Sunday, 10 September 2017

ஹரஹர சிவனே... அருணாசலனே!

திபம்... நமசிவாயம்!

டிமுடி காணமுடியாத பெருஞ்ஜோதியாய் பிரம்மனுக்கும் திருமாலுக்கும் அண்ணாமலையார் காட்சி தந்த தினம்- திருக் கார்த்திகை என்பதை அறிவோம். அதேபோல், ஸ்ரீபார்வதிதேவி ஈஸ்வரனின் இட பாகம் பெற்றதும் திருக்கார்த்திகையில்தான்!
ஒருமுறை, திருக்கயிலையில் சிவபெருமானுடன் உரையாடிக் கொண்டிருந்த பார்வதியாள், விளையாட்டாக ஈசனின் கண்ணைப் பொத்தினாள். இதனால், அனைத்து உலகங்களும் பேரிருளில் மூழ்கின. உடன் நெற்றிக்கண் திறந்து, உலகங்கள் அனைத்துக்கும் ஒளி வழங்கினார் பரமனார்.
பதைபதைத்துப் போன பார்வதியாள், தனது தவற்றுக்கு வருந்தி, பூலோகம் வந்தாள். காஞ்சியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டாள்.
கடும் தவமும் மேற்கொண்டாள். அதன் பலனாக சிவதரிசனம் கிடைக்க... தனக்கு, ஸ்வாமி யின் திருமேனியில் இட பாகம் அளிக்க வேண்டினாள். 'அண்ணாமலைக்கு வந்து தவத்தைத் தொடர்ந்தால், விருப்பம் நிறைவேறும்’ என்றார் பரமனார். அதன்படியே அண்ணாமலை வந்து, கௌதம முனிவரின் ஆலோசனையையும் பெற்று அருந்தவம் செய்தாள் உமையவள். திருக்கார்த்திகை அன்று மலையுச்சியில் ஜோதி உருவாகத் தோன்றிய ஈஸ்வரனை கிரிவலம் வந்து வணங்கினாள் பார்வதிதேவி. இதனால் மகிழ்ந்த ஈசன் ரிஷபாரூடராகக் காட்சி தந்து, தேவிக்கு இட பாகம் தந்தருளினார். இன்றும் திருக்கார்த்திகை அன்று அருணாசலேசுவரர் ஆலயத்தில் 'அர்த்தநாரீசுவரராக’ சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளுவர். அவர்களைத் தரிசித்து வழிபட, குடும்பம் சிறக்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!
ஸ்ரீபார்வதிதேவிக்கு திருவண்ணாமலை - தீபோற்ஸவ மகிமை குறித்து கௌதம மகரிஷி எடுத்துரைத்ததாக ஸ்கந்த புராணம் விவரிக்கிறது...
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணா மலையை கிரிவலம் வரும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது; வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும் புண்ணியசாலிகள். கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை.
ஒரு மண்டலமோ, பதினோரு நாட்களோ கிரிவலம் வருதல் சிறப்பு. முடியாதவர்கள், கார்த்திகை தீபத்திருநாள் அன்றாவது உரிய நியதிகளைக் கடைப் பிடித்து அண்ணாமலையை கிரிவலம் வந்தால்... ஒவ்வொரு அடிக்கும் ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும்; அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்.
தீப தரிசனம் காணச் செல்பவர் களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வதுகூட மிகப்பெரிய புண்ணியத்தைத் தரவல்லது. மகாதீபத்தை பக்தியோடு தரிசித்தவரை நாம் கண்ணால் கண்டாலே நமது பாவங்கள் விலகுமாம். எனில், தீபத்தை தரிசித்தவருக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும்?!
ஆயுளில் ஒரு முறையாவது திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பவரது சந்நிதி வளம் பெறும்; அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை; அத்தகையவர், மேலான தேவ நிலையினை அடைகின்றார்கள்.
திருக்கார்த்திகையில் அகல் விளக்குகள் ஏற்றும்போது...
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:
- எனும் ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். 'புழுக்களோ, பட்சிகளோ, கொசுவோ, மரங்களோ... இன்னும் பூமியிலும், நீரிலும் எத்தனை வகையான ஜீவராசிகள் வசிக்கின்றனவோ, அவற்றில் எதுவானாலும் சரி... அதேபோல் ஜாதி இன பேதமின்றி மனிதர்களில் எவராக இருந்தாலும் சரி... இந்த தீபத்தைத் தரிசிக்க, அந்த ஜீவனின் சகல பாவங்களும் நிவர்த்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’ என்பது இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.
''தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் எல்லா உயிர்களின் மீதும் படுகிறதோ, அப்படியே நம் மனதிலிருந்தும் அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு புற ஒளியாகிய தீபத்தை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.'' என்பது காஞ்சி மகா பெரியவர் வாக்கு. அற்புதமான இந்த தீப தத்துவத்தை உணர்ந்து, அண்ணாமலை மகாதீபத்தை வணங்கி பலன் பெறுவோம்.
திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை உச்சியில், 1000 மீட்டர் காடா துணியாலான திரி; 3500 கிலோ நெய் கொண்டு ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் ஒளிவீசும்.
தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக் கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி- ஆருத்ரா தரிசன திருநாளில், கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து, அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து, ஸ்ரீநடராஜருக்கு சார்த்தி வழிபாடுகள் நடைபெறும்.  பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதை, தினமும் அண்ணாமலையாரை  தியானித்து நெற்றியில் இட்டு வர, துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்;  நம் இல்லத்தை  தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment