லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடிய அந்த ஆடி அமாவாசை அன்று சந்தன மகாலிங்கம் திருக் கோயில் அருகே நடந்த மகேஸ்வர பூஜையில் முதல் பந்தியில் சாப்பிடும் அடியவர்களில் சந்தன மகாலிங்கமும் ஒருவர் என்கிற தகவலைக் கேட்ட பின் அன்பர் ராம்குமார் பரபரப்பானார்.
அவரால் இந்த விஷயத்தை நம்ப முடியவில்லை என்றாலும் தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 'இது போன்ற மகேஸ்வர பூஜைகள் நடக்கும்போது அடியவர்களோடு அடியவராக இறைவனும் கலந்து கொண்டு உணவு உண்பார்' என்று பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்ட அவருக்கு, இன்று அத்தகைய ஒரு சம்பவத்தை நேரிலேயே காணப் போகிறோம் என்ற சந்தோஷம். உற்சாகமாக வளைய வந்தார் ராம்குமார். 'இன்று, சந்தன மகாலிங்கத்தை எப்படியும் நேருக்கு நேர் பார்த்து விடப் போகிறேன்' என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது.
தன்னிடம் இருந்த மினி வீடியோ கேமராவில், அங்கே உணவருந்தும் அடியவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாகப் பதிவு செய்து கொண்டிருந்தார் ராம்குமார். இவரது இந்த செயலை அடியவர்களும் அவ்வப்போது கண்ணுற்றுத் தங்களுக்குள் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், கருமமே கண்ணாக தங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளை ருசித்துச் சாப்பிடுவதிலும் முனைப்பாக இருந்தனர்.
அன்புள்ளம் கொண்ட உதவியாளர்கள் பலரும் ஓடியாடி அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். சொல்லி வைத்தது போல் அடியவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதாவது, அடியவர் ஒருவர் குழம்பு சாதத்தை ஒரு கவளம் எடுத்து வாய் அருகே கொண்டு போனார் என்றால், அங்கே உணவருந்திய அனைத்து அடியார்களும் அதே மாதிரி குழம்பு சாதத்தை எடுத்து வாய் அருகே கொண்டு போனார்கள். அதே போல், ஒருவர் பொரியலை எடுத்து உட்கொள்ள முற்படும்போது அனைத்து அடியவர்களும் பொரியலையே எடுத்து உண்டனர். இது திட்டமிட்டு நடக்கும் செயல் அல்ல. தவிர, ஒரே நேரத்தில் இத்தனை அடியவர்களும் பெரிய அளவில் பயிற்சி எடுத்துக் கொண்டால்தான் இப்படி ஒரு சம்பவம் சாத்தியமாகும். ஆனால், இப்படி ஓர் அதிசயம் - எப்படி அழகாக இங்கே நிகழ்கிறது என்பது எவருக்கும் புரியவில்லை. அதுதான் தெய்வ சங்கல்பம்.
எப்படித்தான் அந்தப் பந்தி அவ்வளவு சீக்கிரம் நடந்து முடிந்தது என்பது தெரியவில்லை... தங்கள் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் அனைத்தையும் முழுக்கச் சாப்பிட்டு முடித்திருந்தனர் அடியவர்கள். சொல்லி வைத்தது மாதிரி சாப்பிட்டு முடித்த எல்லா இலைகளும் படுசுத்தமாக இருந்தன!
ராம்குமார் பரபரப்பானார். இன்னும் சில மணித் துளிகளே பாக்கி. அதற்குள், அடியவர்களில் எவர் சந்தன மகாலிங்கம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அன்னதானம் நடந்து கொண்டிருந்த இடத்தில், கையில் விடியோ கேமராவுடன் குறுக்கும் நெடுக்குமாக- முகத்தில் கேள்விக் குறியுடன் அலைந்து கொண்டிருந்தார்.
'அட! அதோ, அந்த அடியவர் பார்ப்பதற்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறாரே... மனிதர்களுக்கு உண்டான இயல்பான குணங்கள் அவர் முகத்தில் தெரியவில்லையே? ஒருவேளை அவர், அடியவர் வடிவில் வந்த சந்தன மகாலிங்கமாக இருக்குமோ'-என்று ராம்குமார் யூகித்த அதே கணம்... அந்த சாது மெள்ள எழுந்தார். சொல்லி வைத்தது போன்று, அவர் எழுந்த அதே விநாடியில் மற்ற சாதுக்களும் எழுந் தனர்! இது எப்படி நிகழ்ந்தது என்பதை எவராலும் வர்ணிக்க இயலாது! இறைவனின் சித்தம் என்னவோ, அப்படித்தானே எல்லாமும் நடக்கும்?
அந்த சாது, கை கழுவும் இடம் நோக்கி மெள்ள நகர்ந்தார். அவர் அருகில் சென்று தரிசிக்கலாம் என்று ராம்குமார் யத்தனிப்பதற்குள்... கசகசவென்று சூழ்ந்து நின்று கொண்டனர் மற்ற அடியவர்கள்!
'இனியும் காலடி எடுத்து வைத்து, அந்த அடியவரைக் காண நெருங்க முடியாது' என்கிற நிலையில், தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து கொண்டே குதிகால்களை மெள்ள மேலே உயர்த்தி, தலையை மட்டும் இப்படியும் அப்படியும் திருப்பி, அடியவர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் தன் கண்களைச் சுழல விட்டார். ஆனால், அந்தப் பரம்பொருள் அங்கு இருந்தால்தானே? அவரை அங்கே காணவில்லை. எங்கு தேடியும் அவர் சிக்கவில்லை. ஒவ்வொருவராக செம்பில் நீர் எடுத்துக் கொண்டு வெளியே ஓரிடத்துக்குப் போய்த் தங்கள் கையைக் கழுவிக் கொண்டனர். அங்கேயும் ஓடினார் ராம்குமார். அந்த அடிய வர் கையைக் கழுவிக் கொண்ட மாதிரி இருந் தது. ஆனால், கண்களில் சிக்கவில்லை. அங்கு, கை கழுவ வந்த மற்ற அடியார்களிடம் விசாரித் தும் பயனில்லை!
அப்போதுதான் அடியவர் ஒருவர் மற்றொரு அடியவரிடம் நிதானமான குரலில் எவருக்கோ சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார் ''உணர்ந்து கொண்ட அனுபவங்களை எப்போதும் உனக்குள்ளேயே புதைத்து வை. வெளியே சொல்லாதே. இறைவனே உன்னை சோதிப்பான்; நீ இறைவனை சோதிக்க முற்படாதே!
இறைவன் தரிசனம் தருவதில் இரண்டு விதம் இருக்கிறது. தான் மிகவும் விரும்பி, குறிப்பிட்ட ஒரு பக்தனுக்குக் காட்சி தர வேண்டும் என்பதற்காகத் தோன்றுவார். அப்போது, அந்த பக்தருடன் இருக்கும் பலரும் இறைவனின் நேரடி தரிசனத்தைத் துல்லியமாகப் பெறுவர். ஆக, இறைவன் வந்தது ஒருவருக்காக மட்டுமே! ஆனால், அதன் பொருட்டு அந்தப் பக்தரைச் சார்ந்த பலரும் தரிசனத்தை எளிதில் பெறுவர். இது நிகழக் கூடிய ஒன்று!
அதுபோல் இன்று இறைவன் இங்கே மகேஸ்வர பூஜையில் பங்கு கொள்ள விருப்பம் கொண்டு எழுந்தருளி உள்ளான். யார் யாருக்கெல்லாம் இந்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்று பிராப்தம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் ஆனந்தப்படட்டும். உனக்கும் எனக்கும் தரிசனம் கிடைத்து விட்டது. அந்த மட்டில் உனது சந்தோஷத்தைப் பூர்த்தி செய்து கொள். அதை விட்டு விட்டு, 'சாப்பிட்டு முடித்த பின் கை கழுவினாரா இறைவன்? கை கழுவியதும் எங்கே போவார்... என்றெல்லாம் மனம் குழம்பி, அவரைத் தொடர்ந்து சென்று பார்க்காதே. அது உன்னால் சாத்தியம் இல்லை. தவிர, அவருக்கும் உண்டு ஆயிரம் வேலைகள்.
இன்றைக்கு ஒரு நல்ல காட்சி நமக்குக் கிடைத் திருக்கிறது. கிடைத்த உணவில் திருப்தி கொண்டது மாதிரி, கிடைத்த தரிசனத்தில் திருப்தி கொள். வா, சந்தன மகாலிங்கம் கோயிலில் மணி அடிக் கிறது. அந்தப் புனிதனை தரிசிப்போம்'' என்று ஒருவரின் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துச் சென்றார்.
இறை அனுபவங்கள் இப்படித்தான். ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக சிலருக்கு இத்தகைய அனுபவங்கள் வாய்க்கும். இதற்கு வயது தடையே இல்லை. ஒன்றுபட்ட மனம் மட்டும் போதும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கிடைத்த அனுபவங்களை அனுபவிக்க வேண்டும். அனுபவிக்கிற நேரத்தில் ஆராய முற்படக் கூடாது. ஆராய முற்பட்டால் ஆன்மிகம் அங்கே இருக்காது. அதாவது, மெய்ஞானம் போய் விஞ்ஞானம் தலை தூக்கும். விஞ்ஞானத்துக்கு விளக்கங்கள் தேவை. மெய்ஞானத்துக்கு விளக்கங்கள் வேண்டாம். தன்னை அர்ப்பணித்தாலே போதும்.
ராம்குமார் அப்போது எடுத்த அந்த வீடியோ காட்சிகள் தற்போது அவரிடம் இல்லை. அவர் கேட்டார்... இவர் கேட்டார் என்று அது பல கைகள் மாறி மாறி, எங்கோ போயிற்று. போகட்டும். ஆசாமிகளுக்குத்தான் போட்டோவும் வீடியோவும் தேவை. இறைவனுக்குமா?!
சந்தன மகாலிங்கம் சந்நிதிக்கே உரிய சில சிறப்பம்சங்கள் உண்டு.
18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தனமகாலிங்கம் கோயிலில் மட்டுமே.. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விசேஷ அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும்.
சித்தர் ஒருவர் வாழ்ந்த (சட்டநாதர்) குகையை நேரில் பார்ப்பது... அதுவும் சந்தனமகாலிங்கம் சந்நிதியில் இருந்து கூப்பிடு தூரத்திலேயே இந்த குகை அமைந்திருப்பது வெகு விசேஷம்.
சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிச்சந்நிதி உண்டு.
சந்தனமகாலிங்கம் சந்நிதியில், மகாசிவராத்திரி யின்போது, பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்ப்பித்து சந்தன மகாலிங்கத்தை வழி படலாம். மகா சிவராத்திரியின்போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும்... பக்தர்கள் வரிசையில் சென்று ஸ்வாமியை தரிசிப்பதுடன், தாங்களே பூக்கள் சமர்ப்பித்தும் வழிபடலாம்.
அபிஷேகத்தின்போது, சந்தன மகா லிங்கத்தை வெவ்வேறு ரூபங்களில் தரிசித்த அனுபவமும் சிலருக்கு உண்டு. தவம் செய்யும் யோகியைப் போன்றும், தியானத்தில் இருக்கும் முனிவரைப் போன்றும் சந்தன மகா லிங்கத்தை தரிசித்ததாக சிலர் கூறுகிறார்கள்!
சதுர கிரியில் இது ஒன்றுதான் ஏகபோக திருவிழா. சுந்தர மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் தேடி வெள்ளந்தியாய் மக்கள் வருவார்கள். கூட்ட நெரிசலில் இந்த மலைப் பாதையில் எப்படி ஏறிப் போவது... தண்ணீர்- சாப்பாடு கிடைக்குமா... தூங்க இடம் கிடைக்குமா என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'மகாலிங்கத்தின் திருவடிகளே போற்றி' என்பதாக, அதை மட்டுமே உச்சரித்துக் கொண்டு குழந்தை குட்டிகளுடனும் தங்களுக்கு வேண்டிய சுமைகளுடனும் மலை ஏற ஆரம்பித்து விடுவார்கள்.
தண்ணீர், உணவு, உறங்க இடம் போன்ற எதற்கும் உறுதி இல்லாத இந்த மலையில் மகாலிங்க தரிசனம் ஒன்றையே தங்கள் இலக்காக வைத்துத் திரளாகக் குவிவார்கள் பக்தர்கள். கிடைப்பதை உண்டு, தோதுப்பட்ட இடத்தில் படுத்துச் செல்வார்கள். இத்தனைக்கும் ஆடி அமாவாசை நேரங்களில் இலவச தண்ணீர், இலவச சாப்பாடு போன்றவற்றைப் பல தனியார் பெருமக்களும் வழங்குவார்கள்.
மலையின் பல்வேறு அடிவாரப் பகுதிகளில் இருந்தும், மகாலிங்க ஸ்வாமியைக் குறி வைத்து மேலே ஏறத் தொடங்குவார்கள் கிராம மக்கள். சாதாரண நாட்களில் தாணிப்பாறை வழியாக மட்டுமே பாதை. ஆனால், ஆடி அமாவாசையின்போது மலையின் எல்லாப் பகுதிகளிலும் மனிதத் தலைகள்தான் தெரியும். காரணம்- ஒரே பாதையில் மட்டும் லட்சக் கணக்கானவர்கள் தொடர்ந்து நடக்கத் தொடங்கினால், அது விபரீதமாகி விடும். அதனால் ஒட்டுமொத்த மலை முழுவதிலும் மனிதர்கள் கூட்டம் நிரம்பி, மனித மலையாகவே தெரியும்.
தேங்காய் உடைப்பது, அர்ச்சனை செய் வது, மொட்டை அடித்துக் கொள்வது, ஆடு-கோழி பலி கொடுப்பது (இது சுந்தர மகா லிங்கம் கோயிலின் கீழே மட்டும் நிகழும்), காது குத்துவது என்று சதுரகிரி வந்து செல்லும் பக்தர் களின் பிரார்த்தனைகள் பல விதம். இதெல்லாம் அவரவர்களின் நேர்த்திக் கடனைப் பொறுத்தது.
கடந்த வருட ஆடி அமாவாசையின்போது மலைக்கு சுமார் 12 லட்சம் பேர் வந்து தரிசித்துச் சென்றதாக புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது. இந்த வருடம் இந்த எண்ணிக்கை சுமார் 15 லட்சம் ஆகலாம் என்கிறார்கள். இத்தனைக்கும் இந்த மலைக்குச் செல்வதற்கு- முறையான பாதை இல்லை; மலையில் மின்வசதி, கழிப்பறை வசதி இல்லை; மருத்துவ வசதி இல்லை. இவை அனைத்தையும் மீறி பலரும் இங்கு வந்து தரிசித்து விட்டு மன நிறைவோடு செல்கிறார்கள் என்றால், அது மகாலிங்கத்தின் அருள் இன்றி வேறு எதுவும் இல்லை!.
இந்த ஆடி அமாவாசையின்போது சதுரகிரிக்கு வந்து செல்லும் பக்தர் களுக்கு என்னென்ன வசதிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும் என்று சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் பக்தர்கள். அவை அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முறையாகத் தொகுத்து இங்கே தருகிறோம். பக்தர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தருவதில் அரசாங்கத்துக்கும் பொறுப்பு இருக்கிறதுதானே?!
மருத்துவம்
சாதாரணமாக ஆடி அமாவாசை நாட்களில் செவிலியர்கள் சிலரும், ஆண் உதவியாளர்கள் சிலரும் முதலுதவி தேவைகளைக் கவனிப்பதற்காக மலைக்கு வருவது உண்டாம். தவிர, தனிப்பட்ட முறையில் அன்பர்கள் சிலர், நல்லிதயம் கொண்ட வர்களின் உதவியோடு மருத்துவ முகாம்களை அமைப்பார்கள். இதுதான் இன்று வரை இருந்து வரும் நடைமுறை.
ஆனால், மகாலிங்கத்தைத் தரிசிக்க மலை ஏறி வரும் லட்சக்கணக்கானவர் களைக் கவனிக்க... இது, யானைப் பசிக்கு சோளப் பொறி என்பது போலத்தான்! கீழிருந்து மலைக்கு ஏறி வரும் பாதையில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.
மூச்சுத் திணறல் ஏற்படும் நபர்களுக்கு, ஆக்ஸிஜன் வழங்கப்படுவதற்கான வசதி இருக்க வேண்டும். தவிர, தலைவலி, வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற உபாதைகளுக்கு மருந்து - மாத்திரைகளும் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு
ஆடி அமாவாசை நேரங்களில் பந்தோபஸ்து பணிக்காக சதுரகிரிக்கு அனுப்பப்படும் போலீஸார் எண்ணிக்கையும், கூடுகிற கூட்டத்தை வைத்துப் பார்க்கும்போது வெகு குறைவுதானாம். ஏதோ, மகாலிங்கத்தின் அருளால் ஒவ்வொரு வருடமும் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில், குறிப்பிட்ட ஓர் இடத்தை பக்தர்கள் கடந்து செல்ல சுமார் ஆறு மணி நேரம் வரை கூட ஆகுமாம்.
கூட்டத்தை முறையாக கட்டுப் படுத்த பல இடங்களிலும் போலீஸா ரின் ஒத்துழைப்பு அவசியம். போலீஸார் அதிக எண்ணிக்கையில் இருந்தால் பல இடங்களில் ஏற்படும் நெரிசல், நடைபாதை ஆக்கிரமிப்புகள், பிக்பாக்கெட் முதலானவற்றை பெருமளவில் கண்டுபிடித்துத் தீர்வு காண முடியும்.
வருகின்ற போலீஸாருக்கு வயர்லஸ் வசதி இருப்பதும் அவசியம். ஏனென்றால், பக்தர்கள் எவருக்காவது ஏதாவது ஓர் அசம்பாவிதம் என்றால், அவரை சிகிச்சைக்காகக் கீழே கூட்டிச் செல்வதற்கு 'டோலி' அவசியம் வேண்டும். இதை எல்லாம் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம் என்கிறார்கள்.
சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து சந்தன மகாலிங்கம் கோயில் வருவதற்கும், சந்தன மகா லிங்கம் கோயிலில் இருந்து சுந்தர மகா லிங்கம் கோயில் செல்வதற்கும் தனித் தனிப் பாதைகள் இருக்க வேண்டும். காரணம்- ஒரே பாதையில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பக்தர்கள் கடந்து செல்லும் போது நெரிசல்கள் ஏற்படலாம்!
பாதை பராமரிப்பு
சதுரகிரிக்குச் செல்லும் பாதை, இயற்கையாக அமைந்த ஒன்று. மலையை ஓரளவு குடைந்து மகா லிங்கத்தைத் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதை இது. வாகனங்கள் இங்கே செல்ல முடியாது. நடை யாத்திரைதான்! இந்தப் பாதையில் மேடும் பள்ளமும், குண்டும் குழியும் சகஜம். சில இடங்களில் பாதையின் அகலம் வெறும் மூன்றடி மட்டுமே. இதுபோன்ற இடங்களில், பெரும் திரளாக மக்கள் நடக்கும்போது நெரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. தவிர, சில இடங்களில் கால் 'ஸ்லிப்' ஆகி, ஒரு தப்படி தள்ளி பாதையின் ஓரமாகக் காலை வைத்து விட்டால், கீழே அதல பாதாளம்தான்!
இதுபோன்ற இடங்களில் பாதையை ஓரளவு செப்பனிட்டு, போதிய போலீஸாரை நிற்க வைத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
சில இடங்களில் பாறைகளில் நடக்கும்போது வழுக்கும் தன்மை கொண்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் போதிய பாதுகாப்புச் சங்கிலிகள் அமைத்து, அவற்றின் உதவியுடன் பக்தர்களைப் பாதையைக் கடக்க உதவ வேண் டும்.
செல்லும் வழியைச் சுத்தமாக வைத்திருப்பது பக்தர்களின் கடமை. உணவுப் பொருட்களின் கழிவுகளையோ, பிளாஸ்டிக் கழிவுகளையோ ஆங்காங்கே வீசி, மலையை மாசு படாமல் இருக்கச் செய்வது அவசியம்.
தன்னார்வ ஆர்வலர்கள்
'வாலண்டியர்கள்' எனப்படும் தன்னார்வத் தொண்டர்கள் ஆடி அமாவாசை போன்ற நேரத்தில் அதிகம் தேவைப்படுவார்கள். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற ஸ்தாபனங் களில் பணி புரிபவர்கள் தங்களால் முடிந்த அளவு மாணவர்களை, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இந்தப் பணிகளில் ஈடுபடச் செய்தால் நலம். பக்தர்களுக்கு இது, பெரும் உதவியாக இருக்கும் (சதுரகிரி அமைந்துள்ள வனப்பகுதி மதுரை மாவட்ட நிர்வாகத்தில் உள்ளது. அடிவாரமான தாணிப் பாறை அமைந்திருக்கும் பகுதி விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்டது).
ஆடி அமாவாசை முடிந்த பிறகு, ஒரு விசிட் அடித்து மலையைப் பார்க்க வேண்டுமே! உலகில் எத்தனை விதமான கழிவுகள் உண்டோ, அத்தனையையும் இங்கு ஒரே நேரத்தில் காண லாம். அறுந்து போன செருப்புகள், மேல் துண்டுகள் முதலான துணிமணிகள், உணவுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலியான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், காகிதக் குப்பைகள், இயற்கை உபாதைக் கழிவுகள்... இப்படி ஆங்காங்கே மலை போல் குவிந்து கிடக்கும். இதை எல்லாம் ஆள் வைத்துச் சுத்தம் செய்வது என்பது எந்த அரசுக்குமே சாத்தியம் இல்லை. ஆனால், இதை சுத்தம் செய்யும் பெரும் பொறுப்பை இயற்கையே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது. எப்படித் தெரியுமா?
ஆடி அமாவாசை முடிந்த சில தினங்களில் பெரும் மழை ஒன்று பெய்வது வாடிக்கையாம். அந்த மழை, அனைத்துக் கழிவுகளையும் அடித்துத் தள்ளி விடுமாம். பின்னே? இந்தக் கழிவுகள் மொத்தத்தையும் மனித சக்தி மூலம் அகற்ற வேண்டும் என்றால் எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் களம் இறங்க வேண்டும் தெரியுமா? அதனால்தானோ என்னவோ, இயற்கையே ஒத்துழைக்கிறது.
|
No comments:
Post a Comment