Wednesday 20 September 2017

சதுரகிரி யாத்திரை! - 18

துரகிரிக்குச் சென்று திரும்பினாலே புண்ணியம். அந்த மலையில் நமது பாதங்கள் படுவதற்கே, பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்; மூலிகைகள் நிறைந்த அந்த வனத்தின் மூச்சுக் காற்று நம் தேகத்தில் படுவது தெவிட்டாத அமுதம். எண்ணற்ற சித்தர் பெருமக்கள் சூட்சும சரீரத்துடன் சுற்றி வரும் அற்புதமான சதுரகிரிக்குச் செல்வதற்கு அவர்களின் அழைப்பு நமக்கு இருக்க வேண்டும். அழைப்பு மட்டுமல்ல. ஆசிர்வாதமும் இருந்தால்தான் இந்த சதுரகிரியைத் தரிசிக்க நம்மால் சிரமமின்றி புறப்பட முடியும். இது பலரது அனுபவ உண்மை!
இந்த மலையில் இருக்கிற ஒவ்வொரு வஸ்துவையும் இறை அம்சம் நிறைந்ததாகவே பாவித்து வணங்க வேண்டும். சித்தர்கள் எந்த ரூபத்தில் மனிதர்களை ஆட்கொள்வார்கள் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பௌர்ணமி தின நள்ளிரவுகளில் நட்சத்திர ரூபத்தில் அவர்கள் வானில் நடத்தும் வர்ணஜாலத்தைக் கண்டு தரிசித்தவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். இத்தகைய காட்சிகளைக் காண நேர்ந்தவர்கள், தாங்கள் அனுபவித்த உணர்வுகளைச் சொல்லக் கேட்கும்போது, வியப்பால் நம் விழிகள் விரிகின்றன. சதுர கிரியில் சித்தர்கள் நிகழ்த்துகின்ற அற்புதங்கள், அளவில்லாதவை.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது. அற்புதங்களைக் கண்டு தரிசிக்கின்ற வாய்ப்பை எவருக்கெல்லாம் இறைவன் அருளி உள்ளாரோ, அவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் வாய்க்கப் பெறும். 'நானும் இந்த அற்புதங்களைக் கண்டு தரிசிக்கிற வாய்ப்பு கிடைக்குமா?' என்று சிறுபிள்ளைத்தனமாக எவரும் ஏங்கி, இருட்டு வேளையில் அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கக் கூடாது. எதிர்பார்த்துக் கிடைப்பதல்ல இது. இறைவனின் அருளோடு, ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்; மனம் நெகிழ வைக்கும்.
யாத்திரையின்போது எதிர்ப் படும் எவருக்கும், நடப்பதற்குச் சிரமப்படும் ஒவ்வொருவருக்கும் நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். உடலிலும் உள்ளத்திலும் அமைதியும் ஆனந்தமும் குடி கொண்டிருக்க வேண்டும். பதட்டம் கூடவே கூடாது. பொறுமை அவசியம்.
இந்த யாத்திரையைத் தொடங்கும் முன், பக்தர் கள் பலரையும் மிரட்டுகிற விஷயம், மலைக்கு மேலே சுமார் 12 கி.மீ. தொலைவு ஏறி நடந்து எப்படிப் போகப் போகிறோம் என்பதுதான்! நகர வாழ்க்கையில், குளிர்சாதன அறைக்குள் சக்கர நாற்காலியில் அமர்ந்து, சதா உழன்று வரும் சில அன்பர்களுக்கு, பயண தூரமும் பாதையின் தன்மையும் சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், நமது சிந்தனையில் இந்த சலிப்பு, எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எப்படிப்பட்ட அலுவலகத்திலும் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து விட்டு, அந்தக் காலத்துக்குள் இவ்வளவு தொகைக்கு வியாபாரத்தை உயர்த்த வேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிடுவார்கள். இதை 'இலக்கு' என்று சொல்வார்கள். ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு ஆகும் சிரமங்களை அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் பொருட் படுத்தமாட்டார். அவர் களின் குறிக்கோளே- குறித்த இலக்கை எட்டி விட வேண்டும் என்பதுதான்! குறித்த காலத்துக்குள் அந்த இலக்கை எட்டியவுடன் வரும் சந்தோஷமே தனி! அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
அதுபோல், சதுரகிரி யாத்திரையின் இலக்கு என்பது மகாலிங்க தரிசனம்; மகான்களின் ஆசிர் வாதம். அந்த இலக்கை அடைவதற்கு- அதாவது தரிசனம் செய்வதற்குச் சில சிரமங்களைக் கடந்து போகிறோம்; அவ்வளவுதான்.
கடவுளை தரிசனம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. கஷ்டப்பட்டால்தான் கடவுளை தரிசனம் செய்ய முடியும். நம்முடைய மனமும் சிந்தனையும் தன்னிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் பகவான் நமக்குக் காட்சி தருவார்.
குளத்தில் நீர் அருந்தப் போனது கஜேந்திரன் என்கிற யானை. இதன் வரவுக்காகவே காத்திருந்தது போல், நீருக்குள் இருந்த முதலையானது பசி வெறியுடன் கஜேந்திரனின் ஒரு காலைப் பிடித்து நீருக்குள் இழுத்தது. பலாத்கார முதலையிடம் சிக்கிய கஜேந்திரன், தன் காலை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று அதீத பலத்துடன் போராடியது. நீருக்குள் இருக்கும்போது முதலை யின் வலு அதிகமாயிற்றே! எனவே, ஒரு கட்டத்தில் கஜேந்திரன் துவள ஆரம்பித்தது. தன்னுடைய பலத்தால் தப்பிக்க முடியாது என்று தெரிந்த பின் 'ஆதிமூலமே' என்று அடிவயிற்றில் இருந்து பிளிறியது. பிறகுதான் பகவான் வந்து காப்பாற்றினார். முதலை அழிந்தது.
பலரும் நிறைந்த சபையில், தனது சேலையைப் பிடித்து துச்சாதனன் இழுக்க ஆரம்பித்தபோது அவமானம் தாங்க முடியாமல் அலறினாள் பாஞ்சாலி. துடித்தாள். துவண்டாள். தன் கைகளை மட்டுமே நம்பி, சேலையை இறுகப் பற்றிக் கொண்டாள். வெறி பிடித்த ஒரு வேங்கையின் முன் ஒரு மங்கையின் பலம் எம்மாத்திரம்? சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறோம் என்பதை உணராமல், சேலையை இழுத்துக் கொண்டே இருந்தான் துச்சாதனன். இதற்கு மேல் தன் பலம் எடுபடாது என்கிற கட்டத்தில் தன் இரு கைகளையும் உயரே கூப்பி, 'கண்ணா' என்று பாஞ்சாலி அபயக் குரல் எழுப்பியதும், அந்த ஆபத்பாந்தவன் ஓடோடி வந்தானே!
கஜேந்திரனையும், பாஞ்சாலியையும் போல் இறை நம்பிக்கையில் ஒரு பூரணத்துவம் இருக்க வேண்டும். முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய பக்திக்கு அதுதான் தேவை. இதைத்தான் 'சரணாகதி தத்துவம்' என்பார்கள். எந்த தெய்வத்தின் மீது நமக்குப் பிடிப்பு ஏற்படுகிறதோ, அந்த தெய்வத் திடம் நம்மை முழுவதுமாக ஒப்படைத்து விட வேண்டும். பிறகு, நல்லது- கெட்டது எல்லாவற்றை யும் அந்த தெய்வமே பார்த்துக் கொள்ளும்.
சதுரகிரி யாத்திரைக்கும் இந்த 'சரணாகதி' அவசியம் வேண்டும். எத்தனையோ பேர்- வயது முதிர்ந்தோர், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என பலரும் இன்றைக்கு சதுரகிரி சென்று, இறைவனை மனமார தரிசித்துத் திரும்பு கிறார்கள். இவர்கள் எல்லோரும் அந்த மகா லிங்கத்தை முழுவதுமாக நம்பி, தங்களது யாத்திரையை தொடங்கியவர்கள். எனவே, அந்த யாத்திரையை அவனே நல்ல விதமாக முடித்தும் வைக்கிறான்.
சதுரகிரி யாத்திரை செல்பவர்கள், களைப்பு தம்மைக் கடுகளவும் அண்ட விடாமலும், சோம்பல் தொற்றிக் கொள்ளாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதோ நாலைந்து பேர் கூடி, ஒரு சுற்றுலா போவது மாதிரி சதுரகிரிக்குப் போய் வந்து விட முடியாது; போகவும் கூடாது. ஒவ்வொருவரும் ஆழ்ந்து அனுபவித்து, இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். சுகானுபவத்தில் திளைக்க வேண்டும்.
சதுரகிரி, அற்புதங்கள் நிறைந்த ஒரு மலை. ரெட்டை லிங்கம், பிலாவடி கருப்பர், சுந்தரமூர்த்தி, சுந்தர மகாலிங்கம் ஆகிய தெய்வங்களை நாம் பூரணமாகத் தரிசித்து விட்டோம். இறுதியாக சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க இருக்கிறோம். மேலே குறிப்பிட்ட இந்த சந்நிதிகள் மட்டும்தான் என்றில்லை. இன்னும் மலைக்கு மேலே ஏராளமான குகைகள், ஊற்றுகள், தெய்வங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தனியே சென்று தரிசிப்பது சாதாரண காரியம் அல்ல. முறையான ஆசாமிகளும் தகுந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் மலைக்கு மேல் பயணிப்பது கூடாது.
வாருங்கள், சந்தன மகாலிங்கம் சதுரகிரியில் குடி கொண்ட கதையைப் பார்க்கலாம்.
கயிலாய மலை கோலாகலமாக இருந்தது. பார்வதிதேவியும் பரமேஸ்வரனும் அருகருகே அமர்ந்து அனைவருக்கும் தரிசனம் தந்து கொண்டி ருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்கள் உட்பட ரிஷிகளும் கந்தர்வர்களும் வந்து அம்மையையும் அப்பனையும் வலம் வந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். இருவரையும் ஒரு சேர தரிசனம் செய்த திருப்தியிலும், பரமேஸ் வரனிடம் ஆசி பெற்ற மகிழ்ச்சியிலும் அனைவரும் திளைத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்து சேர்ந்தார் பிருங்கி ரிஷி. மகா தபஸ்வியான அவரை, தேவகணங்கள் வரவேற்றன. வந்தவர், பார்வதி- பரமேஸ்வரர் இருக்கும் இடத்துக்குச் சென்றார். தேவியைத் தவிர்த்து, ஈசனை மட்டும் வலம் வந்து வணங்கினார் பிருங்கி ரிஷி. இவருடைய இந்தச் செயல் தேவியைக் குழப்பியது. இதற்கான விளக்கத்தை அறியும் முகமாக பரமேஸ்வரரை நோக்கினாள். 'என்ன தேவி?' என்பது போல் சற்றே திரும்பிப் பார்த்தார் கயிலைவாசன்.
தனது சந்தேகத்தைத் தெரிவிக்கத் தொடங்கி னாள் பார்வதி. ''ஸ்வாமி... இங்கு நம்மைத் தரிசிக்க வரும் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்ட அனைவரும் நம் இருவரையும் சேர்த்தே வலம் வந்து வணங்கி ஆசி பெற்றுச் செல்கின்றனர். ஆனால், இந்த பிருங்கி ரிஷி மட்டும் என்னைத் தவிர்த்துத் தங்களை வலம் வந்து, தங்கள் புகழ் பாடும் ஸ்தோத்திரங்கள் பாடி, தங்களை மட்டும் நமஸ்கரிக்கிறாரே... இது முறைதானா? இதன் காரணம் என்ன?'' என்று கேட்டாள்.
''தேவி... சகல சுகங்களையும் அனுபவித்து விட்டு வீடுபேறு எனும் மோட்சத்தை விரும்புபவர்கள் நம் இருவரையும் சேர்த்து வணங்குகிறார்கள். இந்த பிருங்கி ரிஷி அப்படிப்பட்டவன் இல்லை. எந்த சுகத்தையும் அனுபவிக்க விருப்பம் இல்லாதவன். மோட்சத்தை மட்டுமே எதிர்பார்த்து, அதை அருளக் கூடியவன் நான் மட்டுமே என்பதை அறிந்து என்னை மட்டும் வலம் வந்துள்ளான். இதில் உனக்கு என்ன குழப்பம்?'' என்று கேட்டார் பரமேஸ்வரர்.
என்றாலும், தேவி சமாதானம் ஆகவில்லை. தன்னை ஒரு ரிஷி புறக்கணித்து விட்டாரே என்று மருகினாள். பிறகு, ''ஏ பிருங்கி ரிஷியே... சக்தியையும் சிவத்தையும் அனைவரும் சேர்த்தே வணங்கி வரும்போது, நீர் மட்டும் என்னைப் புறக்கணித்த விதம் சரியில்லை. இதை நான் அவமானமாக உணர்கிறேன். சக்தி இல்லை என்றால் உமது சரீரம் இல்லை. எனவே, எனது அம்சமான சக்தியை நீர் இப்போதே இழப்பீர். இனி, உம்மால் எப்படி எழுந்து நடமாட முடிகிறது என்று பார்க் கிறேன்'' என்று சொன்னவள், பிருங்கியிடம் இருந்த சக்தி- அதாவது பலம் அனைத்தையும் ஒரு விநாடி நேரத்தில் அபகரித்தாள்.
அவ்வளவுதான்... அடுத்த கணம் காற்றுப் போன பலூன் மாதிரி புஸ்ஸென்று ஆகிப் போனார் பிருங்கி ரிஷி. அவரால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. உடல் துவண்டது. பிரயத்தனப் பட்டு எழ முயற்சித்தார். இரண்டு மூன்று முறை தடுமாறிக் கீழே சரிந்தார்.
தன் பக்தன் ஒருவன், சக்தி இழந்து கண்ணெதிரே தவிப்பதைக் கண்டு சும்மா இருப்பாரா ஈசன்?
சதுரகிரிக்கு வரும் அன்பர்கள் தங்களது வாகனங்களை தாணிப்பாறையில் நிறுத்தி விட்டு, நடக்க ஆரம்பிக்க வேண்டும். தாணிப்பாறையில் தங்கும் வசதி இல்லை என்பதை அன்பர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் நாளே வந்து தங்கி விட்டு, மறுநாள் அதிகாலை நடை பயணத்தைத் தொடங்க விரும்பு வோர் shriவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகர் போன்ற அருகில் உள்ள நகரங்களில் தங்கலாம்.
அடிவாரத்தில் இருந்து மேலே சதுரகிரிக்குச் செல்வோர் தாணிப்பாறை மார்க்கமாக மட்டுமே செல்வது நல்லது. ஆர்வக் கோளாறின் காரணமாக சிலர் வருசநாட்டுப் பாதை (தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து செல்வோர் வரும் பாதை) மார்க்கமாக ஏறி வர முயல்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தானது. முன் அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் புதியவர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்துவது ஆபத்தானது. எல்லோருக்கும் நன்கு பழக்கப்பட்ட - பலரும் வந்து செல்லும் தாணிப்பாறை வழியே வசதியானது; பாதுகாப்பானது. பிறர் சொல்கிறார்களே என்பதற்காக, பாதையை மாற்றித் தேர்ந்தெடுத்துச் செல்ல வேண்டாம். பல விதமான ஆபத்துகளுக்கு இது வழி வகுக்கும்.
அதுபோல் சதுரகிரிக்குச் செல்லும் புதியவர்கள், மகாலிங்கத்தைத் தரிசித்த சந்தோஷத்தில் உடனே கீழே இறங்கி விடுவது நல்லது. ஆலயம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் முறையான அனுமதி பெறாமல், அங்கேயே தங்கி இருப்பது நல்லதல்ல... இது தமிழக அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே, நம் மனம் போன போக்கில் இங்கே பயணம் செய்வது சட்டப்படியும் தவறு. சில பயணங்கள் நமக்கு ஆபத்தாகவும் அமையக் கூடும்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த உண்மை நிகழ்வு இது. திருச்சியில் இருந்து எட்டுப் பேர் அடங்கிய ஒரு குழுவினர் பௌர்ணமி தரிசனத்துக்காக சதுர கிரிக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களில் ஒரே ஒருவரைத் தவிர, மற்ற ஏழு பேரும் சதுரகிரி யாத்திரைக்குப் புதியவர்கள். சதுர கிரியில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தைத் தரிசித்த பிறகு, பழக்கப்பட்ட அந்த ஒரு ஆசாமி, 'இன்னும் மலைக்கு மேலே பயணித்தால் பெரிய மகாலிங்கத்தைத் தரிசிக்கலாம். வர்றீங்களா?' என்று புதியவர்களிடம் கேட்டிருக்கிறார்.
புதியவர்களும் ஆர்வ மிகுதியில், 'உனக்கு வழி தெரியும்னா நாங்க உன் பின்னாடி எங்கே வேணும் னாலும் வர்றோம்' என்று சொல்ல... பயணம் தொடங்கி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந் ததும் வலப் பக்கம் செல்வதற்குப் பதிலாக இடப் பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார் 'வழி தெரிந்த' ஆசாமி. பாதை மாறினால் பயணமும் மாறுமே! பெரிய மகாலிங்கம் வராமல் பாதை எங்கோ போய்க் கொண்டிருக்க.. குழம்பினார். புதியவர்கள் அனைவரும் ஏதும் அறியாமல் அவரைக் கேள்விக்குறியுடன் பார்க்க... 'பாதை மாறி வந்துட்டோம் போலிருக்கு' என்று குரலில் நடுக்கத்துடன் கூறினார்.
அதன் பிறகு அவர்கள் எவ்வளவோ முயன்றும் சரியான பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தன மகாலிங்கம் சந்நிதி வருவதற்கும் (வந்த வழி) அவர்களுக்குத் தடம் புரியவில்லை. 'மேலே ஏறிப் போன சில ஆசாமிகள் இன்னும் திரும்பவில்லை' என்கிற தகவல், ஆலயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு கட்டத்தில் தெரிய வர... மலைவாசிகள் சிலரை உடனே மேலே அனுப்பி இருக்கிறார்கள். சங்கு ஊதிக் கொண்டே மலை ஏறியவர்கள், ஒரு வழியாக அவர்களைக் கண்டுபிடித்துக் கீழே கூட்டி வந்திருக்கிறார்கள்.
மலைக்கு வருபவர்கள் மேலே எங்காவது செல்ல விரும்பினால், தகுந்த வழிகாட்டியின் உதவியுடன் சென்று பத்திரமாக அன்றே திரும்ப வேண்டும். தவிர, மேலே செல்பவர்கள் ஆலயம் சம்பந்தப்பட்ட எவரிடமாவது தகவல் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். அதுபோல் வந்து விட்டதையும் சொல்லிவிட வேண்டும்.
மலைக்கு ஏறி வரும் புதிய பக்தர்கள், தாங்கள் சம்பந்தப்பட்ட விலாசம் குறித்த ஏதாவது அடையாள அட்டையைத் தங்களுடன் வைத்திருப்பது நல்லது.
- (அதிசயங்கள் தொடரும்) 

No comments:

Post a Comment