Wednesday, 20 September 2017

சதுரகிரி யாத்திரை! - 22


முதன் முதலாக சதுரகிரிக்கு பெங்களூர் ஸ்வாமிகள் வந்தது (1986 என்பர் ) ஓர் ஆடி அமாவாசை நேரத்தில்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த சுற்று வட்டாரப் பகுதியில் திரிந்தவர், மகாராஜபுரம் என்ற கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தாராம். ஆடி அமாவாசை தினத்தன்று மகாலிங்க ஸ்வாமியின் தரிசனத்துக்காகச் சதுரகிரிக்குச் செல்லும் பக்தர்கள், கூட்டம் கூட்டமாக இந்தக் கிராமத்தின் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். பக்தர்களின் திடீர் கூட்டம் காரணமாக, மகாராஜபுரத்தில் டீக்கடை, வெத்தலைப் பாக் குக் கடை, குளிர்பானக் கடை என்று திடீர் கடைகள் ஏராளமாக முளைத்திருந்தன. சாலையின் ஓரமாக மர பெஞ்சுகள் போடப்பட்டு வருவோர் போவோரை அந்தக் கடைகள் இழுத்த வண்ணம் இருந்தன. அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் ஜோராக நடை பெற்றுக் கொண்டிருந்தது.
ஆனால், ஒரே ஒரு டீக்கடையில் மட்டும் வியாபாரம் ஆகவில்லை. அடுப்பில் பால் கொதித்துக் கொண்டே இருந்தது. வெளியே போடப்பட்ட மர பெஞ்சுகளில் மனிதர்களின் வாசம் இல்லை. எவரும் டீ குடிக்க இந்தக் கடைக்குள் நுழையவில்லை. இத்தனைக்கும் சதுரகிரி செல்லும் பக்தர்கள் அனைவரும் அந்தக் கடையைத் தாண்டித்தான் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், வெவ்வேறு கடைகளில் தங்களின் தாகத்தையும் பசியை யும் தணித்துக் கொண்டனர்.
முதல் போட்டுச் சாமான்கள் கொள்முதல் செய்து கடை போட்ட உள்ளூர் ஆசாமி புலம்பாத குறையாகத் தவித்துக் கொண்டிருந்தார். கடையில், தான் வைத்திருந்த சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி படங்களுக்கு மீண்டும் ஒரு முறை ஊதுவத்திகளை பவ்யமாகக் காண்பித்தார். கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்தார். ''மகாலிங்கம்... போட்ட முதலுக்குக் குறை இல்லாம வியாபாரம் ஆகணும்'' என்று வாய் விட்டுச் சொல்லிக் கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
அந்த நேரத்தில் ஒரு குரல் கேட்டது ''ஒரு டீ கொடுங்க சாமீ...''
கற்பூரம் காட்டிக் கொண்டிருந்த டீக்கடைக் காரர் சட்டென்று திரும்பினார். வெளியே- சாமியார் தோற்றத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். செக்கச்செவேல் என்ற நிறம்... காவி உடை... கழுத்தில் ருத்திராட்சம். இந்த சாமியார்தான் டீ கேட்டவர் என்பதைப் புரிந்து கொண்ட டீக்கடைக்காரர், அவரிடம் கேட்டார் ''சாமீ சதுரகிரி வரைக்கும் போறீங்க போலிருக்கு?''
அதற்கு அந்த சாமியார் வாயைத் திறந்து பதில் சொல்லாமல், ''ம்ம்ம்'' என்றார். வந்திருப்பவரின் திருநாமம் பெங்களூர் ஸ்வாமிகள் என்பதோ, சதுரகிரி சந்தன மகாலிங்கம் சந்நிதியை இவர்தான் சீரமைக்கப் போகிறார் என்பதோ அந்த டீக்கடைக்காரருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
''தோ, போடறேன் சாமீ...'' என்றவர், படுஉற்சாகமாக ஒரு ஸ்பெஷல் டீ தயாரித்து, பவ்யமாக பெங்களூர் ஸ்வாமிகளிடம் நீட்டினார். வாங்கிக் குடித்தவர், அதற்கு உண்டான காசை சில்லறை நாணயங்களாகக் கொடுத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போயே போய் விட்டார்.
அந்த சில்லறை நாணயங்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டு கல்லாவில் போட்டார் டீக்கடைக்காரர். அடுத்த விநாடி சற்று நிதானிப்பதற்குள், 'நாலு டீ போடப்பா!', 'மூணு வடை கொடப்பா!' என்ற குரல்கள் தொடர்ந்து அவரைத் துளைத்த வண்ணம் இருந்தன. கடைக்கு வெளியே அப்படியரு கூட்டம்! எப்படித்தான் திடீரென அவ்வளவு பேர் அந்தக் கடைக்கு முன் சேர்ந்தார்களோ, தெரிய வில்லை!
சரக்குகள் அனைத்தும் சில நிமிடங்களில் காலியான பிறகே, அந்த மகாராஜபுரம் டீக்கடைக் காரர் சற்று யோசித்தார். 'தன்னிடம் முதல் டீயை வாங்கிக் குடித்தவர் சாதாரண ஆசாமி அல்ல... மகா புருஷர்' என்ற முடிவுக்கு வந்தார். வியாபார களேபரங்கள் எல்லாம் ஓய்ந்த பிறகு, சதுரகிரிக்குச் சென்ற கடைக்காரர், பெங்களூர் ஸ்வாமிகளைத் தேடிக் கண்டுபிடித்தார்; ஸ்வாமிகள் அங்கு வந்த நோக்கத்தை அறிந்தார். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே நடக்கும் அன்னதானத்துக்குத் தன்னால் முடிந்த பொருட்களையும் அந்தக் கடைக்காரர், பெங்களூர் ஸ்வாமிகளிடம் கொடுத்து விட்டுச் சென்றதாகக் கூறுவர்.
பெங்களூர் ஸ்வாமிகளின் மகிமை பற்றி, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர் களுக்கு மட்டுமே தெரியும். திருமணத்தை வெறுத்து மலைக்கு வந்தவர் இவர் என்று கூறப்படுவதுண்டு. ஆரம்ப காலத்தில்- அதாவது சதுரகிரிக்கு வருவதற் குச் சில வருடங்கள் முன்பு வரை ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் பிச்சை எடுத்து வசித்து வந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. பாண்டிச்சேரியில் ஓர் இடத்தில், சில காலத்துக்கு இவர் 'கம்போஸிங்' வேலை செய்து வந்தாராம். தேன்கனிக்கோட்டையில் பிறந்த இவர் அடிக்கடி பெங்களூர் சென்று வந்ததால், 'பெங்களூர் ஸ்வாமி கள்' என்ற பெயரே நிலைத்து விட்டது.
எம்.ஏ. படித்த இவர், ராணுவத்திலும் சில காலம் பணி புரிந்தாராம். ஆன்மிகத்தின் மேன்மையை அறிவதற்கு ரிஷிகேஷ் சென்று பதினைந்து வருட காலம் தங்கி இருந்தார். யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி போன்ற பல மொழிகளை அறிந் திருந்தார்.
'பெங்களூர் ஸ்வாமிகள் என்பவர் சதுர கிரிக்கு வருவார்' என்பதை முன்கூட்டியே சொன்னவர் சத்தியமூர்த்தி ஸ்வாமிகள். தான் கொண்டு வந்து வைத்த விநாயகர் விக்கிரகத்தை, பெங்களூர் ஸ்வாமிகளே பிரதிஷ்டை செய்வார் என்று அப்போதைய பூசாரியான கிருஷ்ணன் குட்டி என்பவரிடம் சொன்னவர் சத்தியமூர்த்தி ஸ்வாமிகள். சொன்னது போலவே அந்த விநாயகர் விக்கிரகம் உட்பட பல புது சந்நிதிகளையும் கட்டி, அதற்கு உண்டான விக்கிரகங்களையும் முறைப்படி பிரதிஷ்டை செய்தார் பெங்களூர் ஸ்வாமிகள். எடுத்துக் கொண்ட எந்தப் பணிக்கும் இடையூறு வந்தால், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்தவர் இவர். இது கடவுள் தந்த கொடை என்றே சொல்ல வேண்டும்.
சந்தன மகாலிங்கம் கோயில் திருப்பணி வேலைகளை பெங்களூர் ஸ்வாமிகள் கவனித்துக் கொண்டிருந்தபோது... இரவு நேரத்தில் இவர் கண் அயரும் வேளைகளில் பெரிய பாம்பு ஒன்று இவரது உடல் மேல் அடிக்கடி ஏறிச் செல்வதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள். பெங்களூர் ஸ்வாமிகள் அறியாமலேயே அவர் உடல் மேல் தாண்டவமாடி விட்டுச் செல்லுமாம் அந்தப் பாம்பு!
பெரும்பாலும் சாக்கின் மேல் படுத்து, சாக்கையே போர்வையாக போர்த்தி இருந்ததால் இவரை 'சாக்கு ஸ்வாமிகள்' என்றும் சிலர் சொல்வார்கள். மலைக்கு வரும் பக்தர்களுக்கு ஏதாவது உடல் உபாதை இருந்தால் மூலிகை கொடுத்து குணமாக்குவார். எதிர்காலம் குறித்து கேட்கும் சிலருக்கு ஜோதிடம் சொல்வார். எவரிடமும் முகம் சுளித்துப் பேசவே மாட்டார். இதமாகவே பேசுவார்.
சதுரகிரியில் வாழும் மலைவாசிகளான பளியர் களிடம் அன்பாக இருப்பார். பொருளாதார ரீதியில் அவர்கள் உயர வேண்டும் என்று விரும்பினார். பளியர் இனத்துக் குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
சந்தன மகாலிங்கம் கோயில் திருப்பணி வேலைகளுக்காக உதவும் கூலியாட்களுக்கு அரிசியும் பணமும் கொடுக்கும் வழக்கத்தை இவர்தான் ஆரம்பித்து வைத்ததாக, மலைவாழ் மக்கள் பெருமையுடன் சொல்கிறார்கள். அதுவரை வேலை செய்தவர்களுக்கு பணமாகக் கொடுக்காமல் ஏதாவது பொருளையே கூலியாகக் கொடுத்து வருவார்களாம். ஒவ்வொருவர் செய்யும் வேலைக்கு ஏற்ப அவர்களுக்குக் கூலி கொடுத்தார் பெங்களூர் ஸ்வாமிகள். இந்தத் திருப்பணி வேலைகளின்போதுதான் சந்தன மகா லிங்கம் சந்நிதியை நோக்கி ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. அதற்கு முன்பு வரை ஒற்றையடிப் பாதை மட்டுமே இருக்கும். அதுவும் கரடுமுரடாக இருக்கும்.
சந்தன மகாலிங்கம் திருக்கோயில் ஒரு முழுமை யான வடிவத்துடன் வந்தது இவர் காலத்தில்தான் என்கிறார்கள். 87-ல் சந்தன மகாலிங்கம் கோயில் திருப்பணி வேலைகள் துவங்கி, 88-ல் முடித்து கும்பாபிஷேகம் நடத்தினார் பெங்களூர் ஸ்வாமிகள். இந்த வைபவம் நடந்தபோது கிருஷ்ணன்குட்டி பூசாரியாக இருந்தார். கிருஷ்ணன்குட்டியின் முயற்சியால்தான் 'சந்தன மகாதேவிஅம்மன்' என்ற பெயரில் அம்மனுக்கு முழு உருவ விக்கிரகம் வைக்கப்பட்டது. அதுவரை, 'பரவைக் காளி' என்ற பெயரில் ஒரு திருவுருவம் இருந்தது.
''இதற்கு முன் நினைவு தெரிந்தவரையில், சிவா சாமி பூசாரியின் காலத்தில் 1971-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் 26.7.76-ல் சந்தன மகாலிங்கத்துக்கு மண்டபம் கட்டி, சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 88-ல் பெங்களூர் ஸ்வாமிகள் நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2000-ஆம் வருடத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தபடியாக, 2012-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அதற்குண்டான வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டோம். இன்னும் பலரும் வந்து செல்லும் வகையில் வசதிகளை இங்கே பெருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக் கோள்'' என்கிறார் சந்தன மகாலிங்கம் ஆலயம் தொடர்பான அன்பர் ஒருவர்.
துரகிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்கும் வாய்ப்பைக் கொடுத்த இறைவன், அங்கே என்னென்ன காட்சிகளை எல்லாம் பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் அவனே தீர்மானிப்பான். இதுதான் நிஜம். அதை விட்டு விட்டு, 'சதுரகிரியில் சித்தர்கள் தரிசனம் எனக்குக் கிடைக்குமா? ஜோதி வடிவில் சித்தர்களை இரவு வேளைகளில் தரிசிக்கலாம் என்று பலரும் சொல்கிறார்களே... அதுபோல் அவர்களின் தரிசனம் எனக்குக் கிடைக்குமா? சித்தர்கள் இரவு வேளைகளில் வண்ண ஜால விளையாட்டுகளை வான வெளியில் நடத்துவார்கள் என்கிறார்களே... அதை நான் கண்டு இன்புற முடியுமா?' என்றெல்லாம் பலரும் தங்களுக்குள் கேட்கிறார்கள். இன்னும் சிலரோ, மற்றவர்களிடம் வெளிப்படையாகக் கேட்டே விடுகிறார்கள்.
ஒரு விஷயத்தை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்... வீணாக மனதைக் குழப்பிக் கொண்டு அலையக் கூடாது. எதிர்பார்த்துச் செல்வது எதையும் இறைவன் கொடுக்க மாட்டான். எதிர்பாராமல் இருக்கும் சிலவற்றை அருளாமல் இருக்கவும் மாட்டான். தன் பக்தர்களுக்கு எந்த வடிவிலும் அவன் காட்சி தரலாம். ஆதிசங்கரரின் வாழ்க்கையில் புலையன் வடிவில் இறைவன் வரவில்லையா? சதுரகிரி அற்புதங்களும் இதேபோல்தான்! உங்களுக்கு எதிரே நடக்கும் அனைத்தையும் சித்தர்களின் வெளிப்பாடாகவே நினையுங்கள்.
யாத்திரையின் போது கஷ்டப்படும் எவருக்கும் வலியச் சென்று உதவுங்கள். அவர்களுக்கு உதவுவதே உண்மையான தெய்வீகம். இந்த தெய்வீகத்தில் இறைவனை நீங்கள் உணரலாம். சித்த புருஷர்களை தரிசிக்கலாம். உதவும் உள்ளங்களுக்கு அருகில் இறைவன் எப்போதும் இருப்பான்.
தற்போது சதுரகிரி யாத்திரை வருகிற அனைவரும், தங்களின் நலனை விட பிறரது நலனையே பெரிதாகக் கருத வேண்டும். உதவ வேண்டும். இதுவே யாத்திரையின் உண்மையான பலன்.

- (அதிசயங்கள் தொடரும்)

No comments:

Post a Comment