Wednesday, 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 26


கமங்கள் மற்றும் சிற்ப நூல்களில் குறிப்பிடப்படும் தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதர(கேய) தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணா மூர்த்தி, கீர்த்தி தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி, திவ்ய தட்சிணாமூர்த்தி. இவற்றில் வியாக்யான தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி ஆகிய வடிவங்களே சிறப்பாகக் காணப் படுகின்றன.
வியாக்யான தட்சிணாமூர்த்தி இந்த வடிவில் சிவபெருமான் மூன்று கண்களும், நான்கு கரங்களும் கொண்டு திகழ்கிறார். சாத்திரங்களை விளக்குபவராக, இமயமலையில் ஓர் ஆலமரத்தின் கீழ் புலித்தோல் ஆசனம் அல்லது வெண் தாமரை யின் மீது அமர்ந்துள்ளார் சிவபெருமான். இடது காலை வலது தொடைக்குக் குறுக்கே வளைத்து, மடித்து வைத்து, வலது காலை கீழே தொங்கும்படி அமைத்து அமர்ந்துள்ள திருக்கோலம். வலது காலின் கீழ் முயலகன் படுத்திருக்கிறான்.
முன் வலக்கரம் ஞான முத்திரை (சின் முத் திரை)யுடன் திகழ... முன் இடக்கரத்தில் வரத முத்திரை அல்லது புத்தகத்தையும் கொண்டிருப்பார். அது, இடது முழங்காலுக்கு மேலே அமைந்திருக்கும். பின் வலக்கரம் அட்ச மாலையையும், பின் இடக்கரம் அக்னி அல்லது சர்ப்பத்தையும் ஏந்தி இருக்கும். ஆசார்யன் என்ற முறையில் உள்ளத்தில் உறுதியையும், சிந்தனை வேகத்தையும் காட்டுவதாக
இவரது தோற்றம் அமைந்துள்ளது. இவர், ஜடா பாரம், ஜடா பந்தம், ஜடா மண்டலம் அல்லது ஜடா மகுடம் கொண்டு திகழ, அதன் நடுவே கங்கையின் புன்முறுவல் பூத்த முகம் காணப்படுகிறது.
வெண்ணிற ஆடை, புலித் தோலுடன் அணிகலன்கள் மற்றும் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாந்தமாகக் காட்சி தருகிறார். தமது இடது காதில் சங்க பத்திரம், வலது காதில் குண்டலம் அல்லது இரு காதுகளிலும் சங்க பத்திரமோ குண்டலமோ அணிந்திருப்பார்.
சாத்திரம் பயில விழையும் முனிவர்கள் இவரைச் சூழ்ந்து அமர்ந்துள்ளனர். நாரதர், ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர், அகத்தியர் என்னும் முனிவர்கள் இவரைச் சூழ்ந்து அமர்ந்துள்ள தாக அம்சுமத் பேதாகமம் தெரிவிக்கிறது.
காரணாகமத்தின்படி அகஸ்தியர், புலஸ்தியர், விஸ்வாமித்திரர், ஆங்கீரசர் ஆகியோர் இவர் அருகே அமர்ந்திருப்பர். இந்த முனிவர்கள் ருத்ராட்ச மாலை மற்றும் ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பர்.
தட்சிணாமூர்த்தியின் தத்துவச் சிறப்பை உபநிஷத்தும், சூத சம்ஹிதையும் விளக்குகின்றன. கல்ப முடிவில் அனைத்து உலகத்தையும் தன்னுள் ஒடுக்கி, மகிழ்ச்சியுடன் விளங்கும் பரம் பொருள் இவரே என்று கூறப்படுகிறது. இவரது திருமேனி நிலைத்த பேரின்பம் மற்றும் நிலையான சக்தி ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்கிறது. தன்னை வழிபடுவோருக்கு பேரின்ப வீடு தரும் அற்புத வடிவம் தட்சிணாமூர்த்தி. ''ஏரிசையும் வட ஆலின்கீழ் இருந்தாங்கு ஈர் இருவர்க்கு இறங்கி நின்று நேரிய நான்மறைப் பொருளை உரத்து ஒளிசேர் நெறி அளித்தோன்'' என்று தேவாரம் போற்றுகிறது. 'தர்மத்தை போதிக்கும் இந்த வடிவம் பக்தர்களுக்கு மிகவும் புனிதமானது; தன்னை வழிபடும் அனைவருக்கும் இவர் அனைத்து நலன்களையும் அளிக்கிறார்' என்கிறது சில்ப ரத்தினம். எனவே இவரை தர்ம வியாக்யான தட்சிணாமூர்த்தி என்றும் அழைப்பர். பெரும்பாலான ஆலயங்களில் இந்தத் திருவடிவை காணலாம். ஆலங்குடியில், வியாக்யான தட்சிணாமூர்த்தியின் உற்சவர் படிமத்தை தரிசிக்கலாம்.
ஞான தட்சிணாமூர்த்தி இவரது பின் வலக்கரத்தில் அட்ச மாலையும், பின் இடக்கரத்தில் நீலோற்பலம் அல்லது தாமரை மலர் விளங்கும். முன் வலக்கரம் ஞான முத்திரையைக் காட்டும். முன் இடக்கை அபயம் அல்லது தண்ட ஹஸ்தத்துடன் திகழும். ஞான தட்சிணாமூர்த்தி வடிவத்தை திருவிடைமருதூர், சுசீந்திரம், மயிலாடுதுறை, ஆவூர் முதலான திருக்கோயில்களில் காணலாம்.
யோக தட்சிணாமூர்த்தி இறைவனை அடைதல், குறிக்கோளுக்குத் துணை நிற்றல் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை வழங்குவதே யோகம். இதில் ஆற்றலை விளக்கும் வடிவத்தை யோக தட்சிணாமூர்த்தி என்பர். இந்த வடிவில், யோகப் பட்டையுடன் கூடிய ஸ்வஸ்திகாசனத்தில் வீற்றிருப்பார். பின்னிரு கரங்களில் அட்ச மாலையும், கமண்டலமும் விளங்குகின்றன. பிரம்மனுக்கு அருள்புரிந்தவர் ஆதலால் இவரை, பிரம்ம தட்சிணாமூர்த்தி என்றும் அழைப்பர். இந்த வடிவை காஞ்சிபுரம், திருவொற்றியூர், நஞ்சன்கூடு ஆகிய தலங்களில் காணலாம்.
வீணாதர தட்சிணாமூர்த்தி இசை வல்லுனராக, வீணாதர வடிவில் இருப்பவரே வீணாதர தட்சிணாமூர்த்தி.
சிவபெருமான் மீட்டும் வீணையின் நாதமே உயிர்களுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது. இவரை 'கேய தட்சிணாமூர்த்தி' என்று உத்தரகாமிக ஆகமம் கூறுகிறது. 'கேயம்' என்பதற்குப் பாடுதல், இசைக்கருவி வாசித்தல் என்றும் பொருள். இந்த வடிவில் முன் இரண்டு கரங்களும் வீணை மீட்டிக் கொண்டிருக்க, பின்னிரு கரங்களில் அட்ச மாலையும், தீ அகலும் உள் ளன. இவரது இடது கால், 'உத்குடிகாசன' அமைப்பு கொண்டதாக இருக்கும். சுகர், நாரதர், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோருடன் பிராணிகள், விலங்குகள் மற்றும் பூதங்கள் ஆகியனவும் இவரைச் சூழ்ந்திருக்கும். இவர் நின்ற அல்லது அமர்ந்த கோலத்திலோ, முனிவர்களால் சூழப்பட்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, முயலகன் மீது கால் பதித்தோ அல்லது பதிக்காமலோ ஆல மரத்தின் கீழோ அல்லது ஆலமரமே இல்லாமலோ காட்சி தருவார்.
திருமறைக்காடு (வேதாரண்யம்), நாகலாபுரம், திருப் பாற்றுறை, பெருவேளூர் (மணக்கால் ஐயன்பேட்டை) ஆகிய தலங்களில் இந்த வடிவத்தைக் காணலாம். திருப்பூந்துருத்தி- புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியை அப்பர் பெருமான் சிறப்பித்துப் பாடி இருக்கிறார். திருத்தரும புரத்தில் உள்ள 'யாழ்மூரிநாதர்' வடிவம், வீணாதர தட்சிணாமூர்த்தியின் வடிவமே! ரிஷபத்தின் மீது அமர்ந்து வீணை வாசிக்கும் விமலனை திருவலம் மற் றும் அதன் அருகில் உள்ள மேல்பாடி சிம்மேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கண்டு இன்புறலாம்.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment