Monday, 18 September 2017

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

ங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் மற்றும் யமுனை நதிக்கரையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தால் கிடைக்கிற பலனைவிட, காவிரி நதியில் ஒரேயரு முழுக்குப் போட்டால், பலமடங்கு பலன் கிடைக்கும்; நம் பாவங்கள் யாவும் பறந்தோடிவிடும் என்கிறது சாஸ்திரம்! அதுமட்டுமா? காவிரி நீரில் பட்டு வருகிற காற்றானது, நம் உடலில் பட்டாலே மோட்சம் உறுதி எனப் போற்றுகிறது. 'நம்மால் ஆற்றில் இறங்கமுடியாதே... அட, பக்கத்தில்கூடப் போவது கஷ்டமாயிற்றே!’ என்று தள்ளி நின்று காவிரியைப் பார்ப்பவரா, நீங்கள்?! கவலை வேண்டாம்... அதுவே புண்ணியம் தரும் என்கின்றனர் சான்றோர்கள்.
கர்நாடக மாநிலத்தில், காவிரி பாய்ந்தோடுகிற அந்தத் தலத்தை கௌதம க்ஷேத்திரம், ஸ்ரீரங்கப்பட்டினம் எனப் பெருமிதத்துடன் சொல்கின்றனர் வைஷ்ணவப் பெருமக்கள். இங்கே, ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டபடி சேவை சாதிக்கிறார் ஸ்ரீரங்கநாத பெருமாள்.
கந்தர்வ மன்னர்களான சித்திரசேனன், திச்திரரதன் என்போர், இந்திரனின் மனைவியான சசிதேவியின்மீது தவறான ஆசை கொண்டனர். இதையறிந்த இந்திரன் கோபம் கொண்டு அவர்களைச் சபித்து, ராட்சசர்கள் ஆக்கினான். அதையடுத்து, அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டினம் வந்து, துலா மாதத்தின் பௌர்ணமி தினத்தில், காவிரியில் நீராடி, அரங்கனைத் தரிசித்தனர். அவ்வளவுதான்... அவர்கள் பாவங்கள் நீங்கி, சுய உருவம் பெற்று, தேவலோகம் சேர்ந்தனர்.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஸ்ரீஆதிரங்கநாதர், ஷிவண சமுத்திரத்தில் மத்திய ரங்கநாதர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் அந்திய ரங்கநாதர் ஆகியோர் குடிகொண்டிருக்கும் கோயில் களுக்கு இரண்டு சிறப்புகள், ஒற்றுமைகள்... மூன்று தலங்களும் காவிரியை ஒட்டியே அமைந்துள்ளன. அடுத்து... மூன்று தலங்களின் மூர்த்தங்களும் சுயம்புவாகத் தோன்றியவை!
திருமாலை எண்ணித் தவமிருந்தாள் காவிரிதேவி. அவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், 'கங்கையைவிட காவிரி நதி, புனிதத் தன்மை கொண்டதாகட்டும்; இந்தத் தலம் (ஸ்ரீரங்கப்பட்டினம்) புண்ணிய க்ஷேத்திரமாகட்டும்’ என வரம் தந்தருளினார். பிறகு, காவிரிதேவி கேட்டுக் கொண்டபடி, அந்தத் தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்மழை பொழியச் சம்மதித்தார், அரங்கன். அதன்படி, ஆதிசேஷனில் சயனித்த திருக்கோலத்தில் அங்கே சுயம்புவாகத் தோன்றினாராம், பெருமாள். அதைக் கண்ட ஸ்ரீலட்சுமி, காவிரிதேவியுடன் இறைவனை வழி பட்டு, அங்கேயே குடிகொண்டாள் என்கிறது ஸ்தல புராணம்.
ஒருகாலத்தில், கடும் பஞ்சம் ஏற்பட... நித்தியப்படி அனுஷ்டானங்களைச் செய்யக்கூடத் தண்ணீரின்றி அவதிப்பட்டனர் முனிவர் பெருமக்கள். அப்போது கோதாவரி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வசித்து வந்த  கௌதமர், முனிவர்களை வரவேற்று, விருந்தளித்தார். அவரைக் கண்டு பொறாமைப்பட்ட முனிவர்கள் ஒன்று சேர்ந்து, அவரை அங்கிருந்து விரட்டிவிட்டு, அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தனர். மாயப்பசு ஒன்றை உருவாக்கி, கௌதம முனிவரின் வயல்வெளியில் மேயவிட்டனர்.  அதைக் கண்ட கௌதம முனிவர், பசுவை விரட்டும்படி சீடர்களுக்கு உத்தரவிட்டனர். அதையடுத்து அந்தப் பசு, கௌதமரை நோக்கி ஓடி வந்தது; அவர் காலடிக்கு வந்த தும், அப்படியே உயிரை விட்டது. அங்கேயிருந்த முனிவர் கூட்டம், 'கௌதமர் பசுவைக் கொன்றுவிட்டார்’ எனக் கூச்சலிட்டனர். பிறகு, இவை அனைத்தும் முனிவர் களின் செயல் என அறிந்த கௌதமர், கடும் கோபம் கொண்டார்; அவர்களைச் சபித்தார்.
அதன் பின்னர், யாத்திரை புறப்பட்ட கௌதமர், ஸ்ரீரங்கத்தை அடைந்தார்; பெருமாளைத் தியானித்தார். அவருக்கு திருக்காட்சி தந்த திருமால், 'விபீஷண ஆழ்வார் எனக்கு பணிவிடை செய்த புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் செல்வாயாக!’ என அருளினார். அதன்படி, தனது சீடர் பெருமக்களுடன் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு வந்தவர், அங்கே காவிரி நதிக்கரையில் கடும் தவம் புரிந்தார்; யாகங்கள் மேற்கொண்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், 'இனி இந்த இடம் கௌதம க்ஷேத்திரம் என்று பெயர் பெறும்; ஆலயம் பிரம்மானந்த விமானம் கொண்ட திருச்சந்நிதியுடன் திகழும்’ என ஆசீர்வதித்தார். பிறகு, நாரதரிடம் பாஞ்சராத்ர வழிமுறைகளை அறிந்துகொண்டு, எம்பெருமாளை வழிபட்டார், கௌதமர். அப்படி அவர் வழிபட்ட புண்ணிய நாள், 'ஸ்ரீரங்க ஜயந்தி’ என விமரிசை யாக இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கநாதர் கோயிலின் உட்பகுதி, கி.பி.817-ல், தாசி குலப் பெண்மணியான ஹம்பி என்பவளாலும், நவரங்க மண்டபம் மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி மகாத்துவாரத்தின் இடப் பாகமாக ஓர் ஆலயம் (கி.பி.894-ல்) ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆட்சி செய்த கங்கை வம்சத்தில் வந்த திருமாலையா என்பவராலும் கட்டப்பட்டதாம். கி.பி.1117-ல், திருச்சி ஸ்ரீரங்கத் திலிருந்து, அதாவது சோழ தேசத்தில் இருந்து அங்கே வந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ஆட்சியில் இருந்த, ஹொய்சாள பட்டிதேவன் என்பவன், சமணத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அவனைத் தனது பக்தியாலும் சாதுர்யத்தாலும் வென்று, வைஷ்ணவனாக்கி, விஷ்ணுவர்த்தன நாராயணன் எனும் திருநாமமும் சூட்டினார், ராமானுஜர். அதில் மகிழ்ந்து நெகிழ்ந்த மன்னன், எட்டு கிராமங்களையும் ஏராளமான செல்வங் களையும் தானமாக வழங்கினான். அவற்றைக் கொண்டு, சிறப்பானதொரு கைங்கர்யத்தைச் செய்து, ஆலயத்தை நிர்வகிப்பதற்கு உரிய நபர்களையும் நியமித்தார், ராமானுஜர்.
ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் முதலானோருக்கு சந்நிதிகள் இங்கு உள்ளன. மகாவிஷ்ணுவின் 24 திருக்கோலங்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன.
'பூவுலகில், இந்தத் தலத்துக்கு நிகரான க்ஷேத்திரம் எதுவுமில்லை’ என பிரம்மதேவர், நாரத மாமுனிக்கு அருளியதாகச் சொல்கிறது புராணம். அப்பேர்ப்பட்ட ஆலயத்தையும் அங்கே குடிகொண்டிருக்கிற ரங்கநாதரையும் நீங்களும் தரிசிக்க வேண்டாமா?!

திரிரங்க தரிசனம்!
''காலையில் ஸ்ரீரங்கப்பட்டினத்து ஆதி ரங்கநாதரைத் தரிசித்து விட்டு, அருகில் உள்ள ஷிவண சமுத்திரத்தில் கோயில் கொண்டிருக்கும் மத்திய ரங்கநாதரை வணங்கிவிட்டு, தமிழகத்தில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து அரங்கனையும் அதே நாளில் ஸேவித்தால், வைகுண்டம் சென்று நாராயணனைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை, 'திரிரங்க தரிசனம்’ என்பார்கள்'' 
''எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்யும் தலம் இது; இங்கு வந்து தரிசித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்; காரியங்கள் யாவும் கைகூடும்!'' .
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், மைசூரில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில்  உள்ளது ஸ்ரீரங்கப்பட்டினம், காலை 7:30 முதல் மதியம் 1:30 மணி வரை; மாலை 4  முதல் இரவு 8 மணி வரை கோயில் நடைதிறந்திருக்கும்.
அரங்கனின் அருளால்... பாய்ந்தோடியது வெள்ளம்!
மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாகத் திகழ்ந்த ஸ்ரீரங்கப்பட்டினம், பிரமாண்டமான கோட்டை யும், ஊரைச் சுற்றி காவிரியும் என வளம் வாய்ந்த தேசமாகத் திகழ்ந்தது. 9-ஆம் நூற்றாண்டில், கங்க மன்னர்களின் ஆட்சியில், ஸ்ரீரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதையடுத்து 300 வருடங்களுக்குப் பிறகு, கோயில் விரிவுபடுத்தப்பட்டு, கலைநயம் மிகுந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல், ஹொய்சாளர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
கி.பி.1760 மற்றும் 61-ஆம் வருடங்களில், மைசூர் மன்னர் ஸ்ரீஇம்மடி கிருஷ்ணராஜ உடையாரிடம் படைத்தளபதியாக இருந்த வன் ஹைதர் அலி. அவனது கனவில் ஸ்ரீரங்கநாதர் அடிக்கடி வருவாராம்; அவனும், எதைச் செய்வதாக இருந்தாலும் அரங்கனிடம் கேட்டுச் சம்மதம் வாங்கிய பிறகே, காரியத்தில் ஈடுபடுவானாம்.
ஒருமுறை, எதிரிகள் பெரும்படையுடன் தாக்க வந்தபோது, தனது படைகளை இக்கரைக்குத் திருப்பிக் கொண்டு வந்தான் ஹைதர் அலி. அவனைப் பின்தொடர்ந்த எதிரிப்படைகள் காவிரியில் கால் வைக்க... திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். ஸ்ரீரங்கப்பட்டினத்து அரங்கனை பூஜைகள் செய்து வணங்கி விட்டு, திரும்பவும் சென்று, எதிரிப்படையை வீழ்த்தி, வெற்றியை எட்டினான் ஹைதர் அலி.
ஹைதரை அடுத்து படைத் தலைவனாகப் பொறுப்பேற்ற திப்பு, சில நாட்களிலேயே, மன்னரைத் துரத்திவிட்டுத் தானே அரியணை ஏறினான்; திப்பு சுல்தான் எனப் பெயரெடுத்தான். ஹைதரைப் போலவே திப்புசுல்தானும் அரங்கனின் மீது பெரும் பக்தி கொண்டிருந்தான்; அரங்கனுக்கு ஏராளமான ஆபரணங்களைச் சூட்டி அழகு பார்த்தான் என்பது வரலாறு.

No comments:

Post a Comment