உமாசகிதர் [உமா மகேசர்] |
நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீஉமாமகேஸ்வர வடிவங்கள் விசேஷமானவை. இவை ரூபமண்டலம், விஷ்ணு தர்மோத்தரம் முதலான நூல்களில் கூறியுள்ளபடி அமைந்துள்ளன. உயர்ந்த பீடத்தில் சிவபெருமான் வீற்றிருக்க அவருக்கு இடப் புறம் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் உமாதேவி.
தன் வலக் கையை, சிவபெருமானின் மடி மீது ஊன்றியும், இடக் கையில் இருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்தபடியும் திகழ்கிறாள் அம்பிகை. இருவருக்கும் மேலே கங்காதேவி! தவிர, ஸ்வாமி- அம்பாளுக்கு மேலே ஒரு புறம்- திருமாலும்; மறுபுறம்- பிரம்மனும் வணங்கிய நிலையில் உள்ளனர். பக்க வாட்டிலும் பீடத்திலும் சிவகணங்கள், பிருங்கி முனிவர், விநாயகர் மற்றும் முருகப் பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
டெல்லி அருங்காட்சியகத்தில், சாளுக்கியர் காலத்து உமாமகேஸ்வரர் வடிவம் ஒன்று உள்ளது.
கேரளாவில் அநேக கோயில் களில் உமாமகேச வடிவங்கள் ஓவியமாகவும் சிற்பமாகவும் காணப்படுகின்றன. குருவாயூர் அருகே மம்மியூர் சிவாலயத்தில், உமாமகேசர் திருவுருவம் வண்ண ஓவியமாகத் திகழ்கிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை செல்லும் முன் வழிபட்ட தலம், திருவஞ்சைக்களத்தப்பர் கோயில் (கொடுங்களூர் பகவதி கோயில் அருகில் உள்ளது). இந்தக் கோயிலின் வடக்கு உள் பிராகாரத்தில் உமாமகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு, சிவனாரின் மடி மீது உமாதேவி அமர்ந்து அருள்பாலிக்கும் எழில் வடிவை, 'சிவ பஞ்சாட்சரி' என்கின்றனர்.
கொல்லம் நகரில் உள்ள ஸ்ரீஉமாமகேஸ்வரர் ஆலயத்தில் இடப வாகனத்தில் சிவபிரானும், அருகில் சிம்ம வாகனத்தில் உமாதேவியும் காட்சி தருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற தலம், சுப்ரமண்யா. பாம்புப் புற்று வடிவில் ஸ்ரீமுருகப் பெருமான் வணங்கப்பெறும் இங்குள்ள கோயிலில், வடகிழக்குப் பகுதியில் மிகப் பெரிய அளவில் ஸ்ரீஉமா மகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு, அம்பிகையை மடியில் அமர்த்தியபடி பஞ்சலோக வடிவில் காட்சி தருகிறார் ஈசன். இவருடன் கணபதி, சூரியன், விஷ்ணு மற்றும் தேவி ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். இந்த மூர்த்தியை, நாரத முனிவர் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர்.
சீர்காழி- ஸ்ரீபிரமபுரீஸ்வரர் ஆலய விமானத்தின் நடுப்பகுதியில், தோணியில் அமர்ந்து காட்சி தரும் ஸ்ரீஉமாமகேஸ்வரரை தரிசிக்கலாம். இவரை, 'தோணியப்பர்' என்பர். சீர்காழிக்குரிய பன்னிரண்டு பெயர்களில் 'தோணிபுரம்' என்பதும் ஒன்று.
வைத்தீஸ்வரன்கோவில் அருகில் உள்ள தலைஞாயிறு என்று வழங்கும் 'கருப்பறியலூர்' கோயிலிலும் கட்டு மலை மீது உமாமகேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. இதை, 'மேலைக்காழி' என்பர். இந்தக் கோயிலின் மகா மண்டபத்திலும் உமாசகித மூர்த்தி வடிவம் உள்ளது.
சிற்ப நூல்களில், ஒரு முகம் நான்கு கரங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்து காட்சியளிப்பார் உமாசகித மூர்த்தி. பின்கரங்களில் மான்- மழு; முன் வலக் கரத்தில்- அபய முத்திரை; இடக் கையில்- வரத முத்திரை தாங்கி காட்சி தருகிறார். ஒரு முகம், இரண்டு கரங்களுடன் திகழ்கிறாள் தேவி. வலக் கரத்தில் தாமரை மலர் ஏந்தி, வலக் காலை தொங்கவிட்டபடி காட்சியளிப்பாள். சிற்பரத்தினம் என்ற நூல், 'வலக் கரம்- நீலோத்பல மலர் ஏந்தியும், இடக் கரம்- வரதமாகவும் இருக்கும்' என்கிறது.
சைவத் திருமுறைகளில் பல பாடல்களில், உமாமகேச மூர்த்தி வடிவம் போற்றப்படுகிறது. 'பெண்ணின் நல்லா ளடும் பெருந்தகை இருந்ததே' என்றும், 'திருந் திழையாளடும் பெருந்தகையிருந்ததே' என்றும் சம்பந்தப் பெருமான் போற்றுகிறார். 'பண்ணின் னேர் மொழியாள் உமை பங்கர்' என்று நாவுக்கரசர் பாடுவார். இவர்கள் தவிர மணிவாசகரும், கந்தபுராணத்தில் கச்சியப்பரும் இந்தத் திருவடிவைப் போற்றுகின்றனர்.
புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று கடைப்பிடிக்கப் படுவது ஸ்ரீஉமாமகேஸ்வர விரதம். இதேபோல்... சித்திரை அல்லது மார்கழி மாதம் வளர்பிறை அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி நாட்கள் தொடங்கி, ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் நோன்பையும் உமா மகேஸ்வர விரதம் என்பர்.
மைசூரை ஆட்சி செய்த ஹைதர்அலி...ஒருபுறம் உமாமகேசர் வடிவமும்; மறுபுறம் 'ஹை' என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டானாம். சுமார் 3 கிராம் எடையுள்ள அந்த நாணயம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில், உமாதேவியை மடி மீது அமர்த்தியபடி சிவபெருமான் காட்சி தருகிறார்.
சோழர்கள் காலத்தில், உமாமகேசர் திருவுருவங்களை தங்கத்தால் செய்து வழிபட்ட வழக்கம் இருந்து என்பதை, திருவிடைமருதூர் கல்வெட்டில் காண முடிகிறது. சோழர் குலப் பேரரசி பஞ்சவன் மாதேவி, தங்கத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீஉமாசகித திருமேனியை இந்தத் தலத்துக்கு அளித்துள்ளாள்.
சில கோயில்களில், கருவறை விமானத் திலும் உமாமகேச வடிவங்களைக் காணலாம். சிவாலயங்கள் சிலவற்றில் பிரம்மோற்ஸவத்தின்போது, திருக்கல்யாண வைபவத்துக்கு மறுநாள், உமாமகேஸ்வர கோலக் காட்சி என்ற வைபவம் நடை பெறுகிறது.
அன்று சிவபெருமானையும் தனி அம்பிகையையும் ஒரே பீடத்தில் அமர்த்தி, ஷோடச உபசார பூஜைகளைச் செய்வர். சிவபெருமான் திருக்கல்யாணத்துக்குப் பிறகு உமாதேவியுடன் அமர்ந்து, அன்பர்களுக்கு வரம் அருளும் காட்சியாக இதைக் கண்டு இன்புறுவர்.
|
No comments:
Post a Comment