அச்வாரூட மூர்த்தி(குதிரைச் சேவகன்)
பொருள் கங்காதேவியாகிய நீரை தலையில் அணிந்த சிவபெருமான் மண் சுமக்கும்படியாகவும், பாராளும் பாண்டியனின் கைப்பிரம்பால் ஓர் அடி அடிக்கச் செய்தும் அந்த சிவனாரது திருவடிகளை வாங்கிக் கொண்ட மாணிக்கவாசகராகிய இறைவனைப் போற்றுவோம்!
மன்னன் பரிசளித்த பட்டாடையை தன் கைகளால் வாங்காமல், கையில் இருந்த பரிக்கோலால் வாங்கினார் குதிரைச் சேவகனாக வந்த சிவனார். மன்னன் கடும்கோபம் கொண்டான். இதை கவனித்த வாதவூரர், ''அவர்களது ஊரில் இப்படிப் பெறுவதுதான் மரபு'' என்று கூறி, மன்னனை அமைதிப் படுத்தினார்.
இதன் பிறகு குதிரை வல்லுநர்கள் சிலர் அங்கு வந்தனர். இறைவன் ஓட்டி வந்த குதிரைகளின் திடம் மற்றும் சுழியை ஆராய்ந்தவர்கள், ''மன்னா! நடையழகும் மிடுக்கும் கொண்ட கம்பீரமான உயர்ஜாதி குதிரைகள் இவை. நாம் கொடுத்த விலையை விட பன்மடங்கு மதிப்பு கொண்டவை'' என்றனர். மன்னன் மகிழ்ந்தான். அவனது ஆணைப்படி குதிரைகள் லாயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.இதையடுத்து குதிரைச் சேவகன் போல் வந்த சிவனார் தனது பூதகணங்களுடன் மறைந்தார்.
அன்றிரவு! புதிதாக லாயத்துக்கு வந்த குதிரைகள், கனைப்பதற்கு பதிலாக நரிகள் போல் ஊளையிட்டன. ஏற்கெனவே அங்கு கட்டப்பட்டிருந்த பழைய குதிரைகளையும் கடித்துக் குதறின. பிறகு, காட்டுக்குள் ஓடி மறைந்தன!
மதுரையம்பதியே களேபரமானது. வாதவூரர், மாய வேலை செய்து மன்னரை ஏமாற்றி விட்டாராம்... என சேதி பரவியது. சினம் கொண்ட மன்னன், வாதவூரரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். இறைவனை கண்ணீருடன் பிரார்த்தித்தார் வாதவூரர்!
அடியாரின் அல்லலை ஆண்டவன் பொறுப்பாரா? வைகை ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்தார். கரையை உடைத்து ஊருக்குள்ளும் புகுந்தது வெள்ளம். மன்னன் செய்வதறியாது திகைத்தான். வாதவூரரை சிறையில் அடைத்ததால் வந்த வினை இது என்பதை உணர்ந்தான். ஓடோடிச் சென்று வாதவூரரிடம் மன்னிப்பு வேண்டியதுடன், சிறையிலிருந்தும் அவரை விடுவித்தான். வாதவூரர், உணர்ச்சிப் பெருக்கில் மீண்டும் இறைவனைப் பிரார்த்திக்க வைகையில் வெள்ளத்தின் வேகம் தணிந்தது.
இதையடுத்து வைகைக் கரையில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க, வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என்று ஆணையிட்டான் மன்னன். அதன்படி வீட்டுக்கு ஒருவர் கரை அடைக்க செல்ல... தனது வீட்டு சார்பாக செல்வதற்கு எவரும் இல்லையே என வருந்தினாள் வந்தி எனும் மூதாட்டி. ஒற்றையாளாக தனித்து வசிக்கும் தனக்கு அருள்புரியுமாறு சிவபெருமானை வேண்டினாள்.
அவளது பிரார்த்தனையை ஏற்ற சிவனார், கூலியாளாக வந்து சேர்ந்தார். வந்தியின் சார்பாக தானே வைகைக் கரைக்குச் செல்வதாகவும் அதற்கு தகுந்த கூலி வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். ஏழை மூதாட்டியான வந்தியிடம் பிட்டைத் தவிர, கூலி கொடுப்பதற்கு வேறு என்ன உண்டு?! கரை அடைக்கக் கூலியாக 'பிட்டு' தருகிறேன் என்றாள். சிவனாரும் ஏற்றுக் கொண்டார். வந்திக் கிழவியிடம் பிட்டை கூலியாக வாங்கிச் சாப்பிட்டவர், வைகைக் கரைக்குச் சென்றார்.
அங்கே, வந்த வேலையைச் செய்யாமல், குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார். அவ்வப்போது படுத்து ஓய்வெடுத்தார். இதையெல்லாம் அறிந்த மன்னன் கோபம் கொண்டான். வேலை செய்யாமல் திரியும் அந்தக் கூலியாளை- சிவபெருமானை, தன் கையில் இருந்த பிரம்பால் முதுகில் அடித்தான்.
அந்த அடி... மன்னன், மகாராணி, அமைச்சர்கள், சேவகர்கள் மற்றும் ஊர் மக்கள் என அனைவரின் முதுகிலும் விழுந்தது. அனைவரும் அலறித் துடித்தனர். வாதவூரருக்காக சொக்கனே நடத்திய திருவிளையாடல் இது என்பதை உணர்ந்த மன்னன், ஆலயத்துக்கு ஓடோடிச் சென்றான். ஸ்ரீசொக்கநாதர் சந்நிதியை அடைந்தவன், தன்னை மன்னித்து அருளும்படி பலவாறு வேண்டினான்.
அதன் பின்னர், அமைச்சுப் பணி துறந்து, பாண்டிய மன்னனிடம் விடைபெற்றுக் கொண்ட வாதவூரர் திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்து, குருநாதரை வணங்கினார். தாம் வீற்றிருந்த குருந்த மரத்தின் கீழிருந்த மலர்ப்பீடத்தில் தமது திருவடியைப் பதித்தார் இறைவன். திருப்பெருந்துறையில் சிற்ப நுட்பத்துடன் கூடிய ஸ்ரீஆத்மநாதர் ஆலயத்தை அற்புதமாக அமைத்தார் வாதவூரர்.
பின்னர் மதுரை, உத்திரகோசமங்கை, திருவிடைமருதூர், சீர்காழி, திருவண்ணாமலை முதலான தலங்களுக்குச் சென்று இறைவனை உளம் பொங்கப் பாடிப் பரவினார். திருக்கழுக்குன்றத்தில், வாதவூரருக்கு தனது எழில் கோலத்தைக் காட்டியருளினார் இறைவன். இதனை, 'கணக்கிலாக்கோலம் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே'' என மெய்யுருகப் பாடினார் வாதவூரர். நிறைவாக, தில்லையம்பலக் கூத்தனின் ஆலயத்துக்கு வந்தார் வாதவூரர். இங்கே, அந்தணன் போல் வந்த இறைவன், வாதவூரராம் மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மீண்டும் மனம் குளிரக் கேட்டுக் களித்தான். அதுமட்டுமா? 'இவை, மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல, தில்லைச் சிற்றம்பலன் எழுதியது' என்று கையெழுத்திட்டு அருளினான் இறைவன்!
மட்டுமின்றி இறைவனின் சித்தப்படி, திருக்கோவையாரும் பாடியருளினார் மணிவாசகர். பிறகு, ஸ்ரீநடராஜபெருமானின் திருவடியில் இரண்டறக் கலந்தார்.
இறைவன் குதிரைச் சேவகனாகத் தோன்றிய திருக் கோலத்தை, அச்வாரூடமூர்த்தி என்பர். சிவனாரின் 64 திருக்கோலங்களில் இதுவும் ஒன்று!
திருப்பெருந்துறை ஸ்ரீயோகாம்பிகை சமேத ஸ்ரீஆத்மநாத ஸ்வாமி ஆலயத்தின் பஞ்சாட்சர மண்டபத்தில், பெரிய தூண் ஒன்றில், குதிரைச் சேவகனாகக் காட்சி தருகிறார் சிவனார். தாவி வரும் குதிரையின் மீது சலாகை எனும் ஈட்டி ஏந்தியபடி இவர் தரும் தரிசனம் அற்புதம். கூடவே வீரர்கள் பலரும் காட்சி தருகின்றனர். எதிரே உள்ள தூண் ஒன்றில் சின்முத்திரையும் ஓலைச் சுவடியும் தாங்கியபடி காட்சி தருகிறார் மாணிக்கவாசகர். இவர்களுக்கு தினசரி பூஜையும் நடைபெறுகிறது.
இறைவன், மாணிக்கவாசகர் மட்டுமின்றி மேலும் ஆறு குதிரை வீரர்களின் சிற்பங்களும் தனியே பிரமாண்டமாக அமைந்துள்ளன. இந்த வீரர்களின் சிகை அலங்காரம், ஆபரணங்கள் ஆகியன நம் தேசத்து மரபில் இருந்து மாறுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது!
தற்போது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. அறந்தாங்கியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அற்புத ஆலயம்!
இந்தத் தொடரின் மூலம், உயிர்கள் மீது கொண்ட பெருங்கருணையால் சிவபெருமான் எடுத்தருளிய மகேஸ்வர வடிவங்களில் 30 கோலங்களை தரிசித்தோம். ஈசனின் எண்ணற்ற அருளாடல்களால் விளைந்த திருவடிவங்கள் இன்னும் பல உண்டு.
சிவனாரின் இந்தத் திருக்கோலங்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டு, தியானித்து வணங்கி வர... அனைத்து செல்வங்களையும் பெறலாம்! ஆலயங்களில் இந்த மூர்த்தங்கள், கல், செம்பு மற்றும் சுதை வடிவாக நமக்குக் காணக் கிடைக்கின்றன.
கலைஞர்களின் கற்பனைத் திறனில் விளைந்த வெறும் சிற்பங்களாக மட்டுமே இவை இருந்திருந்தால், கிரேக்க, ரோமானிய நாகரீகம் போல் எப்போதோ அழிந்திருக்கும். ஆனால் புராணப் பெருமையும் சாந்நித்தியமும் கொண்ட இந்த சிவவடிவச் சிற்பங்கள், அந்நியர்கள் பலரது படையெடுப்புகளுக்குப் பிறகும் அழியாமல் இருக்கின்றன என்றால்... இந்தத் திருவடிவங்களின் மகத்துவம் சொல்லாமலேயே நமக்குப் புரியும்.
'ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்' என்ற அப்பர் ஸ்வாமிகளின் வாக்குப்படி, சிவஞானம் கைவரப் பெற்று இந்தத் திருவுருவங்களை அணுகும்போது, சிவவடிவங்களும் அவை குறித்த விளக்கங்களும் சொல்லொணாப் பேரின்பத்தில் நம்மைத் திளைக்கச் செய்யும்.
இந்து சமயத்தின் தூண்கள்... திருமறைகள்; அருளாளர்கள்; ஆலயங்கள்! உலகம் உய்வு பெற, இந்த மூன்றுமே காத்துக் கொண்டிருக்கின்றன.
தெய்வத் திருவுருவங்களின் தத்துவங்களை உணர்ந்து, வழிபட்டு அனைவரும் பலன் பெறுவோம்!
|
Saturday, 23 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் ! - 62
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment