Wednesday 20 September 2017

கறை கெட்டது

ன்னதான் உங்கள் புன்னகை அழகானதாக இருந்தாலும் அதை அப்படிக் காட்டுவதில் உங்கள் பற்களுக்குப் பெரும்பங்கு உண்டு. பற்கள் பளிச்சென்று இருந்தால்தான் புன்னகையும் பளிச்சிடும். கறை படிந்த பற்கள் உங்கள் புன்னகையை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் சிதைத்துவிடும் என்பதை அறிவீர்களா?


பற்களில் கறை ஏற்படுத்தும் விஷயங்கள், அவற்றுக்கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றிப் பார்ப்போம். 

பற்களின்மேல் படிகிற கறைகளின் காரணமாகவோ உள்ளே நிகழக்கூடிய மாற்றங் களின் விளைவாகவோ பற்களின் நிறம் மாறலாம். இந்தக் காரணங்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
வெளிப்புறக் காரணிகள்

 பற்களின் மேல்பகுதியில் படிகிற கறை இந்த ரகம். 

* வெளிப்புறமாகப் பற்களின்மேல் பயன்படுத்தப் படுகிற பொருள்கள்.

* காபி, ஒயின், கோலா போன்ற பானங்களை அதிகம் குடிப்பது.

* புகையிலை மெல்வது மற்றும் புகையிலைப் பொருள்கள் உபயோகிப்பது.

* குரோமோஜெனிக் என்கிற பாக்டீரியாவின் தாக்கம்.

பற்காரை

* பற்களில் பயன்படுத்தும் உலோகச் சேர்வைகள்

* சிலவகை மருந்துகளின் பயன்பாடு

முறையற்ற பல் பராமரிப்பு

இந்தக் காரணங்களால் பற்கள் பழுப்பு, கறுப்பு, சாம்பல், பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் மாறலாம்.

உள் காரணிகள்


பற்களின் உள் அமைப்புக்குள்ளேயே நிகழும் மாற்றங்களால் ஏற்படுகிற கறைகள் இந்த ரகம்.

பரம்பரைத் தன்மைகள்

டெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின் மற்றும் மினோசைக்ளின் போன்ற சில மருந்துகளின் பயன்பாடு.

சிறுவயதில் கீழே விழுந்ததாலோ, விபத்து களிலோ அடிபட்டுப் பல் உடைந்திருக்கக்கூடும். அது நிரந்தரப்பல்லாக இருந்து பாதிக்கப் பட்டிருந்து, அதன் விளைவாகவும் அந்தப் பல்லின் நிறம் மாறியிருக்கலாம். அந்த விபத்தின் காரணமாக உள்ளுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு அதன் விளைவாகவும் பல்லின் நிறம் மாறக்கூடும்.

பரம்பரையாகத் தாக்கும் சில நோய்களின் விளைவாலும் பற்களின் நிறம் மாறும். (இவை எனாமல் மற்றும் பற்களின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவையும்கூட)

இந்தக் காரணங்கள் பற்களை பிங்க் அல்லது சிவப்பு நிறத்துக்கு மாற்றும்.

முதுமையின் காரணமாக ஏற்படுகிற நிற மாற்றம் மூன்றாவது வகை. இது வெளிப்புற மற்றும் உள்புறக் காரணிகளால் ஏற்படலாம். வயதாக ஆகப் பற்களின் திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறும். பற்களைப் பாதுகாக்கும் எனாமல் தேய்ந்துபோகும். முதுமையின் காரணமாகப் பற்கள் உடையும்போதும் பற்களில் அடிபடும்போதும் அவற்றின் நிறம் மாறும்.

சிகிச்சைகள்: பல் மருத்துவரை அணுகினால் காரணத்தைச் சொல்வார்.  அந்தக் கறை தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதையும் கண்டுபிடித்துத் தகுந்த சிகிச்சையையும் பரிந்துரைப்பார். 

தினமும் இரண்டு வேளைகள் முறையாகப் பல் துலக்குவது வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் மேலோட்டமான கறைகளைப் போக்க உதவும். 

பல் மருத்துவரை அணுகிப் பற்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிரத்யேக பேஸ்ட் உதவியுடன் ரோட்டரி பிரஷிங் முறையில் அல்ட்ரா சவுண்ட் க்ளீனிங் செய்வதன் மூலமும் தீர்வு கிடைக்கும். 

கறைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து பிளீச்சிங் செய்யவும் பல் மருத்துவர் பரிந்துரைப்பார். 

உணவுமுறைகளில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும்.

டென்ட்டல் பிளாஸிங் முறையைப் பின்பற்ற வலியுறுத்தப்படும்.

செயற்கைப் பற்கள் உபயோகிப்போருக்கு அவற்றைத் தொற்று மற்றும் காரைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் அறிவுறுத்தப் படும்.

No comments:

Post a Comment