எப்படி என்கிறீர்களா? கடும் மழைக் காலங்களில் சதுரகிரியில் எவருமே மேலே ஏறிச் செல்ல முடியாது. காரணம்- வழியில் குறுக்கிடும் அத்திரி ஊத்து முதலான சில இடங்களில் வெள்ளம் பொங்கிப் பெருகி பாதையின் குறுக்கே ஓடுவதால் எவரும் இதைக் கடந்து மேலே செல்ல முடியாது. சதுரகிரிக்கு அடிக்கடி சென்று வருகிற அன்பர்கள் பெரும்பாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மலை ஏறுவதைத் தவிர்த்து விடுவதுண்டு.
ஆனால், விஷயம் தெரியாமல் பயணிப்பவர்கள், நடக்கிற பாதையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுவதைச் சில மணி நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். வெள்ளம் வடிகிற வழியாகத் தெரியவில்லை என்றால், 'மகாலிங்கமே...' என்று அண்ணாந்து மலையைப் பார்த்துக் கை கூப்பி விட்டுக் கன்னத்தில் போட்டுக் கொண்டு அடிவாரத்துக்குத் திரும்பி விடுவார் கள் (இதையும் மீறி பொறுமையாக அங்கேயே அமர்ந்து வெள்ளம் வடிந்த பின், மலை ஏறிச் செல்லும் முரட்டு பக்தர்களும் இருக்கவே செய்கிறார்கள்). அதனால்தான் சொன்னோம்- ஆகாய கங்கையில் நீர் பொங்கிப் பெருகி வழியும் காட்சியைக் காண்பதற்கு பெரும் பாக்கியம் செய் திருக்க வேண்டும் என்று.
சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் அமைவிடம் பற்றி சித்த புருஷரான கோரக்கர் சொல்வதைப் பார்ப்போமா?
'சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலின் வடதிசைப் பக்கம் செல்கிற பாதை வழியே கூப்பிடு தூரம் சென்றால், அங்கு ஓர் ஆறு வருகிறது. அந்த ஆற்றையும் கடந்து வட திசை செல்கிற பாதையில் இன்னும் சற்று தொலைவு பயணித்தால், அம்பு விடுகிற தொலைவுக்கு அப்பால் அந்தப் பாதையானது, மேற்கு முகமாகச் செடிகள் அடர்ந்த காட்டுக்குள் போகும். அதையும் கடந்து அரை நாழிகை வழித் தொலைவு போனால் பெரிய காவு வருகிறது. அந்தக் காவுக்குள் நுழைந்து அரை நாழிகை வழித் தொலைவில் சந்தன மகாலிங்கம் ஆலயம் இருக்கிறது.
அந்தக் கோயிலுக்கு வட திசை யில் காளி கானலில் இருந்து ஓடை போல தீர்த்தம் வந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதில் தீர்த்த மாடி, சந்தன மகாலிங்கத்தை தரிசித்துக் கொள்ளவும். சந்தன மகாலிங்கத்துக்குக் கூப்பிடு தொலைவில் தென்மேற்குத் திசையில் சட்டை முனிவர் குகை இருக்கிறது.'
சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கோரக்கர் சொன்ன இந்த அமைப்பு இன்றைக்கும் மாறாமல் கிட்டத்தட்ட அப்படியே இருப்பதை இயற்கையின் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். விமானங்கள், சந்நிதிகள், சட்டைநாதர் குகை என்று கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது சந்தன மகாலிங்கம் திருக்கோயில்.
சந்தன மகாலிங்கம் ஆலயத்தைத் தரிசிப்பதற்கு முன், இதன் அமைவிடத்தைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்வோம். சமீப காலத்திய சில சம்பவங்களை அறிந்து கொள்வோம்.
தற்போது சந்தன மகாலிங்கம் கோயில் கொண்டுள்ள இடம், 1990-ஆம் ஆண்டுக்கு முன்வரை நாணல் செடிகள் மண்டிக் கிடந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இங்கு பூஜை செய்யும் பூசாரிகள், நாணல் செடிகளை விலக்கி விட்டுக் கொண்டே வந்து சந்தன மகாலிங்கத்துக்கு பூஜை செய்வார்கள். சந்தன மகாலிங்கத்தைச் சுற்றி ஆகாய கங்கையின் தண்ணீர் எந்நேரமும் சலசலவென ஓடிக் கொண்டே இருக்கும். யானை, புலி, கரடி போன்ற மிருகங்கள் அவ்வப்போது இங்கே தென்படுவதுண்டு.
சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வரும் வயது முதிர்ந்த ஒரு சில அன்பர்கள் சதுரகிரிக்கு வந்து விட்டு, சந்தன மகாலிங்கத்தைத் தரிசிக்காமல் அப்படியே கீழே இறங்கி விடுகிறார்கள்.
சதுரகிரி யாத்திரை என்பது ரெட்டை மகாலிங்கம், பிலாவடி கருப்பர், சுந்தரமூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய அனைத்து தெய்வங்களையும் தரிசித்தால்தான் பூர்த்தி ஆகிறது. அவ்வளவு தொலைவு கஷ்டப்பட்டு மலை ஏறி விட்டு, சதுரகிரி வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்த சந்தன மகாலிங்கத்தைத் தரிசிக்காமல் திரும்பக் கூடாது.
ஒரு காலத்தில் சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து விட்டு வருபவர்கள் சந்தன மகாலிங் கத்தை வழிபட வருவதற்கு ரொம்பவும் சிரமப் படுவார்கள். காரணம்- மிகப் பெரிய யானைக் கூட்டங்கள் சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் அருகே 'டேரா' போட்டு உலா வந்து கொண்டிருக் குமாம். மதிய நேரத்தில் இந்தப் பக்கம் எவருமே வர முடியாதாம்.
யானைகளே கூட்டம் கூட்டமாக வந்து, ஆகாய கங்கை நீரை துதிக்கையில் முகர்ந்து, சந்தன மகா லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வணங்கிய தருணங்களும் உண்டாம். இந்தக் காட்சியைப் பார்த்து தரிசித்த அன்பர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். எனவே, இந்த யானைக் கூட்டத் துக்குப் பயந்தே பக்தர்கள் வராமல் இருந்த கால மும் உண்டு.
தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பக்தர்கள் தைரியமாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்களின் இந்த தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் முக்கிய காரணம்- சந்தன மகாலிங்கத்தின் திருவருள் என்றுதான் சொல்ல வேண்டும்!
No comments:
Post a Comment