லிங்கோத்பவர் |
தொடர்ச்சி...
திருஞானசம்பந்தர் தனது பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடலில், 'அரிஅயன் தேட நின்ற பெருமான்' என்று போற்றுகிறார். தத்தம் பாடல்களில்... சுந்தரர்- 35 இடங்களிலும்; அப்பர் பெருமான் 125 இடங்களிலும் லிங்கபுராண குறுந்தொகை என்ற பதிகத்திலும் இந்தத் திருவடிவம் குறித்துப் போற்றுகின்றனர்.
உமாமகேஸ்வர விரதத்தின்போது ஸ்ரீஉமாமகேஸ்வரரையும், மார்கழி- திருவாதி ரையின்போது ஸ்ரீநடராஜரையும், திரிசூல விரதத்தின்போது ஸ்ரீஅஸ்திர தேவரையும் வழிபடுவர்.
சிவராத்திரியின் போது, மூன்றாவது காலத்தில் லிங்கோற்பவ மூர்த்தியை வழிபட வேண்டும்.
சிவராத்திரியின் 3-ஆம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பர். இந்த வேளையில், லிங்கோத்பவ மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய் வித்து, கம்பளி ஆடை அணிவித்து, எள் என்னம் நிவேதித்து வழிபட வேண்டும் என்றொரு விதிமுறை உண்டு.
சிவபூஜா விதியின்படி... தேன் மற்றும் கஸ்தூரி சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். வெள்ளை ஆடை, மாணிக்க ஆபரணம், செங்கழுநீர் மலர் மாலை அணிவிக்க வேண்டும்.
கோதுமை அட்சதை, முள்கிளுவை பத்திரத்தால் அர்ச்சிக்க வேண்டும். எள் அன்னம் மற்றும் மாதுளம்பழம் நைவேத்தியம் செய்து பஞ்சமுக தீபத்துடன், சாமவேதம் ஓதி வழிபட வேண்டும் என்பர்.
பிரம்மனும் திருமாலும் அடி முடி தேட... சிவபெருமான் ஜோதி வடிவாக நின்ற இடம் திருவண்ணாமலை. இதை விளக்கவே மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப் படுவதாக அருணாசல புராணம் கூறுகிறது.
திருவண்ணாமலை- ஸ்ரீஅண்ணாமலையார் கோயிலில், 2-ஆம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில், கிழக்கு நோக்கி அமைந்துள்ள சந்நிதியில் 'அடி முடிகாணாத ஆலயம்' உள்ளது.
இதன் உள்ளே சிவ பெருமானும் அம்பிகையும் எழுந்தருளியிருக்க... அவர்களின் பின்புறம் ரிஷப வாகனமும், மேற்புறத்தில் தீபச் சுடரும் காட்டப்பட்டுள்ளன. மலையின் உச்சியைக் காண முயற்சிப்பது போல் அன்னமும், பீடத்தில்- வராஹ வடிவமும் உள்ளன.
இதேபோன்ற ஒரு வடிவம்... இந்த ஊரில் ஈசான மடத்தில் அருகில், மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஓர் ஆலயத்திலும் உள்ளது. இந்தத் திருவடிவில் அம்பிகை, 'மோக்ஷப்ரதாயினி' என்று அழைக்கப் பெறுகிறாள்.
காஞ்சிபுரம்- ஸ்ரீகயிலாயநாதர் ஆலயத்தில், எட்டு தோள்களுடன் கூடிய (பல்லவர் காலத்தைச் சார்ந்த) லிங்கோத்பவரை தரிசிக்கலாம்.
வேளச்சேரி- ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயத்தில், மானும் மழுவும் இடம் மாறி அமைந்திருக்கும் லிங்கோத்பவ மூர்த்தியைக் காணலாம்.
குன்றக்குடி மலைக்கொழுந்தீஸ் வரர் குகைக் கோயிலில், கிழக்குப் புறம் லிங்கோத்பவர் வடிவம் உள்ளது. இவரின் வலப் புறம்- பிரம் மனும்; இடப் புறம்- விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர்.
சுசீந்தரம்- ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலில், முழுமையான லிங்கோத்பவர் திருமேனி உள்ளது. இரு புறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூரில் உள்ள ஸ்ரீபால்வண்ணநாதர் ஆலயத்தில், பஞ்சலோகத்திலான லிங்கோத்பவ மூர்த்தம் உள்ளது.
தஞ்சை- பெரியகோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில்... முதலாம் ராஜராஜனின் தேவியரில் ஒருத்தி யான அபிமானவல்லி, லிங்க புராணத் தேவர் திருமேனியை எழுந்தருளச் செய்து, இந்த மூர்த்திக்கு அணி கலன்களும் அளித்த செய்தி காணப் படுகிறது.
அருப்புக்கோட்டை ஸ்ரீசுந்த ரேஸ்வரர் ஆலயத்திலும் இந்த வடிவத்தை எழுந்தருளிவித்ததாகக் கல்வெட்டு பேசுகிறது.
தவிர... திருமயம், குடிமல்லூர், பிள்ளையார்பட்டி, அரிசிற்கரை புத்தூர், திருச்செங்காட்டங்குடி, நாகப்பட்டினம், கூவம் மற்றும் கூளம்
பந்தல் ஆகிய தலங்களில் உள்ள லிங்கோத்பவ வடிவங்களும் அற்புத மானவை.
ஆந்திர மாநிலம், நளகொண்டா வட்டம், பனகல் ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயத்தில், சிவலிங்கத் திருவடிவை பிரம்மனும் விஷ்ணுவும் வழிபடுவது போன்ற திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
சிவபெருமானின் ஜடாமுடி என்பது சடைக்காடு; காடாக உருவகம் செய்யப் படுகிறது. அதில் காட்டுப் பூவான கொன்றை மலர், மண்டை ஓடு மற்றும் நச்சுப் பாம்பு ஆகியன உள்ளன. இறை வனின் திருவடியோ தாமரை மலர் போன்றது.
அடி-முடி தேடிய கதையில்... தாமரையை நாட வேண்டிய அன்னப்பறவை, ஜடாமுடியாகிய காட்டைத் தேடி ஓடியது. காட்டில் வாழவேண்டிய வராஹமோ, திருவடியாகிய தாமரை மலரைத் தேடிச் சென்றது!
இப்படி, இயற்கைக்கு மாறான வடிவத்துடனும் குணத்துடனும் செயலாற்றியதால், வெற்றிபெற முடியவில்லை. இயற்கைக்கு மாறான ஒரு செயல் சோர்வையும், தோல்வியையும் தரும் என்பதே அடிமுடி தேடிய வரலாற்றின் தத்துவம்.
லிங்கோத்பவ மூர்த்தியை வழிபட்டால், எல்லாத் தீங்குகளும் விலகும்.
எல்லோருக்கும் எல்லா நலன்களும் விளையும். நீண்ட ஆயுளையும், பெரும் புண்ணியத்தை யும் மறுமையில் பேரானந்தப் பெரு வாழ்வையும் பெறலாம்!
|
No comments:
Post a Comment