Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 22


னிதன் எவ்வளவுதான் எல்லை யில்லா ஆற்றல் பெற்றிருந்தாலும் அதன் பொருட்டு அகங்காரம் கொண்டால், அதுவே அவனை அழித்து விடும்; வெளிப் பகை தேவை இல்லை. பெரியோர்கள் கடைப்பிடித்த வரம்பை எப்போதும் மீறக் கூடாது. மரபுகளை பேணிக் காக்க வேண்டும். தமது அறக் கருணையாலும் மறக் கருணையாலும் உலக உயிர்களைக் காத்து உய்வடையச் செய்யும் இறைவனின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டுமே அன்றி, அவனை எதிர்த்து அழிய வேண்டாம்... எனப் பல தத்துவங்களை உலகுக் குப் புகட்ட எழுந்த திருக்கோலமே வீரபத்திரர் வடிவம் ஆகும்.
பிரம்மதேவனின் புதல்வன் தட்சன். அவன் மேல் மிகுந்த பற்று கொண்ட பிரம்மதேவன், தட்சனை பிரஜைகளின் அதிபதியாக்கி, 'தட்சப் பிரஜாபதி' என்று பட்டம் சூட்டினார்.
சிவபெருமானே யாவற்றுக்கும் முழுமுதற் பொருள் என்பதை உணர்ந்த தட்சன், கயிலைமலைச் சாரலில் மானசரோவர் என்ற நீர்நிலையின் கரையில் பர்ண சாலை அமைத்து, ஓராயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தான். இதனால் மகிழ்ந்த சிவபெருமான், அம்பிகையுடன் இடப வாகனத்தில் அவன் முன் தோன்றினார்.
''தட்சனே... உனது தவத்தால் மகிழ்ந்தோம். உனது விருப்பத்தைக் கேள்!'' என்றார்.
உடனே தட்சன், ''எம்பெருமானே... மூவுலகங் களிலும் உள்ள தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்கள் யாவரும் எனது ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும். எனக்கு, மக்கட் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களும் பெருக வேண்டும். தவிர, உமாதேவியாரே எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அவரை நான், தங்களுக்கு திரு மணம் செய்து தர... தங்கள் மனைவியாக ஏற்க வேண் டும்!'' என்று வேண்டினான்.
''தட்சனே... நீ கேட்டது அனைத்தையும் வரமாக அளித்தோம். நீ நல்ல வழியில் நடக்கும்வரை, வரத் தின் பலன் உன்னிடம் பொருந்தி இருக்கும்!'' என்று அருளி மறைந்தார் சிவபிரான்.
அகமகிழ்ந்த தட்சன், தன் தந்தையிடம் சென்று நடந் ததை விவரித்தான். பெரிதும் மகிழ்ந்த பிரம்மதேவன், 'தட்சமாபுரி' எனும் பெரிய நகரை உருவாக்கி, அதற்கு அரசனாக தட்சனுக்கு முடிசூட்டினார். வேதவல்லி என்ற பெண்மணியை அவனுக்கு மணம் செய்து வைத்தார்.
அவளுடன் இல்லறத்தைத் தொடங்கி, ஓராயிரம் புதல்வர்களைப் பெற்றான் தட்சன். அவர்கள், நாரத முனிவரிடம் மோட்ச சாதனங்களை உபதேசம் பெற்று தவமிருந்து மோட்சம் அடைந்தனர். இதனால் வருந்திய தட்சன், மீண்டும் ஓராயிரம் புதல்வர்களைப் பெற்றான். அவர்களும் நாரத முனிவர் காட்டிய வழியில் சென்றனர். இதனால் கோபம் கொண்ட தட்சன், தன் சகோதரர் என்றும் பாராமல், 'இவன், ஓரிடத்தில் நில்லாது, வருந்தி திரியட்டும்!' என்று நாரதரை சபித்தான். மேலும், தான் பெற்ற ஆண் பிள்ளைகள் தனது பேச்சைக் கேட்காமல், தரும வழியில் சென்று மோட்சம் அடைந்ததால் வெறுப்புற்ற தட்சன், பெண் மக்களை வேண்டிப் பெற்றான். அவர்களில் பதின்மூன்று பெண்கள்- தருமன் (மகா பாரத தர்மர் அல்ல) என்பவனையும், இன்னும் பத்து பேர், பத்து முனிவர்களையும் மணந்தனர். இதனால் தட்சனின் வம்சம் பெருகி வளர்ந்தது.
மீண்டும் 27 பெண்களைப் பெற்றான் தட்சன். அவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படி, 'சந்திரன்' ஒருவனையே கணவனாகத் தேர்ந் தெடுத்து மணந்தனர். ஆனால், அவர்களில் ரோகிணி என்பவளிடம் மட்டுமே தனி அன்பு காட்டினான் சந்திரன். இதனால் வருந்திய மற்ற பெண்கள், தட்சனிடம் சென்று முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனை சபித்தான். இதனால், கலைகள் யாவும் குறைந்து நோயுற்று மெலிந்த சந்திரன் இறுதியில் சிவபெருமானை சரண் அடைந்தான். அவனை தனது தலையில் சூடிக் காப்பாற்றி, 'சந்திர சேகரர்' (சந்திரனைத் தரித்தவர்) என்று பெயர் பெற்றார் சிவபெருமான்.
தட்சன் பெற்ற வரத்தின்படி அவனுக்கு மகளாகத் தோன்ற திருவுளம் கொண்ட உமாதேவி, காளிந்தி நதியில் வலம்புரிச் சங்காக மாறி தவம் செய்யலானாள்.
மாசி மாதம் மக நட்சத்திர திருநாள் (மாசி மகம்) அன்று அங்கு நீராட வந்த தட்சன்,வலம்புரிச் சங்கை கண்டெடுத்தான். அப்போது, அந்த சங்கிலிருந்து குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. 'அந்தக் குழந்தை சிவபெருமான் அருளிய வரம்!' என்று கருதிய தட்சன்- வேதவல்லி தம்பதி, குழந்தைக்கு 'தாட்சாயிணி' என்று பெயர் சூட்டி வளர்த்தனர்.
சிவ சிந்தையுடன் வளர்ந்து வந்த தாட்சாயிணி, பருவ வயதை அடைந்தாள். அவளுக்குள், 'சிவபெருமானையே மணக்க வேண்டும்!' என்ற சிந்தனை வலுத்தது. தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். அவள், சிவபிரானை குறித்து தவம் செய்யும் பொருட்டு பர்ணசாலை அமைத்துத் தந்தான் தட்சன். தாட்சாயிணி தவத்தில் ஆழ்ந்தாள்.
ஆறு ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள், பிரம்மச்சாரி உருவில் வந்த ஈசன், தாட்சாயிணியை தான் மணக்க விரும்புவதாகக் கூறினார். அவரிடம், ''ஐயா... நான் ஈசனை தவிர வேறு எவரையும் மணக்க மாட்டேன். நீங்கள் போய் வாருங்கள்!'' என்றாள் தாட்சாயிணி. உடனே, ''பரம்பொருளான சிவபெருமான் உன்னை மணப்பதா... அது நடக்காத காரியம். எனவே, என்னை மணந்து கொள்!'' என்றார் பிரம்மச்சாரி.
இதைக் கேட்டு தாட்சாயிணியின் மனம் பதைபதைத்தது. அவள், ''என்ன வார்த்தை சொன்னீர்கள்! சிவபெருமான் என்னை விரும்பி மணக்கும் வரை எனது தவத்தைத் தொடர்வேன். நான் இறந்து போனாலும் மீண்டும் பிறந்து, தவம் புரிந்து அவரை அடைவேன்!'' என்றாள் உறுதியாக.
உடனே, பிரம்மச்சாரி உருவில் இருந்த சிவனார் தனது மெய்யுருவை தாட்சாயிணிக்கு மட்டும் காட்டி, ''உனது தவத்தால் மகிழ்ந்தோம். விரை வில் உன்னை மணம் புரிவோம்!'' என் றார். ஆனந்தக் கண்ணீர் பெருக அவரை வணங்கினாள் தேவி.
இதை அறிந்த தட்சன், ஒரு நல்ல நாளில் தாட்சாயிணியை சிவபெருமானுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்தான். திருமண நாளன்று, முகூர்த்தம் நடைபெறும் நேரத்தில் சிவ பெருமான் திடீரென மறைந்தார்! அவரைக் காணாத தேவி, அழுது வருந்தினாள். தட்சன் பெரும் கோபம் கொண்டு, ''இந்தத் திருமணத்தில் என்ன குறை கண்டு ஒருவரிடமும் சொல்லாமல், அந்த சிவன் மறைந்தான்?'' என்று பலவாறு இகழ்ந்தான்.
தாட்சாயிணி மீண்டும் தவம் இயற்றினாள். ஒரு நாள், விபூதி, ருத்ராட்சம், சடைமுடி, சூலம் ஆகியவை துலங்க இடப வாகனத்தில் அவள் முன் தோன்றினார் சிவபெருமான். தேவி, அவரை உப சரித்து வணங்க... அவளைத் தம் அருகில் அமர்த்திக் கொண்டு மறைந்தார் ஈசன்.
இதையறிந்த தட்சன், ''பித்தனான சிவன் எனது குலத்துக்கு இழிவையும் அவமானத்தையும் தேடித் தந்து விட்டான்!'' என்று சினந்து வெடித்தான். தேவர்கள், அவனை சமாதானம் செய்தனர். ''தாட்சாயிணி உன் மகள்; சிவபெருமான் உன் மருமகன் அல்லவா? அவர் உனக்கு அளித்த வரங்களை மறந்து விட்டாயா? அவர் மீதுள்ள கோபத்தைத் தவிர்த்து, கயிலை சென்று அன்பாகப் பேசி வா!'' என்று அறிவுரை கூறினர். தட்சன் கயிலைக்குச் சென்றான். அங்கு காவல் புரிந்த பூதகணங்கள் அவனைத் தடுத்தனர். அவர்களிடம், ''நான், என் மகள் மற்றும் மருமகனைக் காண வந்தேன்!'' என்று இறுமாப்புடன் கூறினான் தட்சன்.
பூதகணங்கள், ''நீ நன்றி மறந்தவன். வரம் தந்தவரையே இகழ்ந்து பேசியவன். சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டுவதுடன், அன்புடன் பேசி அவரை வணங்குவதாக இருந்தால், இங்கே நில். இல்லையெனில், போய் விடு!'' என்றனர். தட்சனது கோபம் எல்லை கடந்தது. ''புத்தி இல்லாதவர்களே... நான் தட்சபிரஜாபதி. தேவர்கள், முனிவர்கள் உட்பட அனைவருக்கும் தலைவன். அவர்களே என்னை வணங்குகின்றனர். அப்படிப்பட்ட நான், போயும் போயும் சுடலையில் திரியும் பித்தனான சிவனை வணங்குவதா... அது, ஒருபோதும் நடக்காது. இனி எவரும் சிவபெருமானை புகழாமலும் வணங்காமலும் இருக்கும்படி செய்வேன்; இது உறுதி!'' என்று கூறி திரும்பினான்.
அத்துடன், 'இனி, எவரும் சிவபெரு மானை வணங்கக் கூடாது!' என்றும் தனது நாட்டு மக்களுக்கு ஆணையிட்டான்.

No comments:

Post a Comment