Wednesday 20 September 2017

எது உங்கள் டயட்?

`யட்' என்ற சொல் இன்றைக்கு ஃபேஷனாகி விட்டது. ஆம்... உடல் பருமனா? மெலிந்த தேகமா? எல்லாவற்றுக்கும் முதலில் நாம் எடுக்கும் முயற்சி `டயட்'. இன்றைய தலைமுறையினரிடையே விதவிதமான டயட் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. யாருக்கு, எந்த மாதிரியான டயட் பொருந்தும்? அந்த டயட்டின் சிறப்புகள் என்ன? என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு.

பல்வேறு வகையான டயட்  முறைகள் பற்றி விளக்குவதோடு, ஒவ்வொரு டயட் முறையிலும் உள்ள உணவுகள், அது யாருக்கு உகந்தது,  யார் எவ்வளவு சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற சந்தேகங்களுக்கும்  பதிலளிக்கிறார் டயட்டீஷியன் தாரணி கிருஷ்ணன்.
வீகன் டயட்

வீகன் டயட்டில் இறைச்சி, பால், முட்டை, பால் பொருள்கள் போன்றவற்றைத் தவிர்த்து, தாவர உணவுகள் எடுத்துக்கொள்ளப்படும். வீகன் டயட் உணவுகளில் புரோட்டீன்,  வைட்டமின் சத்துகள் மற்றும் தாது உப்புகள் போன்றவை இருக்கும். இவற்றில் விர்ச்சுவலி வீகன், டிராவல் வீகன், டயட்டரி வீகன், எத்திக்கல் வீகன், க்ரீன் வீகன், ரா வீகன், பிளான்ட் பேஸ்டு வீகன், வீக் டே / வீக் எண்ட் வீகன் எனப் பல வகைகள் உள்ளன.
வீகன் டயட் ஏன் முக்கியம்?

* உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.  

* சரியான உடல் எடையைப் பெற உதவும்.

* உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.  

* இதய நோய் வராமல் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.  

* சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த உதவும்.
வீகன் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்
வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். 
பேலன்ஸ்டு டயட்

முறையான ஓர் ஊட்டச்சத்து உணவுப்பட்டியலைக் கொண்டுள்ளது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் சம அளவு பெற உதவுகிறது. உடல் எடையைக் குறைப்பது, அதிகரிப்பது போன்ற எந்தவிதமான முறைகளும் பின்பற்றப்படுவது இல்லை. பேலன்ஸ்டு டயட்டில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. 
பேலன்ஸ்டு டயட் ஏன்?

* பேலன்ஸ்டு டயட் உடல் சீராக இயங்கத் தேவையான ஊட்டத்தைத் தருகிறது.

* இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ், உடலில் உள்ள செல்கள், திசுக்கள் மற்றும் உள் உறுப்புகளின் இயக்கத்துக்கு உதவுகின்றன.

* சீரான உடல் எடையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  

* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது.  

* நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

* நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

* உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்ற உணர்வைத் தருகிறது.
பேலன்ஸ்டு டயட் மூலம் தினசரி கிடைக்கும் ஆற்றலின் அளவு

2-8 வயதுக் குழந்தைகள் - 1000 - 1400 கலோரி

9-13 வயதுப் பெண்கள் - 1400 - 1600 கலோரி

9 - 13 வயது ஆண்கள் - 1600 - 2000 கலோரி

14 - 30 வயது பெண்கள் - 2400 கலோரி

14 -30 வயது ஆண்கள் - 2400 கலோரி

30 வயதுக்கு மேற்பட்டோர் - 2400 கலோரிக்கு மேல்

பேலன்ஸ்டு டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்
அனைத்து வயதினரும் பேலன்ஸ்டு டயட்டைப் பின்பற்றலாம். தீவிரமான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த டயட் முறையைத் தவிர்க்கலாம்.
வெஜிடேரியன் டயட்

 அசைவ உணவைத் தவிர்த்துப் பால், பால் பொருள்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப் பொருள்கள், வெஜிடேரியன் டயட் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்த டயட்டில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள், மாவுச்சத்து, பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துபோன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெஜிடேரியன் டயட் ஏன் முக்கியம்?

* உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை இயற்கை வழியில் பெற உதவுகிறது.

* ஆரோக்கியமான  இதயத்துக்கு வழிவகுக்கும்.

* உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

* சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.  

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், புற்றுநோய் செல்களிடமிருந்து நம்மைக் காக்கும்.

வெஜிடேரியன் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்
அனைவரும் இந்த டயட்டைப் பின்பற்றலாம். வளரும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இறைச்சியின் வழியாக வேகமாகக் கிடைக்கும். ஆகையால், வளரும் குழந்தைகள் இந்த டயட் முறையைத் தவிர்ப்பது நல்லது.
ரா ஃபுட் டயட்

சமைக்காத உணவுகளே இதில் இடம்பெறும். ரா ஃபுட் டயட்டில் ஃப்ரெஷ் பழங்கள், பச்சைக் காய்கறிகள், நட்ஸ், விதைகள், முளைகட்டிய பயறு மற்றும் தானியங்கள் மற்றும் பால் போன்றவற்றைச் சமைக்காமல் சாப்பிடும்முறை பின்பற்றப்படுகிறது. இந்த டயட் முறையில் அதிக புரோட்டின், கொழுப்பு மற்றும் மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன.
ரா ஃபுட் டயட் ஏன் முக்கியம்?

* உடலில் ஏற்படும் அலர்ஜியைக் குறைக்கும்.

* செரிமானத் தன்மையை அதிகரிக்கும்.

* இதய ஆரோக்கியத்தைக் காக்கும்.

* கல்லீரல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும்.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

* சருமப் பளபளப்புக்கு உதவும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.

* சீரான உடல் எடையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும்.

* ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சாப்பிட வேண்டிய உணவுகள்: அனைத்து வகையான பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள், முழுதானியங்கள், முளைகட்டிய பயறு, பருப்பு வகைகள், நட்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட பால், உப்பு, சர்க்கரை போன்றவை.

தவிர்க்க வேண்டிய உணவுகள்: சமைத்த பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரீபைண்ட் ஆயில் மற்றும் ஜூஸ், காபி, டீ போன்றவை.  

ரா ஃபுட் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள்.
பேலியோ டயட்

கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு போன்றவை முற்றிலும்  தவிர்க்கப்படும். இதுவே பேலியோவின் அடிப்படை. கொழுப்பைக்கொண்டு கொழுப்பைக் குறைப்பதே இதன் டெக்னிக். மேலும், இது ஆதிமனிதனின் உணவுமுறையாகும். அப்போது சாப்பிட்டதைப்போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள் போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் தரும் ஓர் உணவுமுறை எனச் சொல்லப்படுகிறது.
பேலியோ டயட் ஏன் முக்கியம்?

* உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

* உடல் எடையைக் குறைக்க உதவும்.

* செல்கள் புத்துணர்வுபெற உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

* கொழுப்பில்லாத உடல் தசை வளர்ச்சிக்கு உதவும்.

* செரிமானத் தன்மையைச் சீராக்கும்.

* உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். உடலில் ஏற்படும் அலர்ஜியைக் குறைக்கும்.

* இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். நோய்கள் வராமல் காக்கும்.
பேலியோ டயட்டின் ஸ்நாக்ஸ்

பேபி கேரட், வேகவைத்த முட்டை, பழத்துண்டுகள், ஒரு கையளவு நட்ஸ், ஆப்பிள் பழத்துண்டுகள் மற்றும் பாதாம்.

பேலியோ டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்,  வளரும் குழந்தைகள், பூப்பெய்திய பெண்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்.
அட்கின்ஸ் டயட் (Atkins Diet)

ராபர்ட் அட்கின்ஸ் என்பவர் கண்டுபிடித்ததால் இந்தப் பெயர். அதிக புரோட்டீன், அதிகக் கொழுப்பு, குறைந்த அளவு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுமுறை இது. இறைச்சி, மீன், சீஸ், வெண்ணெய், எண்ணெய், முட்டை, சர்க்கரை, பால் மற்றும் பால் பொருள்கள், பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் ஆகிய உணவுப் பொருள்கள் அட்கின்ஸ் டயட் முறையில் உட்கொள்ளப்படுகின்றன.
அட்கின்ஸ் டயட் ஏன் முக்கியம்?

* பசியின்மையைச் சரி செய்யும்.

* உடலுக்குள் குளூக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்யும்.  

* உடலுக்குத் தேவையான அளவு எனர்ஜியைத் தரும்.

* உடல் எடையைக் குறைக்க உதவும்.

* இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

* உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

* டிமென்ஷியா, அல்சைமர் போன்ற மனநோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

அட்கின்ஸ்   டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், வயதானவர்கள்.
லோ கார்ப் டயட் (Low-Carb Diet)

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதே லோ கார்ப் டயட்டின் அடிப்படை. குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதிக அளவு புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்முறை லோ கார்ப் டயட்டில் பின்பற்றப்படுகிறது. இதில் அனைத்து வகையான இறைச்சி, பச்சைக் காய்கறிகள், சீஸ், கிரீம், கொழுப்பு நீக்கப்படாத பால், நட்ஸ் மற்றும் ஆயில் சீட்ஸ் (oil seeds), முட்டை, பழங்கள், வெண்ணெய் மற்றும் அனைத்துவிதமான எண்ணெய் ஆகிய உணவுப்பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
லோ கார்ப் டயட் ஏன் முக்கியம்?

* குறைந்த நேரத்தில் உடலில் உள்ள குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

* பசியின்மையைச் சரிசெய்யும்.

* உடல் எடையைக் குறைக்க உதவும்.

* வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். அழகான உடலமைப்பைப் பெற உதவும்.

* உடலின் ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

* உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

* மூளைச் செயல்பாட்டை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்
அதிகக் கொழுப்பு நிறைந்தவர்கள், உடல்பருமன் உடையவர்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உடையவர்கள்.
ஹெச்சிஜி டயட் (Human Chorionic Gonadotropin)

ஊசி மூலம் உடலில் ஹார்மோன் சுரப்பு தூண்டப்படும். தவிர நாள் ஒன்றுக்கு இரண்டு உணவுகள் மட்டுமே சாப்பிடும் பழக்கம் இதில் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு உணவிலும் ஒரு காய்கறி, ஒரு பழம் மற்றும் புரதம் நிறைந்த உணவுடன் ஒரு பீஸ் பிரெட் இடம் பெறும்.
ஹெச்சிஜி டயட் ஏன் முக்கியம்?

* குறைந்த காலத்தில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

* உடல் பருமனைச் சரிசெய்ய உதவும்.

* உடல் தசைக் குறைப்பு மற்றும் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்.

* உடலுக்குத் தேவையான அளவு எனர்ஜியைத் தரும்.

* ரத்தச் சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவும்.

* உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

ஹெச்சிஜி டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்

குழந்தைகள், பூப்பெய்திய பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோயாளிகள். 
டூகன் டயட் (Dukan Diet)

டூகன் டயட்டில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட், அதிக அளவு புரோட்டீன் உணவுகள் பின்பற்றப்படுகின்றன. பசும்பால் மற்றும் பால் பொருள்கள், இறைச்சி, முட்டை, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களைத் தவிர, குறைந்த அளவு ஆட்டுப் பால் மற்றும் பால் பொருள்கள், நட்ஸ், விதைகள், எண்ணெய், கடல் உணவு, பீன்ஸ், பருப்பு வகைகள், ஓட்ஸ், பச்சைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் போன்றவை டூகன் டயட்டில் உணவாக எடுத்துக்கொள்ளப்படும்.
டூகன் டயட் ஏன் முக்கியம்?

* இந்த வகை டயட் உணவுகள் மன மாற்றத்துக்கு உதவுகின்றன.

* உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

* உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

* நிறைவான உணவை உண்ட உணர்ச்சியை ஏற்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

* 25 முதல் 65 வயது வரை ஆரோக்கியமாக உள்ள அனைவரும் இந்த டயட் முறையைப் பின்பற்றலாம்.   

டூகன் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்


சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள், நோயாளிகள்.
அல்ட்ரா லோ ஃபேட் டயட் (Ultra Low-Fat Diet)

மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ள உணவுகளே இதில்  பிரதானம். பொதுவாகக் குறைந்த அளவு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளையே 70 முதல் 80 சதவிகிதம் பேர் பின்பற்றுவார்கள். அல்ட்ரா லோ ஃபேட் டயட்டில் மிகவும் குறைந்த அளவு கொழுப்பு உணவுகள் உட்கொள்ளப்படும். குறைந்த கொழுப்பில் இருந்தே உடலுக்குத் தேவையான கலோரியும் எடுத்துக்கொள்ளப்படும். முழு தானிய உணவுகள், கோதுமை, சிவப்பு அரிசி, முட்டையின் வெள்ளைக் கரு, இறைச்சி, பருப்பு, பால் மற்றும் பால் பொருள்கள், யோகர்ட், பீன்ஸ், வெள்ளரி, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய உணவுப் பொருள்கள் அல்ட்ரா லோ ஃபேட் டயட்டில் பரிந்துரைக்கப்படுவன.
அல்ட்ரா லோஃபேட் டயட் ஏன் முக்கியம்?

* உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.  

* ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

* உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது.

அல்ட்ரா லோஃபேட் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்.
ஜோன் டயட்  (Zone Diet)

முப்பது வருடங்களாகப் புழக்கத்தில் உள்ள டயட் முறை. இந்த டயட் முறையில் 30 சதவிகிதம் புரதம், 40 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 30 சதவிகிதம் கொழுப்பு என்ற அடிப்படையில் டயட் முறை பின்பற்றப்படுகிறது. புரதத்துக்கு முன்னுரிமை. முட்டையின் வெள்ளைக் கரு, மீன், கடல் உணவுகள், சிக்கன் மற்றும் பால் போன்றவை புரதச்சத்துக்காக உட்கொள்ளப்படுகின்றன. இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட்டுக்கு அடர் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மேலும், இனிப்பு அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், வாழைப்பழம், கேரட், திராட்சை, உருளைக்கிழங்கு மற்றும் சோளம் ஆகிய உணவுப் பொருள்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன. கூடுதல் கொழுப்புக்காக ஆலிவ் எண்ணெய், அவகேடோ, பாதாம் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
ஜோன் டயட் ஏன் முக்கியம்?

* இது ஒரு சரிவிகித உணவுமுறை.

* உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் இந்த டயட் முறையின் மூலம் பெறமுடியும்.  

* சீரான உடல் எடையைப் பெற உதவும்.

* உடல் செல்கள் புத்துணர்வு பெற உதவும்.

* மூளைச் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கும்.

* நீண்ட ஆயுள் பெற உதவும்.

ஜோன் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்

அனைவரும் ஜோன் டயட்டைப் பின்பற்றலாம். யாரும் தவிர்க்க வேண்டாம்.
மாஸ்டர் க்ளென்ஸ் டயட்

மாஸ்டர் க்ளென்ஸ் டயட்டில் திரவ உணவுகளே பிரதானம். இதில் எலுமிச்சைச் சாறுடன் உப்பு அல்லது மூலிகை கலந்து டீ போன்றவற்றைப் பருகும்முறை பின்பற்றப்படுகிறது.
மாஸ்டர் க்ளென்ஸ் டயட் ஏன் முக்கியம்?

* குறைந்த காலத்தில் எடையைக் குறைக்க உதவும்.

* உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தேவையற்ற சதைகளைக் குறைக்கும்.

* உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும்.

* உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

மாஸ்டர் க்ளென்ஸ் டயட்டைத் தவிர்க்க வேண்டியவர்கள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வளரும் குழந்தைகள், பூப்பெய்திய பெண்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்.
இன்ட்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting)

ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவது, அப்படிச் சாப்பிடும் உணவின் அளவைச் சற்றே அதிகமாக​ எடுத்துக்கொள்ளும் உணவு முறை இது.
இன்ட்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் உள்ள உணவுகள்

குறைந்த கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கலோரி உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள். புரதம் நிறைந்த பருப்பு, முட்டை மற்றும் சிக்கன் போன்றவை இந்த டயட் முறையில் உணவுகளாகச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.

ஏன் முக்கியம்?

* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

* இதில் உள்ள புரதச் சத்து, உடலில் ஆரோக்கியமான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

* இதய நோய்கள் வராமல் காக்கிறது.

* ஆரோக்கியமான உடல் எடையைப்பெற உதவுகிறது.

 தவிர்க்க வேண்டியவர்கள்

சர்க்கரை நோயாளிகள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்.
மெடிட்டரேனியன் டயட்

மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் காலம் காலமாகப் பின்பற்றும் உணவுமுறை. அந்தப் பகுதியில் அதிகம் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உணவுமுறை இது. 

மெடிட்டரேனியன் டயட்டில் உள்ள உணவுகள்

முழுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், மூலிகைகள், மசாலாப் பொருள்கள், நட்ஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த ஆலிவ் ஆயில், யோகர்ட், சீஸ். வாரம் இருமுறை மீன் மற்றும் சிக்கன் ஆகியவை இந்த டயட் முறையில் தினசரி உணவுகளாக உண்ணப்படுகின்றன. 

ஏன் முக்கியம்? 


* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது.

* உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
ஜி.எம் டயட்

ஜெனரல் மோட்டார் டயட் என்பதே ஜி.எம் டயட் என்பதாகும். இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கும் ஒரு வழிமுறை. விவசாயம், உணவு மற்றும் மருத்துவத்துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட டயட் பிளான் இது. ஏழு கிலோ எடையை ஒரு வாரத்தில் குறைக்க உதவும் டயட் பிளானைக் கொண்டது இந்த முறை. 20 முதல் 65 வயதுவரை உள்ள அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

ஜி.எம் டயட்டில் பின்பற்றப்படும் உணவுகள்

ஃப்ரெஷ் பழங்கள், பச்சைக் காய்கறிகள், சிவப்பு அரிசி மற்றும் சிக்கன்.

ஜிஎம் டயட்டில் குறிப்பிட்டுள்ள பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளைத் தவிர மற்ற உணவு வகைகளைச் சாப்பிடக் கூடாது. 

ஏன் முக்கியம்?

* குறைந்த காலத்தில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

* ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற உதவும்.

* உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். நோய்கள் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், இளம் பருவத்தினர்.

No comments:

Post a Comment