அந்த ஒற்றைக் கொம்பு யானையை விநாயகர் அவதாரமாகவே எண்ணி வழிபட்டு வந்தனர் சதுர கிரியில். மற்ற யானைகளை விட அளவில் மூன்று மடங்கு பெரியது!
சுமார் 120 வருடங்களுக்கு மேல் வசித்து வந்த இந்த யானை, மனிதர்களை எளிதில் தரம் பிரித்துப் பார்த்து விடும். நல்லவர்களுக்கு நல்ல விதமாகவும், கெட்டவர்களுக்குக் கெட்ட விதமாகவும் நடந்து கொள்ளும். 'கணேசா... வணக்கம்' என்று சொல்லி பக்தர்கள், இந்த யானையைக் கும்பிட்டால், இதுவும் பதில் வணக்கம் செய்யும். அந்த அளவுக்குத் தேர்ந்திருந்தது.
இந்த அதிசய யானை, தங்களுக்குத் தொந் தரவு தருவதாக எண்ணிய விஷமிகள் சிலர், கொன்றே விட்டதாகச் சொல்லப்படுகிறது (ஐம்பதடி உயரம் உள்ள ஒரு பாறையில் இருந்து யானை தவறி விழுந்து இறந்ததாகவும் சொல்வார்கள்). யானை உடனடியாகச் சாகவில்லை. உடல் வலிகளுடன் அவஸ்தைப்பட்டு அங்கிருந்து நகர முடியாமல், ஒரு வாரம் கழித்தே இறந்து போனது. அதன் பின், ஒற்றைத் தந்தத்தை வெட்டி எடுத்துச் சென்று விட்டார்கள் விஷமிகள்.
ஒற்றைக் கொம்பு இல்லாமல், இறந்து கிடந்த யானையைக் கண்களில் நீர் கசிய வழிபட்டார் வல்லநாடு சாது சிதம்பர ஸ்வாமிகள். யானை இறந்த துக்கத்தில் மூன்று நாட்கள் ஸ்வாமிகள் எதுவுமே சாப்பிடவில்லை. உடன் இருந்த அவரின் பக்தர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் விஷமிகளே, 'ஒற்றைக் கொம்பு யானையுடன் நெருங்கி இருந்தவர் ஸ்வாமிகள்தான். தந்தத்துக்கு ஆசைப்பட்டு அவரே இப்படி ஒரு செயலைச் செய்து விட்டார்!' என்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டனர். பக்தர்கள் கொதித்தனர்.
இந்த மாபாதகம் செய்தவர் யார் என்பது மகாலிங்கத்துக்குத் தெரியாதா? உண்மையும் ஒரு நாள் வெளி வந்தது. தந்தத்தைத் திருடிய விஷமிகளைப் பொறி வைத்துப் பிடித்த அதிகாரிகள், தந்தத்தையும் அவர்களிடம் இருந்து மீட்டனர். அதிசயமான இந்த தந்தத்தை சுந்தர மகாலிங்கம் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள் பக்தர்கள். இதற்காக, சாது சிதம்பர ஸ்வாமிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் அரசுடன் பேசி, அந்த தந்தத்தை சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கேட்டுப் பெற்றார்கள்.
1971-ஆம் வருடம் வந்த விநாயகர் சதுர்த்தியின்போது சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் இந்த ஒற்றைக் கொம்பை பிரதிஷ்டை செய்யும் விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னையில் டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்.பரமகுரு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த ஒற்றைக் கொம்பைத் தரிசிக்கும் போதெல்லாம், அந்த யானையையே நேரில் தரிசித்த சந்தோஷம் பெற்றனர் பக்தர்கள். ஆனால், இதுவும் நீடிக்கவில்லை. ஒற்றைத் தந்தத்தை எப்படியாவது சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் இருந்து திருடி விட வேண்டும் என்று இருந்த கயவர் கூட்டம், பிரதிஷ்டை செய்த தந்தத்தை ஒரு நாள் கத்தியால் அறுத்துக் களவாடிச் சென்றது.
பக்தர்கள் மீண்டும் சோகமானார்கள். கயவர்களை வேட்டையாடிக் கண்டு பிடித்த அரசு, இந்த முறை அந்த அதிசயத் தந்தத்தை தன் பிடியிலேயே பாதுகாத்து வர ஆரம்பித்தது. இருக்கும் இடத்தில் இருந்தால்தானே எல்லா வற்றுக்கும் சிறப்பு!
