Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 42


                             ஏகபாத மூர்த்தி
தொடர்ச்சி...
கபாத திரிமூர்த்தி திருவடிவில், ஸ்வாமியின் வலப் புறம்- பிரம்மனும்; இடப் புறம்- விஷ்ணுவும் (இடுப்புக்கு மேலான பகுதிகள் மட்டுமே தெரியும் வகையில்) காட்சி தருவர். இந்தத் திருவடிவை, திருமறைக்காடு (வேதாரண் யம்) குறித்த தமது தேவாரப் பாடலில் போற்றுகிறார் திருஞானசம்பந்தர்.
சிருஷ்டித் தொழிலைத் துவக்க, சிவபெருமான் அமுதக் குடத்தில் இருந்து வெளிப்பட்டதாக குடவாயில் (குடவாசல்) தல புராணம் குறிப்பிடுவதை ஒட்டி... இந்தத் திருத்தலக் கோயிலில் ஏகபாத திரிமூர்த்தி வடிவம் காணப்படுகிறது!
உலகை மீண்டும் படைக்க திருவுளம் கொண்டு ஏகபாதராகத் திருவடிவம் ஏற்று நின்ற சிவபெருமான், தம் இதயத்தில் இருந்து ஆயிரத்தில் ஒரு கூறாக ருத்திரரைத் தோற்றுவித்தார். தொடர்ந்து அவர், தம் வலப் பாகத்தில் இருந்து பிரம்மனையும் இடப் பாகத்தில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவித்தார். இந்த மூர்த்திகள் தோன்றும் நிலையிலான அரிய வடிவமே, 'திரிபாத திரி

மூர்த்தி' (மூன்று திருவடிகளுடைய மும்மூர்த்தி) எனப் போற்றப்படும். இந்தத் திருவடிவம், பிரம்மனின் திருவடி ஒன்றையும் விஷ்ணுவின் ஒரு திருவடியையும் கொண்டு திகழும்! லிங்க புராணம், ஆதித்ய புராணம் மற்றும் மகா பாரதம் ஆகியன இந்த வடிவம் பற்றி விவரிக்கின்றன.
திருவொற்றியூர்- ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலில், நடராஜர் சந்நிதிக்குப் பின்புறம் (வடக்கு கோஷ்டத்தில்) திரிபாத திரிமூர்த்தியை தரிசிக்கலாம். இந்த வடிவில், சிவனார் மான்- மழு ஏந்தியபடியும், வலப் புறம் உள்ள பிரம்மன் கமண்டலம் மற்றும் ஜபமாலையுடனும், இடப் புறம் உள்ள விஷ்ணு சங்கு- சக்கரத்துடனும் திகழ்கின்றனர். திருவானைக்கா- ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயத்தில், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சந்நிதியின் முன்புறம் உள்ள மகாமண்டபத் தூண் ஒன்றிலும் இந்தத் திருவடிவைக் காணலாம்.
திருவாரூர் அருகில் உள்ள தப்புளாம்புலியூர் கோயிலில் தனிச் சந்நிதியில் திகழும் திரிபாத மூர்த்தி திருவடிவம், யாவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், தை மாதம் முதல் வாரம் நடை பெறும் விழாவின்போது, அம்பிகைக்கு ஏகபாத திரிமூர்த்தியாக சிவனார் காட்சி தரும் ஐதீக விழாவைக் கொண்டாடுகின்றனர். இதைத் தொடர்ந்து சிவபெருமான்... பிரம்மா, திருமால் மற்றும் ருத்திரராக திருவீதிகளில் மூன்று முறை பவனி வருகிறார்!
பன்னிரண்டு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் கோயில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் உள்ளது. இங்கு, மூலஸ்தானத்தில் காட்சி தரும் ஆவுடையாரின் நடுவில் ஒரு பள்ளமும் அதனுள் சிறிய பாண லிங்கங்கள் மூன்றும் காட்சி தருகின்றன. இந்த லிங்கங்களைச் சுற்றிலும் நீர் சுரந்து கொண்டே இருக்குமாம். பிரம்மன், விஷ்ணு மற்றும் ருத்திரர் ஆகிய மூவருமே லிங்க வடிவில் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
லிங்கோத்பவர்
'லிங்கம்' என்றால் உருவம். 'உற்பவம்' என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, 'உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்' என்று பொருள் கூறுவர்.
மகா பிரளயத்தின் முடிவில், உலக உற்பத்திக் காகவும் ஞானிகளின் மல நீக்கத்துக்காகவும் (அஞ்ஞானம் அகற்றவும்) தன்னில் இருந்து ஐந்து சக்திகளைத் தோற்றுவிக்கிறார் சிவப்பரம்பொருள். அப்போது அவரின் ஆயிரத்தில் ஒரு கூறு, பராசக்தியாக வெளிப்படும். இந்த பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஆதி சக்தியாகவும், ஆதி சக்தியின் ஆயிரத்தில் ஒரு பகுதியில் இருந்து இச்சா சக்தியும்
தோன்றும். இச்சா சக்தியின் ஆயிரத்தில் ஒரு பகுதியில் இருந்து ஞான சக்தியும், அதனின்று கிரியா சக்தியும் வெளிப்படுகின்றன.
இந்த ஐந்து சக்திகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப சிறப்புப் பெயர்கள் அமைகின்றன. அவை பராசக்தி- சாந்தியாதீத சக்தி; ஆதி சக்தி- சாந்தி சக்தி; இச்சா சக்தி- வித்தியா சக்தி; ஞான சக்தி- பிரதிஷ்டா சக்தி; கிரியா சக்தி- நிவர்த்தி சக்தி. இந்த ஐந்து சக்திகளிடம் இருந்து ஐந்து சதாசிவ தத்துவங்கள் தோன்றுகின்றன. அவை
சிவசாதாக்கியம்- மின்னலைப் போல நுண்ணிய தெய்வ ஒளியாக எங்கும் வியாபித்து விளங்கும். இதை, ஈசன் என்பர்.
அமூர்த்தி சாதாக்கியம்- கோடி சூரியர்களை ஒன்றாக்கியது போல ஜோதி ஸ்தம்பமாக திகழும். இதை, திவ்ய லிங்கம், மூல ஸ்தம்பம் என்றும் ஈசானம் என்றும் அழைப்பர்.
மூர்த்த சாதாக்கியம்- இதை பிரம்மா என்பர். நெருப்பின் ஒளியுடன், சுற்றிலும் தீச்சுடர்கள் விளங்க நடுவில் ஒரு முகம், மூன்று கண்கள், நான்கு திருக்கரங்களுடன் திகழ்வார். பின்னிரு கரங்களில் மான்- மழுவும்; முன் கரங்களில் அபய- வரத முத்திரையும் திகழும்.
காத்ரு சாதாக்கியம்- ஞான சக்தியின் பத்தில் ஒரு பாகத்தில் இருந்து தோன்றுவது. இதை ஈஸ்வரன் என்பர். பெரிய உருவம் கொண்ட, ஸ்படிகம் போன்ற நிறமற்ற- தெளிந்த அதேநேரம் பிரகாசமான திவ்ய லிங்க வடிவில் திகழும். இந்த லிங்கத்தில்தான் உலகங்களைப் படைக்கும் மூல வித்தாக விளங்கும் சிவபெருமான், நான்கு முகங்களும் எட்டுக் கரங்களும், பன்னிரு கண்களும் கொண்டவராக விளங்குவார்.
கர்ம சாதாக்கியம்- கிரியா சக்தியில் இருந்து தோன்றுவது. இதை, சதாசிவம் என்பர். இவர் ஐந்து முகம் கொண்ட மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லா சாதாக்கியங்களும் கலந்த இந்த மூர்த்தி, பத்து கரங்களுடன் பத்மாசனத்தில் நிற்கிறார். இந்த மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறில் இருந்து தோன்றும் மூர்த்தியே மகேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.
இவ்வாறாக சாதாக்கிய நிலையில்- ஆதியில் ஒன்றுமே இல்லாத சூன்யமாக இருந்து, பிறகு மின்னலைப் போன்ற ஒளியாகி, அடுத்த நிலையில்- ஒளித் தூணாகத் திரண்டு உருப் பெற்று, மூன்றாவது நிலையில்- அந்தத் தூணின் மையத்தில் இருந்து ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு வெளிப்பட்டு, அதற்கடுத்த நிலையில்- நான்கு முகமும் எட்டுக் கரங்களுடனும் காட்சியளித்து, ஐந்தாம் நிலையில்- பெருமான், லிங்கத்தில் இருந்து வெளி வந்து ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவராகக்காட்சி தருகிறார். இப்படி சூன்யத்தில் இருந்து படிப்படியாக உருவம் கொள்ளும் நிலையே லிங்கோற்பவம் எனப்படும்.
(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment