Monday, 18 September 2017

ஞானம் தருவான் ஞானக் குழந்தை!

பித்தா பிறை சூடி...

'சிவபெருமானுக்குச் சீர்காழி’ எனப் போற்றப்படும் சீர்காழி எனும் ஊரில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியார் தம்பதிக்கு ஒரேயரு குறை... பிள்ளைச் செல்வம் இல்லை! ஸ்ரீபெரியநாயகியையும் ஸ்ரீதோணியப்பரையும் வணங்காத நாளில்லை; அங்கே கண்ணீர் விட்டுக் கதறாத பொழுது இல்லை.
வேண்டுதல் பலித்தது. ஒரு திருவாதிரை திருநாளில் ஆண் குழந்தை பிறந்தது. சிந்தை மகிழ்ந்த சிவபாத இருதயர், குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்.  
ஒருநாள், சிவபாத இருதயர் நீராடப் புறப்பட்டார்.  'நானும் வருகிறேன்’ என அழுது அடம்பிடித்து, அவருடன் சென்றான். குழந்தை. திருக்குளத்தை அடைந்த சிவபாத இருதயர், கரையில் பிள்ளையை உட்காரச் சொல்லிவிட்டு, நீரில் மூழ்கி நீராட ஆரம்பித்தார். தந்தையைக் காணாத குழந்தை 'அம்மே... அப்பா!’ என அழ ஆரம்பித்தான். அதைக்கண்டு சிவனார், பார்வதிதேவியிடம், 'குழந்தையின் அழுகையை நிறுத்து’ என உத்தரவிட்டார். உடனே, அங்கே பிரத்யட்சமான உமையவள், திருமுலைப்பாலை பொற்கிண்ணத்தில் எடுத்து, குழந்தைக்கு ஊட்டினாள். அவனது அழுகை நின்றது; அவனுக்குள் புது மாற்றம் நிகழ்ந்தது! சிவ-பார்வதியர் ஆட்கொண்ட பிள்ளை, 'ஆளுடைப்பிள்ளை’ ஆனது; மெய்ப்பொருளும் சிவதத்துவமும் உணர்ந்தறிந்ததால், சிவஞானசம்பந்தர் என்றும் பேர்பெற்றது அந்தக் குழந்தை!
குளித்து முடித்துக் கரைக்கு வந்த தந்தை, இதழோரத்திலும் கன்னத்திலும் பால் வடிந்தபடி இருக்கும் மகனைக் கண்டு  'பால் திருடினாயா... எவரோ தந்த பாலை ஏன் குடித்தாய்?'' என்றபடி, ஆத்திரத்துடன் கோலை எடுத்து, அடிப்பதற்காக ஓங்கினார்.உடனே, கண்ணீர் பெருக்கெடுக்க... சிரசின் மேல் இருகரம் குவித்து, 'தோடுடைய செவியன்’ எனப் பாடத் துவங்கினார் ஞான சம்பந்தர். அப்படிப் பாடியபடியே, திருத்தோணியப்பரின் ஆலயத் துக்குள் நுழைந்த சிவ-பார்வதியைப் பின்தொடர்ந்து சென்றார்.
திருக்கயிலாயத்தைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட ராவணனுக்கு உடலில் காயம்பட்டதையும், தனது இசையால் ராவணன் சிவனருள் பெற்றுப் பிழைத்ததையும் திருஞானசம்பந்தர் உள்ளமுருகிப் பாட.. அவரின் தந்தையும் சீர்காழி வாழ் மக்களும் கேட்டுப் பிரமித்தனர். பிறகு, சிவனாரே தோன்றி, 'நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரம் பொறிக்கப்பட்ட பொற்றாளத்தை வழங்கியதும், தந்தையார் தன் மகனைத் தோளில் தூக்கிக்கொண்டு சீர்காழி தெருக்களில் உலா வந்ததும், அதையடுத்து மொத்த உலகத்தாரும் ஞானசம்பந்தர் பெருமானைப் போற்றித் துதித்ததும் நாம் அறிந்த கதைதானே?!  
இசை ஞானத்துடன் திகழ்ந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். திருஞானசம்பந்தரை அறிந்து வியந்தவர், அவரைத் தரிசித்தார். ''தாங்கள் பதிகம் பாடும்போது, அடியேனின் இசையையும் சேர்த்துக் கொண்டால், பாக்கியவானாவேன்'' என வேண்டினார். இதற்குச் சம்மதித்த திருஞானசம்பந்தர், ஒவ்வொரு தலத்துக்கும் நீலகண்ட யாழ்ப்பாணருடன் சென்று, அந்தத் தலத்தையும், அங்கே குடிகொண் டிருக்கிற இறைவனையும் போற்றிப் பாடினார்.
ஞானசம்பந்தர் வளர்ந்து, தாமே நடக்கத் துவங்கினார். அப்படி, அவரே நடந்து சென்று வணங்கிய திருத்தலம், திருநெல்வாயில். அந்த ஊரில் அந்தணர்களின் கனவில் தோன்றிய சிவனார், 'எம்மைத் தரிசிக்க வரும் ஞானசம்பந்தனுக்கு முத்துச்சிவிகையையும், முத்துக்குடையையும், திருச்சின்னங்களையும் தந்து வரவேற்கவும்’ என உத்தரவிட்டார். விடிந்ததும்... சிவ சந்நிதியைத் திறந்த அந்தணர்கள் அதிர்ந்தனர். ஆம்... முத்துச்சிவிகை, முத்துக்குடை ஆகியவற்றைத் தயாராக வைத்திருந்தார் சிவபெருமான்.
ஞானசம்பந்தரின் புகழ் வளர்ந்தது.  அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு நெகிழ்ந்த திருநாவுக்கரசர், சீர்காழிக்கே வந்து, ஞானசம்பந்தருடன் சில காலம் தங்கினார். இருவரும் சைவத்தைச் செழிக்கச் செய்தனர்.
மழபாடி எனும் தேசத்துக்குச் சென்ற ஞானசம்பந்தர், அங்கே, திருப்பாச் சிலாச்சிரமத்தில் (திருவாசி) கொல்லி மழவன் எனும் மன்னனைச் சந்தித்தார். அவனுடைய மகள் அடிக்கடி வலிப்பு நோயால் அவதியுற்று வந்தாள்.   அந்தத் தலத்தின் ஆலயத்தில் பதிகம் பாடி, சிவனாரிடம் முறையிட்டு, அவளது வயிற்று வலியைப் போக்கி அருளினார் சம்பந்தர்.
இவ்வாறு சிவபக்தியால் சைவம் தழைக்கச் செய்த திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்று மதுரைக்குச் சென்றார். அங்கே சமணர்களால் அவருக்குப் பிரச்னை வந்தது. சிவனருளால் அவர்களின் சூழ்ச்சிகளையும் சோதனைகளையும் வென்ற திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னனின் வெம்மை நோய் நீங்க அருள் செய்தார். மனம் நெகிழ்ந்த பாண்டியன் சைவத்துக்கு மாறினான்; பாண்டியதேசமும்தான்!
திருஞானசம்பந்தர், திருமண வயதை அடைந்தார். உறவுகளின் வற்புறுத் தலுக்குப் பணிந்தார். திருமண நாளில், அக்னியை வலம் வரும் வேளையில்... 'அக்கினியானது சிவனன்றோ’ என்றபடி சிவனாரைப் பிரார்த்திக்க, 'ஞானசம்பந்தா! நீயும் உன் மனைவியும், இந்த நன்னாளில் இங்கே கூடியுள்ள அனைவரும், சோதியான என்னிடம் வந்தடையுங்கள்’ என அருளினார் ஈசன். 'காதலாகிக் கசிந்து...’ என தென்னாடுடைய சிவனை நினைத்து, உருகி உருகிப் பாடிய திருஞானசம்பந்தர் முன்னே செல்ல... மனைவியும் மற்றவர்களும் பின்தொடர்ந்துசென்று, சிவசோதியில் ஐக்கியமானார்கள்!
திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர திருநாளில்  அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, ஈசனையும் அவனது அடியார் திருஞான சம்பந்தரையும் மனதார வணங்குங்கள்; ஞானமும் செல்வமும் வாய்க்கப் பெறலாம்!  

No comments:

Post a Comment