சுந்தர மகாலிங்கத்தின் நிறைவை அநேகமாக எட்டி இருக்கிறோம். சதுரகிரி மலையில் ஏறியதும், பிலாவடிக் கருப்பரின் தரிசனத்துக்குப் பிறகு சுந்தர மூர்த்தி, சுந்தர மகாலிங்கத்தை வழிபட வேண்டும். இதன் பின் சிறிது தொலைவு நடந்து சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க வேண்டும். இதோ, சதுரகிரியில் மகிமை வாய்ந்த இன்னொரு சந்நிதியான சந்தன மகாலிங்கத்துக்கு அடுத்துச் செல்ல இருக்கிறோம்.
சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் தினமும் நான்கு வேளை பூஜை நடந்து வருகிறது. காலசந்தி காலை 6 மணி, உச்சிகாலம் நண்பகல் 12 மணி, சாய ரட்சை மாலை 4 மணி, அர்த்தஜாமம் இரவு 7 மணி. கட்டளைதாரர்கள் உபயத்துடன் பூஜை கள் நடக்கின்றன. அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல தினங்கள் சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் விழாக் கோலமாக இருக்கும். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்களும் அலங்காரமும் விமரிசையாக இருக்கும். ஆடி அமாவாசை வெகு விசேஷம்கடந்த ஆடி அமாவாசை வழிபாட்டுக்குச் சுமார் 12 லட்சம் பக்தர்கள் இந்த மலையில் குவிந்தனர்.
ஆடி அமாவாசை நேரங்களில் பலரும் அன்னதானம் செய்வார்கள். இலவச மருத்துவ உதவி முகாம் செயல்படும். சுந்தர மகாலிங்கத்தை பிரதான தெய்வமாகவும் குலதெய்வமாகவும் கொண்டு வழிபடுபவர்கள் அன்றைய தினம் சதுரகிரி வந்து மொட்டை போடுவது, காது குத்துவது என்று குடும்பத்துடன் டேரா போடுவார்கள். இங்கு ஒரு விஷயத்தை பக்தர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
குறுகலான பாதை... கரடுமுரடான வழித்தடம்... சபரிமலையில் உள்ளது போல் எந்த வசதியும் இங்கு கிடையாது. செல்போன், உணவு, தங்குவது, கழிப்பிடம் என்று எதற்குமே முறையான வசதி இல்லை. கிடைத்த இடத்தில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும். கிடைத்த அன்னதானத்தை, பிரசாதமாக உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்படிக் கிடைக்கக் கூடிய சிறிய வசதிகளை மட்டுமே பெரும் பாக்கியமாகக் கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் வரும் பக்தர்கள் ஏராளம். 'கூட்டத்தில் நிம்மதியாக தரிசனம் செய்வோமா' என்கிற கவலை சிறிதும் இல்லாமல், திரள் திரளாக வரும் பக்த கோடிகளை அந்த மகாலிங்கம் அரவணைத்துக் காத்து வருகிறார்.
மாதாமாதம் அமாவாசை தினத்தன்று மதியம் சுமார் ஒரு மணி வாக்கில் சுந்தர மகாலிங்கத்துக்கு அபிஷேகம் துவங்கும். பௌர்ணமியில் மாலை ஆறு மணிக்கு அபிஷேகம் துவங்கும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் முதலில் சுந்தர மகாலிங்கத்துக்கு அபிஷேக- ஆராதனைகள் நடக்கும். சுமார் 3 மணி நேரம் நடக்கும் இந்த வழிபாடு முடிந்த பிறகு, சந்தன மகாலிங்கம் கோயிலில் வழிபாடு துவங்கும். இங்கும் மூன்று மணி நேர அளவில் வழிபாடு முடிந்த பின் அடுத்து, பிலாவடி கருப்பருக்கு பூஜை செய்ய பூசாரிகள் புறப்படுவார்கள். பௌர்ணமி தினத்தில் மூன்று சந்நிதி வழிபாடுகளும் முடிய விடிந்து விடுவதும் உண்டு. இந்த மூன்று சந்நிதிகளையும் வழிபடுவதற்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
புரட்டாசியில் ஆனந்தவல்லி அம்மனின் நோன்புத் திருவிழா மற்றும் நவராத்திரி உற்சவம் நடைபெறும். நவராத்திரியின்போது அலங்கரிக்கப்பட்ட ஆனந்தவல்லி அம்மன் புறப்பாடு நடைபெறும். ஒன்பது நாட்களும் அலங்கரிக்கப்பட்ட ஆனந்தவல்லி உற்சவர் விக்கிரகத்துக்கு முன் பஜனையும் சிறப்பு வழி பாடும் விமரிசையாக நடக்கும். பத்தாம் நாள் ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் இதை அடுத்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
முன் காலத்தில் கோரக்கர் குகையில் வசித்து வந்த சித்தர்கள் தேன்- தினைமாவு கலந்து லிங்கம் செய்து அதை பூஜிப்பார்கள். தற்போதும் சுந்தர மகாலிங்க சிவனடியார் கூட்டத்தினர் அமாவாசை தினங்களில் (ஆடி அமாவாசை தவிர) கோரக்கர் குகையில் தினைமாவில் தேன் கலந்து லிங்கம் செய்து, அதை வழிபட்டு வரு கிறார்கள். பின்னர் அந்த மாவை சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்கு எடுத்து வந்து பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். காளிமுத்து ஸ்வாமிகளின் அன்பர்கள் இதை இன்றும் செய்து வருகிறார்கள்.
அடுத்த இதழில், சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்ய இருக்கிறோம். சுந்தர மகாலிங்கத்துக்குக் குறைவில்லாத அளவுக்குப் புராண முக்கியத்துவமும், தலச் சிறப்பும் கொண்டவர் சந்தன மகாலிங்கம். அவரை தரிசித்து சகல பாக்கியங்களும் பெற தயாராகுங்கள்!
சதுரகிரி யாத்திரைக்கு செல்கிறீர்களா?
சில குறிப்புகள்...
மலைக்கு மேல், இயற்கை தரும் சுகங்களையும் கொடை களையும் தவிர, வேறு எதுவுமே கிடையாது. எல்லாப் பொருட்களுமே கீழே தாணிப்பாறையில் இருந்து, மலைவாசிகளின் மூலம் மேலே வந்து சேருகின்றன. பக்தர்களின் அன்னதானத்துக்குத் தேவையான அரிசி மூட்டை (50 கிலோ) ஒன்றை மேலே சுமந்து வந்து சேர்ப்பதற்கு சுமார் 170 ரூபாய் கூலி. ஆலயங்களில் ஏதாவது கட்டுமானத்துக்குத் தேவையான ஒரு சிமெண்ட் மூட்டையைச் சுமந்து வந்து சேர்ப்பதற்கும் சுமார் 170 ரூபாய் கூலி. இந்தத் தொகை காலநேரத்துக்கு ஏற்ப மாறுபடலாம்.
மலைக்கு மேலே செல்லும் பக்தர்களது துணைக்கு வரும் நம்பிக்கையான கிராமவாசிகளும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 'கைடு' என்று சொல்லப் படும் இவர்களிடம் நமது லக்கேஜை ஒப்படைத்து, அவர்கள் பின்னே நடந்து செல்லலாம் (இவர்களில் ஒரு சிலர், பக்தர்களை ஏமாற்றிய கசப்பான அனுபவங் களும் உண்டு என்பதால், எவரையும் முழுக்க நம்பி விடாமல், உஷாராக இருப்பது நல்லது). இவர்கள் ஒவ்வொரு இடத்தையும் பற்றி சில குறிப்புகள் சொல்லி, பக்தர்களை உடன் அழைத்துச் செல்வார்கள். நன்றாக நினைவில் வைத்திருங்கள் பொறுப்பு முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது.
நல்ல விதத்தில் நம்மைக் கூட்டிச் சென்று, மலையைப் பற்றிய விவரங்களை விவரித்துக் கொண்டே வரும் கிராமவாசிகளும் இருக்கிறார்கள். அவர்கள் சுமந்து வரும் லக்கேஜின் அளவைப் பொறுத்து சுமை கூலி மாறுபடும். குறைந்தபட்ச சுமை கூலிக் கட்டணம் சுமார் ரூ.150. பக்தர்களின் லக்கேஜையும் எடுத்துக் கொண்டு, 'கைடு' போல் உடன் வரும் சிலரது பெயர்கள் அத்திரிமான், ஒருசொல் (பெயரே இதுதான்! இருவரும் கிராம வாசிகள்), ரமேஷ் (மலைவாசி). அடிவாரமான தாணிப்பாறையில் இவர்கள் இருப்பார்கள்.
ரொம்பவும் முடியாதவர்களை 'டோலி' கட்டிக் கூட்டிச் செல்லும் நடைமுறையும் இங்கு உண்டு. மூங்கில் கழி போன்ற ஒரு பெரிய கம்பின் இரு முனைகளிலும் தூளி போல் ஒரு போர்வையைக் கட்டி, அதில் ஆசாமிகளைப் படுக்க வைத்துத் தூக்கிச் செல்கிறார்கள். டோலிக்குள் படுத்திருக்கும் ஆசாமி, ஆகாயத்தைத் தவிர, வேறு எதையும் பார்க்க முடியாது. சபரிமலையில் இருக்கும் சாய்வு நாற்காலி போன்ற டோலிகளை இங்கு கற்பனை செய்து பார்க்கக் கூடாது. காரணம்- அப்படித் தூக்கிச் சென்றால், டோலியில் அமர்ந்திருப்பவர் ஒரு சில இடங்களில் பள்ளத்தைப் பார்க்க நேரிடும்போது பயந்து விடலாம். ஒரு டோலியை அதிகபட்சம் நாலு பேர் வரை தூக்கி வருகிறார்கள். 'டோலி'க்கான உத்தேசமான கூலி இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேல். இதற்கு முன்கூட்டியே தெரிவித்து விட வேண்டும்.
புதிதாக மலை ஏறிச் செல்பவர்கள் ஆர்வக் கோளாறின் காரணமாக தனியே நடந்து செல்லும் முயற்சியில் இறங்கி விடக் கூடாது. ஏனென்றால், பல இடங்களில் பாதைகள் மாறிச் செல்லும் தடங்கள் தென்படும். இப்படி எதாவது ஒரு தவறான தடத்தில் சென்று விட்டால், உரிய நபர்களின் துணை இன்றி, புறப்பட்ட இடத்துக்குத் திரும்புவது சிரமமான செயல். எனவே, உங்களைக் கூட்டிச் செல்பவரின் ஆலோசனைப்படி அவருடனேயே செல்லவும்.
நடந்து செல்லும் வழியில் எந்த மிருகம் தென்பட்டாலும் நாம் அவற்றின் பார்வையில் படாமல், கூடிய வரை ஒதுங்கி விட வேண்டும். அந்த மிருகம் பாதையைக் கடந்து சென்ற பின், நமது நடையைத் தொடரலாம். யானை, கரடி, பாம்பு போன்றவை இங்கே உண்டு. என்றாலும், பக்தர்களின் கண்களில் சமீபத்திய நாட்களில் இவை எல்லாம் தட்டுப்பட்டதாகச் செய்திகள் இல்லை. ஒற்றை ஆசாமியாக நள்ளிரவில் மலை ஏறும் அனுபவஸ்தர்களும் இருக்கிறார்கள். கூட்டமாகப் பகலில் மலை ஏறும் புதியவர்களும் இருக்கிறார்கள். எல்லாம், மகாலிங்கத்தின் செயல். எனவே, யாத்திரை செல்லும்போது மனதில் பயம் வேண்டாம்.
புகை பிடிப்பது, பான்பராக் போடுவது போன்ற பழக்கம் உள்ளவர்கள் மலை ஏறும் நேரங்களிலாவது இவற்றைத் தொடாமல் இருக்க வேண்டும். புனிதமான மலையின் பிரதேசங்களில் சிகரெட் புகையைப் பரவ விடுவது, பான் பராக் எச்சிலை உமிழுவது போன்ற வற்றைத் தவிர்க்கலாம்.
மலைப் பாதையில் உள்ள பூக்களைப் பறிப்பது, இலைகளைப் பிய்த்து ஆராய்ந்து பார்ப்பது போன்றவை கூடவே கூடாது.
மலையே மகாலிங்கத்தின் அம்சம் என்பதால், இங்குள்ள சிறு துரும்புக்கு கூட நாம் கெடுதல் செய்யக் கூடாது. மலையின் மூலிகைக் காற்றை சுவாசிக்கக் கிடைக்கும் வாய்ப்பே, இறைவன் நமக்கு அளித்த பெரும் பேறு என்று எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும்.
|
|
|
No comments:
Post a Comment