ஒரு
முறை துர்வாச முனிவர் இந்திரனின் அமராவதிபட்டினம் வந்தார். அன்று அமராவதி நகர் முழுக்க விழாக்கோலம் பூண்டிருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு தடபுடலாக எதையோ அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
துர்வாச
முனிவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அந்த வழியே வந்த நாரத மகரிஷியை அழைத்து, *“என்ன இது அமராவதிபட்டினமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது? இன்று என்ன விசேஷம் ?”* என்று கேட்கிறார்.
*“இன்று
பராசக்திக்கு தேவேந்திரன் பௌர்ணமி பூஜை செய்துகொண்டிருக்கிறான். இதுவரை இப்படி ஒரு பூஜையை யாரும் செய்திருக்க மாட்டார்கள். நீங்களே நேரில் சென்று பாருங்கள்”* என்று கூறிவிட்டு போய்விட்டார்.
அமரலோகத்தில்
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அன்னை ஆதிபராசக்திக்கு கோலாகலமான பூஜை நடைபெறும். அனைவரும் வியக்கும் வண்ணம், பொன்னால் செய்த அம்பிகையின் திருமேனிக்கு பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு பூஜை செய்வது தேவேந்திரனின் வழக்கம்.
துர்வாசர்
இந்திரனின் அரண்மனைக்கு சென்று பார்த்தபோது அங்கு பொன்னால் எழுப்பட்டிருந்த அம்பிகையின் திருவுருவச் சிலைக்கு லக்ஷார்ச்சனை நடைபெற்று கொண்டிருந்தது. தங்க தாம்பாளங்களில் கிடைப்பதர்க்கரிய மலர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வேதியர்கள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர்.
துர்வாசரை
வரவேற்ற தேவேந்திரன் அவரும் பூஜையில் பங்கேற்றுவிட்டு விருந்து சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
துர்வாசரும்
இந்திரனின் வேண்டுகோளை ஏற்று பூஜையில் பங்கேற்றுவிட்டு விருந்து சாப்பிட்டார். *“மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருமண விருந்து தான் இதுவரை நான் கண்ட விருந்திலேயே மிகப் பெரிய விருந்து. இது அதைக் கூட மிஞ்சி விட்டதே. உண்மையில் நீ பெரிய பக்தன்
தான்!”*
தேவேந்திரனின் பராசக்தி பக்தியை எண்ணி வியந்த துர்வாசர் இதை விஷ்ணுலோகம், சத்தியலோகம் உள்ளிட்ட அனைத்து லோகங்களுக்கும் சென்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இறுதியில்
இதை அம்பிகையிடமே சொல்வோமே என்று கருதிய துர்வாசர் நேரே பராசக்தியின் லோகமான ஸ்ரீபுரத்திற்கு சென்றார்.
அங்கு
தேவியை காண வந்திருக்கும் விஷயத்தை துவாரபாலகியரிடம் சொல்ல, *“தேவி தற்போது நோய் வாய்ப்பட்டிருக்கிறார். யாரும் அவரை சந்திக்க இயலாது!”* என்று அவர்கள் அவரை உள்ளே விட மறுத்தனர்.
*“என்ன
அண்ட சராசரங்களை படைத்து அவற்றை காக்கும் லோகமாதாவுக்கு நோயா?”* என்று ஆச்சரியப்பட்டவர் எவ்வளவோ கெஞ்சியும் அவரை உள்ள விட துவாரபாலகியர் மறுத்துவிட்டனர்.
*“தாய்க்கும்
பிள்ளைக்கும் இடையே நீங்கள் யார் ? என்னை உள்ளே விடவில்லையெனில், உங்களை சபித்துவிடுவேன். சனகாதி முனிவர்களை வைகுண்டதிற்குள் விட மறுத்த ஜய விஜயர்களுக்கு நேர்ந்தது
என்ன என்று உங்களுக்கு தெரியுமல்லவா ?’* என்று
கர்ஜிக்க, பயந்துபோன அவர்கள் அவரை உள்ளே அனுமதித்தனர்.
உள்ளே
சென்றவர் தேவி மஞ்சத்தில் சயனித்திருப்பதை பார்க்கிறார். அருகே செல்லும்போது கவனிக்கிறார் அன்னையின் உடல் முழுதும் கொப்புளங்கள்.
தேவி
வேதனையில் துடித்துகொண்டிருப்பதை பார்த்து மனம் கலங்கிய துர்வாசர், *“அன்னையே இதென்ன கோலம்… தங்களை இந்த கதிக்கு ஆளாக்கியது யார் ?”*
*“மகனே
அமரலோகத்தில் தேவேந்திரன் தனது செல்வ செழிப்பை பறைசாற்ற எனக்கு ஆடம்பரமாக பூஜை செய்தான். அவன் என்னை அர்ச்சித்த ஒவ்வொரு மலரும் என் உடலில் கொப்புளமாக மாறிவிட்டது!”*
*“ஆடம்பர
பூஜையை பார்த்து வியந்து பாராட்டியதால் உனக்கும் இதே போன்று கொப்புளங்கள் விரைவில் தோன்றும்!”*
அது
கண்டு பயந்த துர்வாசர், *“அன்னையே லோகமாதாவான தங்களாலேயே இதை போக்கிக்கொள்ள முடியவில்லையே… எனக்கு ஏற்பட்டால் நான் என்ன செய்வது? இதற்கு என்ன தான் மருந்து ?”* என்றார்.
*”என்னை உள்ளன்போடு யாரேனும் பூஜித்தால் அந்தக் கணமே எனக்கு இந்த கொப்புளங்கள் மறைந்துவிடும். அப்படிப்பட்டதொரு பூஜையை நீ பார்த்தால் தேவேந்திரனின்
பூஜையில் பங்கேற்ற பாவமும் போய்விடும்!”* என்றாள்.
*“இப்போதே
அப்படிப்பட்ட ஒருவரை தேடிச் சென்று பார்க்கிறேன்”* என்று கூறியபடி பூவுலகம் முழுக்க தேடினார். யாரும் அப்படி பூஜை செய்வதாக தெரியவில்லை. அனைவரிடமும் ஆடம்பரமும் தாங்களே தேவிக்கு சிறந்த பூஜை செய்வதாக செருக்கும் இருந்தது.
கடைசீயில்
காசி என்னும் ஷேத்ரதுக்கு வந்தார் துர்வாசர். அங்கு அன்னபூரணிக்கு முன்பாக ஒரு ஏழை பக்தன் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது.
அவனை
எழுப்பிய துர்வாசர், *“என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”* என்று விசாரித்தார்.
*“சுவாமி…
தேவிக்கு அனைவரும் இங்கே அவரவர் சக்திக்கேற்ப விதவிதமாக பூஜை செய்தார்கள். ஆனால் நானோ பரம ஏழை. அவளுக்கு ஒரு பூ வாங்கக் கூட
என்னிடம் பொருளில்லை. அதை நினைத்து கண்ணீர் வடித்தேன்!”* என்றான்.
தொடர்ந்து
பல இடங்களில் சிறந்த பூஜை செய்தவரை தேடிக்கொண்டிருந்த துர்வாசர் இறுதியில் தோல்வியுடன் ஸ்ரீபுரதிற்கே திரும்பிவிட்டார்.
அங்கே
சென்றவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
தேவி
அங்கே நலம் பெற்று எழுந்து முன்பை விட பொலிவு பெற்று சரஸ்வதி வீணை மீட்ட நாட்டியமாடிக் கொண்டிருந்தாள்.
துர்வாசருக்கு
ஆச்சரியம் தாங்கவில்லை.
*“அன்னையே
தங்கள் கொப்புளங்கள் மறைந்து முன்னைவிட பொலிவு பெற்றுவிட்டீர்களே. அப்படி என்றால் உங்களை உள்ளன்போடு யாரேனும் பூஜித்தார்களா ?”* என்றார்.
*“ஆம்…
துர்வாசா.. சற்று நேரத்திற்கு முன்னர் நீ காசியில் கண்டாயே…
ஒரு ஏழையை. அவன் தன் இயலாமையை எண்ணி வருத்தமுற்று, கண்ணீர் வடித்தான். அவன் விட்ட ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் மலர் மாலையாக மாறி என் மீது விழுந்தது மட்டுமின்றி என் கொப்புளங்களையும் போக்கிவிட்டது!”* என்றாள் புன்னைகைத்தபடி.
*“தாயே
என்னை மன்னித்துவிடுங்கள்… ஆடம்பரமற்ற உள்ளன்போடு கூடிய பக்தியே என்றும் சிறந்தது முதன்மையானது என்பதை உணர்ந்துகொண்டேன்!”* என்றார்.
ஆடம்பரத்தை
விடுத்து உள்ளன்போடு பக்தி செலுத்துங்கள். உண்மை என்னும் மலராலே இறைவனை அர்ச்சியுங்கள். அதுவே இறைவனுக்கு ப்ரீதியானது. முழுப் பலனையும் பெற்றுத் தருவது.
No comments:
Post a Comment