கந்தா சரணம்!
ஆறுபடை வீடுகொண்ட முருகப்பெருமான், அகில உலகத்தவருக்கும் அருளும் வகையில், எண்ணற்ற கோயில்களில் குடிகொண்டிருக் கிறார். அவற்றில், எட்டுக்குடி திருத்தலமும் ஒன்று! ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிக்கல், எட்டுக்குடி, எண்கண் திருத்தலங்கள் போற்றப்படு கின்றன. இந்த வரிசையில் 8-வதாகத் திகழ்கிறது எட்டுக்குடி ஆலயம்!
அதாவது, குழந்தையாக நினைத்தால் குழந்தையாக; இளைஞனாக நினைத்தால் இளைஞனாக; முதியவராக நினைத்தால் முதியவராக... என நாம் எப்படி நினைத்துப் பார்க்கிறோமோ, அப்படியான தோற்றத்தில் காட்சி தந்து பரவசப்படுத்துகிறார் முருகப்பெருமான்!
நாகப்பட்டினம் அருகே பொருள்வைத்தசேரி என்றொரு கிராமம். அங்கே, தெய்வத் திருவுருவங்களை அழகாகவும் ஆத்மார்த்தமாகவும் வடிக்கக்கூடிய சிற்பி ஒருவர் இருந்தார். அவர் முருகக்கடவுளின் தீவிர பக்தர்! 'இதுவரை எவருமே பார்த்திராத அளவுக்கு, அப்படியரு அழகு ததும்பும் முருகப்பெருமானின் சிலையை வடிக்க வேண்டும்’ என ஆசைப்பட்டார் அவர்.
கந்தக் கடவுளை மனதாரப் பிரார்த்தித்து, சிலை வடிக்கும் பணியில் இறங்கினார். இறையருளாலும், அவரது அசாத்திய திறமையாலும் அழகிய சிலை உருவானது. அதைக் கண்ட சோழ மன்னன் வியந்தான். 'என்ன அழகு! என்ன அழகு!’ என்று ஆனந்தக் கூத்தாடினான். 'இது என் நாட்டின் சொத்து!’ என்று பெருமிதப்பட்டான். கூடவே, 'இதைவிடப் பிரமாதமாக வேறொரு சிலையை, வேறு யாருக்கேனும் இவன் செய்து கொடுத்துவிட்டால்...?’ என யோசித்தான். மன்னனின் மூளை குயுக்தியாக வேலை செய்தது. உடனே, அந்தச் சிற்பியை அழைத்து, அவனது கட்டைவிரலைத் துண்டித்து விட்டார். 'இனி, உளியை இவன் எப்படிப் பிடிப்பான்?’ என இறுமாந்தான் மன்னன்.
இதனால் வேதனையும் அவமானமும் பொங்க... அந்த ஊரை விட்டே வெளியேறினார் சிற்பி. நெடுந்தொலைவு நடந்து, கிராமம் ஒன்றில் தங்கியவர், முருகப்பெருமானை மனதில் நினைத்தபடியே வாழ்ந்தார். 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது’ என்பது போல, கட்டை விரல் இல்லாத நிலையிலும், முருகப்பெருமானின் துணை யுடன், மிக அற்புதமான சிலை ஒன்றைச் செவ்வனே வடித்து முடித்தார் அந்தச் சிற்பி.
இந்த முறை, குறுநில மன்னன் முத்தரசனின் பார்வையில் அந்த முருக விக்கிரகம் பட்டது. சிலை நிறைவுறும் தருணத்தில், திடீரென சிலையிலிருந்து தெய்வீக ஒளி பரவியது. அந்தச் சிலை உயிர்ப்புடன் இருந்தது. முருகக் கடவுளின் வாகனமான மயில், கழுத்தைத் திருப்பி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தது. சட்டென்று தோகையை விரித்துப் பறக்கத் துவங்கியது.
இதைக் கண்ட மன்னன், பதறிப் போனான். அந்த மயிலைப் பிடிக்க உத்தரவிட்டான். காவலர்கள் விரைந்து சென்று மயிலைப் பிடிக்க, சட்டென அதன் கால்கள் உடைந்தன. மீண்டும் அந்த மயில் அப்படியே சிலையாகி நின்றது.
அந்தத் திருத்தலம்தான்... எட்டுக் குடி ஆலயம் (இதையடுத்து, மூன்றாவதாகச் செய்த விக்கிரகம் குடிகொண்டிருப்பது, எண்கண் திருத்தலத்தில் என்பர். முதலாவது விக்கிரகம், சிக்கல் திருத்தலத்தில் உள்ளது).
அற்புதமான தலம்; அருகில், சரவணப் பொய்கைத் தீர்த்தமும் உண்டு. இந்தத் தீர்த்தத்தில் நம் கைகள் பட்டாலே, நம் பாவங்கள் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்! சிவ- பார்வதியர், ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசௌந்தரநாயகராக அருள்கின்றனர்.
சூரபதுமனை அழிப்பதற்காகத் தோன்றியவர் என்பதால், அம்பறாத் தூணியில் இருந்து அம்பினை எடுக்கும் தோரணையில், வீர சௌந்தர்யத்துடன் காட்சி தருகிறார், ஸ்ரீசுப்ரமணியர். சூரனை அழித்த கதையை குழந்தைகளுக்குச் சொல்லி, எட்டுக்குடி முருகனை மனதாரப் பிரார்த்தித்தால், குழந்தைகள் பயம் விலகி, தைரியம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை!
இங்கு நடைபெறும் 'சத்ரு சம்ஹார திரிசதி’ யாகத்தில் கலந்துகொண்டு, ஸ்வாமியைத் தரிசித்து வழிபட, எதிரிகள் தொல்லை ஒழியும் என்கின்றனர், பக்தர்கள்.
சித்திரை மாத பௌர்ணமியன்று, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பால்காவடிகள் வருமாம்! பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், பௌர்ணமிக்கு முதல் நாள் நடைதிறக்கப்பட்டு, மறுநாள் விடியும் வரை பாலபிஷேகம் நடந்துகொண்டே இருக்கும் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், ஊர்க்காரர்கள்.
மிக அற்புதமான இந்தத் தலத்தின் சரவணப் பொய்கை தீர்த்தத்தைப் பருகினால், திருமணத் தடை அகலும்; முருகப்பெருமானைப் போல் அழகிய குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கை!
No comments:
Post a Comment