Wednesday 20 September 2017

கால்சியம் குறைபாடு - ஊசி வேண்டாம் உணவுகளால் வெல்லலாம்!

லகளவில் ஆண்களைவிட பெண்களுக்கே எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படுகிறது. இதற்குக் காரணமாகும் கால்சியம் குறைபாட்டுக்குத் தீர்வாக கால்சியம் சப்ளிமென்ட் ஊசி போட்டுக்கொள்ள இப்போது மருத்துவர்கள் பரிந்துரைப்பது பரவலாகியுள்ளது. உண்மையில் இந்த ஊசி அவசியமானதா அல்லது உணவு முறைகளிலேயே இதைச் சரிசெய்துகொள்ள முடியுமா? 
மாதவிடாயும் கால்சியம் சத்தும்

பெண்களுக்கு மாதவிடாய் நிகழும்வரை அதற்குண்டான ஹார்மோன் செயல்பாடுகளின் பலனாக அவர்களது எலும்பில் கால்சியம் சேமிக்கப்படும்.  மெனோபாஸ் சமயத்தில் மாதம்தோறும் அவர்களின் எலும்பில் கால்சியத்தின் அளவு  குறைய ஆரம்பிக்கும். மாதவிலக்கு முற்றிலும் நின்றதும் எலும்பில் கால்சியம் சேமிக்கப்படுவதும் நின்றுவிடும்.  எனவே, மெனோபாஸுக்குப்பின் எலும்பு வலுவிழந்து எலும்புத் தேய்மானம் ஏற்படும். உடற்பயிற்சியின்மை, உடல் எடை கூடுவது உள்ளிட்ட காரணங்கள் அந்தக் காலகட்டத்தில் எலும்புத் தேய்மானத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்தப் பிரச்னை தீவிரமடையும்போது அதுவே எலும்பு நுண் துளை நோயான ஆஸ்டியோபோ ரோசிஸாக (Osteoporosis) மாறும்.

கால்சியம் ஊசி... கவனம் தேவை


எலும்புத் தேய்மானப் பிரச்னை உருவாகாமல் தடுக்க,  எல்லோருக்கும் ஒரே மாதிரியான கால்சியம் ஊசி போடப்படுவதில்லை. கால்சியம் காம்பினேஷனில் யாருக்கு எந்த ஊசி தேவையோ அதை மட்டுமே போட வேண்டும். தவறான காம்பினேஷன் உள்ள கால்சியம் ஊசியைப் போட்டுக்கொண்டால் கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை.
உணவால் வெல்லலாம் 

ஊசியை நாடுவதற்குப் பதிலாக, பெண்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். மாதவிடாய்,  கர்ப்பம், பிரசவம், தாய்ப்பால் ஊட்டும் சமயம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் கால்சியம் சத்து பெண்களுக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. உணவுகளே உடலின் கால்சியம் தேவையை ஈடுசெய்யும். பால், முட்டை, மீன், ஈரல், கேழ்வரகு, கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, நண்டு, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃப்ளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் ஆகியவற்றின் மூலமாக கால்சியம் சத்து நமக்குக் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவில் உள்ள கால்சியத்தை எலும்பு கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து தேவை. தினமும் அரை மணி நேரம் உடலில் வெயில் படுவதுபோல நின்றாலே வைட்டமின் டி சத்து கிடைக்கப்பெறலாம்.

எலும்புத் தேய்மானத்துக்கு அறிகுறிகள் உண்டா?

எலும்புத் தேய்மானத்தை நமக்கு உணர்த்தும் அறிகுறிகள் மிகவும் குறைவே. உடற்பயிற்சி, கடின உழைப்பு இல்லாதவர்கள், மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள், கருப்பை நீக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் எலும்புத் தேய்மானத்துக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளவர்கள் என்பதால் இவர்கள் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ளலாம். மூட்டுத் தேய்மானத்தைச் சில அறி குறிகளால் அறிய வாய்ப்புண்டு. கெண்டைக்கால், தொடையில் வலி ஏற்படும். படிக்கட்டில் ஏறும்போது, தரையில் அமர்ந்து எழும்போது, நடக்கும்போது வலியை உணரலாம். தொடர்ந்து ஓய்வாக இருந்தால் காலில் வலி ஏற்படும். இந்த அறிகுறிகளின் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

எலும்புத் தேய்மானத்தைத் தவிர்க்க

உடற்பயிற்சிகளின்மூலம் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதைத் தடுக்கலாம். உடல் எடையைச் சரியாகப் பராமரிப்பது முக்கியம்.  மெனோபாஸுக்குப் பின்னர் கால்சியம் சத்துகள் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொள்வது பிரச்னைக்கான வாய்ப்பு களைக் குறைக்கும்.’’

No comments:

Post a Comment