அந்தகாசுரனை சூலத்தால் குத்தி தூக்கி, தோளில் ஏந்தியவாறு வலம் வரும் மூர்த்தியே கங்காளர். ஈசனின் இந்தத் திருவடிவை, 'கங்காள வேடக் கருத்தர்', 'கங்காளம் தோள்மேலே காதலித்தான்', வள்ளல் கையது மேவு கங்காளமே' என்றெல்லாம் திருமுறைகள் போற்றுகின்றன.
அம்சுத் பேதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்பரத்னம் முதலான நூல்களில் கங்காளமூர்த்தியின் திருவடிவம் விவரிக்கப் படுகிறது.
இவர், வலக் காலை சற்றே முன் வைத்து, நடந்து செல்லும் பாவனையுடன் காட்சியளிப்பார். ஜடாமுடியில்- ஊமத்தை மலர், பாம்பு மற்றும் பிறைச் சந்திரனை சூடியிருப்பார். காதுகளில் குண்டலமோ அல்லது இடக் காதில் மட்டும் சங்க பத்திரமோ திகழும். இடுப்பில் புலியாடை மற்றும் இடைக்கச்சை அணிந்திருக்கும் கங்காளர், போர்வாளும் தரித்திருப்பார்.
கீழ் இரண்டு கரங்களில் கொடுகட்டி (உடுக்கை போன்ற) வாத்தியம்; அதை இசைக்க உதவும் குச்சியை ஏந்தியிருப்பார். மேல் இடக்
கரத்தால் சூலாயுதத்தைப் பற்றி, அதை தனது இடது தோளில் தாங்கியிருப்பார். இதற்கு 'கங்காள தண்டம்' என்று பெயர். சூலத்தில் மயிற்பீலி கட்டப்பட்டிருக்கும். மேல் வலக் கரத்தை கீழ் நோக்கித் தொங்கவிட்டபடி காட்சி தருகிறார் ஸ்வாமி. அந்தத் திருக்கரத்தில் இருக்கும் புல்லைத் தின்னும் முயற்சியில், மான் ஒன்று தாவிக் குதித்த நிலையில் இருக்கும்! இவரது மேனியெங்கும் பாம்பு ஆபரணம்!
சூலத்தில் தொங்கும் அந்தகனின் ரத்தத்தைக் குடித்த வாறு ஒரு பூதமும், உணவுத் தட்டை தாங்கியவாறு மற் றொரு பூதமும் பெருமானுக்கு இரு புறமும் காட்சி தருகின்றனர். இவர்களைத் தவிர, இன்னும் பிற பூத கணங்களும் பெண்களும் ஆடிப் பாடியபடி காட்சியளிக்க... முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் வித்யாதரர்கள் ஆகியோர் கைகூப்பி, கங்காள மூர்த்தியை வணங்கிய நிலையில் இருக் கிறார்கள்.
சூலத்தில் ஏந்திய அந்தகனை தோளில் தாங்கியபடி கங்காளர் வலம்வர... வாயு பகவான் வீதியை சுத்தம் செய்ய, வருணன் நீர் தெளிப்பாராம். இன்னும் பிற தேவர்கள் மலர் தூவ, முனிவர்கள் வேதம் ஓதிட, சூரிய- சந்திரர்கள் குடை பிடிக்க, நாரதரும் தும்புருவும் தங்களது இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடி வருவதாக சித்திரிக்கின்றன புராணங்கள். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்... பொதுவாக கங்காளருக்கும், பிட்சாடன மூர்த்திக்கும் வேறுபாடு தெரியாததால், பலருக்கும் குழப்பம் ஏற்படுவதுண்டு. பிட்சாடனர் கோலத்தில், பெருமானின் முன் வலக் கையில் அருகம்புல் இருக்கும். முன் இடக்கை கபாலம் ஏந்தியிருக்கும். பின் வலக் கரம் உடுக்கையையும், பின் இடக் கரம் சூலமும் பாம்பும் கொண்டிருக்கும்.
காஞ்சி புராணம்... திரிவிக்ரமராக அவதரித்து, மகா பலியை பாதாளத்துக்கு அழுத்திய திருமால், கர்வம் கொண்டு திரிந்தபோது அவரை அடக்கிய கோலமாக கங்காளர் திருவடிவைக் குறிப்பிடுகிறது.
கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி (குடந்தை கீழ்க்கோட்டம்) கோயிலின் தெற்கு பிராகாரத் தில், 'பிரளயகால ருத்ரர்' என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கிறார் கங்காள மூர்த்தி.
வேலூருக்கு அருகில் உள்ள விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர் ஆலயத்திலும் கங்காளமூர்த்தி தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
சுசீந்திரம், திருச்செங்காட்டங்குடி, தென்காசி, தாராசுரம் ஆகிய திருக்கோயில்களில் கங்காள மூர்த்தி வடிவம் சிறப்பாக அமைந்துள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், பெரிய அளவிலான கங்காளமூர்த்தியின் சுதைச் சிற்பத்தைக் காணலாம். மேலும், கங்காளரின் உற்சவ மூர்த்தியும் இங்கு உண்டு.
கங்காள மூர்த்தி வழிபாடு சில இடங்களில் சிறப்பாக அமைந்திருந்தது என்பதற்குச் சான்றாக, 'கங்காளபுரம்', 'கங்காளஞ்சேரி' என்ற ஊர்ப் பெயர்கள் காணப்படுகின்றன. திருவாரூர் மாவட்டம் திருவிற்குடிக்கு அருகில் உள்ளது கங்களாஞ்சேரி.
கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில், 'கங்காளம்' என்ற பெயரில் வாயகன்ற உயரமான வட்ட வடிவ பித்தளைப் பாத்திரம் காணப்படும். தண்ணீர் அல்லது உணவுப் பொருள் நிரம்பியிருக்கும் இந்தப் பாத்திரத்தை இருவர் சேர்ந்து தூக்கிச் செல்ல வசதியாக... அதன் விளிம்புகளில் இரண்டு வளையங்களும் இருக்கும். இவற்றில் கோல் ஒன்றை செருகி, கங்காள பாத்திரத்தை எளிதில் தூக்கிச் செல்லலாம். இதேபோல், வீர சைவர்கள் உணவு உட்கொள்ளப் பயன்படுத்தும் பாத்திரத்துக்கும் கங்காளம் என்றே பெயர். இது, வெண்கலத்தால் ஆனது; அகன்ற தட்டு வடிவமுடையது.
அங்காளம்மன் கோயில்களில் விபூதி வைத்துள்ள பாத்திரத்துக்கு கங்காள பாத்திரம் என்று பெயர். அகன்ற வாயுள்ள வட்ட வடிவமான இந்தப் பாத்திரத்தின் (வாய்) விளிம்பின் மீது சிவலிங்கம் மற்றும் நந்தி ஆகியவற்றை அமைத்திருப்பர். நான்குபுறமும் விரித்த சடையுடன் கூடிய முகம் அமைக்கப்பட்டிருக்கும்.
கங்காள தேவர் விபூதியைக் கவசமாக அணிந்திருப்பார் என்பதை, 'கங்காளர் பூசும் கவசத் திருநீறு' என்று திருமந்திரத்தில் போற்றுகிறார் திருமூலர்.
சிவபுராணம், 'கங்காள மூர்த்தி பாசுபத விரதத்தை மேற்கொண்டு, உடலெங்கும் கவசம் பூண்டது போல் விபூதியை பூசியிருப்பார்' என்று குறிப்பிடுகிறது.
|
Wednesday, 20 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 35
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment