Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 23



ரு முறை, யாகம் ஒன்று நடத்தத் திட்டமிட்டார் பிரம்ம தேவன். யாகத்துக்கு திருமால் முதலிய தேவர்களை அழைத்து வருமாறு தன் புதல்வர்களை பணித்தார். சிவபெருமானை அழைப்பதற்கு தாமே நேரில் சென்றார். அவரிடம் சிவபெருமான், தனது சார்பில் நந்திதேவரை அனுப்புவதாகவும், அவருக்கு அவிர்பாகம் வழங்குமாறும் கூறினார்.
அதன்படி யாகத்துக்கு வந்த நந்திதேவரை எதிர்கொண்டு அழைத்து வந்த பிரம்மன், அவருக்கு ஆசனம் அளித்து உபசரித்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட தட்சன், தன் தந்தை என்றும் பாராமல் பிரம்மனை பலவாறு திட்டினான்! ''இனி, எந்த வேள்விக்கும் சிவபெருமானை அழைக்கக் கூடாது. சிவபெருமானே பெரியவன் என்று கூறும் வேத மந்திரங்களை உடனே மாற்று!'' என்றும் கத்தினான்.
இதைக் கேட்ட நந்திதேவர் வெகுண்டார். ''மூடனே... சிவபிரானை இகழ்ந்த உன் நாக்கைத் துண்டித்து, உன்னை இந்த இடத்திலேயே அழித்திருப்பேன். எனினும் வந்த இடத்தில் அவ்வாறு செய்வது முறை இல்லை. எனவே நீ பிழைத்தாய். சிவபெருமானை ஏற்காத யாகம் ஒரு யாகமா? உமது உறவும் நட்பும் விரைவில் அழியும்!'' என்று சாபமிட்டு விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
நாட்கள் கடந்தன. இந்த முறை, யாகம் ஒன்று நடத்த தட்சன் ஏற்பாடுகள் செய்தான். ஈசனை தவிர மற்ற அனைவரையும் யாகத் துக்கு அழைத்திருந்தான். சனகாதி முனிவர்கள் நால்வர் மற்றும் சப்த ரிஷிகள் தவிர மற்றவர்கள் யாவரும் அந்த யாகத்துக்கு வந்திருந்தனர்.
அந்த வேளையில், சப்த ரிஷிகளில் ஒருவரான ததீசி என்பவர், ''சிவபெருமானை விலக்கிச் செய்யும் யாகம் ஒழுங்காக நடைபெறாது; இன்னல்கள் பல விளையும்!'' என்று தட்சனுக்கு அறிவுரை கூறினார். அவரது அறிவுரையை தட்சன் புறக்கணித்தான். எனவே, 'உனது யாகசாலை அழிக!' என்று சாபமிட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றார் ததீசி.
அதன் பிறகு துர் சகுனங்கள் பல தோன்றின. எனினும் ஆணவம் மிகுந்த தட்சன், 'யாகத்தை நடத்தியே தீருவது!' என்ற தீர்மானத்துடன் யாகத்தைத் தொடங்கினான்!
தம் சகோதரனான தட்சனின் செயல் கண்டு வருந்திய நாரதர், கயிலைக்குச் சென்று, ''சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகத்தைச் செய்கிறானே... இது நியாயமா?'' என்று தாட்சாயணியிடம் முறையிட்டார். உடனே அவள், அந்த யாகத்துக்கு தான் செல்வது என்று தீர்மானித்தாள். ஆனால், ''அகங்காரம் கொண்ட தட்சன், உன்னை மதிக்க மாட்டான். அங்கு சென்று அவமானம் அடைய வேண்டாம்!'' என்று சிவனார் அறிவுறுத்தினார்.
அவரை சமாதானம் செய்த தேவி, தான் சென்று தட்சனை திருத்தி, அவனுக்கு உண்மையை உணர்த்தி வருவதாகக் கூறி அவரிடம் அனுமதி வேண்டினாள். அதற்கு இசைந்த சிவனார், அவளைத் தனியே சென்று வருமாறு பணித்தார்.
தாட்சாயணி, யாகசாலையை அடைந்தாள். அவளைக் கண்டு கோபமுற்ற தட்சன், ''தாய்- தந்தையற்ற சிவனின் மனைவியான உன்னை, நான் அழைக்கவில்லையே! ஏன் இங்கு வந்தாய்? இங்கிருந்து போய் விடு!'' என்றான். தாட்சாயணி எவ்வளவு எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை; சிவனாரை பலவாறு இகழ்ந்து பேசி, நிந்தித்தான்.
இதனால், கடும் கோபம் கொண்ட தாட்சாயணி, ''தாங்கள் அவமதித்ததற்காக நான் கவலைப்படவில்லை. வேதங்களும் ஆகமங்களும் போற்றும் 'சிவ' மந்திரத்தை அவமதித்தீர். அதற்கான தண்டனையை விரைவில் அனுபவிப்பீர்கள்!'' என்று தன் தந்தையிடம் கூறிவிட்டு கயிலையை அடைந்தாள்.
அங்கு, சிவபெருமானை பணிந்து, 'தட்சனது யாகத்தை அழித்து, அவனுக்கு அறிவு புகட்ட வேண்டும்!' என்று வேண்டினாள். உடனே, சிவபிரானின் கழுத்தில் தங்கியிருந்த விஷத்தின் ஒரு கூறு, அவரின் நெற்றிக்கண் வழி யாக... ஆயிரம் முகங்கள் மற்றும் 2 ஆயிரம் கரங்கள் கொண்ட வீர புருஷனாக வெளிப்பட்டது. இவரே வீரபத்திரர். அதே நேரம், உமையம்மையின் கோபத்தில் இருந்து பத்ரகாளி தோன்றினாள்! இந்த இருவரும் தட்சனின் யாகசாலையை அடைந்தனர். வீரபத்திரரை கண்ட தட்சன், ''நீ யார்? எங்கு வந்தாய்?'' என்று கேட்டான். தாம் சிவகுமாரன் என்றும், யாகத்தில் அவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற வந்ததாகவும் கூறினார் வீரபத்திரர்.
தட்சன், அவிர்பாகம் தர மறுத்தான். எனவே, வீரபத்திரர் யாகசாலைக்குள் புகுந்து தாக்கினார். அங்கிருந்த தேவர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. எமன், அக்னி, இந்திரன், பகன், குபேரன், நிருதி என தேவர்கள் ஒவ்வொ ருவரும் தங்கள் மேனியில் ஓர் உறுப்பை இழக்க... அந்த இடமே ரத்தக் காடானது!
தட்சன் செய்வதறியாது திகைத்தான். எனினும், அவன் மனம் மாறவில்லை. வீரபத்திரர், அவன் தலையை துண்டித்தார். அந்தத் தலை கீழே விழுமுன் தடுத்து அக்னியிடம் கொடுத்து, 'உண்க!' என்றார். அதன் பிறகே வீரபத்திரரின் சினம் தணிந்தது. அங்கு, தேவியுடன் இடப வாகனத்தில் தோன்றினார் சிவபெருமான்.
பிறகு, இறந்த தேவர்களை அம்பிகையின் வேண்டு தலின்படி எழுப்பித்தார் பெருமான். வீரபத்திரர், யாகப் பசுவாக (யாகத்தில் பலி கொடுப்பதற்காக) அங்கு நின்றிருந்த செம்மறி ஆட்டின் தலையை வெட்டி, அதை தட்சனின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பித்தார். ஆட்டுத் தலை பெற்ற தட்சன், அனைவரையும் வணங்கினான். வீர பத்திரர், பத்ரகாளியுடன் கயிலை மலைக்குச் சென்றார். தட்ச யாகத்தை அழித்த இந்த நிகழ்ச்சி, புராணங்களிலும், கதை-பாடல்களாக இலக் கியத்திலும் இடம் பெற்றுள்ளது.
வீரபத்திரர்! 'வீரம்' என்றால் 'அழகு' என்று பொருள். 'பத்திரம்' என்றால் காப்பவன் என்று பொருள். இவருக்கு, வீரேசுவரன் என்றும் பெயர் உண்டு. இதற்கு, 'வீரத்தால் மேம்பட்டவன்' என்று பொருள். வீரத்தை ஐஸ்வரியமாகக் கொண்டவர் என்றும் கூறலாம். இவரின் சக்தி, 'சத்ரு வித்வேஷ நாசினி' என அழைக்கப்பெறுகிறாள்.
சிவபிரான் நிகழ்த்திய 'அஷ்ட வீரட்டம்' எனும் எட்டு வீரச் செயல்களில் ஆறு செயல்கள்- சிவபெருமான் நேரடியாகவே நிகழ்த்தியது (எமன், அந்தகன், ஜலந்தரன், திரிபுராதிகள், கஜாசுரன், மன்மதன் ஆகியோரை அழித்து மீண்டும் உயிர்ப்பித்தது). தட்சன் மற்றும் பிரம்மன் தொடர்பான வீரச் செயல்களை தன் அம்சமான வீரபத்திரர் மற்றும் பைரவர் ஆகியோர் மூலம் நிகழ்த்தி அருள் புரிந்தார்.
அதேபோல, ஏழு வீரட்டங்களில்... தேவர்களுக்கு உதவும் பொருட்டு போர் புரிந்த சிவனார், தட்ச சம்ஹாரத்தில் மட்டும் தேவர்களுக்கு எதிராக வீர பத்திரரை போரிடச் செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment