Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 28



பாண்டவர்களது வனவாசம் முடிந்த பிறகும் அவர் களுக்குச் சேர வேண்டிய நாட்டை துரியோதனன் தர மறுத்தால், போர் உருவாவதைத் தவிர்க்க முடியாது. எனவே, அதற்கு ஆயத்தமாக இருக்குமாறு பாண்டவர்களை அறிவுறுத்தினார் கிருஷ்ண பரமாத்மா. அத்துடன், வல்லமை பெற்ற பாசுபத அஸ்திரத்தை ஈசனிடம் இருந்து பெறும் வழிமுறைகளையும் விளக்கினார்.
அதன்படி கயிலைமலைச் சாரலில் உள்ள இந்திர நீலம் என்ற இடத்தை அடைந்தான் அர்ஜுனன். அங்கு நான்குபுறமும் தீ மூட்டி, ஆகாயத்தில் உள்ள சூரியனை ஐந்தாவது தீயாகக் கொண்டு, 'பஞ்சாக்னி'யின் நடுவில் நின்று கடுந்தவம் மேற்கொண்டான். அவனது தவம் உக்கிரமடைய... அவனிடமிருந்து ஜ்வாலைகள் வெளிப்பட்டன. இதைக் கண்டு அதிசயித்த முனிவர்கள், சிவ பெருமானிடம் சென்று விவரித்தனர்.
அர்ஜுனனுக்கு அருள் புரிய திருவுளம் கொண்ட சிவனார், வில் மற்றும் அம்பறாத்துணி தரித்து வேடன் வடிவம் ஏற்றார். வேடர் மகளாக பார்வதி தேவி உடன் வர, பூதங்கள் சூழப் புறப்பட்டார்.
இந்த நிலையில், திதி என்பவரின் புதல்வனான மூகாசுரன் என்பவன் ராட்சஸ பன்றி வடிவம் கொண்டு அர்ஜுனனைக் கொல்ல வந்தான். தன் எதிரில் வந்து நின்று ஆர்ப்பரிக்கும் அந்தப் பன்றியின் மீது அம்பைத் தொடுத்தான் அர்ஜுனன். அதே நேரம், வேடனாக வந்த சிவனாரும் ஒரு பாணத்தை அதன் மீது விடுத்தார். பன்றி இறந்து வீழ்ந்தது. அதன் உடலில் இரண்டு அம்புகள் பாய்ந்திருப்பது கண்டு அதிசயித்தான் அர்ஜுனன். பிறகு, தன் எதிரில் ஒரு பெண்ணுடன் வேடன் ஒருவன் நிற்பதைக் கண்டான். ''நீ யார்? அம்பெய்து நான் வீழ்த்திய பன்றியின் மீது நீ ஏன் மீண்டும் அம்பு எய்தாய்?'' என்று வேடனிடம் கேட்டான் அர்ஜுனன்.
''என்னைப் பற்றிய கவலை உனக்கு எதற்கு? நீ ஏன் இங்கு வந்து தவம் செய்கிறாய்? எனது அம்பே பன்றியை வீழ்த்தியது. இது, எனக்கே சொந்தம்!'' என்றார் வேடன்.
''நீ சொல்வது தவறு. வீணாக உரிமை கொண்டா டாதே!''- பதிலுரைத்தான் அர்ஜுனன்.
உடனே வேடன், ''நீ பேசுவது முறையல்ல. நாம் இருவரும் போர் புரிவோம். உன்னால் முடியுமானால் உன் பாணங்களால் என்னை அடித்துப் பார்!'' என்றார்.
கோபம் கொண்ட அர்ஜுனன், வேடனின் மீது அம்பு மழை பொழிந்தான். ஆனால், அந்த அம்புகள் வேடனை ஒன்றும் பாதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அம்புகள் தீர்ந்து போயின. வேறு வழியில்லாத அர்ஜுனன் தனது காண்டீபத்தால் (வில்) வேடனைத் தாக்கினான். வில்லைப் பறித்த வேடன், மல்யுத்தம் செய்து அர்ஜுனனைத் தூக்கி அடித்தார். அவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.
சற்று நேரத்தில் கண் விழித்த அர்ஜுனன், தன்னருகில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். உடனே, ஒரு பூமாலையைச் சாற்றி வழிபட்டான். பிறகு, வேடனைத் தேட ஆரம்பித்தான். ஒருவாறு வேடனைக் கண்ட அர்ஜுனன், வேடனின் தலையில்... தான் சிவனாருக்கு சூட்டிய பூமாலை இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தான். வேடனாக வந்தது சிவபெருமானே என்று உணர்ந்து அவரின் திருவடியில் விழுந்து, தன்னை மன்னிக்க வேண்டினான்.
அவனை ஆரத் தழுவி ஆசியளித்த சிவனார், அவனுக்கு வேண்டிய வரங்களை அருளினார். அத்துடன், மிகவும் சக்தி வாய்ந்த, 'பிரம்ம சிரஸ்' எனும் பாசுபத அஸ்திரத்தையும் அர்ஜுனனுக்கு அளித்து, அதை பிரயோகிப்பதற்கான மந்திரங்களையும் உபதேசித்தார். காண்டீபத்தையும் திரும்ப அளித்து வாழ்த்தினார்.
சிவனாரால் தழுவப் பெற்றதால், மிகுந்த வலிமை வாய்ந்தவன் ஆனான் அர்ஜுனன். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரன், அக்னி, எமன் முதலானவர்கள் அநேக படைக்கலன்களை அர்ஜுனனுக்கு அளித்து வாழ்த்தினர். இந்த வரலாற்றை, மகாபாரதத்தின் ஆர ணிய பருவதம் விவரிக்கிறது.
அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். சிதம்பரம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். அர்ஜுனனுக்கு பாசுபதம் அளித்ததால் இத்தல மூர்த்திக்கு பாசுபதநாதர் என்று பெயர். இறைவியின் திருநாமம் சற்குணாம்பிகை. 'வேடனார் உறை வேட்களம்' என்று போற்றுகிறார் அப்பர். இந்தக் கோயிலில் உள்ள தூண்களில் தல புராணத்தை விவரிக்கும் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள பாசுபத மூர்த்தி, அர்ஜுனன் ஆகிய பஞ்சலோக வடி வங்கள் அற்புதமானவை.
'இடக்கை மலர் வரிசிலையும், வலக்கை மலர்ப்பாணமும்' என்று பாசுபத மூர்த்தி வடிவம் பற்றி வில்லி பாரதம் குறிப்பிடுகிறது. அதற்கேற்ப இங்கு, பாசுபதம் கொடுத்த பரமனாகத் திகழும் பெருமானது இடக் கரம் 'சிகர' முத்திரையில் வில்லைப் பிடித்துக் கொண்டுள்ளது. தவிர, வலக் கரத்தில் அம்பு; தலையில் ஜடா மகுடம்; கழுத்தில் கொம்பு மாலை; காலில் வீரக் கழலுடன் திரிபங்க நிலையில் காட்சி தருகிறார் இவர். அருகில் வேடுவச்சியாகத் திகழ்கிறாள் தேவி.
இங்குள்ள... 'திரிபங்க' நிலையில், உடலை வளைத்து பவ்யமாக காட்சி தரும் அர்ஜுனனின் திருக்கோலமும் சிறப்பானது. அர்ஜுனனின் சிறப்பு பெயர்களில் ஒன்று சவ்வியசாசி. இதற்கு, 'இரு கரங்களாலும் அம்பு தொடுக்கும் வல்லமை பெற்றவன்' என்று பொருள். இந்தப் பெயருக்கேற்ப... வலது மற்றும் இடது ஆகிய இரு கரங்களாலும் அம்பு எய்வதற்கு உதவியாக முதுகின் இரு பக்கங்களிலும் அம்பறாத்துணி அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இவன், தனது கால் கட்டை விரலிலும் கைகளில் சுண்டு விரலிலும் மிருகங்களின் கொம்பினால் ஆன மோதிரத்தை அணிந்துள்ளான். தலையையும், தோளையும் வளைத்து கூப்பிய கைகளுடன் உள்ள இவனது இந்த நிலை 'லீனம்' எனப்படும் தாண்டவ நிலையாகும்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகில் உள்ளது திருவேட்டகுடி. பார்த்தனுக்கு, பரமன் அருள்புரிந்த தலங்களில் இதுவும் ஒன்று. எனவே, தலப்பெயரும் திருவேட்டகுடி என்று அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள இறைவனுக்கு திருமேனிஅழகர் என்றும், அம்பிகைக்கு சாந்தநாயகி என்றும் திருப்பெயர்.
இந்தத் தலத்தில், சிவபெருமான்- வேடனாகவும், அம்பிகை வேடுவச்சியாகவும் ஐம்பொன் சிலைகளில் காட்சி அளிக்கின்றனர். இதனையட்டிய திருவிழா மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று... கடலில் நீராடி இறைவன் காட்சி தந்த விழாவாக நடைபெறுகிறது.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment