Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 30

கிராத மூர்த்தி
(திருவேடீசர் - தொடர்ச்சி)
திருவிளநகர் எனும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஸ்ரீவேறுதோளி அம்மை சமேத ஸ்ரீஉச்சிரவனேஸ்வர். திருஞான சம்பந்தர், இங்குள்ள இறைவனை வழிபட விரும்பி மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டார். வழியில், காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது வேடன் வடிவில் வந்த சிவனார், காவிரி வெள்ளத்தைக் குறையச் செய்ததுடன், காவிரித் துறையையும் திருஞானசம்பந்தருக்குக் காட்டி அருளினாராம். எனவே இறைவனை, 'துறை காட்டும் வள்ளல்' என்று போற்றுவர்.
சாந்தம்புத்தூர் எனும் திருத்தலத்தில்... வேடவர் கோலத்துடன் உமையவளோடு வந்த சிவபெருமான், வேடன் ஒருவனுக்கு ஆயுதம் அளித்த வரலாறை திருவாசகத்தில் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.
'முத்தைத் தரு' என்று முருகப் பெருமான் அடியெடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் பாடிய முதல் திருப்புகழில், 'திக்குப் பரியட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு சித்ரப் பவுரிக்குத் திரிகடக என ஓத' எனும் வரி வரும். இதில், முருகப் பெருமான் 'பவுரி' எனும் நடனத்தை ஆடியதாகக் குறிப்பிடுகிறார் அருணகிரியார். பார்த்தனுக்கு அருள்புரிவதற்காக தாம் கொண்ட வேடர் கோலத்துடன் சிவனார் ஆடியதும் 'பவுரி' நடனமே! இது குழு நடனம் ஆகும். 'மத்திய இந்தியாவில் வசிக்கும் 'கிராதர்' எனும் பழங்குடியினர் ஆடும் நடனம் இது' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வீரமும் வெற்றியும் வேண்டுவோர் பாசுபத மூர்த்தியை வழிபட்டு அருள் பெறலாம்.
நீலகண்டர்
பயத்தை வெல்வதே சுக வாழ்வுக்கான வழி. வறுமை, நோய், பகை, விலங்குகள்... என்று பல வகைகளில் பயம் நம்மை வாட்டுகிறது. இவை யாவற்றையும் விட மிகப் பெரியது மரண பயம். இதை, 'மரண ப்ரமாதம்' என்கிறார் அருணகிரியார். 'பிரமாதம்' என்ற பதத்தை... அருமையானது, உயர்ந்தது, சிறந்தது என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறோம். ஆனால், பயம், அச்சம், துக்கம்... இவையே, 'பிரமாதம்' என்ற சொல்லின் சரியான அர்த்தமாகும். ஆக, உலக உயிர்களை பெரிதும் வாட்டுவது மரண பயமே!
இந்த பயத்தை வென்று, இறவா வரம் பெறுதலே பெரும்பேறு. மரணத்துக்கு அஞ்சாத உயிர்களே இல்லை. சித்தர்களும் யோகியரும்கூட இறவாத தன்மையை அடையவே விரும்புகின்றனர்; மூலிகைகள் மற்றும் யோக சாதனைகள் மூலம் நிலை பெற்று வாழ முயற்சிக்கின்றனர்.
சித்தர்கள், மூலிகைகள் மூலம் சித்தாமிர்தம் உண்டு உடலை வஜ்ர தேகமாக்குகின்றனர். யோகியர், யோக சாதனைகள் மூலம்... சகஸ்ர தளத்தில், தாமரையில் வீற்றிருக்கும் இறைவனை தரிசித்து, அங்கு பெருகும் பேரானந்த வெள்ளமாகிய ஞானாமிர்தத்தை உட்கொண்டு இறவா நிலையை அடைய எண்ணுகின்றனர்.
தேவர்களுக்கும் இப்படி ஓர் எண்ணம் எழுந்தது. 'அசுரர்களுடனான போர்களில்... ஆயுதங்களால் தாக்கப்பட்டாலும் சிதைந்து போகாத உறுதியான தேகமும், இறவா பெருநிலையும் அடைவது எப்படி?' என்று சிந்திக்கலாயினர். இதற்கான வழிமுறைகளைக் கூறும்படி பிரம்ம தேவனிடம் வேண்டினர்.
பிரம்மதேவன், ''நீங்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரது உதவி யால் திருப்பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை உண்டால், அளவற்ற வலிமையும், இறவாத நிலையும் பெற்று நெடுங்காலம் (ஒரு கற்ப காலம்) வாழலாம்!'' என்று வழி காட்டினார். அதன்படி வைகுண்டம் சென்ற தேவர்கள், திருமாலிடம் தங்களது விருப்பத்தைக் கூறி திருவருள் புரியுமாறு வேண்டினர்.
திருமால் அவர்களிடம், ''பாற்கடலைக் கடைவது எளிதான காரியம் அல்ல. நீங்கள் மட்டும் பாற்கடலைக் கடைந்து விட முடியாது. எனவே, அசுரர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று அறிவுறுத்தினார். 'அசுரர்களை அழைத் தால், அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தர வேண்டுமே!' என்று முதலில் தயங்கிய தேவர்கள், பிறகு வேறு வழியின்றி அசுரர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டனர்.
அனைவரும் கூடினர். திருப்பாற்கடலைக் கடைவதற்கு மந்திர மலையை மத்தாகப் பயன் படுத்த முடிவு செய்தனர். ஆனால், அதைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு பாதி வழி வருவதற்குள் சோர்ந்து விழுந்தனர். எனவே, கருடனை அழைத்த மகாவிஷ்ணு அவன் மூலம் மந்திர மலையை பாற்கடலில் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தார். மத்து கிடைத்து விட்டது. கயிறு வேண்டுமே! அஷ்டமா நாகங்களில் ஒன்றான வாசுகியை கயிறாக இருக்கும்படி வேண்டிக் கொண்டனர்.
வாசுகியின் தலைப் பக்கம் தேவர்கள் நின்றனர். இதைக் கண்ட அசுரர்கள், ''நாங்களும் வேதம் பயின்றவர்களே. இந்தப் பாம்பின் வாலைப் பிடிப் பது, வீரர்களான எங்களுக்கு பெருமையல்ல. எனவே, நாங்கள்தான் தலைப் பகுதியைப் பிடிப்போம்!'' என்றனர். தேவர்களும் விட்டுக் கொடுத்தனர்.
தொடர்ந்து இரு தரப்பினரும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஆனால் மந்திர மலை சிறிதும் அசையவில்லை. அது கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். உடனே ஆமை வடிவெடுத்த திருமால் மந்திர மலையைத் தாங்கிப் பிடித்தார். தேவ அசுரர்கள் மீண்டும் கடையத் தொடங்கினர். ஓராயிரம் ஆண்டுகள் கழிந்தன. எனினும், சிவ பெருமானை முறையாக வணங்கி அவரது அனுமதி பெறாமல் பாற்கடலைக் கடையத் தொடங்கியதால், சரியான பலன் கிடைக்கவில்லை. தவிர, நெடுங்காலம் கடைந்ததால், பாற்கடல் பொங்கித் ததும்பி உலகங்கள் நிலைகுலைந்தன.
வாசுகியின் மேனியும் புண்ணாகிப் போனது. இதனால் ஏற்பட்ட வலியையும் வேதனையையும் பொறுக்க முடியாத வாசுகி பாம்பு, தனது ஆயிரம் வாய்களாலும் விஷத்தைக் கக்கியது.

-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment