Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 32

                                          

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல் விடம்தனை தான் அமுது செய்தருள் புரிந்த சிவபெருமானின் அற்புதமான வடிவமே திருநீலகண்டர். புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலான சங்க இலக்கியங்களும் சைவத் திருமுறைகளும் 'திருநீல கண்ட' திருவடிவின் பெருமையைப் போற்றுகின்றன. நீலமணி மிடற்றொருவன், கறைமிடற்றண்ணல், காரியுண்டிக் கடவுள் என்றெல்லாம் திருநீலகண்ட கடவுளைச் சிறப்பிக்கின்றன. நீலகண்ட மூர்த்தியை கண்டர், கறுங்கண்டர், சுக்ரீவர், மணிகண்டர் ஆகிய பெயர்களிலும் அழைக்கிறார்கள்.
பெரிய புராணத்தில் திருநீலகண்ட நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய பெயர்களில் நாயன்மார்கள் இருவரது வரலாறு குறிப்பிடப் பெறுகிறது.
ஈசனின் தியாகத்தையும் தனிச் சிறப்பையும் உணர்த்தும் இந்தத் திருமேனியை ஒன்றிரண்டு தலங்கள் தவிர, மற்ற திருக்கோயில்களில் காண இயலவில்லை.
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள திருநீலகண்டரின் பஞ்சலோகத் திருமேனி மிகவும் அரிதான ஒன்று. இது, தஞ்சை மாவட்டம்- கீழ்ப்புத்தனூர் எனும் தலத்தைச் சேர்ந்தது என்பர். இதில், பெருமான் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். பின் இரு கரங்களில் மான்- மழு திகழ... முன் வலக் கரத்தில் திரண்டு உருண்டையான விஷத்தை ஏந்தியுள்ளார். முன் இடக் கரத்தில் (விஷத்தை அவர் ஏந்தியுள்ளதைக் குறிப்பதற்காக) பாம்பை பிடித்துள்ளார்.
கோவில்பட்டி அருகிலுள்ள தலம் கழுகுமலை. இங்குள்ள வெட்டுவான்கோயில் விமானத்தில் நீலகண்டர் திருவடிவம் காணப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நந்தி மண்டபத் தூண் ஒன்றில், நின்ற கோலத்தில் திகழும் திருநீலகண்டரை தரிசிக்கலாம். சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய திருத்தலங்களில், நீலகண்டமூர்த்தியின் வண்ண ஓவியங்களைக் கண்டுகளிக்கலாம்.
காளமேகப் புலவர் ஆலங்குடி என்ற தலத்துக்குச் சென்றார். அங்கே குடிகொண்டுள்ள இறைவனை 'ஆலங்குடியான்' என்று அவ்வூரார் அழைத்தனர்.
இதைக் கேட்ட காளமேகம், 'சிவபெருமான் ஆலம் (விஷம்) குடித்தவராயிற்றே? அவரை ஆலம் குடிக்காதவன் (குடியான்) என்று எப்படி சொல்ல முடியும். அவர், ஆலம் குடித்திருக்காவிட்டால் மண்ணுலகமும் விண்ணுலகமும் தேவர்கள் யாவரும் அழிந்திருப் பார்களே! அவ்வாறு நேராமல், அனைவரையும் காக்க ஆலம் குடித்து அருளிய பெருமானை, 'ஆலம் குடியான்' என்பது எவ்வாறு பொருந்தும்?' எனும் சுவையான கருத்தமைந்த, சொல் நயத்துடன் கூடிய ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல்
ஆலம் குடியானை ஆலாலம் உண்டானைஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்குடியானேல் வானும் குவலயமும் எல்லாம்மடியா வோ முற்றொருங்கு மாய்ந்து
சென்னைக்கு அருகில் உள்ளது ஊத்துக்கோட்டை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் தலம் சுருட்டப்பள்ளி.
இங்குள்ள சிவாலயத்தில், பள்ளிகொண்ட கோலத்தில் திகழும் விஷாபகரணமூர்த்தியை (திருநீலகண்டர்) காணலாம்; அபூர்வ தரிசனம்! இந்த திருவடிவம், சுமார் 15 அடி நீளத்தில் சுதைச் சிற்பமாக அமைந்துள்ளது. அம்பிகையான சர்வமங்களேஸ்வரியின் மடியில் தலை வைத்து, பள்ளி கொண்டிருக்கிறார் சர்வேஸ்வரன்.
உலகத்தை உய்வித்த நிலையில் அம்பிகையின் முகம் பூரிப்புடன் திகழ்கிறது. அவளின் திருக் கரங்களில் ஒன்று அபய முத்திரை காட்ட, மற்றொரு கரத்தில் மலரை ஏந்தியுள்ளாள். குபேரன் வெண் சாமரம் வீச, கந்தர்வர்கள் இன்னிசை பொழிகின்றனர்.
நான்முகன், திருமால், இந்திரன் போன்றோருடன் பிருகு, மார்க்கண்டேயர், நாரதர், அகஸ்தியர், கௌதமர், புலஸ்தியர், தும்புரு, வசிஷ்டர், விச்வா மித்திரர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகளும் இறை வனைச் சூழ்ந்துள்ளனர். அம்பிகையின் வலப்புறம்- சந்திரன்; இடப் புறம் சூரியன் ஆகியோர், தமது பிரபா மண்டலத்துடன் காட்சி தருகின்றனர்.
இவரை தரிசித்த காஞ்சி மகா ஸ்வாமிகள், காசி நகரிலும் பள்ளிகொண்டீஸ்வரர் திருவடிவை அமைக்கச் செய்தது குறிப்பிடத் தக்கது. காசி- அனுமன்காட் பகுதியில், தென்னாட்டுப் பாணியிலான- ராஜ கோபுரத்துடன் கூடிய திருக் கோயிலில்... சுருட்டப்பள்ளியில் உள்ளது போன்றே அமைந்திருக்கும் நீலகண்ட பரமேஸ்வர வடிவத்தை தரிசிக்கலாம்.
- (தரிசனம் தொடரும்)


No comments:

Post a Comment