Sunday, 10 September 2017

சிதம்பர ரகசியம்...


சிதம்பரம் என்றாலே கோயில்னுதான் அர்த்தம். 'சிதம்பரத்துக்குப் போயிட்டு வரேன்’னு சொன்னா, அங்கேயுள்ள சிவபெருமானை தரிசிச்சுட்டு வரேன்னு சொல்றதாத்தான் ஐதீகம். இன்னொரு விஷயம்... இறைவனை அறிந்து, உணர்ந்து அனுபவிக்கறதுதான் இறை தரிசனம். ஆனா, சிதம்பரத்தைப் பொறுத்தவரை, இங்கே வந்து அனுபவிச்சால்தான் இறைவனை அறிய முடியும். இன்னும் இன்னும் தரிசிக்கணும்னு மனசை பரவசப்பட வைக்கறதுதான், சிதம்பர ரகசியம்!'' என்று பொங்கி வழிகிற பரவசத்துடன் தெரிவித்தார் புலவர் குப்புசுவாமி தீட்சிதர்.
''பஞ்சபூதங்களாக விளங்குபவன், இறைவன். அப்பேர்ப்பட்ட இறைவன், ஆகாய ரூபமா திகழ்கிற தலம்தான் சிதம்பரம். இங்கே, உருவம், அருவம், அருவுருவம்ணு மூணு நிலைகள்ல, சிவப்பரம்பொருள் காட்சி கொடுக்கறது இந்தத் தலத்தோட கூடுதல் சிறப்பு. அதாவது, ஆனந்தத் தாண்டவக் கோலத்துல, ஸ்ரீஆனந்த நடராஜராவும்  அன்னை ஸ்ரீசிவகாமி அம்மையாவும் காட்சி தர்றது உருவ நிலை. திருமூலட்டானத் துல, சிவலிங்க சொரூபமா காட்சி தர்றது அருவுருவ நிலை. இங்கே, இறைவன்- ஸ்ரீதிருமூலநாதர்; இறைவி - ஸ்ரீஉமையபார்வதி. அடுத்து, அருவமா தரிசனம் தருவதுதான், சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில, ஆடல்வல்லானின் வலப்பக்கச் சுவத்துல, சக்கரம் இருக்கும் இடம்தான் அது! இதை, திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம்னு சொல்லுவாங்க. ஸ்ரீசுதர்சன சக்கரத்தால செல்வம் கொழிக்கும் திருத்தலமா திகழ்வது திருப்பதி. இங்கே, அன்னாகர்ஷண சக்கரத்தால, அன்னத்தில் செழிக்கறது, சிதம்பரம். அந்தக் காலத்துல, 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’னு போற்றப்பட்ட தலம் இது!'' என்று பெருமையுடன் தெரிவிக்கிறார் தீட்சிதர்.
''நான்கு வேதங்களோட விழுப்பொருள், அண்ட சராசரங்களோட முழுமுதற் பொருள் ஆகியவற்றைக் குறிக்கறதுதான் அருவ நிலை. அதனாலதான் இந்தத் தலத்துக்கு சிதம்பரம்னு பேரு அமைஞ்சது (சித் - அறிவு; அம்பரம் - வெட்டவெளி). அதனாலதான் பரந்து விரிஞ்ச ஆகாய தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே, நம்ம கண்ணுக்குப் புலப்படும் நிலையில, தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனை, கருவறைச் சந்நிதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையைத் தரிசிக்கலாம்! உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி, மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிக்கிறதா ஐதீகம்! இதனை ஆழ்ந்த பக்தியால் உணர முடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த முடியாது. இங்கே, தினமும் இரவு 7.30 மணிக்குச் சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த பூஜையில கலந்துக்கிட்டு, சிவனாரைத் தரிசனம் பண்றது உடம்புக்கும் மனசுக்கும் புதுச் சக்தியைக் கொடுக்கும்; முக்தியைக் கொடுக்கும்!
சிதம்பரத்தில், இந்த அருவ நிலைதான் மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும்! திரையை விலக்கியதும், நம் அறியாமைங்கற இருளை விலக்கி அருள்கிறார் இறைவன்; அஞ்ஞானத்தில் இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார். உலகத்தார் அனைவருமே, ஒரு திரையைப் போட்டபடியே பேசுகிறோம்; பழகு கிறோம்; வாழ்கிறோம். அந்தத் திரையை விலக்கி, சக உயிர்களைப் பார்ப்பதையும் இறைவனை அடைவதை யும் உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் நோக்கம்!
எல்லாக் கோயில்களிலும் காலை 6 மணிக்குத் துவங்கி இரவு 8.30 அல்லது 9.30 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். ஆனால், இங்கு இரவு 10 மணிக்கு நடை சார்த்தி, காலை 6 மணிக்கு நடை திறப்பதாகக் கணக்கு சொல்லும் ஆலயம் இது! அதாவது, எல்லாக் கோயில்களிலும் உள்ள சக்தி மற்றும் சாந்நித்தியத்தின் இருப்பிடமாகத் திகழும் தலம், சிதம்பரம் என்பதால், இரவு நடை சார்த்துவதை முதன்மைப்படுத்தியுள்ளனர், முன்னோர்! உலக இயக்கத்தையே, தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு, ஆனந்த நடனமாடும் ஸ்ரீநடராஜரைப் பார்த்தாலே பரவசமாவோம்!'' என்று சிலாகித்த குப்புசாமி தீட்சிதர், ஆனித் திருமஞ்சன வைபவத்தை விவரித்தார்.
''சிதம்பரத்தில், வருடத்துக்கு நான்கு பிரம்மோத்ஸ வங்கள். ஸ்ரீநடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழித் திருவாதிரை; அம்பிகைக்கு நவராத்திரி; ஸ்ரீமுருகனுக்கு பங்குனி உத்திரம் ஆகியன அடங்கும்!  உத்ஸவம் என்பதில், 'உத்’ என்பது ஞானத்தையும் 'ஸவம்’ என்பது ஐந்தொழிலையும் குறிக்கவல்லது. திரு விழாக்களில், உயிர்கள் யாவும் சிவஞானம் பெற்று, முக்தி பெறுகின்றன என்றனர், ஆன்றோர்கள்!  அதேபோல், மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவெம்பாவையைப் பாடிப் பரவசம் கொள்ளும் அற்புதமான நாள், திருவாதிரை உத்ஸவம். மாணிக்கவாசகர் முக்தி அடைந்த ஆனித் திருமஞ்சன உத்ஸவ விழாவின் 8-ஆம் நாளான, மகம் நட்சத்திர நாளில், மாணிக்கவாசகரையும் சிவப்பரம்பொருளையும் வணங்குவது, நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்!
வேனில் காலம் துவங்கும் அற்புத மாதம், ஆனி. அப்போது, விவசாயம் செழிக்கத் தேவையான மழை வேண்டி, இறைவனுக்குச் செய்யும் உன்னத விழாவாகவும் ஆனித் திருமஞ்சன விழாவைக் கொண்டாடுகின்றனர்! ஆனித் திருமஞ்சன நாளில், தில்லைக் காளி அம்மனுக்காகக் காத்திருந்து, தரிசனம் தந்து திரும்புவார் ஸ்ரீநடராஜர். இதில் குளிர்ந்து, கோபம் தணிவாள் தேவி என்பது ஐதீகம்! விழாவின் 9 மற்றும் 10-ஆம் நாட்களில், மூலவர் ஸ்ரீநடராஜரே திருவீதியுலாவில் பங்கேற்பார்.    
ஆனித் திருமஞ்சனத்தின் 10 நாட்களும், விசேஷம். கொடியேற்றத்தின்போது வணங்கி, பிரசாதமான 'பலியை’ களியைச் சாப்பிட... பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சூரியப் பார்வையில் தரிசித்தால், வெம்மை முதலான நோய்கள் நீங்கும்; சந்திரப் பார்வையில் தரிசித்தால், மனம் குளிர வாழலாம்; பூத வாகனத்தில் வீதியுலா வரும் சிவனாரை வணங்கி னால், பிசாசங்களில் இருந்து விடுபடலாம்; ரிஷப வாகனத்தில் சிவனாரைத் தரிசித்தால், செய்யும் தொழில் சிறக்கும்; லாபம் கொழிக்கும்.
6-ஆம் நாள், ஐராவத யானையில் வலம் வருவதைத் தரிசிக்க, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியைப் பெறலாம். 7-ஆம் நாள், ராவணனின் ஆணவத்தை அழித்ததன் நினைவாக, கயிலாய வாகனத்தில் வலம் வருவதைக் கண்டால், கர்வம் ஒழியும். 8-ஆம் நாள், பிக்ஷ£டனர்  கோலத்தில் வலம் வரும் சிவனாரைத் தரிசித்தால், தலையெழுத்தே மாறும்; நிம்மதியான வாழ்க்கை நிச்சயம். 9 மற்றும் 10-ஆம் நாட்களில், திருநடனத்துடன் காட்சி தரும் ஸ்ரீநடராஜரைத் தரிசிக்க... பேரின்ப நிலையை அடையலாம்''

No comments:

Post a Comment