யோகம், இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியனாக- ஞான திருவடிவாக வழிபடப்படும் சிவபெருமானின் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம்.
'தட்சிணம்' என்பதற்கும் 'தென்னன்' என்ற தமிழ்ச் சொல்லுக்கும் தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.
தெற்கு- அழிவைக் குறிப்பது; வடக்கு- அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது. ஆன்மாக்கள் அமுத வாழ்வை வேண்டி வழிபட ஏதுவாக, இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத் தன்மையை அருளுகிறார். ஆனந்த வடிவினான ஆடல்வல்லானும், சாந்த வடிவினரான ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் தெற்கு நோக்கியே விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஞானத்தின் திருவுருவான இறைவனை ஞானத்தாலேயே தொழ வேண்டும். மனிதன் உயிர் வாழவும் நல்லன- தீயன அறிந்து அதன்படி ஒழுகவும் பகைவரிடம் இருந்து
தற்காத்துக் கொள்ளவும் ஞானம் அவசியம். அதைத் தேடி அலையும் உயிர்களுக்கு ஞானம் அருளும் குரு வடிவினராக வருகிறார் பெருமான். ஆம், அஞ்ஞானமாகிய அறியாமையைப் போக்கி ஞானத்தை போதிக்கும் திருவடிவே ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
ஆலமர் செல்வனாக- ஆலமரத்தின் அடியில்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக- சொல்லாமல் சொல்லி உபதேசிக்கும் ஞான வடிவம் இது.
இவர் ஆசிரியர்களுக்கு எல்லாம் மேம்பட்ட பரமாச்சார்யர். கற்பிக்க வேண்டிய பொருள்களுக்கு ஏற்ப போதனை முறை அமையும் அல்லவா! மனதுக்கும், வாக்குக்கும் எட்டாத பரம்பொருளை, மனதுக்குக் கட்டுப்பட்ட வாக்கால் எப்படி காட்ட இயலும்? அநுபூதி வடிவில் உள்ளதை சொற்களால்- வார்த்தைகளால் விளக்க இயலுமா? ஆகவே இந்தத் திருவடிவில், எந்த வித செயலும் இல்லாத மௌனத்தைக் கடைப்பிடித்து, ஆனந்தத்தை அநுபூதியாகத் தமது உணர்வினால் வெளிப் படுத்திக் காட்டுகிறார் பகவான்.
அந்த ஆனந்தத்தை, சலனமற்று தம்மிடம் கலந்துள்ள சீடர்களின் உள்ளத்தில் முழுமையாக பரவச் செய்து அவர்களுக்கு பேரின்ப நிலையை உணர்த்தும் அற்புத வடிவம் இது.
சிவனிடத்தில் சக்தி அடங்கிய வடிவமும் இதுவே. ஆம், வெளித்தோற்றத்தில் சலனம் அற்ற சிவ வடிவமாகத் திகழ்ந்தாலும் உள்ளே ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவம் இது. பேரானந்தத்தை உள்ளடக்கிக் கொள்ள திறமை மிகவும் தேவை. அந்தத் திறமை- சாமர்த்தியம் மிகுந்தவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
மகிமை மிக்க சிவனாரின் இந்தத் திருவுருவை அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். ஆதியில், தட்சிணாமூர்த்திக்கான கோயில்கள் நதிக் கரைகள் மற்றும் மலைச் சரிவுகளில் இருந்தன. பிற்காலத்தில், சிவாலயங்களின் கருவறையின் தென் சுவரில் வெளிப் புறம், தெற்கு நோக்கிய கோஷ்டத்தில் இவரை எழுந்தருளச் செய்து வழிபடத் தொடங்கினர்.
மோனம் (மௌனம்) என்பது ஞான வரம்பு. தனது மோனத்தால் நம்மை அழைத்து, திருக்கண் பார்வையிலேயே சிவஞானத்தை தந்தருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வடிவமே பெரும் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.
திருமேனி பளிங்கு போன்ற வெண்ணிறம். இது தூய்மையை உணர்த்தும்.
முயலகனை மிதித்திருக்கும் வலப் பாதம் ஆணவ மலம் ஆகிய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் ஆற்றல். அறிவுப் பிழம்பாகிய வடிவம்.
திருக்கரத்தில் உள்ள நூல் இது சிவஞான போதம். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கிறது. ஞானத்தாலேயே வீடுபேறு கிட்டும். நோயாளியைக் குணப்படுத்தும் மருத்துவர் மருந்துப் பெட்டியைக் கைக்கொண்டு சுமப்பது போல, உயிர்களை உய்விக்க சிவஞான போதத்தை தன் கையில் ஏந்தியுள்ளார் இவர்.
திருக்கரத்தில் ருத்ராட்ச மாலை இது 36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. இந்த மாலையைக் கொண்டு பஞ்சாட்சரத்தை பன்முறை எண்ணி, பலகாலும் உருவேற்றி தியானிப்பதே, ஞானம் பெறுவதற்கான நெறி என்பதை உணர்த்துகிறது.
சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெரு விரலின் (கட்டை விரலின்) அடிப் பாகத்தைச் சுட்டு விரல் தொட... ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது.
இடக் கரத்தில் உள்ள அமிர்தக் கலசம் அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்லது.
தீ அகல் அல்லது தீச்சுடர் உயிர்களது பிறவித் தளைகளை (பிறப்பு இறப்பு வட்டத்தை) நீக்கும் பொருட்டு ஈசன் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.
அணிந்துள்ள பாம்பு குண்டலினி சக்தியைக் குறிப்பது. யோகத்தின் சின்னம் பாம்பு. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் அதை, குருவின் அருட்பார்வையால் விழிப்புறச் செய்து, பின் செயல்பட வேண்டும் என்று யோக சாதகர்கள் கூறுவர்.
தாமரை ஆசனம் (பத்மாசனம்) தட்சிணாமூர்த்தியின் வடிவங்களில் சில, பத்மாசனத்தில் திகழ்வது உண்டு.
இரண்டு கால்களை மடக்கி ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, குதிகால்கள் இடுப்பை ஒட்டிய நிலையிலும் பாதங்கள் விண்ணோக்கியும் இருக்க அமரும் நிலை பத்மாசனம். 'தாமரை மலர் மீது அமர்தல்' என்பது, அன்பர்தம் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர் என்று பொருள்படும். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.
நெற்றிக் கண் காமனை எரித்த கண்ணுதல். ஞானமும் வீடுபேறும் அடைய விரும்புவோர், புலன் அடக்கம் உடையவராகி, ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்; இதுவே துறவின் சிறப்பு. இதை உணர்த்துவது நெற்றிக் கண்.
ஆலமரமும், அதன் நிழலும் மாயை மற்றும் அதன் காரியமாகிய உலகத்தை உணர்த்துவன.
தென்முகம் வடக்கு முகமாக சிவனாரை நோக்கி தியானிக்க வேண்டும் என்பது குறிப்பு.
சூழ்ந்துள்ள விலங்குகள் பசுபதித்தன்மை. அதாவது அனைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர் என்பதை குறிக்கும்.
வெள்விடை தருமத்தை குறிப்பது.
ஆகமங்கள், சிற்ப நூல்களில் தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வகைகள் குறிப்பிடப் பெறுகின்றன. ஆகமங்களில் இவரது சக்தி, 'மேதா ப்ரஞ்யா ப்ரதாயினி' என்று அழைக்கப் பெறுகிறார்.
|
No comments:
Post a Comment