வேற்றூரைச் சேர்ந்த அந்தத் தம்பதி, சொக்கேசனைத் தரிசிக்க மதுரையம்பதிக்கு வந்திருந்தனர். சமுதாய வழக்கப்படி, கொடிமரம் கடந்து உள்ளே செல்லமாட்டார்கள். ஆனால் முந்தைய நாள் இரவில்... மதுரை நகரின் திருத்தொண்டர்கள் அனைவருக்கும் கனவில் காட்சி தந்த சொக்கர், வந்திருக்கும் தம்பதியை கருவறை- அர்த்த மண்டபத்துக்கு அழைத்து வரச் சொல்லியிருந்தார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், திருஞானசம்பந்தப் பெருமானுடைய அணுக்கத் தொண்டருமானவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருடைய மனைவியாரும் இசை வித்தகமும் நுட்பமும் தெரிந்தவர். 'மதங்கர்’ என்பது இசைவாணர்களைக் குறிக்கும் சொல். மதங்கர் குலத்து முதல்வியாக விளங்கினார் அந்த அம்மையார். அதனால்தானோ என்னவோ, அவருக்கு மதங்க சூளாமணி (இசைக் குடும்பத்துத் தலையாய முதல்வி) எனும் பெயர் வழங்கப்பட்டது. மதுரை சொக்கேசன் நிகழ்த்திய திருவிளையாடலை, சேக்கிழார் போற்றிப் பாடியுள்ளார்.
தேவார இசையே, தென்னிந்திய சாஸ்திரிய இசைக்கான ஆதாரம் அமைத்தது எனலாம். தேவாரப் பாடல்களின் பண் முறையும் யாப்பு முறையும், தென்னிந்திய இசை மரபின் ராக மெட்டுக்களை அமைப்பதற்கும் உருப்படித் தன்மையை நிர்ணயிப்பதற்கும் பெரும் பங்களித்துள்ளன. நியாயமான இதன் பெருமிதம் நமக்கு நிலைப்பதற்குக் காரணம், ஒரு பெண்! ஆமாம், அவளுடைய பெயர் 'வள்ளி’ என்றும் சொல்லப்படுகிறது.
வள்ளியா? யார் அவள்? எங்கிருக்கிறாள்?
இதைத் தெரிந்துகொள்வதற்கு, நாம் சுமார் 1350 வருடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் ஆகியோரின் சமகாலத்தவர் களாகச் சிவனடியார்கள் பலர் வாழ்ந்தனர். அவர்களில் சிலர், ஞானசம்பந்தருடனே சென்றனர். அத்தகையோரில் ஒருவரே, திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவரும் அவருடைய மனைவி மதங்க சூளாமணியும் சம்பந்தருடன் செல்வார்கள் (மதுரை சம்பவத் துக்குப் பிறகு, தம்பதியர் இருவரும் திருவாரூர் சென்று தரிசித்து, பற்பல தலங்கள் வணங்கி, சீர்காழிப் பதியடைந்து, சம்பந்தருடன் இணைந்தனர் என்கிறார் சேக்கிழார்).
சம்பந்தர் இயற்றும் தேவாரப் பாடல்களை, யாழில் இட்டுப் பண்ணமைத்து வாசிப்பார் யாழ்ப்பாணர். மதங்க சூளாமணி தேவியாரோ, அந்தப் பண்ணையும் மெட்டையும் மனனம் செய்து, சில காலத்துக்குப் பின்னர் மீண்டும் இசைத்து, அந்தப் பாடலை நிலைக்கச் செய்வார். அத்துடன் நிறுத்தியிருந்தால்கூடப் பெரிய பலன் கிடைத்திருக்காது. ஆனால் மதங்க சூளாமணி அம்மையார், மெட்டோடும் பண்ணமைப்போடும் தம் இல்லத்துப் பெண் களுக்கும் அந்தப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்திருந்தார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்துக்கு ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு களுக்குப் பிறகு, சிதம்பரம் திருக்கோயில் நிலவறையில் இருந்த தேவாரப் பாடல் சுவடிகள், ராஜராஜசோழ மன்னரின் திறனால் மீட்டெடுக்கப்பட்டன. நம்பியாண்டார் நம்பி அவற்றைத் தொகுக்க முற்பட்டார். ஆயின், பண்ணடைவு கிட்டவில்லை.
நம்பியாண்டார் நம்பி வழிபட்ட பொல்லாப் பிள்ளையார் அருளால்... யாழ்ப்பாண நம்பியின் நல்வழித் தோன்றல், மதங்க சூளாமணியின் மரபுவழிச் செல்வமாய்ப் பண்ணிசைப்பாள் என்று தெரியவந்தது. அவளைத் தேடிவர, வள்ளி என்ற அந்தப் பெண்தான், பண்ணமைப்புகளையும் மெட்டிசையையும் தெரியப்படுத்தினாள்.
வள்ளிக்கும் மதங்க சூளாமணியாருக்கும் நீலகண்ட யாழ்ப்பாணருக்கும் தமிழகம் என்றென்றும் கடன்பட்டி ருக்கிறது என்பதில் ஐயமென்ன!
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமும், அவரும் மதங்க சூளாமணி அம்மையாரும் நெடுங்காலம் வாழ்ந்த பதியும், வள்ளியின் இசைப் பங்களிப்பு கிட்டிய இடமுமான எருக்கத்தம் புலியூருக்குச் செல்வோமா?
விருத்தாசலம்- ஜெயங் கொண்டம் பாதையில், விருத்தா சலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது எருக்கத்தம்புலியூர். தஞ்சாவூர்- சேத்தியாத்தோப்பு மார்க்கத்தில், ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ளது இந்த ஊர். எருக்கத்தம்புலியூர் என்றுதான் சம்பந்தர் பாடுகிறார். ஆனால், அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ராஜேந்திரப் பட்டணம் என்றால் உடனே சொல்வார்கள். ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன் பெயரால் அறியப்படும் ஊர். இந்தத் தலத்து இறைவனாரிடம் வேண்டிக்கொண்டுதான் ராஜேந்திரன் பிறந்ததாகவும், அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டது என்றும் தகவல் உண்டு.
தேவாரப் பண்கள் கிடைத்ததில் ராஜ ராஜ சோழ மன்னருக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்கவேண்டும்! (மதுரையை ஆண்ட மன்னன் பிள்ளையில்லாமல் பற்பல தலங்களுக்குச் சென்று, இங்கு வந்து பிள்ளைப்பேறு பெற்றான்; மகனுக்கு ராஜேந்திரன் எனப் பெயரிட்டான்; ஆகவே இப்பெயர் அமைந்தது என்றொரு பாடல் காணப்படுகிறது. மதுரை மன்னன் பாண்டியனாக இருக்கலாம்; பாண்டிநாடு வரை தன் ஆட்சியின்கீழ் கொண்டுவந்த ராஜராஜனாகவும் இருக்கலாம்.) இந்தப் பெயர் புரிகிறது, சரி. ஆனால் அதென்ன எருக்கத்தம்புலியூர்?
வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட தலங்கள் ஐந்து. ஐந்தும் புலியூர் என்றழைக்கப்படுகின்றன. பெரும்பற்றப் புலியூர் (சிதம்பரம்- தென்புலியூர்), திருப்பாதிரிப்புலியூர் (வட புலியூர்), ஓமாம்புலியூர், பெரும்புலியூர், எருக்கத்தம்புலியூர். இந்தப் பெயருக்கான இன்னொரு காரணமும் உண்டு. நைமிசாரண்ய முனிவர்கள் இந்தத் தலத்தின் மகிமையறிந்து, இங்கு மரங்களாக நின்று தவம் செய்தனர். வேட்டுவர்கள், மரங்களை வெட்டினார்கள். முனிவர்கள் செய்வதறியாது இறைவனை வேண்ட, யாரும் வெட்டாத வெள்ளெருக்குகளாக அவர்களை மாற்றினார், சிவனார். எருக்க மரங்களின் பதியானதால் எருக்கத்தம்புலியூர். இந்தத் தலத்தின் விருட்சம்- வெள்ளெருக்கு!
சிறிய ஊர். பிரதான சாலையிலிருந்து கோயில் கண்ணுக்குத் தெரிந்தாலும், சற்றே உள்ளே போகவேண்டும். பெரிய குளம்; நீலோற்பல தீர்த்தம்; ஸ்கந்த தீர்த்தம் என்றும் பெயருண்டு. குளக் கரையில் சின்னஞ்சிறு சந்நிதியில், திருநீலகண்ட யாழ்ப்பாணர். ஆஹா, என்ன அற்புதமான பிறவி இவருடையது!
குளத்திலிருந்து வந்தால், கொடிமரம்; நந்தி மண்டபம். அடுத்து மூன்று நிலை கிழக்கு ராஜகோபுரம். கோபுரத்தின் வெளியிலேயே சிறிய விநாயகர் சந்நிதி. கோபுரம் கடந்து உள்ளே சென்றால், விசாலமான மண்டபப் பகுதி. சபா மண்டபம். இந்த மண்டபத் திருப்பணிக்கு தருமை ஆதீனம் உதவியதாகக் கல்வெட்டு கூறுகிறது. மண்டபத்தின் ஊடாக நோக்கினால், நேர் எதிரே மூலவர் சந்நிதி. ஸ்வாமி சந்நிதிக்கு இணையாக, அதற்குத் தெற்காக கிழக்குப் பார்த்த அம்பாள் சந்நிதியும் தெரிகிறது. இரண்டையும் இணைத்தாற்போன்ற பெரிய பிராகாரம்.
இங்கிருந்தே, வலம் தொடங்குகிறோம். கோபுரத்தின் உள் பகுதியில் பெரிய மணி கட்டித் தொங்குகிறது. மணியடித்து நம்முடைய வணக்கத்தைத் தெரிவித்தபடியே நடக்கிறோம். வரிசையாக வாகனங்கள்; தெற்குச் சுற்றில் குறிப்பிடும்படி ஏதும் இல்லை. தென்மேற்கு மூலையில், ஸ்ரீகோடி விநாயகர். மூஞ்சுறு வாகனம் முன்னால் இருக்க, சந்நிதியில் இரண்டு பிள்ளையார்கள்.
அடுத்து, திருமுறைக் கோயில். சைவத் திருமுறைகளையே தெய்வ மாக வணங்குகிற முறையில் இந்தச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அதுவும், திருமுறைகளில் முதன்மை பெற்ற தேவாரப் பண்கள் மீளுரு பெற்ற தலமல்லவா; இங்கு இந்தச் சந்நிதிதானே விசேஷம்!
தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர்- ஸ்ரீவிசாலாக்ஷி. அடுத்த சந்நிதியும் சிறப்பானது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் வரிசையாக நிற்க, அவர்களின் அருகில்... அடடா, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மதங்க சூளாமணியும் நிற்கிறார்கள். அடுத்து சேக்கிழாரும் இருக்கிறார்.
அதெல்லாம் சரி, நாம் பார்க்க விரும்பும் வள்ளி எங்கே?!
திருமுறைக் கோயில்- சைவத் திருமுறைகளையே தெய்வமாக வணங்கும் இந்தச் சந்நிதியை அடுத்து காசி விஸ்வநாதர்- விசாலாட்சி சந்நிதி, நால்வர் பெருமக்கள், அருகில் திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்க சூளாமணி, சேக்கிழார் ஆகியோர் நிற்க... இவர்களையெல்லாம் அஞ்சலி ஹஸ்தமிட்டு வணங்கியபடி, முன்னால் நிற்கிறாள் வள்ளி. 'பண் கொடுத்த பாடினிப் பெருமாட்டியே, உன்னைக் கோடி முறை வணங்கத் தகும்’ என்று மனதார உரைத்தபடியே, வள்ளியைப் பணிகிறோம்.
அடுத்து முருகர் சந்நிதி. வள்ளி- தெய்வானை உடனாய முருகர், நான்கு திருக்கரங்களுடன், அபய வரதாரியாக தரிசனம் தருகிறார். இந்த கந்தக் கடவுளை, அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார்; வெறுமே இல்லை... 'யாழ்ப்பாணரின் பதியைச் சேர்ந்தவரே’ என்று சிலாகிக் கிறார். காஞ்சி சிதம்பர முனிவரும் இந்த முருகனைப் பாடியிருக்கிறார். அடுத்து, ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி; எதிரில் ஆஞ்சநேயர். வலம் நிறைவடைந்துவிட்டது.
சபா மண்டபத் தூண்களைச் சுற்றிச் சுற்றி வருகிறோம். நிறையச் சிற்பங்கள். சந்நிதி வாயிலுக்கு அருகே ஒரு தூணில்... (உ)ருத்திரசர்மர். யார் இவர்? இவர்தாம் இந்தத் தலத்தின் பிரதான நாயகர்களில் ஒருவர். வாய் பேசமுடியாதவராக இருந்த இவர், இந்தத் தலத்தில் பூஜித்தார்; குறை நீங்கப் பெற்றார். இவர் தொழுததால், ஸ்வாமிக்கு குமரேசர் எனும் திருநாமம் உண்டானது.
