Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 56


                                   

                       பைரவர்


விரித்த பல்கதிர் கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
- திருநாவுக்கரசர்
பொருள் திருச்சேறைத் தலத்தில், செந்நெறி எனும் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அழகிய கால பைரவர் வடிவம் கொண்டு, விரிந்த பல சுடர்களை உமிழும் சூலம், வெடி போன்று ஒலிக்கும் டமருகம் மற்றும் கங்கை ஆகியவற்றைத் தரித்து, யானை வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார். இதைக் கண்டு உமையவள் அஞ்ச... தன் மணிவாய் மலர்ந்து சிரித்து அருள் செய்தார் சிவனார்.
சிவாலயங்களில் நடைபெறும் சிவபூஜை... காலையில் சூரியனில் துவங்கி, அர்த்த ஜாமத்தில் பைரவ பூஜையுடன் நிறைவுறும். ஆலயத்தின் தென்கிழக்கில் சூரியனும், வடகிழக்கில் பைரவரையும் அமைத்து வழிபடுவர்.
சில திருத்தலங்களில் பைரவருக்குச் சிற்றாலயம் அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இவரது சந்நிதி மேற்கு நோக்கி இருப்பது- உத்தமம்; தெற்கு நோக்கி இருப்பது- மத்திமம் என்கிறது பிரதிஷ்டாவிதி என்கிற நூல். நெய் அபிஷேகம், நெய் தீபம், சிவப்பு மலர்கள், முழுத் தேங்காய், மாவிளக்கு, நார் உள்ள பழங்கள், தேன் மற்றும் வடை ஆகியன பைரவருக்கு பிரியமானவை.
சிவபெருமானின் வீரத்தைப் போற்றும் அஷ்ட வீரட்டம் திகழ்வது போல, அவரது வீரத்தின் வெளிப்பாடான பைரவரும் எட்டுவித திருவடிவங்களுடன் அருள் புரிகிறார்.
ஒரு முறை... அந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படி செய்து அவமானப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள், சிவனாரை சரணடைந்தனர். அவர்களைக் காப்பாற்றத் திருவுளம் கொண்ட சிவனார், மகா பைரவரைத் தோற்றுவித்தார்; அந்தகனை அழிக்கும்படி பைரவருக்கு ஆணையிட்டார் என்கின்றன புராணங்கள்.
சிவனாரின் திருமேனியிலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றியதாக கூறுவர்.
அஸி தாங்கர் - இவரின் சக்தி பிராஹ்மணி, அன்ன வாகனம் கொண்டவர்; ருரு- இவரின் சக்தி மகேச்வரி, காளை வாகனம்; சண்டர்- இவரின் சக்தி கௌமாரி, மயில் வாகனம்; உன் மத்தர்- இவரின் சக்தி வராஹி, குதிரை வாகனம்; கபாலர்- இவரின் சக்தி இந்திராணி, யானை வாகனம்; பீஷணர்- இவரின் சக்தி சாமுண்டி, சிம்ம வாகனம்; க்ரோதனர்- இவரின் சக்தி வைஷ்ணவி, கருட வாகனம்; சம்ஹாரர்- சண்டிகாதேவியை சக்தியாகக் கொண்ட இவரின் வாகனம் நாய்.
பைரவரின் இந்தத் திருவடிவங்கள் எட்டும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நீக்கமற நிறைந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனவாம்.
பைரவருக்கு எட்டு விதமான (அஷ்ட) அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. சிவாச்சார்யர்கள் எட்டு பேர் சூழ்ந்திருக்க, எட்டு விதமான மலர்கள் மற்றும் எட்டு வித தளிர் (இலை)களாலும் அர்ச்சனை செய்யப்படும்.
சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பால் சாதம், எலுமிச்சைசாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எள் சாதம், சம்பா (மிளகு
சீரகம்) சாதம் ஆகியவற்றுடன், சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன்வடை, பாயசம், தேன்குழல், எள் உருண்டை, அதிரசம் ஆகிய பட்சணங்களும் பைரவருக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும். எட்டு வித ஆரத்திகளால் தீபாராதனை செய்வர். இந்த பூஜையில் செய்யப்படும் ஹோமத்தில் எட்டு விதமான சமித்துகளைப் பயன்படுத்துவர். பைரவருக்கு மிகவும் விருப்பமானது சண்பக மாலையாகும். அவர், சண்பக வனங்களில் மகிழ்ச்சியுடன் உறைகின்றார். திருச் செங்காட்டங்குடியில் பைரவருக்கு சண்பகப்பூ உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
முற்காலத்தில் அரசர்கள், தங்களது பொக்கிஷ சாலையில் பைரவரை பிரதிஷ்டை செய்து, விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர். இதனால் அங்கு பொன்னும் மணியும் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.பொன்- பொருள் அருளும் இந்த மூர்த்தியை 'ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்' என்பர். இவர் பொன் (மஞ்சள்) நிறத்துடன் திகழ்பவர். மஞ்சள் நிறப் பட்டாடை அணிந் திருப்பதுடன், மாணிக்கம் முதலான அணிமணிகளால் இழைக்கப்பட்ட தங்க அட்சயப் பாத்திரம் ஏந்தியிருப்பார். இவர், தம் மடி மீது 'ஸ்வர்ணா' என்னும் ஸ்வர்ண தேவியை அமர்த்திக் கொண்டிருப்பார். அனைத்து தேவர்களாலும் வணங்கப் பெறும் இந்த அம்பிகை, தன் இடக் கரத்தில் பொன் நிரம்பிய குடத்தை அனைத்திருப்பாள். இந்த தேவி, அளவில்லா மகிழ்ச்சியும் சகல ஸித்திகளும் அருள்பவள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதி உள்ளது. ஆந்திர மாநிலம்- செகந்திராபாத் நகரில் உள்ள நாகதேவதை அம்மன் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவரின் சிலா ரூபத்தை தரிசிக்கலாம். மகாலக்ஷ்மி மந்திரகோசம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளபடி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இந்த சிலா ரூபம், வேறு எங்கும் காண்பதற்கரிய ஒன்று.
காசிக் கண்டம் எனும் நூலில் பைரவரின் சிறப்புகளும், அறுபத்து நான்கு பைரவர்கள் மற்றும் அவர்களுக்குரிய தேவியரின் திருநாமங்களும் இடம்பெற்றுள்ளன.
காசி «க்ஷத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமைக் காவலராக, பல்வேறு திருநாமங்களில் எழுந்தருளும் பைரவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். இவர் களில் முதன்மையானவர் கால பைரவர். இவரது சந்நிதி, காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவரின் திருமேனியில் செந்தூரம் பூசி அதற்குமேல் பட்டு சரிகை துணி போர்த்தி இருப்பதுடன், முக கவசமும் அணிவித்துள்ளனர்.
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment