Sunday, 10 September 2017

வேலும் மயிலும் துணை!

மந்திர வடிவேல் வருக வருக!

முருகப்பெருமான், ஸ்ரீவள்ளியை வள்ளிமலையில் திருமணம் செய்த பிறகு, திருத்தணிக்குச் சென்றதாகச் சொல்கிறது புராணம். அப்படிச் செல்லும் வழியில், இரண்டு இடங்களில் கந்தக் கடவுள் தங்கினார். அப்படி, வனப்பகுதியில் அவர் தங்கிய பகுதி விடியங்காடு என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு இடம், வள்ளியை அம்மையாகவும், அப்பன் முருகப்பனைத் தந்தையாகவும் ஏற்ற பக்தர்களால், ஸ்ரீவள்ளியின் நினைவாக அம்மையார்குப்பம் என அழைக்கப்படுகிறது.
சோளிங்கர்- திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ளது ஆர்.கே.பேட்டை. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது அம்மையார்குப்பம். ஊரின் மையப்பகுதியில், மயில்வாகனன் முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது கோயில். உள்ளே நுழைந்ததுமே அஷ்டலட்சுமியரும் சந்நிதி கொண்டிருப்பது தனிச்சிறப்பு! கந்தசஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை என கந்தக் கடவுளுக்கு உரிய விசேஷ தினங்களில், இந்தத் தலத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பலமுறை வந்து, ஸ்ரீசுப்ரமணியரை கண்ணாரத் தரிசித்து, கதாகாலட்சேபங்களை நிகழ்த்தியுள்ளார் என்கின்றனர் பக்தர்கள். இளம் வயதில், இந்த ஊரிலேயே அவர் சில வருடங்கள் தங்கி இருந்ததாகவும், அப்போது முருகனின் சந்நிதிக்கு அடிக்கடி வந்து தரிசித்ததாகவும் சொல்கின் றனர் ஊர்க்காரர்கள். எனவே, அவரைப் போற்றும் வகையில், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலையும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீசுப்ரமணியர். ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன், பன்னிரண்டு திருக்கரங்களும் ஆறு முகங்களுமாக, வேலும் மயிலும் கொண்டு கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தரும் கந்தக் கடவுளை நாளெல்லாம் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்! முருகப்பெருமானின் சந்நிதியில் நின்று, நம் குறைகளைச் சொல்லிப் பிரார்த்தித்தால் போதும்... எல்லா வேதனைகளும் எங்கோ போய்விடும்; மனதுள் அமைதியும் நிம்மதியும் தவழும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியில், குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சியின்போது, சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ பூஜைகளும் நடைபெறும். அந்த நாளில், சுற்றுவட்டாரங்களில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்களாம்.
மயில்வாகனன் முருகக்கடவுள் குடிகொண்டிருக்கும் கோயிலின் இன்னொரு சிறப்பு... இங்கே, ஆலய வளாகத்தில் சுற்றித் திரியும் மயில்கள்தான். இந்தக் கோயிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மயில்கள் இருக்கின்றன. பிராகாரங்களிலும் சந்நிதி மண்டபங்களிலும் எங்கு திரும்பினாலும் மயில்களைக் காணலாம். அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நம் பாவமும் துக்கமும் பறந்தோடிவிடும் எனச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
இங்கு, அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்தலிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீஅமிர்தவல்லிக்கு பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, திருவாதிரை என முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் அமர்க்களப் படுகின்றன. மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாருக்கு நடைபெறும் எட்டுகால பூஜையும் மிகவும் விசேஷம்!
வைகாசி விசாகம் மற்றும் ஆடிக் கிருத்திகை ஆகிய திருநாட்களில் இங்கு வந்து, வேல் கொண்டு வினைதீர்க்கும் குமரக்கடவுளைத் தரிசித்து, சண்முகக் கவசம் பாடினால், தீராத நோயும் தீரும்; இழந்த பதவியைப் பெறலாம் என்பது ஐதீகம்!
குழந்தை பாக்கியம் இல்லையே என வேதனைப் படுவோர், சஷ்டி விரதம் மேற்கொண்டு, ஆலயத்துக்கு வந்து அடிப்பிரதட்சிணம் செய்து, சிவமைந்தனை வழிபட... குமரனைப் போலவே, அழகும் அறிவும் ஒருசேர, குழந்தை பிறக்கும் எனப் போற்றுகின்றனர், பெண்கள்.
மாசி மக நன்னாளில், திருவிழா கோலாகலமாக நடைபெறும். உத்ஸவம், அபிஷேகம், தேரோட்டம் எனக் கோயிலே களைகட்டியிருக்கும். ஆடிக் கிருத்திகையின்போது பால் குடம், காவடி எடுத்தல் எனத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்து கின்றனர் பக்தர்கள். அந்த நாளில், ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, ஸ்ரீசுப்ரமணி யரைத் தரிசித்துச் செல்கின்றனர். பிள்ளைப் பாக்கியம் வேண்டி, அது நிறைவேறிய அன்பர்கள், குழந்தையின் எடைக்கு எடை, காசு, பழங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
ஸ்ரீசுப்ரமணியரின் சந்நிதியில், அவரைச் சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தால், அந்தத் தம்பதி ஒற்றுமையுடன் திகழ்வர்; வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்; எந்தத் தீய சக்தியும் அவர்களை அண்டாதவாறு வேலும் மயிலும் துணை நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
அம்மையார்குப்பம் ஸ்ரீசுப்ரமணியரை வணங்குங்கள்; வேலும் மயிலும் நமக்குத் துணை உண்டு; இனி, பயமில்லை!

No comments:

Post a Comment