கங்காதரர் |
- திருஞானசம்பந்தர்
பொருள் அகப்பகையாகிய ஐம்புலன்களையும் அடக்கி, ஆற்றல் கொண்டவனாக பல ஆண்டுகள் தூய தவமியற்றிய பகீரதனுக்காக, பன்முகங்களுடனும் அடங்காத ஆரவாரத்துடனும் விரைந்து வந்த கங்கையை, திருச்சேறை வாழ் செந்நெறிச் செல்வனார், தன் செஞ் சடையில் ஏற்று அருள் புரிந்தார்!
ஆயிரம் முகங்கள், ஆயிரமாயிரம் கரங்களுடன் கங்காதேவி திகழ்வதாக புராணங்கள் போற்றுகின்றன. 'ஆயிரம் முகத்து நதி பாலன்' என்று முருகப் பெருமானைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
பர்வதராஜனின் இரண்டு மகள்களில் மூத்தவள் கங்கை; இளையவள் பார்வதி. இவர்களில்... பெண்ணாகவும் நதியாகவும் திகழ்பவள் கங்கை! பகீரதனின் வேண்டு கோளை ஏற்று, இவளை தன் சடையில் தாங்கிக் கொண்ட சிவனாரின் திருக்கோலமே ஸ்ரீகங்காதரர்!
'யோக பட்டயம் தரித்து, அர்த்த ஸ்வஸ்திகாசனத்தில் தட்சிணாமூர்த்தி போல் சிவனார் அமர்ந்திருக்க... அவரின் மேலிரு கரங்களில் மான்- மழு; கீழிரு கரங்களில் சின்முத்திரை, வரத முத்திரையும் திகழும். விரிசடையில்... ஆமை, மீன் மற்றும் முதலை முதலான உயிரினங்கள் தன்னகத்தே கொண்ட கங்கையின் திருமுகம் தென்படும்' என்று ஸ்ரீகங்காதரரின் திருவடிவை வர்ணிக்கிறது சிவபராக்ரமம்.
ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீபிட்சாடனர் திருவடிவங்களில் திகழும் கங்காவின் திருவடிவம்... உடலின் கீழ்ப்பகுதி மீன் அல்லது முதலையின் உடல் அமைப்புகளுடனும் மேற்பகுதி கரம்கூப்பித் தொழும் பெண்ணைப் போலவும் அமைந்திருக்கும்.
'கங்கா விசர்ஜனர்' எனும் திருவடிவில் அர்த்த பத்மா சனத்தில் காட்சி தருவார் ஈசன். அவரின் வலது மேல் கரம் சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விட; வலது கீழ்க் கரம் குடையைப் பிடித்திருக்கும். பெருமானின் இடக் கரங்கள் சூலம் மற்றும் மான் ஆகிய வற்றுடன் திகழும். அருகில்... கங்கை வெளிப்படுவதைக் கண்டு ஊடல் கொண்டு நிற்பாள் உமாதேவி. இந்தத் திருவடிவில் சிவனாரின் பீடத்தில் நிற்கும் நந்தி வித்தியாசமான கோலத்தில் திகழ்வார். அதாவது, கங்கை நீரை தன் வாயில் ஏந்தி, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கை மட்டும் வெளியில் விடும் நிலையில் இருப்பார்! அருகில் பகீரதனும் நிற்பதைக் காணலாம். இந்தத் திருவடிவம் பல ஆலயங்களில் ஓவியமாகத் திகழ்கிறது.
காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகங்காதரர் வடிவில், உமாதேவி தன் வலக்கரத்தை ஈசனின் கால் மீது வைத்தும்; இடக்கரம் ஆச்சரிய முத்திரையுடனும் விளங்க காட்சி தருகிறாள். இந்த வடிவத்தில், சிவனாருக்கு ஆறு கரங்கள்!
மாமல்லபுரம் ஸ்ரீஸ்தலசயன பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் (மலையில்) உள்ள பாறைச் சிற்பத்தில், எலும்பும் தோலுமாக இளைத்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கிறான் பகீரதன். அவனுக்கு அருள் புரியும் சிவனார், கங்கையை பூமியில் ஓட விடுகிறார். பெருக்கெடுக்கும் கங்கையைக் காண வரும் யானைக் கூட்டத்தையும், ஜான்ஹவி முனிவரின் ஆசிரமம் மற்றும் சிங்கம், புலி முதலான வன விலங்குகளையும் இந்த சிற்பத்தில் காணலாம். காஞ்சி- ஸ்ரீமதங்கேஸ்வரர் கோயிலில், ஸ்ரீகங்காதரரின் சுதைச் சிற்பத்தை தரிசிக்கலாம்.
புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் ஆலயம், முற்கால பாண்டியர்களால் அமைக்கப்பட்ட குடவரைக் கோயில் ஆகும். இந்தக் கோயிலின் அர்த்த மண்டபத்தில், வடக்கு நோக்கிய கங்கைகணபதியையும் தெற்கு நோக்கிய ஸ்ரீகங்காதரரையும் தரிசிக்கலாம். இந்த வடிவில், சிவ பெருமான் தன் வலக்கரத்தால் சடையைப் பிடித்திருக்க... கால் மடக்கி, கீழ் நோக்கிப் பாய்கிறாள் கங்காதேவி!
சோழர் காலத்து கங்காவிசர்ஜன மூர்த்தி வடிவங்களை மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப் பனந்தாள், திருமீயச்சூர் முதலான ஆலயங்களின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம். இந்தத் திருவடிவில்... சிவனாரின் தலையில் உள்ள கங்கையைக் கண்டு உமையவள் கோபம் கொள்வது போல் சிற்பம் வடித்துள்ளனர். கோபத்தில் முகம் தாழ்த்தியிருக்கும் அம்பிகையின் தோளைத் தொட்டு, அவளின் முகத்தை நிமிர்த்தி அணைத்தபடி, ஊடலைகளைய முயல்பவராகக் காட்சி தருகிறார் ஈசன். இதனை 'சூடினார் கங்கை யாளை சூடிய துழனி கேட்டாங்கு ஊடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டி பாடினார் சாம வேதம்...' என்கிறார் திருநாவுக்கரசர்.
சென்னை- புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத்தில் பகீரதனின் வடிவம் உள்ளது. இதேபோல், காஞ்சி சர்வ தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயம், தக்கோலம் (திருவூறல்).கொள்ளிடக் கரையில் உள்ள கோவிந்தபுத்தூர் ஸ்ரீகங்காஜ டேஸ்வரர் ஆலயம், சேலம்- ஆத்தூர் அருகில் உள்ள விரகனூர் ஸ்ரீகங்காசுந்தரர் ஆலயம் ஆகியன குறிப்பிடத் தக்கவை.
'பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு ஆர் அருள் புரிதலை கொள் கங்கை சடையேற்ற அரன்', 'கங்கையாளை கமழ்சடை மேற்கரந்தான்' ஆகிய வரிகளில் (திருமுறை), கங்காதரர் வடிவம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு அருகில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம், திரு விடைமருதூர், தாராசுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தலங்களில் கங்காதேவிக்குத் தனிச் சந்நிதியே அமைந்துள்ளது.
|
No comments:
Post a Comment