தன்னைக் கண் விழிக்கச் செய்த பஜனை முழக்கத்தையும், சுந்தரலிங்கம் சந்நிதியின் முன் பிரமாண்டமான ஒளி வெள்ளத் தையும் கண்டு மிரண்ட சுந்தரம், பதைபதைப்புடன் எழுந்து நடந்தார். அந்த நேரத்தில் சுந்தரம் தன்னிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க கால்கள் தகராறு செய்தன. இதோ, அவரின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டும் தொலைவில் பஜனை முழக்கம் துல்லியமாகக் கேட்கிறது; பார்க்க முடிகிறது.
காவி நிற உடை தரித்த சாதுக்கள், வட்டம் என்று வர்ணிக்க முடியாத ஒரு வடிவத்திலும், சதுரம் என்று குறிப்பிட முடியாத ஒரு அமைப்பிலும் _ ஆனால், மிக அழகாக... நேர்த்தியாக சுந்தர லிங்கம் சந்நிதியின் முன் கூடி இருந்ததைப் பார்த்து சுந்தரம் பிரமித்துப் போய் விட்டார்.
நவராத்திரி திருவிழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மலையை விட்டு நண்பகல் வேளையிலேயே இறங்கி விட்டனர் என்பதை சுந்தரம் நன்கு அறிவார். மகாலிங்கம் கோயில் பூசாரிகள் தங்களுக்கான இடங்களில், பத்து நாள் திருவிழா ஓய்ந்த களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் எவரும் மாலை வேளையில் மலைக்கு வரவில்லை. அதனால்தான், முன்னறிவிப்பே இல்லாமல் மலைக்கு வந்து சேர்ந்த இந்த பஜனைக் கூட்டத்தை சுந்தர லிங்கம் சந்நிதி முன் பார்த்த சுந்தரம், வெலவெலத்துப் போய் விட்டார்.
பஜனை நடக்கும் இடத்தை நோக்கி சுந்தரத் தின் கால்கள் தளர்வாக நடை போட்டன. மத்தளத்தின் சத்தமும் டோலக்கின் இசையும் சன்னமாகக் காற்றில் மிதந்து வந்தது. பஜனை நடக்கும் இடத்தை சுந்தரம் இன்னும் நெருங்கவில்லை. சுமார் ஐம்பதடி தொலைவில் அவர் இருந்திருக்கலாம்.
கழுத்தில் புரளும் ருத்திராட்சமும், மேனியில் துலங்கும் திருநீறும் பளீரிட, நமக்கெல்லாம் நாயகனான அந்த நமசிவாயனின் நாமத்தை ராகத்துடன் இசைத்தபடி பஜனை, களை கட்டி இருந்தது. கணீரென்ற குரலும் கலீரென்ற இசையும் ஒன்றுக்கொன்று சளைத்தது போல் இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு கம்பீரம் காட்டின. சதுரகிரி வனத்தில் இருந்த ஒவ்வொரு புல் பூண்டும், நெடிதுயர்ந்த மரங்களும், உயிர்வாழ் ஜந்துக்களும் அந்த நாம கீதத்தில் லயித்திருந்தன போலும். வேறு எத்தகைய ஓர் அசைவும் அப்போது இல்லை, சுந்தரத்தின் தளர்வான நடமாட்டம் தவிர.
பஜனை முழக்கமாக ஓங்கி உயர்ந்து வந்த வெங்கலக் குரலோசையில் தன்னை மறந்து, சுந்தரலிங்கம் சந்நிதியின் மிக அருகே சென்ற சுந்தரத்துக்கு, அங்கே வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் முகமும், கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆலாபனை செய்து பாடல்களை ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தவர்களின் முகமும் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரையும் கண் கொட்டாமல் பார்த்தார்; மனதில் என்னவோ தோன்ற... ஒரு கட்டத் தில் அந்தக் குழுவினரைப் பார்த்துக் கன்னத்திலும் போட்டுக் கொண்டார்.
சதுரகிரியை விட்டு எல்லோரும் கிளம்பி விட்ட அந்த நண்பகல் வேளையில் ஒரே ஒரு துறவி மட்டும் சுந்தர லிங்கம் சந்நிதிக்கு எதிரே அமர்ந்திருப்பதைப் பார்த்தார் அல்லவா? அந்தத் துறவியிடம் கூட, ‘சாமீ... பிரசாதம் சாப்பிடுங்க. சுந்தர லிங்கத்துக்குக் காணிக்கையா வந்த தேங்காய். வெல்லம் கலந்தது. டேஸ்ட்டா இருக்கும்!’ என்று பவ்யமாக நீட்டினார் அல்லவா? அதற்கு அந்தத் துறவி கூட ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டு, சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தாரே... அதே துறவி! அவர்தான் இந்த பிரமாண்ட பஜனை கோஷ்டிக்கு நடுவே சம்மணமிட்டு அமர்ந்து, ஒட்டுமொத்த குழுவையே தன் கண்களால் இயக்கிக் கொண்டிருந்தார்! குழுவை மட்டுமல்ல... கோடானு கோடி உயிர்கள் வாழும் இந்த உலகத்தையே இயக்குபவரும் அவர்தான் என்பதை ஒரு சில விநாடிகளுக்குப் பிறகே சுந்தரம் உணர்ந்தார்.
ஆயிரம் வாட்ஸ் பல்புகள் அனைத்தும் ஒரே கணத்தில் ஆஃப் ஆகிப் போனது போல் இருந்தது. மையிருட்டு. ஒட்டு மொத்த வனமே இருளாகிப் போனது. இரவு வேளையில் பூஜைக்குப் பின் ஏற்றி வைத்த எண்ணெய் விளக்கு, கருவறையில் சுந்தர லிங்கத்துக்கு அருகே செந்நிறத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவற்றுள் சில மட்டும், பெயர் சொல்லும்படி தனித்துத் தெரிந்தன. ‘அட... மத்தியானம் நான் கொடுத்த தேங்காய்த் துருவலைப் புன்னகையோடு வாங்கிச் சாப்பிட்ட சாமீ... இவருதான் இந்த பஜனைக் கோஷ்டிக்கே தலைவரா... எந்த ஊரா இருக்கும்... கோவில்பட்டி? ராஜபாளையம்? ஸ்ரீவில்லிபுத்தூர்?’ என்று சிந்தித்த சுந்தரம், அவரையே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து துறவியை நெருங்கி, ‘‘சாமீமீ.....’’ என்று உருக்கமாகக் குரல் கொடுத்த அந்த விநாடியில், சுந்தரத்துக்கு உலுக்கிப் போட்டது உடம்பு.
சுந்தர லிங்கம் சந்நிதிக்கு முன் எவருமே இல்லை. சற்று முன், தன் கண்களால் மிகப் பெரிய பஜனை கோஷ்டியினர், அமுத கானம் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்ட சுந்தரத்துக்கு இந்த வெறுமையான காட்சி மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அப்படி என்றால், சில விநாடிகளுக்கு முன் தான் கண்டு வியந்த காட்சி..? மதியம் தன்னிடம் வெல்லம் கலந்த தேங்காய்த் துருவல் வாங் கிச் சாப்பிட்ட அந்தத் துறவி யார்?
நடந்து முடிந்த இந்த சம்பவங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் சுந்தர லிங்கத்தைப் பார்த்துக் கதறினார் சுந்தரம். தரையில் விழுந்து ஒற்றை ஆளாக ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘மகாலிங்கமே... மலைமேல் அருளாட்சி புரியும் மகேசனே... மனித ரூபத்தில் வந்து நீ நடத்திய நாடகத்தைக் காணும் அற்புதப் பேறை எனக்கு அளித்தாயே... உனக்கு உதவிகள் செய்ய எத்தனையோ அன்பர்கள் காத்திருக்கும்போது எளியவனான என்னைத் தேடி வந்தாயே... அன்புடன் நான் கொடுத்த தேங்காய்த் துருவலை வாங்கிச் சாப்பிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாயே... ஆனால், பஜனை நடக்கும் வேளையில் புகுந்து உன் கானத்தைத் தடுத்து விட்டேனே... என்னை மன்னித்து விடு... நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னை, பஜனை முழக்கத்தால் எழச் செய்ததும் நீதான்! இந்த சதுரகிரியில் வாழும் சித்தர்க ளுடன் நீ நடத்தும் நாம கோஷங்களை நான் காணச் செய்யும் பாக்கியத்தை அளித்ததும் நீதான்!’’ என்று அரற்றினார். நண்பகலில் தேங்காய்த் துருவல் சாப்பிட்டதும், நடுநிசியில் பஜனை முழக்கம் செய்ததும், சாட்சாத் அந்த மகாலிங்கம் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சந்நிதிகளில் பணி புரியும் பூசாரிகள் கூட நள்ளிரவு நேரத்தில், சுந்தர லிங்கத்தின் சந்நிதி அருகே வர மாட்டார்கள். சித்தர்கள் அந்த நேரத்தில் வழிபடவும் வரலாம்; வாய்ப் பாட்டு பாடவும் வரலாம். பல வருடங்களுக்கு முன் இங்கு பணி புரிந்து வந்த ஒரு பூசாரிக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பெரியவர் நம் மிடம் பகிர்ந்து கொண்டார்: ‘‘சுந்தர லிங்கம் சந்நிதிக்குப் பக்கத்துல படுத்திருந்த அந்தப் பூசாரி நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். சுந்தர லிங்கம் சந்நிதிக்கு அருகே இருக்கும் படிக்கட்டுகளில் சுமார் ஏழடி உயர முள்ள ஒருவர் இறங்கிச் செல்வதைப் பார்த்தார். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வக்கோளாறில் பின்னாடியே சென்றார். நான்கு படி கீழிறங்கிய அந்த உருவம், சட்டென்று திரும்பி பூசாரியைப் பார்க்க... திடுக்கிட்டார். அந்த உருவத்தின் கண்கள் பளிங்கு போல் இருந்தது. கண்களில் இருந்து தகதகவென ஒளி வெள்ளம் பாய்ந்து வந்தது. அதைச் சில விநாடிகள் தொடர்ந்து பார்த்ததால், பூசாரியின் கண்கள் ஏகத்துக்கும் கூசின. இரண்டு கண்களையும் கைகளால் பொத்திக் கொண்டு, தனது இருப்பிடத்துக்கு ஓடியே வந்து விட்டார்...’’ _ இதுபோல் நிறைய அனுப வங்களை மலையில் வாழ்ந்தவர்களும், மலைக்கு வந்து செல்பவர்களும் சொல்கிறார்கள்.
அடுத்து, சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்குச் செல்வோம். நமக்கு வலப் பக்கமும், தனக்கு இடப் பக்கமும் சாய்ந்த நிலையில் காணப்படும் இந்த லிங்க வடிவத்தை மகாலிங்கம் என்றும் குறிப்பிடுவார்கள். இவரை வைத்து இந்த மலையை ‘மகாலிங்க மலை’ என்று சொல்லும் சில பழைமை பக்தர்களும் இருக்கிறார்கள்.
சுந்தர மகாலிங்கத்தின் பாணம் ஏன் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது? தாக்கப்பட்டாரா? தடியடி வாங்கினாரா? என்ன காரணம்?
சுந்தர மகாலிங்கத்தின் அருளைப் பெறுவதற்குத் தயாராகுங்கள்!
|
Friday, 8 September 2017
சதுரகிரி யாத்திரை! - 9
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment