Sunday, 10 September 2017

காலிமேடு ( காரைக்காடு )

தொண்டை மண்டலப் பகுதிகளில் உள்ள திருத்தலங்களை தரிசித்துக் கொண்டே வந்த திருஞானசம்பந்தர், காஞ்சிபுரத்தை அடைந்தார். கச்சி ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு, பதிகங்கள் பாடினார். பிறகு, காஞ்சியின் பிற பகுதிகளில் உள்ள தலங்களுக்குச் சென்றார். குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும், காரைச் செடிகள் நிறைந்த வனமும், அங்கொரு ஆலயமும் இருப்பதைக் கண்டார். காரைக்காட்டில் உறையும் இறைவனார் என்பதால், 'காரைக்காட்டாரே’ என்றழைத்தார்.
அன்றாலின் கீழிருந்து அங்கு அறம் புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையில் கேளரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாரும் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டாரே
- என்று பஞ்சமப் பண்ணில் பாடினார். அந்தக் காரைக்காடு, தற்போது 'காலிமேடு’ எனப்படுகிறது. 'திருக்கச்சிநெறிக் காரைக்காடு’ என்ற இலக்கியத் திருநாமம் பெற்ற திருத்தலத்துக்குச் செல்வோமா?
காஞ்சிபுரத்தின் பாடல் பெற்ற தலங்கள் ஐந்து; அவற்றுள் இந்தத் தலமும் ஒன்று. ஊருக்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது. ரயில்வே ரோடு எனப்படும் பழைய ரயில் நிலையப் பகுதியில், தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அடைந்து, எதிரில் உள்ள சாலையில் சென்றால், காலிமேட்டை அடையலாம். காலீஸ்வரர் கோயில் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
அழகிய, சிறிய கோயில்; தனியார் பராமரிப்பில் உள்ளது. தூய்மை யாகப் பராமரிக்கிறார்கள். மேற்கு நோக்கிய ஆலயம்; மூன்று நிலை ராஜகோபுரம். கோபுரத்தை அடைவதற்கு முன்பாகவே, முகப்பு வாயிலும் அதையட்டிய தோட்டமும் உள்ளன. இறைவனின் திருநாமம் ஸ்ரீசத்யவிரதேஸ்வரர். அடடா! இந்தத் திருநாமம் எதையோ நினைவுறுத்துகிறதே! ஆமாம், காஞ்சிபுரத்துக்கு சத்யவிரத க்ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. அதற்குக் காரணமானவர், இந்தச் சிவனார்தான்! சத்யத்தையே தனது விரதமாகவும் நியமமாகவும் கொண்டவர் இவர்.
கோபுரத்துக்கு முன்பாக பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம். நந்திபகவான், பக்கவாட்டுப் பார்வையில் முகத்தைச் சாய்த்தபடி இருக்கிறார். நந்தியின் முகத்திலும் சாயலிலும் கொஞ்சுகிறது குழந்தைத்தனம். உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். மேற்குச் சுற்றில், கிழக்குப் பார்த்தபடி புதன் சந்நிதி. எதிரில், காக்கை வாகனராக சனி பகவானின் சந்நிதி. பிராகாரத்தில் வேறு சந்நிதிகள் ஏதுமில்லை. வெளி மதிலும் உள் மதிலும் உயரமாக இருக்கின்றன. வலம் நிறைவு செய்து, உள் வாயிலை அடைந்தால், இடது பக்கத்தில் நவக்கிரகச் சந்நிதி.
'காரைக்காட்டரசே’ என்று அழைத்தபடியே உள் பிராகாரத்தில் நுழைகிறோம். மேற்குச் சுற்றிலிருந்து வடக்குச் சுற்றுக்குள் நுழைந்ததும் ஸ்ரீநடராஜ சபை. சிவகாமி அம்மை தாளமிட, அதி அற்புதமாக ஆடிக் கொண்டிருக்கிறார் சிவனார். அடுத்து, சைவ நால்வர் கிழக்கு நோக்கியபடி நிற்கின்றனர். அடுத்ததாக, திருஞானசம்பந்தர் (ஆமாம், மீண்டும் சம்பந்தர்), இந்திரன், புதன், பைரவர் ஆகியோரின் சிலா வடிவங்கள். வடகிழக்கு மூலையில் ஸ்ரீமகா கணபதி. தொடர்ந்து மூன்று சிவலிங்கங்கள்; வட்ட ஆவுடையாருடன் இரண்டும், சதுர ஆவுடையாருடன் ஒன்றுமாக மூன்று; இடையில் இரண்டு நாகர்கள்; நந்தியும் உண்டு. வடமேற்குப் பகுதியில் ஸ்ரீவள்ளி-தெய்வானை உடனாய முருகர், மயிலுடன் காட்சி தருகிறார்.
தெற்குச் சுற்றில் வலம் தொடர, அமர்ந்த கோலத்தில், கையில் அக்ஷமாலையும் சுவடிக் கட்டும் தாங்கிய முனிவர். யார் இவர்? நீலகண்ட சிவாச்சார்யர். பிரம்ம சூத்திரத்துக்கு இவர் எழுதிய உரை வெகு பிரபலம்; நீலகண்ட பாஷ்யம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்ம சூத்திரத்தை சிவ பரமாக (சைவ முறையில்) இவர் விளக்கியுள்ளார். பிரதோஷ நாயகர் சந்நிதியில் எழில் கொஞ்சும் ஸ்ரீசந்திரசேகரர்- ஸ்ரீஅம்பிகை உற்ஸவத் திருமேனிகள்!
வலத்தை நிறைவுசெய்து, மூலவர் சந்நிதியை அடை கிறோம். ஆஹா, சத்யவிரதேஸ்வரரை தரிசிக்கிறோம். பரம்பொருளுக்கே மெய்ப்பொருள் என்பதுதான் திருநாமம்; இங்கே கூடுதலாக சத்யவிரதேஸ்வரர் எனும் திருநாமமும் சேர்ந்தால்... தெய்வத்தை இவ்வாறு வணங்க நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! துவார கணபதியை, துவார தண்டபாணியை வணங்கி... உள்ளே நோக்க...  
வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினில்
போரணவு மழுவொன்று அங்கேந்தி வெண்பொடி அணிவர்
காரணவு மணிமாடம் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக் காரைக்காட்டாரே
- என்று சம்பந்தர் போற்றிய சிவனாரை, ஸ்ரீசத்யநாதேஸ் வரரான மெய்யப்பரை, காரைத் திருநாதரைப் பணிகிறோம். சுயம்பு மூர்த்தம்; சற்றே உயரமான பாணம். அருகில் அம்பாள் திருவுருவப் படிமம். அம்பாளுக்கு இங்கே (உற்ஸவத் திருமூர்த்தமாக) ஸ்ரீபிரமராம்பாள் என்று திருநாமம். காஞ்சி புரத்தில் ஸ்ரீகாமாக்ஷியம்மனே பிரதானம்; சிவாலயங்களின் அம்பாள் சக்திகள் யாவரும் ஸ்ரீகாமாக்ஷிதேவிக்குள் ஐக்கியம் என்பதால், தனியே அம்பாள் சந்நிதி கிடையாது. ஆகவே, ஸ்ரீபிரமராம்பாள் உடனாய ஸ்ரீசத்யவிரதேஸ்வரர் என்றும் சொல்வார்கள்; ஸ்ரீகாமாக்ஷி உடனாய ஸ்ரீசத்யவிரதேஸ்வரர் என்றும் மொழிவார்கள்.
கருவறை உள்வாயிலில் ஒரு பக்கத்தில், விநாயகர்; மற்றொரு பக்கத்தில்,  சூரியன்; மூலமூர்த்தமாகவே உள்ளார்.
கோஷ்டங்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகணபதி. ஸ்ரீதட்சிணாமூர்த்தி சற்றே விறைப்பாகத் தெரிகிறார்.
கச்சிநெறிக் காரைக்காடு என்கிற பெயர் சற்றே வித்தியாசமாகப் புலப்படுகிறதே என்கிறீர்களா? உண்மைதான். அந்தக் காலத்தில் காஞ்சிபுரத்துக்கு உள்வரும் வழியாக இது இருந்திருக்கிறது. அதனால், 'கச்சிக்கு நெறி காட்டும்’ (வழிகாட்டும்) என்கிற பொருளில் 'கச்சி நெறி’ ஆனது. இப்போது காரைச் செடிகள் இல்லை. வேப்பமரங்கள் அடர்ந்த பகுதியாகவும் ஒரு நேரத்தில் விளங்கியதால், வேப்பங்குளம் என்றும் இப்பகுதிக்குப் பெயர் உண்டு. கோயிலின் தீர்த்தமான இந்திர தீர்த்தம் என்பது பெரிய வேப்பங்குளம் எனப்பட்டது (இப்போது பயன்பாட்டில் இல்லை); குடிநீர்க் குளமாகப் பயன்படுத்தப்பட்டது, சிறிய வேப்பங்குளம்!
புதன்கிழமைகளில் சிவ தரிசனம் விசேஷம் என்பதால், பிற நாட்களைக் காட்டிலும் கூடுதல் நேரம் கோயிலைத் திறந்து வைத்துள்ளனர். சூரியன், புதன் ஆகிய கோள் அதிபதிகளும் தேவேந்திரனும் வழிபட்ட தலம் என்பதால் கிரக தோஷ நிவாரணத் தலமாகத் திகழ்கிறது. நீலகண்ட சிவாச்சார்யர் இங்கு தங்கி வழிபட்டவராதலால், சிவ ஆகம வழிமுறைகளுக்கு இது மூலத் திருத்தலம்.
சத்யவிரத க்ஷேத்திரமான காஞ்சிபுரத்தின் நுழைவாயில் என்பதால், இந்தப் பரமனாரும் சத்யவிரதேஸ்வரர் என்று பெயர் கொண்டார்போலும்! வாழ்க்கை முழுவதும் சத்யவிரதம் கொள்ளவும், அதற்கு சத்யவிரதர் அருளவேண்டுமென்றும் பிரார்த் தித்தபடி விடைபெறுகிறோம்.

No comments:

Post a Comment