Sunday, 10 September 2017

திருமண வரம் அருளும் திருக்கல்யாண தரிசனம்!

திருவாதிரை தரிசனம்!

திருப்பூர் மாவட்டம், மடக்குளம் வட்டத்தில், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கொழுமம் ஸ்ரீதாண்டவேஸ்வரர் திருக்கோயில்.
பழநியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது கொழுமம் திருத்தலம்!  
ஸ்ரீநடராஜர் நிகழ்த்திய பல தாண்டவங்களை அறிவோம். இங்கே, மூலவர்... ஸ்ரீதாண்டவேஸ்வரர் எனும் திருநாமத்துடன் லிங்கத் திருமேனியராகத் தரிசனம் தருகிறார். எனவே, இந்தத் தலத்தை தென்சிதம்பரம் என்கின்றனர். இங்கு சிவனாருக்கு மூன்று நட்சத்திரங்கள், மூன்று திதிகள் ஆகியவற்றில் அபிஷேகம் செய்வார்களாம்!  
இங்கே, ஸ்ரீவீர சோழீஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாலபைரவர் ஆகியோரின் திருமேனிகள் சிற்ப நுட்பங்களுடன் அழகுறத் திகழ்கின்றன.
சித்திரை - திருவோண நட்சத்திரம், ஆனி - உத்திரம், மார்கழி - திருவாதிரை ஆகிய நட்சத்திர நாளிலும் புரட்டாசி, ஆவணி மற்றும் மாசி மாதங்களின் சதுர்த்தி திதியிலும் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில், மார்கழி திருவாதிரை அபிஷேகம் சிறப்புக்கு உரியது எனப்போற்றுகின்றனர், பக்தர்கள்!
அதிகாலையில் 3 மணிக்குத் துவங்கி காலை 7 மணி வரை அபிஷேகம் நடைபெறுமாம். 16 வகை அபிஷேகம் நடந்து, பட்டு வஸ்திரத்தில் திருவீதியுலா வரும் ஸ்ரீநடராஜர் கொள்ளை அழகில் ஜொலிப்பார். இந்த நாளில் இங்கு வந்து, ஸ்ரீதாண்டவேஸ்வரரையும் தாண்டவமூர்த்தியான ஸ்ரீநடராஜரையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்தால், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரகன்நாயகி. முதல் நாள், திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறும். அப்போது, திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து, திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை!
திருவாதிரைத் திருவிழாவில் விரதமிருந்து, கொழுமம் தலத்து இறைவனைத் தரிசியுங்கள். திருவாதிரைக் களி நைவேத்தியம் படைத்து, ஸ்ரீநடராஜரை வணங்குங்கள். விவசாயம் செழிக்கும்; தொழில் சிறக்கும். வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் நிறைந்திருக்கும்.

No comments:

Post a Comment