''பெங்களூர் ஸ்வாமிகள் முதன் முதலாக சதுரகிரிக்கு வரும்போது, சாப்டூர் பாதை வழியாகத்தான் ஏறினார்'' என்றார் சாப்டூரைச் சேர்ந்த ஆன்மிக அன்பர் ஒருவர். மகான்கள் வந்த வழியை விட, வந்த நோக்கம்தான் முக்கியம். பெங்களூர் ஸ்வாமிகள் என்ன நினைத்து சதுரகிரிக்கு வந்தாரோ தெரியவில்லை.... ஆனால், அவரை இங்கேயே சில காலம் தங்க வைத்தது, மகாலிங்கத்தின் செயல் என்றுதான் கூற வேண்டும்.
பெங்களூர் ஸ்வாமிகள், சந்தன மகாலிங்கம் சந்நிதிக்குக் கீழே சின்னதாக ஒரு கூரையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார். தியானம் செய்வார். மலைக்கு வரும் அன்பர்கள் அனைவரிடமும் சதுர கிரியின் சிறப்பு பற்றி ஏதாவது தெரியுமா என்று விசாரிப்பார். எத்தனை வருடங்களாக அந்த அன்பர் இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்கிற தகவலையும் சுவாரஸ்யமாகக் கேட்டு அறிந்து கொள்வார்.
ஒரு சில தினங்கள் சந்தன மகாலிங்கம் சந்நிதி யில் தங்கி இருந்த பின், மலையை விட்டுக் கீழே இறங்கிச் செல்ல முடிவெடுத்து விட்டார் பெங்களூர் ஸ்வாமிகள். ஆனால், அவர் மலையை விட்டுக் கீழே இறங்கிச் செல்வதை, சந்தன மகாலிங்கத்தின் மேல் அன்பு கொண்ட பக்தர்கள் விரும்பவில்லை. தொடர்ந்து அவர் இங்கேயே தங்கி, சந்தன மகாலிங்கம் சந்நிதியில் ஆன்மிகப் பணி ஆற்ற வேண்டும் என்று பல அன்பர்கள் அவரிடம் வேண்டுகோள் வைத்தனர். இதை பெங்களூர் ஸ்வாமிகள் ஏற்கவில்லை. 'எனக்கான பணி இதுவல்ல...' என்று சொல்லி, நிராகரித்து விட்டார்.
திட்டங்கள் போடுவது மட்டும் நமது வேலை. ஆனால், அது நிறைவேறுவது நம் கையில் இல்லை. மகேசன் கையில்தான் உள்ளது. அனைத்தும் உணர்ந்த பெங்களூர் ஸ்வாமிகள் இதை மட்டும் மறந்து விட்டார் போலும்!
மலையை விட்டுக் கீழே இறங்கிச் செல்லும் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால், சந்தன மகாலிங்கத்தின் முடிவு வேறு விதமாக இருந்தது. இவரை வைத்துதான் தனது ஆலயத் திருப்பணிகள் துவங்க வேண்டும் என்று அவர் முன்கூட்டியே தீர்மானித்திருந்தார் போலும். எனவே, இந்த மலையின் அற்புதத்தை பெங்களூர் ஸ்வாமிகளுக்கு உணர்த்த விரும்பினார். ஏதேனும் ஓர் அற்புதத்தை நிகழ்த்தி, அவரை இங்கேயே தங்க வைக்க வேண்டும் என்பது சந்தன மகாலிங்கத்தின் எண்ணமாக இருக்கலாம்!
ஓர் அமாவாசை தினத்தன்று நள்ளிரவு நேரம்... சற்று முன் சந்தன மகாலிங்கத் திருமேனிக்கு நடந்து முடிந்த அபிஷேக திரவியங்களின் நறுமணம், அந்த ஆலயப் பகுதி முழுவதையும் கமகமவென்று நிறைத்திருந்தது.
சந்தன மகாலிங்கத்துக்கு உண்டான தனது வழிபாடுகளை எல்லாம் முடித்துக் கொண்டு கால தாமதமாக மெள்ளக் கண்ணயர்ந்தார் பெங்களூர் ஸ்வாமிகள். அசதியின் காரணமாகப் படுத்ததும் உறங்கி விட்டார்.