அதெப்படி? ருத்திரசர்மர் பூஜை செய்தால், குமரேசர் எனும் நாமம் தோன்றுவானேன்?! வாருங்கள், தலபுராணம் சொல்லும் வரலாற்றைக் கேட்போம்.
உமிழும் வான்மதி முடித்தவன் புத்தகமுவரி
அமிழவே எறிந்தகற் கிடும் சாபம் விட்டகலத்
தமிழினாட்டினில் அவதரித்துத் தலம் சார்ந்து
குமரன் பூசனை செய்திட குமரேசுரம் ஆமால்...
அமிழவே எறிந்தகற் கிடும் சாபம் விட்டகலத்
தமிழினாட்டினில் அவதரித்துத் தலம் சார்ந்து
குமரன் பூசனை செய்திட குமரேசுரம் ஆமால்...
பிரகாசமான சந்திரனை சிரசில் சூடிய சிவனார், பார்வதிக்குச் சொன்னார்; அன்னை வேறு எங்கோ பாராமுகமாக இருந்தார்; சினமுற்ற சிவனார் பிடி சாபம் என்றார்; உமையவளை மீனவக் குடும்பத்தில் பூமியில் பிறக்கப் பணித்தார். அன்னைக்குச் சாபம் என்பதைக் கண்ட முருகன், அதனால் ஆதங்கமுற்று, வேத நூல்களையே கடலில் எறிந்தார். அடாத இந்தச் செயலைக் கண்ட சிவனார்,
வேத நூல்களைப் பழித்ததற்காக, பூமியில் ஊமையாகப் பிறக்கும்படி முருகனுக்கு ஆணையிட்டார். அதன்படியே, ருத்திரசர்மராகத் தோன்றினார் முருகன். 'இத்தலத்தில் வந்து வழிபட, சாப விமோசனம் கிட்டும்’ என்று வரம் தர, அதன் படியே இங்கு வந்து பூஜித்தார். குமரனே ருத்திரசர்மராக வந்து பூஜித்த பெருமான் 'குமரேசர்’ ஆனார்; தலமும் குமரேஸ்வரம் ஆனது.
இந்தத் தலத்துக்கு இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. எருக்கைத் தலமரமாகக் கொண்டதால் எருக்கத்தம்புலியூர். குமரனால் குமரேஸ்வரம். குகனான முருகனுக்கு விமோசனம் தந்து, அருள் கொடுத்ததால், சிவ குக க்ஷேத்திரம். கணேஸ்வரம் (கணேச்சுரம்) என்றும் பெயர் உண்டு. அருகிலுள்ள விருத்தா சலத்தில் வந்து தொழுத சிவகணங்கள், 'சிவத் தலங்களிலேயே அதிகமான வரங்களையும் விரைவில் முக்தியையும் தருகிற தலத்தையும் காட்டித் தரவேணும்’ என்று பழமலை நாதரான விருத்தகிரீஸ்வரரிடம் விண்ணப்பிக்க, அவர்களுக்கு இந்தத் தலத்தைக் காட்டினாராம் பரமனார்! உடனே, கணங்கள் இங்கே வந்து தங்கி, மந்தாரம், கோங்கு, செண்பகம் போன்ற மலர்களால் வழிபட்டுத் தொழுதனராம். கணங்கள் தொழுததால், கணேஸ்வரம். வெள்ளெருக்கின் ஊர் என்பது வடமொழியில், ஸ்வேதார்க வனம். முக்தி தருவதால் முக்திபுரம்!
சபா மண்டபத்தில்தானே நிற்கிறோம்! பால கணபதியையும் பால முருகனையும் வணங்கி, ஸ்வாமி சந்நிதியின் முக மண்டபத்தில் பிரவேசிக்கிறோம். அங்கே, ஸ்ரீநடராஜ சபை. ஒருவரல்ல, இருவர்.
ஒருவர் விரிசடை வேந்தர்; மற்றவர் தாழ்சடை நாயகர். ஒரு காலத்தில் இங்கிருந்த நடராஜ மூர்த்தத்தை, பல ஆண்டு களுக்கு முன்னர் இருந்த கோயில் பொறுப்பாளர்களில் ஒருவர் விற்றுவிட்டார் என்றும், அந்த மூர்த்தம் பாரிஸ் பொருட் காட்சியில் இருக்கலாம் என்றும் பழைய குறிப்புகள் உள்ளன. எப்படியோ, இப்போது ஒற்றைக்கு இரட்டையாக சபாபதி ஆடுகிறார்!
சபைக்கு அருகில், திருமுறைக் கோயில். திருமுறைகளுக்கு இங்கே மதிப்பு மிகுதி என்றாலும், கோயிலில் காட்டப்படும் அக்கறை மகிழ்ச்சி தருகிறது. தற்போது கோயிலில் தங்கி பூஜை செய்யும் சிவசக்தி கணேச குருக்கள்தாம் காரணமாம். இவருக்கு இந்த ஊரில்லை; பழநியைச் சொந்த ஊராகக் கொண்டாலும், திருமுறைகள் மீதும், அவற்றை மரபுவழி பெறக் காரணமான யாழ்ப்பாணர் மீதும் கொண்ட பக்தியால், இங்கேயே வந்து தங்கி, ஆலயத் திருப்பணிக்கு வித்திட்டு, வள்ளியின் சிலாரூபத்தைப் பிரதிஷ்டை செய்ய வழியமைத்தவர் இவர்தாம்.
மகாமண்டபம் நுழைந்து, துவார பாலகர்களை வணங்கி, அர்த்த மண்டபம் அடைந்து உள்நோக்குகிறோம்.ஸ்ரீகுமரேஸ்வரர் சிவலிங்கத் திருக்கோலம் காட்டுகிறார். நீலகண்டர், எருக்கநாதர், ஸ்வேதார்கவனேஸ்வரர் என்கிற திரு நாமங்களும் இவருக்கு உண்டு. 'புலியூர் உறைகின்ற அண்ணா’ என்றே சம்பந்தர் அழைக்கிறார். தம்முடைய ஊருக்கு வர வேண்டும் என்று யாழ்ப்பாணரும் மதங்க சூளாமணியும் வேண்டுகோள் வைக்க, அதனை ஏற்று இங்கு வந்தார் சம்பந்தர்; குறிஞ்சிப் பண்ணில் பதிகம் பாடினார்.
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தி
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறாவரு காலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறாவரு காலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே
- என்று சம்பந்தரின் பாடல் செவியில் எதிரொலிக்க, எருக்கத்தம்புலியூராரைப் பணிகிறோம் (சம்பந்தர் பதிகத்தின் 7-வது பாடல் இப்போது கிடைக்கவில்லை). அழகான மூர்த்தம். மூலவரை வணங்கி வெளியே வந்தால்,
ஸ்வாமி சந்நிதிக்கு அடுத்ததாக உற்ஸவர் அறை. அதைக் கடந்ததும், அம்பாள் சந்நிதி. ஸ்வாமிக்கு வலது பக்கமாக, ஸ்வாமி சந்நிதி போன்றே கிழக்குப் பார்த்த அம்பாள் சந்நிதி இருப்பதால், இதனைக் கல்யாணத் தலம் எனலாம். மகா மண்டபத்தில் நந்தி. அம்பாளின் திருநாமங்கள்- வீறா முலையம்மன் (சம்பந்தர் இப்படித்தான் அழைக்கிறார். வடமொழியில் இதுவே அபீதகுஜாம்பாள்), நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம் பாள், நீலாம்பிகை. நின்ற திருக்கோலம்; அபயம், வரம், பாசம், அங்குசம் தாங்கியவள். இந்தத் தலத்தின் இறைவர்க்கு நீலகண்டம் என்பதும், அம்மைக்கு நீலமலர்க்கண்ணி என்பதும் ஆதித் திருநாமங்களாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான், இங்கு அவதரித்த யாழ்ப்பாணருக்கு அந்தப் பெயரையே சூட்டியிருக்கின்றனர். அம்பாளை வணங்கி வழிபட்டதும், சந்நிதிகள் இரண்டையும் சேர்த்து மீண்டும் வலம் வருகிறோம். அம்பாளின் தெற்குக் கோஷ்டங்களில், பிராமி மற்றும் மாஹேஸ்வரி. ஸ்வாமி சந்நிதியின் பின்புறத்தில், எருக்கஞ்செடிகள் அடர்ந்தும் படர்ந்தும் வளர்ந்துள்ளன. இவற்றின் அடர்த்தியால், ஸ்வாமி கோஷ்டங் களைக் காண்பதே கடினமாக உள்ளது.
தெற்குக் கோஷ்டம் அருகில் செல்கிறோம். நாகபாசம் தாங்கியிருக்கும் அழகிய ஸ்ரீதட்சிணா மூர்த்தி; வித்தியாசமானவர். வீராசனத்தில்... வலது கால் மீது இடது கால் வைப்பது போலன்றி, இடது கால் மீது வலது கால் வைத்திருக்கிறார்; சுவடி அக்ஷமாலை போன்றவையும் பக்கம் மாறியுள்ளன. தியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவர் மோன தட்சிணாமூர்த்தி. அருகில் குறுகலான படிக்கட்டுகள்; மேலேறிச் சென்றால், சட்டைநாதர் தரிசனம். மற்றொரு தெற்குக் கோஷ்டத்தில் விநாயகர். மேற்குக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர். வடக்குக் கோஷ்டங்களில், தத்தாத்ரேயர் (பிரம்மா இல்லை) மற்றும் ஸ்ரீதுர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
கிழக்குச் சுற்றை அடைந்து நவக்கிரகங்களைக் காணும்போது, அங்குள்ள சிறப்புகளை அர்ச்சகர் சுட்டிக்காட்டுகிறார். பிரஹஸ்பதியான குரு அமர்ந்திருக்கிறார். ராகுவும் கேதுவும் அர்த்த சரீர கோலத்தில், அதாவது பாதி மனித உடலும் பாதி பாம்பு உடலும் கொண்டு காட்சி தருகின்றனர். ராகுவுக்கு மூன்று கரங்கள்; ராகு கேது இரு வருக்குமே சிரசுகளில் கிரீடம் இல்லை; அசுரர்களாக, அப்படியே அசுரத் தலையுடன் தென்படுகிறார்கள்.
எருக்கத்தம்புலியூர், சனி- சந்திர பரிகாரத் தலம். சனி, குரு, ராகு- கேது தோஷங்களுக்கு இங்கு பரிகாரம் செய்யலாம். சிரவண நட்சத்திரத்துக்கு (திருவோணம்) எருக்கே மூலிகை. ஆகவே, இந்த நட்சத்திரக்காரர்களுக்கான சிறப்பு வழிபாட்டுத் தலமும் இதுவே! உச்சினி பட்டணத்து ஸ்வேதராஜா என்பவர், விதி வசத்தால் குஷ்ட நோய்வாய்ப்பட, இரவு பகல் இங்கு வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். அதுமுதல், சகலருக்கும் நோய் தீர்க்கும் பெருமானாக விளங்கவேண்டும் என நீல கண்டரை யாசிக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஒரு மண்டலம் இங்கு தங்கியிருந்து வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கொடிய வியாதியும் அகலும்.
இவ்வூரில் பாதகம் செய்தால், அது செய்த வரைக் கெடுத்து, எங்கு சென்றாலும் விரட்டி அவரை அழித்துவிடும். ஆனால், பிற தலங்களில் பாதகம் செய்தவர்கள் இங்கு வழிபட்டு மனம் வருந்தினால், அனைத்துத் துன்பங்களும் நீங்கிவிடும் என்கிறது தல புராணம். வியாக்ரபாத முனிவர் இங்கு தவம் இயற்றித்தான் அவருக்கு உபமன்யு எனும் மகன் பிறந்தார் என்பதாலும், ராஜராஜசோழன் இங்கு வேண்டித்தான் ராஜேந்திரனை மகனாகப் பெற்றார் என்பதாலும் இது பிள்ளை வரம் கொடுக்கும் தலமுமாகும். திருக்கோயில் உற்ஸவங்கள், வியாக்ரபாதரும் பதஞ்சலியும் ஏற்படுத்திய பத்ததியிலேயே இன்னும் தொடர்கின்றன.
'தேமேவும் எருக்கத்தம்புலியூரானைச் சிந்தைதனில் நீங்காமல் தியானம் செய்வோம்’ என்று போற்றியபடியே ஆலயம் விட்டு வெளியில் வருகிறோம். தேர் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணர் பண்ணிசைக்க, ஸ்ரீநீலகண்டர் தேரில் பவனி வரும் திருக்காட்சி மனக்கண்ணில் விரிகிறது. அதனுள் அமிழ்ந்தபடியே அங்கிருந்து அகல்கிறோம்.
No comments:
Post a Comment