சித்த புருஷர்கள் சதுரகிரியில் அவதாரம் செய்தது, பூலோகவாசிகள் பயனுற்று வளமாக வாழ வேண்டும் என்பதற்காகவே! வறுமையில் உழலும் எத்தனையோ ஏழைகளுக்கு இரும்பைத் தங்கமாக்கித் தந்திருக்கிறார்கள் சித்தர்கள். நோயின் பிடியில் சிக்கி இருந்த பலருக்கு மூலிகை சிகிச்சை செய்து அவர்களைக் குணமாக்கி இருக்கிறார்கள்.
பகவானின் அவதாரம் ஆகட்டும்; மகான்களின் அவதாரம் ஆகட்டும்... அந்த அவதாரத்தின் பலன், உலகாயதத்தில் உழன்று கொண்டிருக்கும் குடிமக்களை நல்வழிப்படுத்துவதற்கே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்லது செய்வதற்காகவே அவதாரங்கள் நிகழ்ந்தன.
ஒவ்வொரு காரியத்தையும் இறைவனே நடத்திக் கொள்கிறான். அதற்கு நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறான். எந்தக் காலத்தில் எது நடக்க வேண்டும், எது நடக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. நம்மால் அறிந்துகொள்ள முடியாது; புரிந்து கொள்ளவும் முடியாது. அது கூடவும் கூடாது. அதற்கு முயற்சிக்கவும் கூடாது.
சதுரகிரியும் இதற்கு விலக்கல்ல... எண்ணற்ற மூலிகைகளை மலை மேல் வாரி வழங்கினான் இறைவன். மலைவாழ் வாசிகள் இந்த மூலிகைகளுக்கு என்னென்னமோ பெயர்கள் சொல்கிறார்கள். அதன் பலன்களையும் சொல்கிறார்கள். பயன்பாடுகளையும் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் மந்திரம் தெரிந்தவர்களும், பில்லி சூனியம் வைப்பவர்களும் அதற்குரிய மூலிகைகளைச் சேகரிப்பதற்காக இந்த மலைக்கு வந்து பறித்துச் செல்வதுண்டாம்.
ஒருமுறை, கேரளப் பிரதேசத்தில் இருந்து மந்திரவாதி ஒருவர், குறிப்பிட்ட மூலிகையைத் தேடி சதுரகிரிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்குத் தேவையான மூலிகை கருடக் கொடி. கருடன் கூடு கட்டி வசித்து வரும் பகுதியில் வளரும் தன்மை உடையது இந்தக் கொடி. மலையின் ஆபத்தான, சரிவான பகுதியில் மட்டுமே கருடன்கள் கூடு கட்டி வசிக்கும். சுமார் முக்கால் சென்டி மீட்டர் பருமன் உள்ள கருடக் கொடி, உருண்டை வடிவத்தில் கீரைத் தண்டு மாதிரி காணப்படும். மந்திரவாதிகளின் சில செயல்பாடுகளுக்கு இது பெரிய அளவில் பயன்படும். கருடக் கொடியைப் பக்குவப்படுத்தி, சில ரசாயன மாற்றங்கள் செய்து இதை ஓர் ஆசாமி உட்கொண்டால் அவரது உடல் உறுதி பெறுமாம். இத்தகைய நபர்களின் உடலில் அரிவாளால் வெட்டினால், அந்த அரிவாளே இரண்டு துண்டாக உடைந்து விடுமாம். இதில் இருந்தே கருடக் கொடியின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
சதுரகிரிக்கு வந்த கேரள மந்திரவாதி, அங்கிருக்கும் ஒரு ஆசாமியை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, கருடக் கொடி இருக்கும் மலைப் பகுதியை அடைந்தார். காரணம் இது வளர்ந்திருக்கும் இடம் மந்திரவாதிக்குத் தெரியாது. உடன் அழைத்துச் சென்ற ஆசாமியை கயிறு ஒன்றின் மூலம் கட்டிக் கீழிறக்கி, கருடக் கொடி வளர்ந்திருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தார். கருடக் கொடியைப் பறிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சில நியம நிஷ்டைகளைக் கடைப்பிடித்து சுத்தமாக இருந்தால்தான் இது சாத்தியமாகுமாம். எனவே, மந்திரவாதி கூட்டிச் சென்ற அன்பரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கயிறு மூலம் இறங்கி ஒரு வகையாகக் கருடக் கொடியைப் பறித்துக் கொடுத்தார்.
கருடக் கொடியைப் பறிக்க முற்படும்போது, அந்தக் கூட்டின் அருகே கருடன் இருக்கக் கூடாது. தப்பித் தவறி கருடன் இருந்து விட்டாலோ, அல்லது வெளியில் இருந்து திரும்பி விட்டாலோ, கொடியைப் பறிக்க முற்படுபவரைத் தன் அலகால் குத்திக் காயப்படுத்திக் கொன்றே விடும். காரணம் கூட்டில் இருக்கும் தன் குஞ்சுகளை அபகரிக்க எவரோ வந்திருக்கிறார் என்பதாகவே கருடன் நினைக்கும். இப்படிக் கருடக் கொடி பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.
இதுபோன்ற பலதரப்பட்ட மூலிகைகள் எதிர்கால சந்ததியினருக்கு, அவசியமான காலத்தில் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இவை சதுரகிரியில் இன்னமும் ஜீவித்து, பலன் தந்து வருகின்றன. ஒரு விஷயத்தில் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூலிகையைத் தாங்களே பறித்து, அதைப் பயன்படுத்த முற்படக் கூடாது. இதற்கென இருக்கும் பக்குவப்பட்ட அன்பர்களிடம் இருந்தே அதைப் பெற வேண்டும். எந்த மூலிகை, எந்த நேரத்தில் எவருக்குக் கிடைக்க வேண்டும் என்று பிராப்தம் உள்ளதோ, அந்த நேரத்தில் அது எப்படியாவது அவர் கையில் கிடைத்து விடும். ஆக, நாம் எதிர்பார்த்த மூலிகை இன்னும் நம் கையில் கிடைக்கவில்லையே என்று ஏங்கக் கூடாது.
ஆதிகாலத்தில் சந்தன மகாலிங்கத்தை பார்வதிதேவியே பூஜித்து வந்தாள். அதன் பிறகு சட்டை முனிவர் பூஜைகள் செய்தார். பிறகு சித்தர்களும், பளியர் இனத்தவர்களும் பூஜித்தார்கள். சமீபகால வரலாற்றைப் பார்த்தால் சிவா சாமி என்பவரும், அதன் பிறகு கிருஷ்ணன் குட்டி என்பவரும் வழிபாடுகளைச் செய்து வந்தார்கள். சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய இரண்டு திருக்கோயில்களுமே தமிழக அரசின் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. சந்தன மகாலிங்கம் கோயிலுக்குத் தற்போது பூசாரியாக இருந்து வருபவர் சுப்புராம். பிரம்மச் சாரிகள் மட்டுமே இங்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்.
இங்கு ஆகம பூஜை கிடையாது. ஆத்ம பூஜைதான். அதாவது, மந்திரங்கள் கிடையாது. ஆத்மார்த்தமாக நடக்கும் வழிபாட்டு முறைகள், நம்மை சிலிர்க்க வைக்கும். விசேஷ காலங்களில் சந்தன மகாலிங்கத்துக்கு மணிக்கணக்கில் நடக்கும் இந்த அபிஷேக, அலங்கார வழிபாடுகளைப் பார்த்தால், எவர் மனமும் அந்தத் திருமேனியில் ஐக்கியமாகி விடும்.
சமீப காலத்தில் முதல் பூசாரியாக இருந்த சிவா சாமி, ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர். சந்தன மகாலிங்கத்துக்கு அருகில் உள்ள சட்டை முனிவர் குகையில் தங்கி வந்தார். அப்போது சந்தன மகாலிங்கமும், சிவா சாமியும் மட்டும்தான் இங்கே வாசம். அமாவாசை போன்ற தினங்களில் சிவா சாமியின் பூஜைகளைக் கண்டு தரிசிப்பதற்காக சுமார் பத்து அன்பர்கள் மட்டுமே வந்து சேருவார்கள். பிரமாண்டமான தில்லை மரத்தின் அடியில் சந்தன மகாலிங்கம் கொலு வீற்றிருப்பார். சிவா சாமியின் பூஜைகளுக்கு காட்டுவாசிகளான பளியர்கள் சிலர் உதவி வந்தனர். ஒரு கட்டத்தில் இவரது அந்திமக் காலம் நெருங்கவே... உயிரைத் துறந்தார். சட்டை முனிவர் குகைக்கு மேலேயே இவர் சமாதி ஆகி விட்டாராம்.
சிவா சாமியின் காலத்திலேயே சதுரகிரிக்கு வந்தவர் கிருஷ்ணன் குட்டி. எனவே, அவருக்குப் பிறகு சந்தன மகாலிங்கத்துக்கு பூஜைகள் செய்யும் பொறுப்பு, கிருஷ்ணன் குட்டியிடம் வந்தது. இவரது காலத்தில் ஆலயத்தை விரிவாக்கிக் கட்டும் வேலைகளைத் துவங்கினார்கள். இதை அடுத்து முன்னின்றவர் பெங்களூர் ஸ்வாமிகள் எனப்படும் விஜயேந்திர ஸ்வாமிகள். சந்தன மகாலிங்கத்தின் சந்நிதிக்கு மட்டும் மண்டபம் எழுப்பி, கும்பாபிஷேகம் செய்யத் தீர்மானித்து வேலைகளைத் துவங்கினார்கள்.
சந்தன மகாலிங்கத்துக்கு மண்டபம் எழுப்பிக் கட்டடம் கட்டுவதற்காக மூலவர் சந்நிதியைத் தோண்டி இருக்கிறார்கள். ஆனால், மூலவரின் அடிப் பகுதி நீண்டு கொண்டே போனது. சுமார் பத்தடி ஆழம் போனபோது அந்த விபரீதம் நடந்தது. மூலவரின் திருமேனி நீண்டு கொண்டே போகும் அந்த சுயம்பு வடிவத்தின் அடியில் ரத்தம் கொப்பளித்திருக்கிறது. தோண்டிய ஆசாமிகள் பயந்து போய்க் கூடிப் பேசி, மண்ணைப் போட்டு மூடி இருக்கிறார்கள்.
அடுத்ததாக, இன்னோர் அற்புதமும் நிகழ்ந்தது. சந்தன மகாலிங்கத்தின் பின்னால் ஓங்கி உயர்ந்த தில்லை மரம் ஒன்று காணப்பட்டது. மண்டப வேலைகளுக்கு இது இடையூறாக இருக்குமே என்று அப்புறப்படுத்த எண்ணினார்கள். வெட்டும்போது சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏடாகூடமாக வெட்டினால், மரம் சந்தன மகாலிங்கத்தின் மேலே கூட விழுந்து விட நேரிடலாம். இதை எல்லாம் யோசித்து பயந்த திருப்பணிக்கு குழு அன்பர்கள், 'அந்த சந்தன மகாலிங்கத்திடமே உத்தரவு கேட்டு விடலாம்' என்று லிங்கத் திருமேனி முன் பவ்யமாக அமர்ந்தார்கள். தங்களது கோரிக்கையை இறைவனிடம் சமர்ப்பித்து விட்டு, அவரது உத்தரவுக்காகக் கண்களை மூடிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது எவரும் எதிர்பாராத நிகழ்வு அங்கே நடந்தது. திடீரென பேய்க் காற்று வீசியது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல் வீசிய காற்று, தில்லை மரத்தை மட்டும் அப்படியே பெயர்த்து, வேரோடு கீழே சாய்த்தது. ஆச்சரியம் என்னவென்றால் லிங்கத் திருமேனியிலோ, அங்கு கூடி இருந்த எவர் மீதோ விழாமல் சாதுவாக ஓர் ஓரத்தில் விழுந்தது. மற்றபடி, திடீரென வீசிய இந்தப் பேய்க் காற்றால் மலையில் இருக்கும் மற்ற எந்த மரங்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
தில்லை மரம் தானாக விழுந்ததை இறைவனின் உத்தரவாக எண்ணி வியந்தார்கள், திருப்பணிக் குழு அன்பர்கள். கிருஷ்ணன் குட்டிக் காலத்தில்தான் சந்தன மகாலிங்கத்தின் திருச்சந்நிதி மேம்பாடு அடைந்தது.
சுந்தர மகாலிங்கத்தைத் தரிசிக்க வந்தார் சத்தியமூர்த்தி ஸ்வாமிகள் என்கிற அன்பர். ராஜபாளையத்துக்காரர். ஒரு விநாயகர் விக்கிரகத்தைத் தன்னுடன் மலைக்கு மேலே கொண்டு வந்தார் இவர். இதற்காக, ஓர் ஆசாமியிடம் இதைக் கொடுத்து அடிவாரத்தில் இருந்து சுமந்து வரச் செய்திருக்கிறார் சத்தியமூர்த்தி ஸ்வாமிகள்.
சுந்தர மகாலிங்கத்தைத் தரிசித்து விட்டு, சந்தன மகாலிங்கம் இருக்கும் பாதை நோக்கி வந்தார் சத்தியமூர்த்தி ஸ்வாமிகள். அப்போது இரண்டு ஆலயத்துக்கும் இடையே இருக்கும் ஓடையில் தண்ணீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரைக் கடந்து, இந்த விநாயகர் விக்கிரகத்தை அங்கே ஓர் ஓரமாக வைத்தார். பிறகு, சந்தன மகாலிங்கத்தைக் கூடத் தரிசிக்காமல் விடுவிடுவென திரும்பி கீழே நடந்தார்.யாரோ ஒரு ஆசாமி திடீரென வந்து சந்தன மகாலிங்கம் இருக்கும் திசைப் பக்கம் பார்த்து, விநாயகர் விக்கிரகத்தை வைத்து விட்டு கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவலை, மேலே சந்நிதியில் இருக்கும் கிருஷ்ணன் குட்டி பூசாரியிடம் ஓடிப் போய்ச் சொன்னார் மலைவாசி ஆசாமி ஒருவர்.
அவ்வளவுதான்... முடிந்து வைத்திருந்த தன் சடைமுடியைக் கோபத்துடன் அவிழ்த்து விட்டு பரபரவென வந்தார் கிருஷ்ணன் குட்டி. கீழே ஓடையின் அருகில் வைத்து விட்டுப் போன விநாயகர் விக்கிரகத்தைப் பார்த்தார். அதே நேரம் கீழே சற்றுத் தொலைவில் இறங்கிக் கொண்டிருக்கும் சத்தியமூர்த்தி ஸ்வாமி களையும் பார்த்தார் கிருஷ்ணன் குட்டி.
''ஏய்... யாரது... நில்லு'' என்று கோபத்துடன் பெருங்குரல் எடுத்து கிருஷ்ணன் குட்டி கத்த... திரும்பிச் சென்ற சத்தியமூர்த்தி ஸ்வாமிகள் நின்றார். நிதானித்துத் திரும்பிப் பார்த்தார். கிருஷ்ணன் குட்டியை நோக்கி மெள்ள நடந்து வந்தார். இவர் முகத்திலும் கோபம். 'என்ன' என்பதுபோல் கிருஷ்ணன் குட்டியை எரித்து விடுவதுபோல் பார்த்தார்.
''என்னது... நீ பாட்டுக்கு வந்தே... ஒரு பிள்ளையாரை இங்கே வெச்சிட்டுத் திரும்பிப் பாக்காம போறே... என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல?'' கிருஷ்ணன் குட்டி படபடவெனக் கேட்டார்.
''ம்ம்... இதை மேலே பிரதிஷ்டை பண்ண வடக்கே இருந்து ஒருத்தன் வருவான். அப்ப அவன்கிட்ட கேளு'' என்று சொல்லிவிட்டு, கிருஷ்ணன் குட்டியின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தார் சத்தியமூர்த்தி ஸ்வாமிகள்.
மகான்களின் செயல்களுக்குப் பின்னே இருப்பவர் மகேசன் அல்லவா? சத்தியமூர்த்தி ஸ்வாமிகளின் இந்தச் செயலுக்குப் பின்னால் இருந்தவரும் அந்த சந்தன மகாலிங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி வந்தவர்தான் பெங்களூர் ஸ்வாமிகள். சந்தன மகாலிங்கத் திருச்சந்நிதியின் வளர்ச்சியில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டவர்.
|
Wednesday, 20 September 2017
சதுரகிரி யாத்திரை! - 21
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment