சிவனார்.
இவரது வலப்புறம்... சிரசில்- கங்கை மற்றும் சந்திரன்; காதில்- நாக குண்டலம்; நெற்றியில்- திருநீறு; கையில்- மழு; தோளில்- கொன்றை மலர்; மார்பில் - பொற்பூணூல்; இடுப்பில் - புலித் தோல் ஆடை; காலில்- சர்ப்ப மயமான வீரக்கழல் திகழ்கிறது.
உமாதேவி மெய்சிலிர்த்தார்! 'சிவபெருமான்- திருமால் இருவரும் வேறு வேறல்ல; காரண காரியங்களுக்காகத் தனித் தனி மூர்த்தியாக விளங்குகின்றனர்' என்பதை அறிந்த சங்கனும் பதுமனும் கண்ணீர் மல்க கரம்கூப்பி வணங்கி நின்றனர். ''என்ன வரம் வேண்டும் கேளுங்கள்'' என்றார் சிவபெருமான். ''நாங்கள், இங்கு அமைத்துள்ள சுனையில் நீராடி, தங்களை தரிசிப்பவர்களுக்கு வளமான வாழ்வும் மோட்சப் பேறும் தந்தருள வேண்டும்!'' என்று சங்கனும் பதுமனும் பிரார்த்தித்தனர். 'அப்படியே ஆகட்டும்' என்று அருளினார் சிவனார்.
பின்னர், புன்னை வனத்தில் இருந்த லிங்கத்தில் ஐக்கியமாகி மறைந்தார் உமாதேவியார். இந்த நிகழ்வை வாமன புராணம் விளக்குகிறது. இப்படி... உமாதேவி உள்ளிட் டோருக்கு, ஸ்ரீசங்கரநாராயணராக சிவனார் காட்சி தந்த தலமே சங்கரன் கோவில் (திருநெல்வேலி மாவட்டம்). இங்கு நடைபெறும் ஆடித்தபசு திருவிழா வெகு பிரசித்தம். ஆடி மாதம், உத்திராட நட்சத்திரத்தன்று (பௌர்ணமி) மாலை, தவக் கோலத்தில் காட்சி தருவாள் அம்பிகை. பின்னிரவில் உமாதேவி மற்றும் சங்கன்- பதுமன் ஆகியோருக்கு சங்கர நாராயணராக யானை வாகனத்தில் காட்சியளிப்பார் சிவபெருமான்.
பிறகு, சங்கரலிங்க சுவாமிக்கும் கோமதி அம்மைக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தேறும். இங்கு, ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீசங்கர நாராயணர் சந்நிதி.
கர்நாடக மாநிலத்திலும்... மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராக அருளும் புண்ணியத் தலம் ஒன்று உண்டு!
|
No comments:
Post a Comment