Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 38


                       கஜமுக அனுக்ரஹர்
நாலாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கஜமுகாசுரன். அவனது தவத்துக்கு இரங்கி அவன் முன் காட்சியளித்த பெருமான், வேண்டிய வரங்களை அளித்தார்.
'மதங்க நகரம்' என்ற ஊரை நிர்மாணித்த கஜமுகாசுரன், தனது அரசாட்சியை ஆரம்பித்தான். நவ நிதிகள் மற்றும் பஞ்ச தருக்கள் போன்றவற்றைத் தனக்கு பணிவிடை செய்ய வைத்தான். அவனது ஏவலின்படி, தேவர்கள் அனுதினமும் அவனை வணங்க வேண்டியதாயிற்று. அத்துடன் விடவில்லை.
''நீங்கள் என்னை வணங்கும்போது, மூன்று முறை தலையில் குட்டிக் கொள்வதுடன், 'போதும்' என்று நான் சொல்லும் வரை தோப்புக்கரணமும் போட வேண்டும்!'' என்றும் தேவர்களுக்குக் கட்டளையிட்டான்! தேவர்களும் அதன்படியே செய்து வந்தனர்.
கஜமுகாசுரனது தொல்லைகளால் பெரிதும் துன்பம் அடைந்த இந்திரன் முதலான தேவர்கள், தங்கள் துயர் தீர வழியைத் தேடி கயிலை மலைக்குச் சென்றனர். அங்கே வாயிலில் இருக்கும் ஆனைமுகக் கடவுளை வழிபட்டு, தங்களது துன்பத்தைப் போக்கி அருள் புரியுமாறு வேண்டினர்.
அவர்களுக்கு உதவத் தீர்மானித்த கணபதி, படையுடன் புறப்பட்டார். இதையறிந்த கஜமுகனும் பெரும் படையுடன் வந்து அவரை எதிர்த்தான். மேரு மலை போன்ற தனது வில்லை வளைத்து, கணைகளை மழையாகப் பொழிந்தான் அந்த அசுரன்!
அவற்றைத் தமது வில்லால் தவிடுபொடியாக்கினார் கணபதி. எனினும் அவனது வீரத்தைக் கண்டு வியந்தார் விநாயகர். இறுதியில், தமது வலப் புற தந்தத்தின் முனையை ஒடித்து, அசுரன் மீது ஏவினார். அண்ட சராசரங்களும் நடுங்குமாறு மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து சென்ற 'தந்த முனை' அசுரனின் மார்பைப் பிளந்தது. தொடர்ந்து, கடலில் மூழ்கி நீராடிய பிறகு, ஆனைமுகனிடம் வந்து சேர்ந்தது தந்தம். அதை, ஓர் ஆயுதமாக தன் திருக்கரத்தில் தாங்கினார் கணபதி. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
தந்தத்தால் தாக்கப்பட்டு தரையில் சாய்ந்த கஜமுகாசுரன், மலையைப் போன்று பெரிய உருவிலான பெருச்சாளியாக... அனைவரும் அஞ்சி நடுங்கும் கோர வடிவெடுத்து அனைத்து உலகங்களையும் நாசம் செய்யும் வேகத்துடன் ஓடி வந்தான். அதைக் கண்டு பயந்த தேவர்கள் சிதறி ஓடினர். கணபதி, அந்தப் பெருச்சாளியைப் பிடித்து அதன் மீது ஏறி அமர்ந்தார். ஆனை முகக் கடவுளின் திருமேனி தன் மீது பட்டதும் அந்த அசுரனின் ஆணவம் அகன்று மெய்யறிவு உண்டாயிற்று. பெருச்சாளி ஊர்தியில் ஏறி அருளிய கணபதியை, தேவர்கள் முதலானோர் வழிபட்டனர்.
கஜமுகன் வீழ்ந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று அமைத்து வழிபட்டார் ஆனைமுகன். அந்த இடத்தின் பெயர், 'கணபதீச்சரம்' என்று வழங்கலாயிற்று. கஜமுகாசுரனின் மார்பைப் பிளந்தபோது, அவன் உடலில் இருந்து பெருகிய ரத்தத்தால் அந்தப் பகுதியே செங்காடாக (செந்நிறமானது) ஆனது. எனவே, இந்தப் பகுதிக்கு, 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்தது.
திருவாரூர்- திருமருகல் சாலையில் உள்ளது திருச்செங்காட்டங்குடி. இந்தத் தலத்தின் இறைவனை, கணபதீச்
சரமுடைய மகாதேவா, கணபதீச்சர முடையார்' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 'நறைகொண்ட' எனத் துவங்கும் திருச்செங்காட்டங்குடியின் தேவாரப் பாடல் களிலும் 'கணபதீச்சரத்தானே' என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். சிவபெருமான், பைரவ கோலத்தில் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்ட வரலாறு இங்குதான் நிகழ்ந்தது!
கஜமுகாசுரன் வீழ்ந்ததை அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரி, விண் வழியே மறைந்து போனான். தேவர்கள் கணபதியிடம், ''தலையில் குட்டி, தோப்புக்கரணம் போட்டு கஜமுகாசுரனை வணங்கிய நாங்கள் இனி உங்கள் முன் அவ்வாறு செய்து வணங்க அனுமதிக்க வேண்டும்!'' என வேண்டினர். ஆனைமுகனும் அவர்களுக்கு அருள் புரிந்தார்.
இதன் பிறகு விநாயகரைத் தொடர்ந்து அனைவரும் திருக்கயிலையை அடைந்தனர். சிவ- பார்வதியை வணங்கிய தேவர்கள், கணபதியின் பேராற்றலையும், பெருமைகளையும் எடுத்துரைத்தனர்.
மிகவும் மகிழ்ந்த சிவனார், கணபதியை தம் மடி மீது அமர வைத்து அவர் தலையின் மீது திருக்கையை வைத்து ஆசி வழங்கினார். பிறகு தேவர்களை நோக்கி, ''பெருமை வாய்ந்த பிள்ளை இவன். 'விக்நஹந்தன்' (விக்னங்களைப் போக்குபவன்). சகல கணங்களுக்கும் தலைவனான இவனை முதலில் வணங்கிய பிறகே எம்மை பூஜிக்க வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி தரும்!'' என்று அருளினார்.
இவ்வாறு, ஆனைமுகக் கடவுளுக்குச் சிவபெருமான் அருள் செய்த கோலமே, 'கஜமுக அனுக்கிரக மூர்த்தி' ஆகும். இந்த வடிவை, 'விக்ன ப்ரசாத மூர்த்தி' என்றும் அழைப்பர்.
உத்தரகாமிக ஆகமத்திலும், ஸ்ரீதத்வநிதி எனும் சிற்ப நூலிலும் இந்தத் திருவடிவம் பற்றி விவரிக்கப்படுகிறது. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்தி மண்டபத்தில் மட்டுமே காணப்படும் இந்த கஜமுக அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம், அற்புதமான ஒன்று. இந்தத் திருவடிவில்... மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டு ஜடாமுடியுடன் திகழ்கிறார் சிவபெருமான். தமது முன் வலக் கரத்தை மடியில் அமர்ந்திருக்கும் விநாயகரின் தலையின் மேல் வைத்திருப்பார். இடக் கரம், வரத முத்திரையுடன் திகழும். ஏனைய இரு கரங்களில் மான்- மழுவை தாங்கியிருப்பார்.
சிவபெருமானின் இடப் புறம், சர்வ அலங்காரத்துடன் புன்னகையுடன் உமாதேவி அமர்ந்திருப்பாள். இவள், தன் வலக் கரத்தில் நீலோத்பல மலருடனும் இடக் கரத்தில் வரத முத்திரை தாங்கியும் காட்சியளிப்பாள்.
ஸ்ரீவிநாயகர், சிகப்பு வண்ணம் உடையவராக... கிரீட மகுடம் தாங்கி, நமஸ்கார முத்திரையாக இரு கரம் குவித்து அமர்ந்திருப்பார். அவரின் பின்னிரு கரங்களில் பாச-அங்குசம் திகழும்!
சோமாஸ்கந்த வடிவத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே ஸ்கந்தர் இருப்பது போல, இங்கே சிவபெருமானின் மடி மீது கணபதி அமர்ந்திருப்பார்.
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment