Wednesday, 20 September 2017

சதுரகிரி யாத்திரை! - 25




'சதுரகிரி யாத்திரை' தொடரின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டோம். பல காலம் வரை, தென் தமிழகத்தில் உள்ள சிலருக்கு மட்டுமே தெரிந் திருந்த சதுரகிரி, இன்று பலருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. அந்த மலையின் சிறப்பையும் பெருமைகளையும் பலரும் அறிந்துள்ளனர்.


அமாவாசை, சிவராத்திரி முதலான விசேஷ தினங்களில் மட்டுமே சதுரகிரிக்கு பக்தர்கள் வந்து சென்ற காலம் போய், இன்று எல்லா தினங்களிலும் கூட்டம் கூடுகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில்  ஸ்ரீசுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருச்சந்நிதிகளில் நடக்கும் அபிஷேக- ஆராதனைகளைக் காண திரளான கூட்டம் நிரம்பி வழிகிறது. ஈசனை எளிதில் கண் கொண்டு தரிசிக்க முடியாத அளவுக்கு ஜனத் திரள்! எங்கெங்கும் சிவநாம கோஷம்; பஜனை முழக்கம்!




பக்தர்களை சுமந்து வரும் வாகனங்கள் தாணிப் பாறை அடிவாரத்திலேயே நிறுத்தப் படும். அதற்கு மேல் நடை யாத்திரை. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும் அருகில் உள்ள சில கிராமங்களில் இருந்தும் அரசு பஸ் மற்றும் மினி பஸ் வசதி தாணிப்பாறைக்கு உள்ளது.


சென்னை, பெங்களூரு, கோவை, சேலம் போன்ற பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், கார் மற்றும் வேன் மூலம் தாணிப்பாறையை வந்தடைகின்றனர். தங்களது வாகனங்களை தாணிப்பாறையில் நிறுத்தி விட்டுப் பயணிக்கிறார்கள். அவர்கள் திரும்பும் வரை வாகனங்கள் காத்திருக்கின்றன. புதிதாக வரும் பக்தர்களையும் காரோட்டிகளையும் நம்பி வியாபாரம் செய்து பிழைக்கும் உள்ளூர்வாசிகள் இன்று பெருத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
எந்த நோக்கத்துக்காக 'சதுரகிரி யாத்திரை' தொடர் ஆரம்பிக்கப்பட்டதோ, அது இன்று நிறைவேறி இருக்கிறது. அதாவது, நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் பக்தர்களும் இங்கு வந்து புனிதமான சதுரகிரியைத் தரிசித்து, இந்த மலை மேல் உறையும் தெய்வங்களை வணங்கிச் செல்ல வேண்டும் என்பதே நமது ஆசையாக இருந்தது.
இன்று, இங்கு திரளாக வரும் பக்தர்களைப் பார்த்தால், மனம் பெருமிதமடைகிறது. 'யாத்திரை கடினமாக இருக்குமோ?' என்ற சிறு ஐயப்பாடும் இல்லாமல், குழந்தைகளும் முதியவர்களும் குடும்பத்தினருடன் கிளம்பி வந்து விடுகிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கு பங்கம் நேராத வகையில், மகாலிங்கமும்... எந்தவித சிரமும் இல்லாமல் அவர்களை மலை மேல் ஏற்றி விடுகிறார்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரத்தில் (சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இப்படித்தான் சொல்கிறது) உள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல வாகன வசதிகள் கிடையாது. முன்கூட்டி தகவல் கொடுத்தால், அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து 'டோலி' ஏற்பாடு செய்கிறார்கள். மலைக்கு மேல் மின்வசதி, ஓட்டல்கள், விடுதிகள், கடைகள் போன்ற எதுவும் கிடையாது. சுந்தர மகாலிங்கம் கோயில் வாசலில் மட்டும் பூஜைப் பொருட்கள் விற்கும் ஓரிரு கடைகள் அவ்வப்போது இருக்கும்.
தவிர, விழாக் காலங்களில் இதன் அருகில் சூடான டீ கிடைக்கும். மற்றபடி மலைக்குச் செல்பவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களைத் தாங்களே எடுத்துச் செல்ல வேண்டும் (இதை எடுத்து வர சுமை தூக்கிகளும் இருக்கிறார்கள்).
ஓட்டல்கள்தான் மலை உச்சியில் இல்லையே தவிர, அன்னதானம் குறை வில்லாமல் நடந்து வருகிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை காளிமுத்து மகரிஷி ஆசிரமம் நடத்தும் அன்னதானம், அருள்மிகு சந்தன மகாலிங்கம் பக்த ஜன கமிட்டியினர் நடத்தும் அன்னதானம், ஒவ்வொரு அமாவாசையின்போது சதுரகிரி சித்தர்கூட அன்பர்கள் நடத்தும் அன்னதானம் ஆகியவை. காளிமுத்து மகரிஷி ஆசிரமம் மற்றும் சந்தன மகாலிங்க பக்த ஜன கமிட்டியினர் நடத்தும் அன்னதானம் தினமும் நடைபெறுகிறது. சதுரகிரிக்கு வந்து செல்லும்
பக்தர்கள், இந்த அன்னதானக் கூடங்கள் எதிலாவது உணவு உண்டு திருப்தியுடன் திரும்புகிறார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிவ சங்கு என்பவர் நடத்தும் அன்னதானம், ஆடி அமாவாசை அன்று புதுப்பட்டி கம்மவார் நாயுடு அன்னதான மடம் உட்பட சில தனியார்கள் நடத்தும் அன்னதானங்களும் இங்கு பிரபலம். ஆக, சதுரகிரிக்கு மகாலிங்கத்தைத் தரிசிக்க வரும் ஒருவருக்கு, 'உணவு கிடைக்க வில்லையே' என்கிற கவலை நிச்சயம் இருக்காது. அதுவும் ஆடி அமாவாசை நேரத்தில் தண்ணீர், மோர், பிஸ்கட் என்று பல கூடுதல் தானங்களும் மலையின் பல பகுதிகளில் தனியார் பலரால் வழங்கப்படுகிறது.
முதலில், காளிமுத்து சுவாமிகள் ஆசிரமம் நடத்தும் அன்னதானம் பற்றிப் பார்ப்போம். காளிமுத்து சுவாமிகள் ஆசிரமம் சார்பாக ஏழூர் சாலியர் அன்னதான மடத்தில் தினமும் அன்ன தானம் நடந்து வருகிறது. இது, சுந்தர மகாலிங்கம் ஆலயத்துக்கு வெகு அருகில் உள்ளது. 'கஞ்சி மடம்' என்றால்தான் பக்தர்களுக்கு இது புரியும். மலை அடிவாரமான தாணிப்பாறையிலும் இவர்களுக்கு ஒரு கிளை மடம் உண்டு.
அதென்ன கஞ்சி மடம்?
பல வருடங்களுக்கு முன் இங்கு அன்ன தானத்தைத் தொடங்கி வைத்தவர்கள் காளிமுத்து சுவாமிகளும் அவர் தாயார் பத்ரகாளி அம்மாளும்தான்! சதுரகிரிக்கு வரும் அன்பர்கள் பசியாறுவதற்காக, ஆரம்ப காலத்தில் கஞ்சி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. எனவே, இது-
'கஞ்சி மடம்' என வழங்கப்படலாயிற்று. பக்தர் களுக்குக் கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை, காளிமுத்து சுவாமிகளும் அவர் தாயாரும் தங்கள் தலையில் வைத்துச் சுமந்து வருவார்களாம். அப்படித் துவங்கியதே இந்தக் கஞ்சி மடம். இப்போது, இங்கு வருபவர்களுக்கு கஞ்சி மடத்தின் சார்பில் உணவு பரிமாறப்படுகிறது என்றாலும், ஆடி அமாவாசை அன்று மட்டும் இங்கு கூடும் லட்சக்கணக்கான பக்தர்களை உத்தேசித்து, கம்பரிசியைக் கொண்டு தயாரித்த கஞ்சிதான் விநியோகிக்கப்படுகிறது.
இங்கு, அன்னதானம் செய்வதற்குத் தேவையான அரிசி, பெரும்பாலும் பக்தர்களிடம் இருந்தே சேகரிக்கப் படுகிறது. சாலியர் சமூகத்து மக்கள் 'பிடி அரிசி' முறை வைத்து, அரிசியை தங்கள் வீட்டில் சேகரிப்பார்கள். அதாவது, தங்கள் வீட்டில் சமையல் செய்யும் முன்பாக அதற்காக எடுக்கும் அரிசியில் இருந்து ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியே எடுத்து, சமையலறையில் உள்ள பையில் போட்டு வைப்பார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி, ஒரு தினத்தில் மொத்தமாக கஞ்சி மடத்து அன்னதானத்தில் சேர்க்கப்படுகிறது.
தவிர, பல அன்பர்களும் காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்துக்குத் தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார்கள். உதாரணத்துக்கு, ஆசிரமத்துக்குத் தேவைப்படும் உப்பை ஒரு நபரும், ஊறுகாயை ஒரு நபரும், எண்ணெயை ஒரு நபருமாக- இப்படி அவரவர் தங்களால் முடிந்ததை வழங்கி வருகிறார்கள். பல வருடங்களாகச் செய்து வரும் இவர்களது புனிதமான இந்த அன்னதானப் பணி மென்மேலும் பெருக வேண்டும்.
சந்தன மகாலிங்கம் திருக்கோயிலின் அருகே அன்னதானம் செய்து வருகின்றனர், சதுரகிரி சந்தன மகாலிங்க பக்த ஜன கமிட்டியினர். அதோடு, சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும், ஆலய மேம்பாட்டுக்கான திருப்பணி வேலைகளிலும் இவர்கள் தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள்.
சதுரகிரி சந்தன மகாலிங்க பக்த ஜன கமிட்டியினரின் இந்த அறப்பணிக்குப் பல பக்தர்களும் உள்ளன்போடு பொருளுதவி செய்து வருகிறார்கள்.
இந்த பக்த ஜன கமிட்டியின் உறுப்பினரான சிவ காசியைச் சேர்ந்த அமரநாதன் நம்மிடம் சொன்னார் ''பக்தர்களுக்கு உணவளிப்பதை நாங்கள் அன்ன தானம் என்று சொல்வதில்லை. 'பகிர்ந்துண்டு வாழ்வோம்' என்றுதான் இதைச் சொல்வோம். உணவு என்பது பசியைப் போக்க மட்டுமல்ல, அதன் ருசியானது புலன்களுக்கு புத்துணர்வையும் சுவையையும் தர வேண்டும் என்பதற்காக, மிகுந்த தரத்துடன் இந்தப் பணியைச் செய்து வருகிறோம். எங்களிடம் உணவருந்தியவர்கள், உள்ளமும் வயிறும் குளிர வாழ்த்தும்போது, எங்களது மனமும் நிறைகிறது. அமாவாசை தினங்களின்போது காலை நேரத்தில் இனிப்புடன் டிபன் பரிமாறுகிறோம். மதிய நேரத்தில் அப்பளம்- பாயசத்துடன் உணவு வழங்குகிறோம்!''
தவிர, அமாவாசை தரிசனம் முடித்து அன்று இரவு தங்கி, மறுநாள் காலை மலையை விட்டுக் கீழே இறங்குபவர்களுக்கு, வழியில் பசி ஆறுவதற்கு வசதியாக புளிசாதத்தையும் கட்டித் தருகிறார்கள். அதோடு, மலைக்கு வந்தவர்களுக்கு ஏதாவது ஜுரம், தலைவலி, கால்வலி, உடலில் காயம் என்றால் மருத்துவர்கள் சிபாரிசு செய்த மருந்து மாத்திரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
அடியார்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு என்கிற விதத்தில் இவர்களது பணி அமைந்துள்ளது. சுவையாக அமைந்துள்ள இவர்களது அன்னதான உணவை விரும்பி, ஒருமுறை உண்டவர்கள் அடுத்த முறையும் இவர்களைத் தேடி வந்து உண்கிறார்களாம்!
எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத மலை மேல், உணவுக்குத் தேவையான பொருட்களைக் கஷ்டப்பட்டு சேகரித்து, அன்பர்களது பசி தீர இப்படியரு அறுசுவையுடன் கூடிய உணவை வழங்கி வரும், 'சதுரகிரி சந்தன மகாலிங்க பக்த ஜன கமிட்டி'யினரின் சேவையை மனமாரப் பாராட்டி, இவர்களது பணி சிறக்க வாழ்த்துவோம்.
பதினெட்டு சித்தர்களுக்கு என்று பிரத்தியேகமாக அமைந்த சந்நிதி, சந்தன மகாதேவிக்கென உருவத்துடன் அமைந்த தனிச் சந்நிதி, எந்நேரமும் அக்னியின் கண கணப்புடன் விளங்கும் சட்டநாதர் குகை முதலானவை சந்தன மகாலிங்க ஆலயத்தின் சிறப்புகள். இங்கு தினமும் அதிகாலை மூன்று மணிக்கே முதல் கால பூஜை துவங்கி விடும். மணியோசை முழங்க, சங்கு ஊதி நடக்கும் அந்த அதிகாலை பூஜை, அத்தனை பிரமாதமாக இருக்கும்! மாலையில் ஒரு கால வேளை பூஜைக்கும், பிரதோஷ கால பூஜைக்கும் நிரந்தர கட்டளைதாரர்கள் இங்கு தேவைப்படுகிறார்களாம்.
'சதுரகிரி யாத்திரை'யை ஓரிரு இதழ்களில் முடித்து விடலாம் என்பதாகத்தான் பயணம் துவங்கியது. ஆனால், அங்கு சென்று பார்த்த பிறகுதான்... இது, ஓரிரு இதழ்களில் முடிக்கக் கூடிய விஷயம் அல்ல என்பதும், எத்தனை மகான்கள் ஆராதித்த மலை இது என்பதும் புரிந்தது. வெவ்வேறு ரூபங்களில் சித்த புருஷர்கள் இன்றைக்கும் இங்கே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பல வேளைகளில், சித்தர் கள் மாயாஜாலம் காட்டி, வண்ணக் கோலம் காட்டி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்கள்.
வழி தவறிப் போன எத்தனையோ பக்தர் களையும், இரவு நேரத்தில் தகுந்த துணை இல்லாமல் ஏதோ ஒரு தைரியத்தில் புறப்பட்டு வந்த பக்தகோடிகளையும் சில பைரவர்கள் துணைக்கு வந்து, அவர்களை மலைக்கு மேல் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றன. பயணத்தின்போது பக்தர்களுக்கு நேரும் இன்னல்க ளையும் இடையூறுகளையும் இறைவனே தோன்றி, அகற்றி வருகிறான் என்பதை பலரது அனுபவங்கள் மூலம் அறிந்தபோது மெய் சிலிர்த்தது!
சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இந்த சதுரகிரியை 1950-களிலேயே அரசாங்கத்துக்குக் கொடுத்து விட்டனர் சாப்டூர் ஜமீன்தார் பரம்பரையினர். எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல், அவர்கள் கொடுத்த காரணத் தால்தான் இன்று நாம் அந்த வனத்துக்குச் சென்று மகாலிங்கத்தை வணங்கி வர முடிகிறது. ''அரசாங்கத்துக்கு இந்த வனத்தை வழங்கியபோது அதில் தேக்கு, சந்தனம் உட்பட பலன் தரும் பல மரங்கள் விளைந்திருந்தன. ஜமீன் குடும்பத்தினர் நினைத்திருந்தால், அந்த மரங்களை வெட்டித் தங்களது பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டுகூட மலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க முடியும். ஆனால், இந்த வனத்தில் இருந்து ஒரு இலையைக் கூடக் கிள்ளிக் கொள்ளாமல் அப்படியே ஒப்படைத்தார்கள். இந்த மனம் யாருக்கு வரும்?
அன்று சதுரகிரியை அரசாங்கத்திடம் ஒப்படைத்த ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவ ரும் தற்போதைய ராஜாவுமான சதுரகிரி நாகய்ய சாமி காமய நாயக்கர் என்கிற பெரியராஜா இன்றும் சதுரகிரியின் தீவிர பக்தர். சந்தன மகா லிங்கத்துக்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் இவர் குடும்பத்தினரது அபிஷேகம் மாலையில் நடந்து வருகிறது. எந்த வித படாடோபமும் இல்லாமல், காலில் செருப்பு இல்லாமல், காவி உடையுடன் ஒரு சாதாரண பக்தர் போல் இவர் இன்றைக்கும் மலைக்கு வருகிறார். கிடைக்கிற இடத்தில் சாவதானமாக அமர்ந்து, சந்தன மகாலிங்கத்தின் அபிஷேகக் காட்சிகளை சாப்டூர் பெரியராஜா தரிசிப்பார். 'இந்த மலையில் ஒரு இலை, கிளை கூட வெட்டாமல் வனத்துறைக்கு ஒப்படைத்தோம். ஆனால், வந்து செல்லும் சில ஆர்வக்கோளாறான பக்தர்கள் சில இலைகளையும், கிளைகளையும் பிடுங்கிக் கொண்டு மலையின் மகத்துவத்தைக் குறைக்கிறார்களே' என்று சில நேரங்களில் இவர் வேதனைப்படுவார்'' என்றார் 'சதுரகிரி சந்தன மகாலிங்க பக்த ஜன கமிட்டி' உறுப்பினர் ஒருவர்.
1950-களில் இருந்தே சதுரகிரிக்குத் தொடர்ந்து வந்து செல்லும் அன்பர்கள் இன்றைக் கும் இருக்கிறார்கள். இந்த மலைக்கு ஒரு முறை வந்து சென்றால், மறுமுறை எப்போது செல்வோம் என்கிற ஏக்கத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தி விடும். 'பயணம் சிரமமாக இருக்குமோ?' என்கிற கவலையுடன் சென்றால், யாத்திரை சிரமமாக இருக்கும். 'நம்மால் முடியாதது இல்லை. தாராளமாகச் செல்லலாம்' என்கிற தன்னம்பிக்கையுடன் சென்றால், சதுரகிரி, ஒரு சாதாகிரிதான். இதற்கு சாட்சியாக, இன்றைக்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
கால் ஊனமானவர்கள், இதய நோய் மற்றும் அதிக அளவு சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்று பலதரப் பட்டவர்களும், சதுரகிரி யாத்திரையை ஒரு சவாலாக நினைக்காமல், வெகு இயல்பாக வந்து திரும்பிச் செல்வது, அந்த மகாலிங்கத்தின் கருணையே அன்றி வேறு ஒன்றும் இல்லை.
சதுரகிரிக்கு வந்து செல்லும் அன்பர்கள், வந்து சென்ற மாத்திரத்திலேயே தங்களுக்கு எல்லா நலன்களும் கிடைத்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எவற்றை எல்லாம் நாம் தரிசிக்க வேண்டும் என்று அந்த இறைவன் விருப்பப்படுகிறானோ, அவை மட்டும்தான் நமக்குக் காணக் கிடைக்கும். எவை எல்லாம் நமக்கு அருள வேண்டும் என்று தீர்மானிக்கிறானோ, அவை மட்டும்தான் நமக்குக் கிடைக்கும். இந்த மனப் பக்குவத்துக்கு பக்தர்கள் தயாராக வேண்டும்.
மலைக்கு மேல் இன்னும் ஏறிப் போனால் நூற்றுக் கணக்கான குகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தக் குகைகள் இருக்கும் பகுதிகளில் மனிதர்கள் பிரவேசிக்கக் கூடாது. சித்தர்கள் அடிக்கடி ஒன்று கூடி 'சத் சங்கக் கூட்ட'த்தை நடத்தி வருகிறார்களாம். குகைக்குள் பெரிய பெரிய பாம்புகள் வடிவில் சில சித்தர்கள் வசித்து வருகிறார்கள். இன்னும் சிலர், கரடிகள் வடிவில் இருந்து வருகிறார்கள். தவசிகள் இடமான (தவசி) குகை, காலாங்கிநாதர் குகை, போகர் குகை, ராமதேவர் குகை உள்ளிட்ட பல குகைகளும் பெரிய மகாலிங்கம், வெள்ளைப் பிள்ளையார், கன்னிமார் தெய்வங்கள், தேவி- பூதேவி சமேத பெருமாள் என்று எண்ணற்ற தெய்வங்களும் மலைக்கு மேல் இருக்கின்றன.
இந்த சதுரகிரி முழுதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முறையான அனுமதி இல்லாமல் நாம் பிரவேசிப்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும். தவிர, இது போன்ற காடுகளின் தன்மை தெரியாமல் அதனுள் பயணிக்க நேரும்போது எதிர்கொள்ளும் ஆபத்துகளும் அதிகம். விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்; விஷச் செடிகளின் ஸ்பரிசத்துக்கு உள்ளாகி, உடல் பாதிப்புக்குள்ளாகலாம்; பாதை மாறிப் போய் எங்காவது சிக்கிக்கொள்ள நேரலாம். எனவே, பக்தர்களாகிய நாம் எதற்காக சதுரகிரிக்குச் செல்கிறோமோ, அது பூர்த்தி ஆனதும் தரிசித்தமைக்கு நன்றி கூறிவிட்டுக் கீழே இறங்கி விட வேண்டும். 'அதைப் பார்க்கப் போகிறேன்... இதைப் பார்க்கப் போகிறேன்' என்றெல்லாம் ஆர்வ மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டு, அனுமதி இல்லாத இடங்களுக்குள் பிரவேசித்து அல்லல்களைத் தேடக்கூடாது.
சதுரகிரி பற்றிய அதிசயங்களும் அற்புதங்களும் இந்த 25 அத்தியாயங்களோடு முடிந்து விடவில்லை. அந்த மூலிகை வனத்துள் இன்னும் ஏராளமான விஷயங்கள் புதைந்துள்ளன. சதுரகிரி பற்றி இதுவரை இதழ்களில் வெளி வந்துள்ளவை, வெறும் ஒரு சதவிகிதம்தான். மீதி, தொண்ணூற்றொம்பது சதவிகித விஷயங்கள் வெளிவர வேண்டிய நேரம் தெரியாமல் இருக்கின்றன!
சதுரகிரி பற்றிய தொடரை எழுத முற்படும்போது, 'சித்தரைப் பத்தியெல்லாம் பத்திரிகையில எழுதக் கூடாது. இங்க இருக்கிற விஷயங்களெல்லாம் ரொம்ப நாளா பலராலும் காப்பாத்தி வரப்படுகிற ரகசியங்கள். பலரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை பட்டவர்த்தனமா வெளிப்படுத்தக் கூடாது. இந்த முயற்சி வேண்டாம்!' என்று சதுரகிரியோடு பெருமளவில் தொடர்புடைய சில பெருமக்கள், அன்போடும் எச்சரிக்கை யுடனும் சொன்னார்கள்.
அவர்களது அந்த வார்த்தைகளைக் கேட்டபோது, முதலில் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், இதழில் தொடர் வெளி வந்து கொண்டிருக்கும் காலத்தி லேயே, நம்மை அன்போடு எச்சரித்த அந்தப் பெருமக்கள், 'எந்த இலக்கை நோக்கித் தொடர் செல்ல வேண்டுமோ, அதை நோக்கித் தெளிவாகப் போய்க் கொண்டிருக்கிறது. தொடரட்டும்' என்று சந்தோஷமாகச் சொன்னார்கள். அதை சதுரகிரியில் காலம் காலமாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்த புருஷர்களின் ஆசியாகவே எண்ணி, எழுத்துப் பணி இடையூறு இல்லாமல் இனிதாகத் தொடர்ந்தது.
சதுரகிரியில் இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அங்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்பும், தகவல்கள் நமக்கு வந்து சேர வேண்டிய வேளையும் வரும் போது மகாலிங்கமே நம்மை அழைப்பார். அந்த வேளையில், 'சதுரகிரி யாத்திரை' தொடரின் இரண்டாம் பாகம் ஒரு வேளை தொடங்கலாம். மகாலிங்கத்தின் லீலைகளையும் மகத்துவத்தையும் யார் அறிவார்?
அகில உலகத்தில் உள்ள அனைத்து மெய்யன்பர் களையும் பக்தகோடிகளையும் பிலாவடி கருப்பர், ரெட்டை மகாலிங்கம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய தெய்வங்கள் ஆசிர்வதித்து அருள் புரியட்டும். அனைத்து வளங்களும் இறை பக்தர்களின் வாழ்வில் பெருகட்டும்.
சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!
சந்தன மகாலிங்கத்துக்கு அரோஹரா!
(நிறைவுற்றது)

No comments:

Post a Comment