Friday 22 September 2017

நகங்கள் காட்டும் நோய்க்குறிகள்!


‘அகத்தின் அழகு நகத்தில் தெரியும்’ எனும் மருத்துவ மொழி அறிவீர்களா? ஆம்,  நகங்கள் நம் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி.  

விரல் நுனி வரை பரவி உள்ள நரம்பு மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும் இயற்கை அரண்தான் நகங்கள். நகத்தில் நான்கு முக்கியமான பாகங்கள் உள்ளன. வெளிப்புறம் தெரியக்கூடியது நெயில் பிளேட், அதற்கு அடியில் இருக்கும் சதை நெயில் பெட், விரலுக்கு உள்ளே இருப்பது நெயில் மேட்ரிக்ஸ், இதுவே நக செல்களை உருவாக்கி, நகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. நம் தோலுக்கும் நகத்துக்கும் இடையே வெள்ளையாக, பிறை நிலா போன்று இருப்பது லூனுலா (Lunula). இவை ஒவ்வொன்றுமே நமக்கு வரக்கூடிய நோய்க்குறிகளைக் காட்டக்கூடியவை.
நகத்தில் படுக்கையான, அழுத்தினாலும் மறையாத வெள்ளைக்கோடுகள் இருந்தால், அது ஆர்சனிக் நச்சு உடலில் இருப்பதற்கான அறிகுறி. 

புரதச்சத்து குறைபாட்டாலும் நகத்தில் வெள்ளைக் கோடுகள் உருவாகும். ஆனால், இது அழுத்தினால் மறைந்துவிடும். 

நகத்தில் சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் செங்குத்தான கோடுகள் இருந்தால், இதயத்தில் உள்ள தொற்றைக் குறிக்கும். 

தோலை ஒட்டி வேகத்தடை போன்ற அமைப்பு நகத்தில் ஏற்பட்டால், உடலில் ஏதோ ஓர் உறுப்பு பாதித்துள்ளது என அர்த்தம். அந்த நோய் சரியாகும்போது, அந்த வேகத்தடை போன்ற நக அமைப்பு, நுனிப்பகுதியை அடைந்து மறைந்துவிடும்.  

தொடர்ச்சியாக மெனிக்யூர், பெடிக்யூர் செய்பவர்களுக்கும், தொடர்ந்து தண்ணீரில் வேலை பார்ப்பவர்களுக்கும் நகம் இரண்டு அடுக்காக இருக்கும்.
சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு நகமானது நகப்படுக்கையில் இருந்து விலகி இருக்கும்.  

இரும்புச்சத்துக் குறைபாடு உடையவர்களுக்கு, நகமானது கரண்டி போன்ற அமைப்பிலும், சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கு நகம் ஆரம்பிக்கும் இடத்தில் ஆரோக்கியமாகவும், பாதிக்கு மேல் காவி நிறத்திலும் மாறி இருக்கும். 

நுரையீரலில் தொந்தரவு இருப்பவர்களுக்கும், அதிகம் புகைபிடிப்பவர்களுக்கும் நகம் வீங்கியும், புடைத்தும் காணப்படும். இவை, நுரையீரல் கெட்டுப்போய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அறிகுறி. 

கல்லீரலில் குறைபாடு இருந்தால் நகம் ஆரம்பிக்கும் முதல் பாதி வெளுத்தும், மீதி வழக்கமான நிலையிலும்,  லூனுலா நீல நிறத்திலும் காணப்படும். இது கல்லீரலில் காப்பர் அதிகம் இருப்பதற்கான குறியீடு.  

மேலும், சிலருக்கு மஞ்சள் நிற நகம் இருந்தால்,  அது பூஞ்சையினால் ஏற்படும் பாதிப்பு. ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும். ஆனால், பிறவியிலிருந்தே இருந்தால்,அவர்களுக்கும் நுரையீரல் தொந்தரவு இருக்கும். 

எல்லோருக்கும் சகஜமாக வரக்கூடியது நகச்சுத்தி.  இது கிருமியினால் ஏற்படும்.  உடனடியாக ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.  எலுமிச்சை வைப்பதெல்லாம் சரியான சிகிச்சை கிடையாது. இதனால், சிலருக்கு நகசுத்தி இருந்த இடத்தில் குழி ஏற்படும்.  ஆதலால், நகங்களை நன்கு பராமரிப்பது அவசியம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.
நகங்களை வெட்டும்போது, சதையோடு ஒட்டி இருக்கும் தோலுடன் சேர்த்து வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால், மீண்டும் நகம் வளரும்போது வலியை உண்டாக்கும். 

சாப்பிட்ட பின், விளையாடிய பின், வேதிப்பொருட்கள், ரசா யனம் போன்றவற்றோடு தொடர் புடைய வேலை செய்தபின், உடனடியாகக் கைகளை ஹேண்ட் வாஷ் போட்டுக் கழுவுவது சிறந்தது. 

நகங்களின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளைச் சுத்தம்செய்ய வேண்டும். ஏனெனில், அங்கு நுண்ணுயிரிகள் இருக்கும். நகங்களுக்கு எண்ணெய் பூசியும் பராமரிக்கலாம்.


நகம் - மூட்டை பாதிக்கும் பெட்டல்லா சிண்ட்ரோம்

லட்சத்தில் நான்கு பேருக்கு வரக்கூடிய ஒரு நோய், `நெயில் பெட்டல்லா சிண்ட்ரோம்’. நகம் மற்றும் எலும்புகளை மட்டுமே தாக்கக்கூடிய இது, ஒரு பரம்பரை நோய். குரோமோசோம் ஒன்பதில் வரக்கூடிய குறைபாட்டின் வெளிப்பாடு. குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால், அவருடைய இரண்டாவது, நான்காவது, எட்டாவது குழந்தைகளில் ஒருவருக்கு வரக்கூடும். பெரும்பாலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு நகம் இல்லாமல் இருக்கும் அல்லது சொத்தையாக இருக்கும். முக்கியமாக, கட்டைவிரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். மற்ற விரல்கள் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்கும். கால் விரல்களிலும் இதுபோன்ற பாதிப்புக்கு வாய்ப்புகள் உள்ளன.  

எலும்பைப் பொறுத்தவரை காலை மடக்கி உட்கார உதவும் எலும்பு சின்னதாக இருக்கும். 20 சதவிகிதம் பேருக்கு அந்த எலும்பே இருக்காது. கால் பகுதியில் மேல் எலும்புக்கும், கீழ் எலும்புக்கும் மூட்டு எலும்பே ஆதரவாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு, இடுப்புப் பகுதியின் பின்னால் இருக்கக்கூடிய எலும்பு கூர்மையாக இருக்கும். இந்த எலும்பு பாதித்தவர்கள் வேகமாக நடக்கவோ, உட்காரவோ முடியாமல் சிரமப்படுவர். நகம், எலும்பு பாதிப்புகளைத் தாண்டி, சிறுநீரகச் செயல் இழப்பு, தைராய்டு குறைபாடுகளும் வரலாம். நெயில் பெட்டல்லா சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நகத்துக்கும் தோலுக்கும் இடையில் இருக்கக்கூடிய பிறை நிலா போன்ற லூனுலாவானது முக்கோண வடிவத்தில் காணப்படும். 

இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை. எலும்புகளுக்கு மட்டும் அறுவைசிகிச்சை மற்றும் பிசியோதெரப்பி செய்வதன் மூலம் அவர்களின் இயல்பான வாழ்வைத் தொடரலாம். நகத்துக்கு சிகிச்சை இல்லை. செயற்கை நகம், நகப்பூச்சு போன்றவை உபயோகித்து மறைத்துக்கொள்ளலாமே தவிர, மருந்து, மாத்திரைகளால் பழைய நகத்தைப் பெற முடியாது.

நகம் பராமரிப்பு

நகங்களைச் சுத்தமாகவும், ஈரத்தன்மை இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஈரத்தன்மை இருக்கும் இடங்களில் பாக்டீரியா வளரத் தொடங்கும். அதிக நேரம் தண்ணீரில் வேலை பார்க்கக் கூடாது. இதனால், நகத்தில் பிளவு உண்டாகும். சருமத்துக்கு ஒவ்வாத ரசாயனம் மற்றும் டிடெர்ஜென்ட் உபயோகிக்கும்போது, ரப்பர் கையுறைகள் அணிவது நல்லது.  

அவரவர் நக வளர்ச்சியைப் பொறுத்து மெனிக்யூர் செய்துகொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது, நல்ல கூர்மையான கத்தரிகொண்டு நகத்தை நேர்கோடாக முதலில் வெட்ட வேண்டும். பின் இரு முனையையும் ஒழுங்கமைத்து ‘U’ வடிவில் வெட்டி அழகாக்க வேண்டும்.
மாய்ஸ்சரைசிங் லோஷன் தடவும்போது நகத்துக்கும் சேர்த்துத் தடவலாம். 

கடினமான நகங்கள் இருப்பவர்கள், இரவில் படுக்கும் முன் நல்லெண்ணையை நகங்களுக்குப் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால், நகங்கள் மிருதுவாகவும் பளப்பளப்பாகவும் மாறிவிடும்.

துளசி மற்றும் புதினாவை சமஅளவு எடுத்து, தண்ணீரில் கொதிக்கவைத்து, அதில் நகங்களை வைத்திருந்தால், நகத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும்.  

கால்சியம் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை உண்பது நகத்துக்கு நல்லது என்பதால், கீரைகள், நட்ஸ், சீட்ஸ், முட்டை, மீன் போன்றவற்றைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

அதிக தண்ணீர் குடிப்பது நகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது.  

நகம் அடிக்கடி உடைபவர்கள் ஆலிவ் எண்ணையை மிதமாகச் சூடுபடுத்தி, நகங்களில் பூசுவதால், நகம் உடைவது தடுக்கப்படும். 

நகங்களை வளர வளர சரியான அளவில் வெட்ட வேண்டும். பெரிதாக வளர்த்தால் அடிபடவும், நகம் உடைந்து ரத்தம் வரவும் வாய்ப்பு உள்ளது.  

நகத்தைவைத்துச் சுரண்டுவது, நகத்தைக்கொண்டு பொருளை உடைப்பது, கிழிப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. இது நகத்துக்குக் கேடு விளைவிக்கும்.  

நகத்தைப் பற்களால் கடிப்பது, நகத்தை உரித்து எடுப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

No comments:

Post a Comment