Wednesday, 20 September 2017

சதுரகிரி யாத்திரை! - 19



ன்னையும் சேர்த்து வலம் வராமல், ஈசனை மட்டும் வலம் வந்ததால், பிருங்கி முனிவர் மீது கோபம் கொண்டாள் பார்வதிதேவி. தன்னை மதிக்காத ஒருவரின் உடலில் தன் அம்சமான சக்தி மட்டும் இருப்பானேன் என்று பிருங்கி முனிவரின் உடலில் இருந்த சக்தியை, பார்வதி தேவி அபகரித்துக் கொண்டாள். அவ்வளவுதான்... அடுத்த கணம் தடுமாறிக் கீழே சுருண்டு விழுந்தார் பிருங்கி முனிவர். அவரால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை.
சிவனார் சும்மா இருப்பாரா? தன் பக்தன் ஒருவன் சக்தி இழந்து, சிரமப்படுவதைக் கண்டு மனம் இரங்கினார். ''இந்தா, பெற்றுக் கொள் பிருங்கியே!'' என்று அவரிடம் ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட பிருங்கி முனிவர் தட்டுத் தடுமாறி, மெள்ள எழுந்தார். ஒரு குழந்தை, நடை பழகுவது போல் நடந்தார். சக்தியை இழந்த அவருக்கு இறைவன் கொடுத்த ஊன்றுகோல் அந்த நேரத்தில் பெரிதும் உதவியாக இருந்தது. சிவனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் மீண்டும் ஒரு முறை அந்தப் பரமனை - கவனிக்கவும்... பரமனை மட்டும் வலம் வந்து நமசிவாய நாமம் பாடி அவரைத் துதித்தார். சக்தியைப் புறக்கணித்து, சிவனை மட்டுமே வணங்கித் துதித்த பிருங்கியின் சிவ பக்தியை என்னவென்று சொல்வது?
ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவு! அது பூலோகம் ஆகட்டும்... தேவலோகம் ஆகட்டும். நடைபெறுகின்ற எல்லா செயலும் ஏதாவது ஒரு நிகழ்வைக் குறித்தே அல்லது ஒரு காரணத்தை முன்னிறுத்தியே நடக்கின்றன என்பதை அறிய வேண்டும். பிருங்கி முனிவரைக் காரணமாக வைத்து ஏதோ ஒரு மாற்றம் தேவலோகத்தில் நடக்க இருக்கிறது என்று மகரிஷிகள் உணர்ந்தனர்.
கதைக்கு வருவோம்... ஏற்கெனவே தகிப்பில் இருந்த பார்வதிதேவிக்கு, பிருங்கி முனிவரின் இந்தச் செயல் மேலும் எரிச்சலைத் தந்தது. பிருங்கி முனிவரின் மேல் அன்னைக்கு ஏற்பட்ட அபரிமித கோபம் ஒரு பெரிய படிப் பினையைத் தந்தது. அதாவது, 'ஈசனுக்கும் தனக்கும் நடுவில் சிறிய இடைவெளி இருப்பதால்தானே பிருங்கி முனிவரால் இப்படி தனியாக வலம் வர முடிகிறது? ஈசனுக்கும் தனக்கும் நடுவே இடைவெளியே இல்லாமல்- அதாவது இணைந்த திருமேனியாக ஆகிவிட்டால், இந்த பிருங்கியால் என்ன செய்ய முடியும்? அத்தகைய தருணத்தில் என்னையும் சேர்த்துதானே இவர் வலம் வர முடியும்? எனவே, ஈசனின் திருமேனியிலேயே ஒரு பாகத்தைக் கேட்டுப் பெற்றாக வேண்டும். அப்படி ஈசனுடன் இணைந்த ஒரு திருமேனி எனக்குக் கிடைத்து விட்டால் இருவரையும் சேர்த்துதானே எவரும் வலம் வர முடியும்? சக்தியைப் புறக்கணிக்க முடியாதல்லவா' என்று சிந்தித்து முடிவெடுத்தவள், ஈசனின் அருளைப் பெற விழைந்தாள்.
ஈசனின் அருளைப் பெற என்ன வழி? தவம்தான் சிறந்த வழி. எனவே, கடும் தவம் இருந்து தனது பிரார்த்தனையை ஈசனிடம் சொல்லி, தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பினாள்.
பூஜைகள் செய்து தவம் இருக்க பூலோகமே ஏற்றது என்று புறப்பட்டு வந்தாள். சங்கரனைத் துதித்துப் போற்றுவதற்குக் கயிலாயத்துக்கு இணையான இடம் எது என்று அவள் தேடி அலைந்தபோது, இந்த சதுரகிரியைக் கண்ணுற்றாள். தேனருவிகளும், கற்பக விருட்சங்களும் நிறைந்த இந்த வனப் பகுதி, அன்னைக்கு மிகவும் பிடித்துப் போனது. இயற்கை அழகில் தன்னை மறந்தாள். எண்ணற்ற தவசீலர்கள் இங்கே இறை வேள்வியில் பூரித்திருப்பதைக் கண்டாள். தான் தவம் இருக்கப் போகும் பூமி இதுதான் என்று தெளிந்தாள். சதுரகிரியில் சட்டை முனிவர் தவம் புரியும் ஆசிரமம் அருகே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்தாள் அன்னை பார்வதிதேவி (சந்தன மகா லிங்கம் சந்நிதி அருகே சட்டை முனிவரின் குகை இன்றும் இருக்கிறது. பக்தர்கள் தரிசிக்கலாம்). தவத்தைத் துவங்கினாள்.
அன்னையின் வரவால் வனமே மகிழ்ந்தது. பூமழை தூவியது; செடி- கொடிகள் பூத்துக் குலுங்கின. அன்னையின் ஆசியால் சதுரகிரியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களைக் கண்டு மகிழ்ந்தனர் அங்கு தவம் செய்து வந்த முனிவர்கள். சட்டை முனிவர், வால்மீகி போன்றோர் அன்னை தவம் இருக்கும் கல்லால மரத்தின் அருகே வந்து, மலைமகளைப் பணிந்து வணங்கினர். அவளை வலம் வந்து போற்றித் துதித்தனர்.
பிறகு, ''உலகைக் காத்து ரட்சிக்கும் அன்னையே... தாங்கள் இங்கு வருவதற்கு நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எங்களின் தவப் பலன் காரணமாகத்தான் தாங்கள் இங்கு வந்து எழுந்தருளி இருப்பதாக உணர்கிறோம். எங்களை ஆசிர்வதிப்பதற்காக சதுரகிரியில் எழுந்தருளி இருக்கும் அகில லோக நாயகிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்'' என்று அவளின் திருவடி தொழுதனர்.
அனைவரையும் ஆசிர்வதித்த அன்னை, புன்னகை பூத்தாள். ''மலையே மகா லிங்கமாகக் காட்சி தரும் இந்த மகோன் னதத்தைக் கண்டு யாம் வியந்தோம். உங்களது தவமும் அறப் பணிகளும் எக்காலமும் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்'' என்றாள்.
அன்னையின் ஆசிர்வாதத்தை அகம் குளிர ஏற்றுக் கொண்ட சட்டை முனிவரும் வால்மீகியும், ''தேவியே... சதுரகிரி என்னும் இந்தப் புனித மலைக்குத் தாங்கள் எழுந்தருளி இருக்கும் நோக்கம் என்ன என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டனர் பணிவுடன்.
''எம் பிரானாம் ஈசன் சர்வ லோகங் களையும் தம் முக்கண்களால் காத்து வருகிறார். அந்தப் பெருமானின் செயல் பாடுகளில் எப்போதும் உடன் இருந்து உறுதுணை புரிய விரும்புகிறேன். எனவே, முக்கண்ணனின் இட பாகத்தைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவம் அடையும் பொருட்டு, தவம் புரிய இந்த மலைக்கு வந்துள்ளேன். உறுதி குலையாத தவத்தின் மூலம் எந்த ஒரு வரத்தையும் எம் தலைவனாம் ஈசனிடம் இருந்து பெற்று விட முடியும். இதை அனுபவபூர்வமாக உணர்ந்தவள் நான். ஈசனை நினைந்து தவம் இருந்துதான் அவரை மணம் புரிந்துள்ளேன். நான் வேண்டும் வரங்களை என் தவ வாழ்க்கை எனக்குப் பெற்றுத் தரும் என்று பரிபூரணமாக நம்புகிறேன். தவத்தின் ஓர் அங்கமாக இங்கே, ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபாடுகளைத் துவக்கப் போகிறேன்'' என்றாள். அங்கு கூடி இருந்த முனிவர்கள் உளம் பூரித்தனர்.
தேவி, தன் திருவுளப்படி ஒரு புரட்டாசி மாதத்தில் வளர்பிறை தசமி தினத்தன்று, அங்கே பிரமாண்டமாக வளர்ந்திருந்த ஒரு சந்தன மரத்தின் அடியில் சிவலிங்கத் திருமேனி ஒன்றை ஸ்தாபித்தாள். தான் வடித்த உருவைக் கண்டு அன்னையே அதிசயித்தாள். அப்பனுக்கு அபிஷேகம் செய்வதற் காக ஆகாய கங்கையை அங்கே தருவித்தாள் (இந்த ஆகாய கங்கையின் தீர்த்தம்தான் இன்றைக்கும் சந்தன மகாலிங்கம் அபிஷேகத்துக்குப் பயன் படுகிறது).
பல வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு லிங்கத் திரு மேனிக்கு மணம் கூட்டினாள். மனம் நெகிழ்ந்தாள். சந்தனக் குழம்பைச் சார்த்தினாள். உயர்ரக திருநீறை அவன் மேனியில் நிறைத்தாள்.
வனத்தில் இருந்து வாசனைப் பூக்களைப் பறித்தாள். வில்வங்களைச் சேகரித்தாள். அழகிய மலர் மாலை யைத் தயார் செய்து, அவன் திருமேனியை அலங்கரித்தாள். சிவனின் திருநாமங்களைச் சொல்லி, புஷ்பங்களை எடுத்து லிங்கத் திருமேனிக்கு அர்ச்சித்தாள். பல விதமான பதார்த்தங்களைத் தன் கைப்படத் தயாரித்து நைவேத்தியம் செய்தாள். இத்தகைய பூஜை இருபத்தோரு நாட்கள் தொடர்ந்தது. முடிவில், முக்கண்ணனாம் சிவ பெருமான் கயிலயங்கிரியில் இருந்து காளை மேல் அமர்ந்து புறப்பட்டு சதுரகிரிக்கு வந்து தேவிக்கு தரிசனம் தந்தான். ஈசன் அறியாத ஒன்றா? இருந்தும், கேட்டான் ''மிகப் பெரிய தவம் செய்து, இறை வழிபாடு நடத்தி என்னை பூஜை செய்கின்றாயே... யாம் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும் தேவியே?''
ஈசனை நமஸ்கரித்து வணங்கினாள் பார்வதி தேவி. பிறகு, சொன்னாள் ''நாதா! பிருங்கி முனிவரின் செயலால் என் மனம் வருத்தப்பட்ட செய்தியைத் தாங்கள் அறிவீர்கள். இனியும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது. சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த நாம் இருவரும் இணைந்த ஒரு வடிவத்தை வரமாக எனக்கு அருள வேண்டும்.''
''அப்படியே ஆகட்டும்'' என ஈசனும் அருளினார். அதன் பின் ஈசனின் திருமேனியில் இடப் பாகத்தைப் பெற்று, அர்த்தநாரீஸ்வரராகி மகிழ்ந்தாள் அன்னை. அப்போது அங்கு கூடி இருந்த சட்டை முனிவர் உட்பட அனைவருக்கும் ஆசி வழங்கினர் இருவரும்.
அந்த நேரத்தில் மகரிஷிகளைப் பார்த்து இறைவன் சொன்னார் ''அன்னை பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்ட இந்த லிங்க வடிவத்தை உங்களைத் தவிர வேறு எவரும் பூஜிக்கலாகாது. தேவியால் பூஜிக்கப்பட்டதாயினும், சுகங்களை விரும்பாமல் என்னுடன் கலக்கும் முக்திப் பேற்றை எதிர்பார்த்தே அவள் என்னை வணங்கி உள்ளாள். எனவே, உலக இன்பத்தை விரும்புவோர் என்னை பூஜிக்கக் கூடாது.''
ஆம்! அதுதான் இன்றைக்கும்! பார்வதி தேவியால் ஸ்தாபிக்கப் பட்டு, பூஜைகள் செய்யப்பட்ட பெருமைக்குரிய சந்தன மகாலிங்கத்தை ஆராதிக்கும் தலைமைப் பூசாரி, பிரம்மச்சாரியாகவே இருந்து வருகிறார். இது வழி வழியாகத் தொடர்ந்து வருகிறது.
முனிவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அருளிய இறைவனும் இறைவியும் அதன் பின் கயிலாயமலை புறப்பட்டுச் சென்றனர். சந்தன மரத்தின் அடியில் உமாதேவி பிரதிஷ்டை செய்தமையால் சந்தன மகாலிங்கம் என்று அழைக்கப்பட்டு வரும் இந்தப் பெருமானை, தேவிக்கு அடுத்து பூஜை செய்யும் பேற்றைப் பெற்றவர் சித்த புருஷரான சட்டை முனிவர்.
சதுரகிரி யாத்திரைக்கு செல்கிறீர்களா? சில குறிப்புகள்...
சதுரகிரியில் நாம் விட்டு விட்டு வர வேண்டியவை- நம்மிடம் இருக்கும் தீய குணங்களை! அதாவது பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் இனி நம்மிடம் இருக்கவே கூடாது என்று அங்கே சங்கல்பம் எடுத்துக் கொண்டு அவற்றை அங்கேயே விட்டு விட்டுத் திரும்ப வேண்டும். ஆனால், பலரும் எதை விட்டு விட்டு வருகிறார்கள் தெரியுமா? தாங்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை! இது மிகவும் தவறு.
பொதுவாக, சதுரகிரி போன்ற மலைக் கோயில்களுக்குச் செல்லும்போது பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது. ஏனென்றால், இன்றைய வாழ்க்கையின் எதிரிகளாகக் கருதப்படுபவை பிளாஸ்டிக் பொருட்கள். சதுரகிரிக்குப் பயணப்படும்போது எடுத்துச் செல்லும் வசதிக்காகவும், உபயோகப்படுத்தி விட்டுத் தூக்கிப் போடுவதற்காகவும் பல பொருட்களை பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றில் எடுத்துச் செல்கிறார்கள். பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? உள்ளே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி விட்டு, அதைச் சுமந்து வந்த பிளாஸ்டிக் அயிட்டங்களை அங்கேயே எறிந்து விடுகிறார்கள். இது போன்ற பிளாஸ்டிக் கழிவுகள் சதுர கிரியில் ஆங்காங்கே குவிந்து வருகின்றன.
இத்தனைக்கும் சதுரகிரியில் வனத் துறையினரும் ஆலய நிர்வாகிகளும் 'பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வராதீர்கள்... அவற்றை இங்கே போடாதீர்கள்' என்று ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்திருக்கிறார்கள். தவிர, மலை மேல் ஆர்வம் கொண்ட பலரும் இப்படிப்பட்ட போர்டுகளைப் பல இடங்களில் வைத்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலா னோர் இதைக் கண்டு கொள்வதில்லை. நமது வேலை முடிந்து விட்டால் போதும் என்பது மாதிரி, பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே எறிந்து விடுகிறார்கள்.
எனவே, சதுரகிரி யாத்திரை செல்வோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்... பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதைக் கூடிய மட்டும் தவிர்த்து விடுங்கள். அப்படி ஒரு வேளை அவசியம் கருதி எடுத்துச் செல்ல நேரிட்டால், அதன் பயன்பாடு முடிந்ததும் அங்கேயே எறிந்து விடாமல் கீழே கொண்டு வந்து அடிவாரத்தில் குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தில் போடுங்கள். மகத்துவம் நிறைந்த மலையில் மாசுகள் ஏற்படுவதைத் தடுப்போம்; மூலிகைகளைக் காப்போம்.
சதுரகிரி என்பது ஒரு மூலிகை வனம். அனுமன் சுமந்து சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாக ஆரம்பத்தில் படித்தோம். எனவே, உடல் நலன் காக்கும் தன்மை கொண்டவை இங்குள்ள மூலிகைகள். இவற்றின் காற்று நம் மேல் பட்டாலே போதும்; நோய்கள் பறந்தோடும். இந்த மலையில் இருக்கும் மூலிகை வகைகள் என்று தமிழக அரசின் வனத் துறையால் பட்டியலிடப்பட்ட வகைகள் ஆடாதொடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகரணை, அமுக்கராகிழங்கு, நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், தும்பை, கீழாநெல்லி, நன்னாரி, அருகம்புல், ஆவாரை, ஆடுதீண்டாப்பாலை, ஊமத்தை, எருக்கு, கட்டுக்கொடி, கரிசலாங்கண்ணி போன்றவை.
தவிர ஜோதி விருட்சம். ஜோதிப்புல், மலை வேம்பு, சர்க்கரை வேம்பு, சிறுகுறிஞ்சி, வெள்ளை நாகதாளி, கருநாகதாளி, தலைசுருட்டி, தசைஒட்டி, கணை எருமை, தொழுகண்ணி, சாயா விருட்சம், கண் கற்றாழை என்று ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன வாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு. இத்தகைய மூலிகைச் செடிகளைப் பறிப்பதோ, அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதோ குற்றம்.
நல்ல மூலிகைகள் போலவே, சில கெட்ட மூலிகை களும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 'திசை வெரட்டி' என்பது ஒரு வகை தாவரம். இதன் அருகே போனால் நாம் எந்த திசையில் செல்கிறோமோ, அதன் எதிர்த் திசையில் நம்மைப் பயணப்பட வைத்து விடும். சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் நாம், தப்பித் தவறி 'திசை வெரட்டி' தாவரத்தைத் தொட்டு விட்டாலோ அல்லது அதன் ஸ்பரிசம் நம் மேல் பட்டு விட்டாலோ, பயணம் பாதை மாறிப் போய்விடும். ஜாக்கிரதை.
அதேபோல் தகரத்தையும் தங்கமாக்கும் மூலிகையும் இங்கு உண்டாம். இதை ஒரு கதையாக நம்மிடம் சொன்னார் வெளியூர் அன்பர் ஒருவர். ''ஒரு முறை ஒரு குடும்பத்தினர் சதுரகிரிக்கு வந்து தரிசித்து விட்டுத் திரும்ப ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களில் ஒரு இளம் பெண் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி இருக் கிறார். திரும்பியதும் அவளது கால்களைப் பார்த்த பெற்றோருக்கு பிரமிப்பு. அவள் கால்களில் இருந்த ஒரு வெள்ளிக் கொலுசு, தங்கக் கொலுசாக மாறி இருந்தது (ஏற்கெனவே அணிந்திருந்தது வெள்ளிக் கொலுசு!). அந்தப் பெண்ணுக்கும் வியப்பு. இது எப்படி மாறியது என்று அவளுக்குச் சொல்லத் தெரிய வில்லை. பிறகுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்தது, 'தங்கம் தயாரிக்கப் பயன்படும் ஒரு வித மூலிகைச் செடி அவள் கால்களில் படவே, அது தங்கமாக மாறியது' என்று.
அதன் பிறகு, இந்தச் செடியை அதே இடத்தில் தேடிச் சென்ற சில பேராசைக்காரர்களுக்கு அங்கே இருந்த வேறு சில செடிகள் பட்டு கண் எரிச்சலும், உடல் அரிப்பும் ஏற்பட்டதுதான் மிச்சம்!

- (அதிசயங்கள் தொடரும்)

No comments:

Post a Comment