கஜமுக அனுக்ரஹர் |
தொடர்ச்சி..
சோமாஸ்கந்த வடிவம் பிரபலம் அடைந்ததுபோல் கஜமுக அனுக்ரஹர் வடிவம் பிரபலமாகவில்லை. இந்த வடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது!
காஞ்சிபுரத்தில் ஓர் அரிய வடிவம் காணப்படு கிறது. இதை, 'விக்னப் பிரசாத மூர்த்தி' என்பர்.
ஒருமுறை, நாகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க... அவர்களின் நடுவே பெண் குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அவளை நாகவல்லி என்றும் அனந்த கௌரி என்றும் அழைத்து வளர்த்து வந்தனர்.
உரிய பருவம் வந்ததும் அவளைத் தேடி வந்த சிவபெருமான், 'மகா நாகேச்வரன்' மற்றும் 'அனந்தேச்வரன்' ஆகிய திருநாமம் கொண்டவ ராக வந்து நாகவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரையும் நாகலோகத்தில் இருக்குமாறு வேண்டிக் கொண்டனர் நாகர்கள்.
மேலும் நாகர்களின் பிரார்த்தனையை ஏற்று, மூலாதாரத்திலிருந்து யானை முகம் கொண்டவ ரான விநாயகரைப் படைத்து, நாகவல்லியான அம்பிகையிடம் அளித்தார் சிவனார். இந்தத் திருவடிவே... விக்னப் பிரசாத மூர்த்தி!
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன்புறமுள்ள 16 கால் மண்டபத் தூண் ஒன்றில் ஸ்ரீவிக்னப் பிரசாத மூர்த்தியைக் காணலாம்.
காஞ்சி நகரம் நாகர்களோடு தொடர்புடையது என்றும், இங்கு அரசாண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவன், 'பீலிவளை' என்னும் நாக கன்னிகைக்குப் பிறந்தவன் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த அரிய சிற்பம் காஞ்சிபுரத்தில் காணப்படுவது சிறப்பு.
அடுத்து, 'கஜாந்திரக மூர்த்தி' வடிவம்! 'சிவ பராக்ரமம்' எனும் நூலில் விவரிக்கப்படும் இந்த வடி வம்... திருவெண்காடு எனும் தலத்தில் ஐராவதம் என்ற யானைக்கு அருளிய கோலமாகும். இதுபற்றி திருவெண்காடு தேவாரத்தில் திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடியுள்ளனர்.
இந்த கஜாந்திரக மூர்த்தி திருக்கதையும், திருவிளையாடல் புராணத்தில் வரும் வெள்ளை யானைக்கு அருளிய படலமும் ஒரே கருத்தை உடையன.
ஆனால், கஜாந்திரக மூர்த்தி வேறு; கஜமுக அனுக்ரஹ மூர்த்தி வேறு!
சண்டேச அனுக்ரஹர்
தன்னைச் சரணடைந்த மெய்யடியார்களின் சித்தமெல்லாம் சிவமாக்கி அதனைத் தவமாக்கும் அத்தன் சிவபெருமான்! உலகில் புண்ணியம் செய்வோரும் உண்டு; பாவம் செய்வோரும் உண்டு. புண்ணியச் செயல்களுக்கு நன்மை கிட்டும்; பாவம் புரிந்தால் தீமை விளையும். இது பொதுவான உண்மை. ஆனால், இதற்கு விதிவிலக்கான இரண்டு தகவல்களைக் கேள்விப்படுகிறோம்.
தட்சப் பிரஜாபதி மிகப் பெரிய யாகம் செய்தார். இந்த யாகம் செய்வது மிகப் பெரிய புண்ணியம் தரத் தக்க செயல் என்றாலும் இந்த வேள்வியில் அவர், தனது தலையை இழந்தார்.
யாகம் நாசப்படுத்தப்பட்டு, வந்திருந்த தேவர்களும் கடவுளரும் அவமானம் அடைந்தனர். புண்ணியச் செயல் இங்கு பாதகமாகி விட்டது. காரணம், சிவபெருமானை இகழ்ந்து அவரை அவமதித்து செருக்குடன் திரிந்தான் தட்சன். நோக்கம் தவறாக இருந்தால் செயலும் பொய்த்துவிடும் என்பதே இதன் தத்துவம்.
ஆனால், நோக்கம் உயர்ந்ததாக இருந்து செயல் தவறாகும்போது அந்தச் செயல் தண்டிக்கப்படுவது இல்லை. இதை சுட்டிக்காட்டுவதே சண்டேசர் வரலாறு!
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் மண்ணியாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் என்ற சிவத்தலம் ஒன்று உள்ளது.
திருஞானசம்பந்தர் பாடிய தலம் இது. சேய் ஆகிய முருகப் பெருமான், சிவபெருமானை வழிபட்ட நல்ல ஊர் என்பதால்... சேய்+நல்+ஊர் என்பது சேய்ஞலூர் என்று மருவி வழங்கப்படுகிறது.
இந்த ஊரில் காச்யப கோத் திரத்து அந்தணரான எச்சதத்தன் - பவித்ரை தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் விசார சர்மர். ஐந்து வயது நிரம்பியபோதே முற்பிறவிப் பயனால் சந்த மறை மற்றும் ஆகமங்களை உணர்ந்து பக்தியில் ஊறித் திளைத்தான் விசார சர்மர். வேத பாடசாலைக்குச் சென்று வந்தான்.
ஒரு நாள்! மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் பசு மாடுகளை அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு மனம் வருந்தினான் விசார சர்மர். ஊர் மக்களிடம் இருக்கும் அனைத்து பசுக்களையும் மேய்க்கும் வேலையைத் தாமே செய்யத் தொடங்கினான்.
பசுக்கள் தினமும் நன்கு புல் மேய்ந்து, மடி பெருகி நிறைய பால் அளிக்கத் தொடங்கின. ஊரில் அனைவரும் மகிழ்ந்தனர். பசுக்கள் மீது சிறுவன் விசார சர்மர் கொண்ட அன்பு, ஈடுபாடு ஆகியவற்றால் சில நேரங்களில்... எவரும் கறக்காமலேயே, தாமே பால் பொழிந்தன பசுக்கள்.
குழந்தைக்குரிய மனப் பக்குவம் மாறாத விசார சர்மர், சிவபக்தியி னால் மண்ணியாற்று மணலில் சிவலிங்கமும் ஆலயமும் அமைத்து, தாமே பொழிந்து பெருகும் பசுக்களது பாலைக் கொண்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, அர்ச்சனை செய்து வழிபட்டான்.
ஊரில் சிலர், 'பசும்பாலைக் கறந்து மணலில் கொட்டி வீணாக்குகிறான் இந்தச் சிறுவன்' என்று அவன் தந்தையிடம் புகார் செய்தனர். இதைக் கேட்டு எச்சதத்தன் கோபமுற்றார்.
மறுநாள், அங்குள்ள 'குரா' மரத்தில் ஏறி ஒளிந்திருந்து மகன் பூஜை செய்யும் முறையைக் கண்டார். கோபத்துடன் மரத்திலிருந்து இறங்கி... திருமஞ்சனத்துக்காக விசார சர்மர் வைத்திருந்த பால் குடத்தை காலால் எட்டி உதைத்தார். தன்னை மறந்த நிலையில் பூஜையில் ஈடுபட்டிருந்த விசார சர்மர், சிவபூஜைக்குத் தடை ஏற்படுத்துவது யார் என்றுகூட பார்க்காமல், அங்கிருந்த ஒரு கோலை எடுத்து எச்சதத்தனது காலில் வீசினான். அது, இறையருளால் 'மழு'வாக மாறி எச்சதத்தனின் கால்களை வெட்டி, அவரை கீழே விழும்படி செய்தது. விசார சர்மர் சற்றும் பதற்றமடையாமல் தமது வழிபாட்டைத் தொடர்ந்தார்.
|
No comments:
Post a Comment