Friday, 8 September 2017

தீபமேற்றி வழிபட்டால் திருமண வரம் கைகூடும்!


ண்ணாநகர் ஸ்ரீநரசிம்மரை மனதாரத் தொழுதால், மனதில் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்கின்றனர் மதுரை மக்கள். சனிக்கிழமைகளில் இவரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
ஆலவாய்ப்பகுதியில் வைகை ஆற்றின் வடகரையில், மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ளது ஸ்ரீசர்வேஸ்வரர் கோயில். சுமார் 50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோயில் என்றாலும், பழைமையும் பாரம்பரியமும் கொண்டு அழகுறத் திகழ்கிறது ஆலயம்.
இங்கே... அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி அம்பாள். சைவமும் வைணவமும் இணைந்த தலமாகத் திகழ்கிற இந்தக் கோயிலில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகக் கடவுள், ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதுர்கை வழிபாடு, பிரதோஷ காலங்களில் நந்தி தேவருக்கு சிறப்பு பூஜை, சங்கடஹர சதுர்த்தியில் ஸ்ரீவிநாயகருக்கு வழிபாடு, சஷ்டி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேக- ஆராதனை ஆகியன சிறப்புற நடைபெறுகின்றன.
சனிக்கிழமைகளில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வந்துசெல்கின்றனர். ஒரே கல்லில், முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம் ஸ்ரீநரசிம்மரும் காட்சி தருகின்றனர். 16 திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வாரும், நான்கு திருக்கரங்கள் கொண்டு சக்கரங்கள் ஏந்தியபடி ஸ்ரீநரசிம்மரும் காட்சி தரும் அழகே அழகு!
குறிப்பாக, ஆதிசேஷனின் மீது அமர்ந்தபடி யோக நிலையில் அருள்பாலிக்கிற ஸ்ரீநரசிம்மர் விசேஷம் என்பர். பிரதோஷ காலத்தில் சிவனாருக்கு சிறப்புற பூஜைகள் செய்யப்படுவது போல், அந்த நாளில்... அந்த வேளையில், ஸ்ரீநரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.
பங்குனி மாத சுவாதி நட்சத்திர நன்னாளில் ஸ்ரீநரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, துளசி மாலை சார்த்தி, பானகம் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால்... விரைவில் சகல பிரச்னைகளும் தீரும்; சங்கடங்கள் விலகி சந்தோஷம் குடிகொள்ளும் என்பது மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்க்காரர்களின் நம்பிக்கை.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது அண்ணாநகர் ஸ்ரீசர்வேஸ்வரர் திருக்கோயில்.
ஸ்ரீநரசிம்மருக்கு தீபமேற்றி, தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் வழிபட்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கப் பெறலாம். சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்கிற ஸ்ரீநரசிம்மரையும் மனதாரப் பிரார்த்தியுங்கள். சுபிட்சம் நிச்சயம்!

No comments:

Post a Comment