அப்போது, அங்கே அந்த அதிசயம் நடந்தது. யதேச்சையாக சட்டென்று கண் விழித்தார் பெங்களூர் ஸ்வாமிகள். சற்று முன் கண்ணயர்ந்த தனக்கு அதற்குள் ஏன் விழிப்பு வந்தது என்பது புரியாமல் திகைத்தார்.
ஒட்டுமொத்த மலைப் பிரதேசமே பெரும் அமைதியில் இருந்தது. அமாவாசை தினம் என்பதால் எங்கும் கரும் இருள் சூழ்ந்திருந்தது. இருட்டில் தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்தார். ஏதோ காட்டுப் பறவைகள் 'ஊ ஊ' என உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. மெலிதான காற்றில் மரங்கள் 'விஸ்ஸ்ஸ்' என்ற சத்தத்துடன் மெள்ள அசைந்து கொண்டிருந்தன.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டுப் படுக்கப் போக யத்தனித்த பெங்களூர் ஸ்வாமிகள் ஒரு கணம் துணுக்குற்றார். அவரது பார்வை தவசி குகைப் பக்கம் நிலை குத்தி நின்றது (சுந்தர மகாலிங்கம் ஆலயத்தின் மேல் உள்ள பகுதிதான் தவசி குகை. சித்த புருஷர்களின் சத் சங்கக் கூட்டம் இந்தக் குகையில்தான் கூடுவதாக முன்பு எழுதி இருந்தோம். இங்கு பக்தர்கள் சென்று திரும்புவது என்பது, சித்தர்களின் பணிகளுக்கு இடையூறு தரலாம் என்பதை அன்பர்கள் நினைவில் கொள்ள வேண்டும்).
எங்கும் கும்மிருட்டாக இருந்த நேரத்தில் தவசி குகை பகுதியில் மட்டும் ஒரு வெளிச்சப் பந்து மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு கால்பந்து அளவுக்கு இருந்த அந்த வெளிச்சம், தவசி குகையில் இருந்து மெள்ள வானில் தவழ்ந்து, பெங்களூர் ஸ்வாமிகளுக்கு மேலே நகர்ந்து, சந்தன மகாலிங்கம் திருச்சந்நிதியை அடைந்தது. ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு, வந்த வழியே அதே வேகத்தில் திரும்பி தவசி குகையை அடைந்தது.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்த்த பெங்களூர் ஸ்வாமிகள் பிரமித்துப் போய் விட்டார். இத்தகைய ஒரு குறிப்பால், இறைவன் தனக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதையும் அடுத்தடுத்த நாட்களில் அவர் உணர்ந்தார்.
பெங்களூர் ஸ்வாமிகள் சதுரகிரிக்கு வந்தபோது, இங்கு சந்தன மகாலிங்கத்துக்கு மட்டும் சந்நிதி இருந்தது. பிற பரிவார தேவதைகளின் சந்நிதிகள் அவ்வளவாகக் கிடையாது. அவரது முன் முயற்சியாலும் இன்னும் சில அன்பர்களின் ஒத்துழைப்பாலும்தான் இன்றைக்கு நாம் காண்கிற அளவுக்கு சந்தன மகாலிங்கம் திருக்கோயில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு கட்டத்தில், இறை அனுக்கிரஹம் மிக்க பெங்களூர் ஸ்வாமிகள் சதுரகிரியை விட்டுச் செல்ல வேண்டிய ஒரு கட்டா யம் பின்னாளில் உருவானது. இன்று அவர் சதுரகிரியில் இல்லை. என்றாலும், அவர் வகுத்துக் கொடுத்த சில நடைமுறைகள், திட்டங்கள் போன்ற அனைத்தும் அங்கே திறமையாக செயலாக்கம் பெற்று வருகின்றன.
பெங்களூர் ஸ்வாமிகள் மலையை விட்டு இறங்கிய பின் (தற்போது இவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை) சில வருடங்கள் கழித்து, மெட்ராஸ் ஸ்வாமிகள் என்பவர் சந்தன மகா லிங்கம் திருக்கோயில் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.
''எத்தனையோ இன்னல்களைத் தாண்டி, சதுரகிரிக்கு வரும் சேவார்த்திகள் அனைவரும் நல்ல முறையில் உபசரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இங்கே முறையாகச் செய்து தரப்பட வேண்டும் என்பதற் காகப் பாடுபட்டு வருகிறோம். பொதுவாக கீழ்க் கோயிலுக்கு (சுந்தர மகாலிங்கம்) வருபவர்கள் மேல் கோயிலுக்கு (சந்தன மகாலிங்கம்) அவ்வளவாக வருவதில்லை. சட்டநாதர் வசித்து தவம் செய்து வந்த குகையுடன் கூடிய இந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் வந்து தரிசிக்க வேண்டும். குறையே இல்லாமல் அன்னதானம் செய்து வருகிறோம். தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலை, அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தி வருகிறோம்'' என்றார்.
உள்ளன்போடு தன்னை வணங்கும் பக்தர் களுக்கு எப்படியாவது காட்சி கொடுத்து விடுவார் சந்தன மகாலிங்கம். அபரிமிதமான அன்பு வைத்திருக்கும் பக்தர்களின் உள்ளம் வருத்தம் அடைவதற்கு அந்த இறைவன் விரும்ப மாட்டார். இதுபோன்ற எத்தனையோ சம்பவங்களை ஸ்ரீ சந்தன மகாலிங்கம் நிகழ்த்தி இருக்கிறார்.
இப்படித்தான் ஒரு முறை, இறை அனுபவத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை சென்னை அன்பர் ஒருவருக்கு அருளினார்
ஸ்ரீ சந்தன மகாலிங்கம்.
சந்தன மகாலிங்கம் சந்நிதி அருகே ஆடி அமாவாசை அன்று, 'மகேஸ்வர பூஜை' விமரிசையாக நடைபெறும். அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதை மகேஸ்வர பூஜை என்பர். அதாவது மகேசனுக்கு செய்யும் பூஜை. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கும்போது இந்த அன்னதானம் ஆரம்பமாகும். முதலில், சாதுகளுக்கு சாப்பாடு போடுவார்கள். முதல் பந்தியில் அவர்கள் சாப்பிட்டு எழுந்த பின் பக்தர்களுக்கு அன்னமிடத் துவங்கு வார்கள். சாதம், குழம்பு, ரசம், மோர், பொரியல், கூட்டு என்று முழு வகையான சாப்பாடாக இது இருக்கும். இறைவனே அடியார் ரூபத்தில் வந்து இதில் கலந்து கொள்வார் என்பது நம்பிக்கை.
பல வருடங்களுக்குமுன் ஆனைமலை ஸ்வாமி கள் என்பவர் இந்த மகேஸ்வர பூஜையை நடத்தி வந்தார். ஒரு காலத்துக்குப் பிறகு அவரைத் தொடர்ந்து இந்தப் பணியை நிறைவேற்றி வருபவர் வ.புதுப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதாம்பாள் என்பவர்.
அவர் நம்மிடம் சொல்லும்போது, ''மகேஸ்வர பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட் களையும் கீழே இருந்து கொண்டு வந்து விடுவோம். சமையல் வேலைகளுக்கு கூலிக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. காய்கறி வெட்டுவது, சமைப்பது, பரிமாறுவது, இலை எடுப்பது, பாத்திரம் துலக்குவது என்று அனைத்து பணிகளையுமே எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் சேர்ந்து செய்து விடுவோம். வடை- பாயசத்தோடு சாப்பாடு நடை பெறும். கடைசிப் பந்தியில்தான் நாங்கள் சாப்பிடு வோம். கடந்த 37 வருடங்களாக இந்த மகேஸ்வர பூஜையை நடத்தி வருகிறோம். இதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்.
மகேஸ்வர பூஜையில் சாப்பிடணும்னு பசியோட வர்றவங்களுக்கு சலிப்போட சாப்பாடு போட்டா, அனைத்து வகைப் பதார்த்தங்களும் தீர்ந்து கொண்டே இருக்கும். இதுமாதிரி சூழ்நிலையில், அடுத்தடுத்து ஆட்களை வைத்துச் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கும். அதே நேரம், வர்றவங்ககிட்டே முகம் சுளிக்காம சந்தோஷத்தோட பார்த்துப் பார்த்துச் சாப்பாடு பரிமாறினா எடுத்துப் போடற பாத்திரத்துல பதார்த்தம் வளர்ந்துகிட்டே இருக்கும். அட்சய பாத்திரம் மாதிரி சீக்கிரம் தீரவே தீராது. பத்து பேர் சாப்பிடற சாப்பாட்டை நாப்பது பேருக்குப் பரிமாறின அனுபவமும் எங்களுக்கு உண்டு. இதை நாங்க அடிக்கடி உணர்ந்திருக்கோம்.
ஒரு முறை, கிருஷ்ணன் குட்டி என்பவர் பூசாரியா இருந்தப்ப... அன்னதானம் போட குவித்து வைக்கப் பட்டிருந்த சாதத்துக்கு பூஜை போட்டு விட்டு, அந்த அன்னத்தின் மேல் காலடித் தடங்கள் இருப்பதை எனக்குக் காண்பித்தார். கூடவே, 'இதை வெளியே சொல்லாதே' என்றார். அதைப் பார்த்தபோது எனக்குச் சிலிர்த்து விட்டது. உண்மையான பக்தியோடு மகேஸ்வர பூஜையைச் செய்தால், அந்த மகாலிங்கமே வந்து இதை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?'' என்றார் நம்மிடம் நெகிழ்ச்சியாக.
விஷயத்துக்கு வருவோம். கடந்த 2003-ஆம் வருடம் ஆடி அமாவாசை தினத்தன்று நடந்த மகேஸ்வர பூஜையின்போது, இறைவனான சந்தன மகாலிங்கமே வந்து உணவு சாப்பிட்டுச் சென்றிருக் கிறாராம். சுவாரஸ்யமான அந்த அனுபவத்தை சாப்டூர் அன்பர் சொல்லக் கேட்போம்.
''சென்னையைச் சேர்ந்த அண்ணாமலை என்கிற அன்பர், மகேஸ்வர பூஜைக்குப் பொறுப்பாக உள்ளே இருந்தார். சுடச் சுட உணவு தயாரிக்கப்பட்டு, மிகப் பெரிய வெள்ளைத் துணியின் மேல் மலை போல் சாதம் குவிக்கப்பட்டிருந்தது.
தவிர, இதர பதார்த்தங்களான குழம்பு, ரசம் போன்ற அனைத்தையும் பாத்திரங்களில் கொட்டி வைத்திருந்தனர். இலை போடப்பட்டு அடியார்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
சாதாரணமாக உணவு எல்லாம் தயாரான பின், சந்தன மகாலிங்கத்தின் கோயிலில் இருந்து பூசாரி இங்கு வந்து உணவுப் பொருட்களின் மேல் தீர்த்தம் தெளித்து கற்பூரம் காட்டுவார். இந்த வழிபாடு முடிந்த பின் அடியார்களுக்கு அன்னமிடத் துவங்கு வார்கள்.
சுமார் நூறு பேர் இருப்பார்கள். அடியார்கள் குடிப்பதற்குத் தண்ணீர் வைக்கப்பட்டு, உணவெல் லாம் இலையில் பரிமாறி முடித்த பின் சிவநாமம் கோஷம் எழுப்பி, துதித்த பின் அனைவரும் உண்ண ஆரம்பித்தனர். அப்போதுதான் அங்கிருந்த ராம்குமார் என்கிற தன் நண்பரைப் பார்த்து, 'இன்னிக்கு இங்கே இப்ப சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறவர்களில் சந்தன மகாலிங்கமும் ஒருவர்' என்றார் அண்ணாமலை. 'என்னது... சந்தன மகாலிங்கம் இங்கே சாப்பிட வந்திருக்கிறாரா?' என்று வியந்து போன ராம்குமார், தன்னிடம் இருந்த மினி விடியோ கேமராவில் அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனை வரையும் பதிவு செய்தார். இவர் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சில சாதுக்கள் இவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தனர்.
அதன் பொருள் ராம்குமாருக்குப் பின்னால்தான் தெரிய வந்தது''
|
Wednesday, 20 September 2017
சதுரகிரி யாத்திரை! - 23
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment