அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டு, சுந்தரானந்தரால் பூஜிக்கப் பட்ட ஸ்ரீசுந்தரமூர்த்தி லிங்க சொரூபத்தை சென்ற இதழில் தரிசித்தோம். இந்த சந்நிதியைத் தாண்டி, சில படிகள் ஏறிச் சென்றால், இடப் பக்கம் அடுத்து நாம் தரிசிப்பது ஸ்ரீசுந்தர மகாலிங்கம். இவர்தான் சதுரகிரியின் நாயகன். மகாலிங்க மலையின் அதிபதி. சித்தர்கள் வணங்கும் செந்நிற மேனியன். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பழைமையான பக்தர்கள் சிலர் இவரை 'ஸ்ரீமகாலிங்கம்' என்றும் சொல்கிறார்கள். எனினும், தற்போது வழக்கில் உள்ள 'ஸ்ரீசுந்தர மகாலிங்கம்' என்ற பெயரிலேயே நாம் பார்ப்போம்.
மலைக்கு மேல் எத்தகைய ஒரு பொருளுக்கும் வழி இல்லை என்று அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறோம். கட்டடம் கட்டும் பொருளாகட்டும்; அபிஷேகப் பொருளாகட்டும்; உண்ணும் பொருளாகட்டும்; தங்குவதற்கு உதவும் பொருளாகட்டும். எதுவாக இருந்தாலும் கீழே தாணிப்பாறையில் இருந்தோ, மலையின் பிற பகுதிகளான சாப்டூரில் இருந்தோ, வருஷ நாடு பகுதியில் இருந்தோதான் மேலே சதுரகிரிக்கு வர வேண்டும். வந்து செல்லும் பக்தர்களுக்கு மலையில் அன்னதானம் வழங்கும் ஓரிரு இடங்கள் தவிர, மற்ற எதற்கும் வசதிகள் இல்லை. எத்தகைய ஒரு வசதியையும் எதிர்பார்த்து பக்தர்கள் சதுரகிரிக்குப் பயணிக்கக் கூடாது. தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே எடுத்துச் செல்ல வேண்டும்.
மலையின் எந்தப் பகுதியிலும் மின்சார வசதி கிடையாது. இரவானால் இருட்டுதான். ஆனால், இறைவனின் அருள் ஒளி எந்நேரமும் உண்டு. விசேஷ தினங்களில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவி கொண்டு மின்விளக்குகளை ஒளிர விடுகிறார்கள். இதற்கான டீசலும் கீழே இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது.
சதுரகிரி ஏறி முடித்து மேலே சென்றதும், துவக்கத்தில் அமைந்துள்ள பிலாவடி கருப்பர் மற்றும் சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீசுந்தரமூர்த்தி ஸ்வாமி சந்நிதி ஆகியவற்றைக் கடந்த இதழ்களில் தரிசித்தோம். இப்போது ஸ்ரீசுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கப் போகிறோம் (சந்தன மகாலிங்கம் சந்நிதியைப் பின்னால் தரிசிக்க இருக்கிறோம்)
மணிகளின் இசையோடு சங்கொலியும் சேர்ந்து கொள்ள... இந்த மலை தெய்வங்களை தரிசிக்கும்போது ஏற்படும் சிலிர்ப்பே அலாதி. அந்த பக்தியின் தன்மையைச் சொற்களால் வர்ணிக்க முடியாது; அடைந்த சுகத்தை விளக்க முடியாது. அனுபவித்துப் பார்த்தால்தான் அத்தனையும் விளங்கும். நகர நாகரிகத்தின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் - புகை இல்லாமல் - இரைச்சல் இல்லாமல் - இட நெருக்கடி இல்லாமல் - இந்த தெய்வங்களை உளமார தரிசிக்கும்போது அந்த சந்நிதிகளின் சாந்நித்தியத்தை நம்மால் உணர முடிகிறது. உற்சாகம் பெற முடிகிறது.
இயற்கையும் இறைவனும் தந்த கொடையான சதுரகிரியில், இந்த அமைதியும் ஆச்சரியங்களும் என்றென்றும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல அந்த மகாலிங்கம் பூரண அருள் புரியட்டும். இனி, ஸ்ரீசுந்தர மகாலிங்கத்தைப் பார்ப்போம்.
தனக்கு இடப் புறம் சாய்ந்து, தலையில் வெட்டுப்பட்டு நமக்கு தரிசனம் தரும் ஸ்ரீசுந்தர மகாலிங்கம், சுயம்பு வடிவம். பாணத்தின் உயரம் சுமார் ஒண்ணரை அடி இருக்கும். உச்சந்தலையில் ஒரு வெட்டு (பாணப் பகுதியில் ஒரு பிளவு தெரிகிறது). நெற்றிப் பட்டையுடன், சந்தனம் துலங்கும் மேனியுடன், நாகாபரணப் பின்னணியுடன், மலர்களின் வாசனையும் சாம்பிராணியின் புகையும் சேர்ந்து சந்நிதியே மணக்கிறது. அந்த சங்கமமே இனிக்கிறது. சாதாரணமாக, பிற ஆலயங்களில் காணப்படும் கருவறை, அர்த்த மண்டபம் இவை இரண்டும் சேர்ந்த ஒரே அமைப்பு இங்கு காணப்படுகிறது. அதற்குள் ஸ்ரீசுந்தர மகாலிங்கம் லிங்க சொரூபமாக வீற்றிருக்கிறார்.
இவருக்கு முன்புறம் 'ஷீட்' போடப்பட்ட மகா மண்டபம். அதற்கு முன்னால் அதே போன்ற இன்னொரு 'ஷீட்' வேயப்பட்ட முன் மண்டபம். உண்டியல்கள்; உபயதாரர்கள் கல்வெட்டுகள். திருவிழா நாட்களில் பக்தர்கள் ஒழுங்கு முறையில் வரிசையாக வந்து தரிசனம் பெற்றுச் செல்வதற்காகக் கம்பித் தடுப்புகள். மலை மேல் இருந்தாலும், நகரத்தில் சகல வசதிகளுடன் உள்ள ஒரு வளமான ஆலயத்தையே இந்த சந்நிதி நினைவூட்டுகிறது. இதற்கான கட்டுமானப் பொருட்களைத் தலையிலும் முதுகிலும் சுமந்து வந்து, சுந்தர மகாலிங்கத்தின் சந்நிதி அமைக்க உதவிய அந்த சுமை தூக்குபவர்களை இப்போது நினைத்தாலும், நெஞ்சார பாராட்டத் தோன்றுகிறது. இறைவன், தான் குடி கொண்டிருக்கும் இடத்தில் தனக்குத் தேவையான வசதிகளைத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான் என்றும் கொள்ளலாம்.
கண்களை மூடி, ஆனந்தத்தைத் தேடி, அருள்வழி நாடி - ஸ்ரீசுந்தர மகாலிங்கத் திருமேனியின் முன் சொற்ப நிமிடங்கள் சப்பணமிட்டு அமர்ந்தால், தேடியது கிடைக்கிறது. நாடியது நம்மிடம் வருகிறது. அமாவாசை, பௌர்ணமி அல்லாத சாதாரண நாட்களில் ஆள் அரவம் இல்லாத இந்த சந்நிதியின் முன்னால், பிரார்த்தித்து நிற்கும் நிமிடங்கள் சந்தோஷத் தருணங்களே! ஆனால், ஒரு விஷயத்தில் கவனம்... அமாவாசை மற்றும் பௌர்ணமி அல்லாத தினங்களில் மலை ஏறுபவர்கள், தகுந்த நபர்களின் துணையுடன் செல்ல வேண்டும். கூட்டமாகச் சென்றால் குறை ஒன்றும் இருக்காது. அதுவும், மகாலிங்கத்தின் பெருமையை மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே செல்லும்போது நேரம் போவதே தெரியாது.
ஸ்ரீசுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கும் முன், இந்த ஈசன் இங்கு உருவான கதையைப் பார்ப்போம்.
கயிலயங்கிரி அன்று விசேஷப் பொலிவுடன் இருந்தது. நஞ்சுண்ட நாயகனும் அவனது நாயகியாகிய பார்வதிதேவியாரும் அலங்காரம் செய்யப்பட்ட தங்களது ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மகேஸ்வரனைத் திளைக்கச் செய்ய விரும்பிய தேவர்களும், கந்தர்வர்களும் அனைத்து வகையான கானங்களையும் பொழிந்து தங்கள் புலமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், வாத்தியங்களின் இசை என கயிலயங்கிரி கோலாகலமாக இருந்தது.
இசைக் கருவிகளை இசைத்து அந்த இமாலய அதிபதியை இன்பத்தில் ஆழ்த்திய அடியார்களுள் ஒருவர்தான் யாழ்வல்ல தேவர் என்பவர். வீணை இசைப்பதில் இவர் தேர்ந்தவர். சுருதிலயம் பிறழாமல், சாம வேத கானம் இசைத்து இறைவனைத் தன்னிலை மறக்கச் செய்து கொண்டிருந்தார். அந்த வேளையில்தான், யாழ்வல்ல தேவருக்கு ஒரு சோதனை, தேவமாது வடிவில் வந்தது. இசை வெள்ளத்தைக் கேட்டு இன்புற்றிருந்த எண்ணற்ற அடியவர்களுள் இந்த தேவமாதும் ஒருவர்.
யாழ்வல்ல தேவரின் வீணை கானத்தைக் கேட்டு தன்னை இழந்த அந்த தேவமாது, காதல் ரசம் சொட்டும் விழிகளுடன் அவரையே பார்த் துக் கொண்டிருந்தாள். தன்னையே ஒரு மாது நெடுநேரமாகக் காதல் மயக்கத்துடன் கவனிப்பதை யாழ்வல்ல தேவரும் உணர்ந்தார். அவள் யாராக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள தன் பார்வையை அவள் மீது பதித்த யாழ்வல்ல தேவரும், பார்த்த மாத்திரத்தில் தன்னை இழந்தார்; கயிலயங்கிரியை மறந்தார்; சுற்றுச்சூழலைத் துறந்தார். இறைவனும், இறைவியும் இருக்கும் வேளையில், தான் என்ன செய் கிறோம் என்பதே தெரியாமல், அந்த தேவமாதின் பார்வையில் இவர் கட்டுண்டு போனார். இருவரின் பார்வையிலும் மின்சாரம் தெறிக்கும் வேளையில்... இறைவன் வெகுண்டார்.
''கயிலையங்கிரிக்கு வந்தும் பந்த- பாசங்களை மறக்காமல், சிற்றின்பத்தில் திளைத்தமையால் நீங்கள் இங்கு வாழத் தகுதி அற்றவர்கள் ஆகிறீர்கள். எனவே, இந்தக் கணமே இருவரும் பூலோகம் செல்லுங்கள். அங்கே தம்பதியராக இருந்து இன்ப சுகங்களை அனுப வியுங்கள். இனி உங்களுக்கு இங்கு இடமில்லை'' என் றார் மகேஸ்வரன், இருவரையும் பார்த்து.
யாழ்வல்ல தேவரும் தேவமாதும் அதிர்ந்து போயினர். இருவரும் இறைவனைப் பணிந்து ஒருமித்த குரலில், ''சர்வேஸ்வரா... நேர்ந்து விட்ட தவறுக்கு வருந்துகிறோம். எங்களுடைய பூர்வ ஜென்ம வினையால் இப்படி ஒரு தண்டனை கிடைத்ததாகக் கருதுகிறோம். தங்களின் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறோம். அதே நேரம், தாங்கள் ஒரு காலகட்டத்தில் எங்களைத் தடுத்தாட்கொள்ள வேண்டும். தங்களின் பாதம் பணிவதே இந்த பாவிகளின் விருப்பம். அருள் வேண்டும் ஈசா'' என்றனர்.
இறைவனின் சங்கல்பப்படி யாழ்வல்ல தேவரும் தேவமாதும் பூலோகத்தில் கோட்டையூர் என்ற இடத்தில் அவதரிக்கும் பேறு பெற்றனர். மூலிகை வனமும் அகத்தியர் பூஜித்த பெருமைக்கு உரியதுமான சதுரகிரிக்கு அருகில் உள்ள ஒரு ஊர்தான் கோட்டையூர். பூஞ்சோலைகளும் சிற்றாறுகளும் நிரம்பிய அழகான பிரதேசம். இயற்கை அழகு இங்கு கொட்டிக் கிடந்தது. மக்கள், வளத்துக்கும் வசதிக்கும் பஞ்சமில்லாமல் வாழ்ந்து வந்தனர்.
கோட்டையூரில் வசித்து வந்த தில்லைக்கோன் என் பவன், இடையர் குலத்தைச் சேர்ந்தவன். சிவ பக்தி மிகுந்தவன். அடியார்களிடம் அன்பு கொண்டவன். ஏராளமான பசுக்களை வைத்து வளர்த்து வந்தான். காமதேனுவின் வடிவாக அவற்றை நித்தமும் பூஜித்து, அவை தரும் பாலைக் கொண்டு தன் வாழ்வை நிம்மதியாக நடத்தி வந்தான். அவனுக்கு வாய்த்த மனைவியின் பெயர் திலகமதி. இந்த இருவருக்கும் மகனாக வந்து பிறந்தார் யாழ்வல்ல தேவர். பிறக்கும் போது பச்சை நிற மேனி கொண்டிருந்ததால், இவர் 'பச்சைமால்' என்று பெயர் சூட்டப்பட்டார்
அதேபோல் தில்லைக்கோனின் தங்கையாகிய சிங்காரமங்கை என்பவளுக்கும் அவளின் கணவன் செங்கமலக்கண்ணன் என்பவருக்கும் எட்டாவது அருமைக் குழந்தையாகப் பிறந்தாள் தேவமாது. இவளுக்கு மூத்த ஏழு பேரும் ஆண் குழந்தைகள். பெண்ணாகப் பிறந்ததும் சிங்காரமங்கையும் செங்கமலக்கண்ணனும் பூரித்தனர். பிறக்கும்போதே இந்த தேவமாதுக்கு சடை போட்டிருந்ததால், 'சடை மங்கை' என அழைக்கப்பட்டாள்.
பச்சைமாலும் சடைமங்கையும் இறைவனின் திருவுளப்படி கோட்டையூரில் கோலாகலமாக வளர்ந்து வந்தனர். வருடங்கள் ஓடின. இறைவன் இவர்களை ஆட்கொள்ள வேண்டாமா? சதுரகிரியில் ஸ்ரீசுந்தர மகாலிங்கம் குடிகொள்ள வேளை வர வேண்டாமா?
வேளையும் வந்தது. இறைவனின் நாடகங்கள் படிப்படியாக அரங்கேறத் துவங்கின.
(அதிசயங்கள் தொடரும்)
|
Friday, 8 September 2017
சதுரகிரி யாத்திரை ! - 10
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment