Friday, 8 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! -11



(தொடர்ச்சி)
மூலவர் ஆகவும், உற்சவர் ஆகவும் மணக்கோலத்தில் சிவபெருமான் விளங்கும் தலம் திருவீழிமிழலை. ‘மாப்பிள்ளை சுவாமி’ இங்கு மிகவும் பிரசித்தம். அப்பர் சுவாமிகள் இவரை, ‘நித்தம் மணவாளன் என நிற்கின்றான் காண்’ என்று போற்றுகிறார். இங்கு கர்ப்பக்கிரகத்தின் வாயிலில் அரசாணைக் கால் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு காத்யாயன முனிவர்- சுமங்கலை தம்பதிக்கு வளர்ப்பு மகளாக அம்பிகை வந்து, காத்யாயினி என்று பெயர் பெற்று சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் சிவபெருமானை மணந்தாள். சித்திரை மாதத்தில் இது பெருந்திருவிழாவாக, இங்கு நடைபெறுகிறது. காத்யாயினி விரதம் இருந்து, சீதை- ராமனையும், ருக்மணி- கிருஷ்ணனையும் அடைந்தனர் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.
காஞ்சி- காமாட்சியம்மை கல்யாணம், திருநெல் வேலி- காந்திமதி அன்னை திருமணம், திருவாரூர்- அல்லியங்கோதைத் திருக்கல்யாணம், திருமறைக்காடு யாழைப் பழித்த இன்மொழியாள் திருமணம், திருவையாறு- அறம்வளர்த்த நாயகி திருக்கல்யாணம், கும்பகோணம்- மங்களநாயகி திருமணம்... என்று இந்தத் திருக்கல்யாணத் திருவிழாக்கள் பல தலங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மணமகளின் கை பற்றி, மணமகன் வேள்விச்சாலை அக்னியை மூன்று முறை வலம் வருதல் வழக்கம். வேள்வி குண்டத்தைச் சுற்றி வந்து மணமகளின் சகோதரன் எடுத்துத் தரும் நெற்பொரிகளை வாங்கி மணமகளும், மணமகனும் சேர்ந்து ஹோம அக்னியில் இடுவது லாஜ ஹோமம் எனப்படுகிறது. அப்போது அக்னி வலஞ் சுழித்து எழுந்தால் நல்ல சகுனம் என்கின்றனர். இவ்வாறு அக்னி குண்டத்தை சிவன்- பார்வதி, கல்யாணத்தில் வலம் வந்த செய்தியையும், பொரிகள் தூவியதையும் திருக்குற்றாலப் புராணம் குறிப்பிடுகிறது. அச்சுதமங்கலம் திருக்கோயில் கோஷ் டத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தர வடிவத்தில் ஹோம குண்டம், அதனை வலம் வரும் கோலத்தில் பெருமான் நிற்பதும், பார்வதிதேவி தன் வலக் காலை எடுத்து வைத்து, அவரைத் தொடர்வதையும் கலை நுணுக்கத்துடன் காட்டியுள்ளனர். காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயத்தில் உள்ள கல்யாணசுந்தரர் வடிவமும் இதே அமைப்புடன் விளங்குகிறது.
காச்யபசில்ப சாஸ்திரம், சில்ப சங்கிரகம், சில்ப ரத்னம், மயமதம், ஸ்ரீதத்வநிதி போன்ற நூல்களிலும் அம்சுமத் பேதாகமம், உத்தரகாமிக ஆகமம், பூர்வ காரணாகமம் போன்ற ஆகம நூல்களில் இந்த மூர்த்தி யின் லட்சணம் கூறப்பட்டுள்ளது.
மணமக்களான சிவபெருமானும், உமாதேவியும் அலங்கரிக்கப்பெற்று கிழக்கு நோக்கி விளங்குவார் கள். திருமால் கன்னிகாதானம் செய்து கொடுப்பார். அவர் உமாதேவியின் சகோதரர் அல்லவா! தம் கரத்தில் தங்கக் கலசத்தில் நீருடன் விளங்குவார். உமாதேவியருக்கு இரு புறமும் சேடியராக ஸ்ரீதேவி- பூதேவி நிற்பர். முன் பக்கம் பிரம்மா அமர்ந்து வேள்வி செய்வார். பின்னணியில் அஷ்ட வித்யேச்வரர், அஷ்டதிக் பாலகர், சித்தர்கள், யட்சர்கள், முனிவர்கள், கந்தர்வர், சப்தமாதர் மற்றும் ஏனையோர் தத்தம் தேவியருடன் கைகூப்பி மகிழ்ச்சி யும் வியப்பும் பொங்க விளங்குவர்.
பதினாறு வயதுடைய செம்மேனி கொண்ட மண மகனான சிவபெருமான் தன் வலக் கரம் நீட்டி உமையம்மையார் திருக்கரம் பற்றியிருப்பார். அவரின் இடக் கரம் வரத ஹஸ்தமாக இருக்கும். அவரின் பின் இரு கரங்களிலும் மானும், மழுவும் விளங்கும். திரிபங்க வடிவில் பெருமான் திகழ்வார். சிரத்தில் ஜடா மகுடமும், பிறையும் சூடி, ஹாரம், கேயூரம், உதர பந்தம், சர்ப்ப குண்டலம் முதலியன அணிந்து விளங்குவார்.
தட்சன் எனும் நாகத்தை இடுப்பிலும், புஷ்கரன் எனும் நாகத்தை மாலையாகவும் அணிந்திருப்பார். உலகன்னை வலக் கரம் நீட்டி பெருமானின் கரம் பற்றியிருப்பார். இடக் கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தியிருப்பார் என்று சிற்ப நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த வடிவில் அம்பிகை, ‘ஸர்வதா மங்களப்ரதாயிநீ!’ எனப்படுகிறார்.
கன்னிகாதான கோலம்:
திருவெண்காடு, திருவான்மியூர் தலங்களில் உள்ள திருமணக் கோலங்களில் பிரம்மன் வேள்வியை நடத்த, திருமால் நீர் வார்க்க, சிவபிரானின் வலக் கரம் மேல் நோக்கி இருக்க, அம்பிகையின் வலப்புற உள்ளங்கை மேல்நோக்கி அமைந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜனின் மனைவி செய்து அளித்த கல்யாணசுந்தரர் வடிவம், கன்னிகாதான கோலமாகும்.
பாணிக்கிரஹண கோலம்:
பாணி- உள்ளங்கை; கிரஹணம்- பற்றுதல். மந்திரங்கள் சொல்லி மணமகள் கையை மணமகன் பற்றிக் கொள்வது, கைத்தலம் பற்றுதல். இதில் சிவபிரானின் வலக் கரம் அம்பிகையின் கரத்தைப் பற்றியிருக்கிறது. அம்பிகையின் இடக் கரம் மலர் ஏந்தியுள்ளது. வடக்காலத்தூர், திருமணஞ்சேரி, திருவாரூர், திருவாவடுதுறை, வேள்விகுடி, திருநல்லம் ஆகிய தலங்களில், பாணிக்கிரஹண கோலத்தில் வடிவங்கள் அமைந்துள்ளன.
எலிபெண்டா, ரதன்பூர், எல்லோரா ஆகிய இடங்களில் கல்யாணசுந்தரர் திருக்கோலத்தைக் காண முடிகிறது. திருவெண்காடு, திருவேள்விக்குடி செப்புத் திருமேனிகள் தஞ்சைக் கலைக்கூடத்தில் உள்ளன. கேரள மாநிலத்தில் கொல்லம் நகரில் உமா மகேச்வரர் ஆலயத்திலும் கல்யாணக் கோலம் உள்ளது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி (சிவ சைலம்), கடையம், ராதாபுரம், சேரகுளம், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் எழுந்தருளியுள்ள அம்பிகைக்குக் ‘கல்யாணி’ என்று பெயர். இவை ஐந்தும் பஞ்சகல்யாணித் திருத்தலங்கள் எனப்படுகின்றன. திருவீழிமிழலையில் சபா மண்டபத்தில் கல்யாணசுந்தரர் எழுந்தருளியுள்ள இடம் ‘கல்யாண சபை’ எனப்படுகிறது.
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப் படுவது, ‘கல்யாணசுந்தர விரதம்.’ அன்று கல்யாணசுந்தர மூர்த்தியை பொன் அல்லது வெள்ளி ஆசனத்தில் அமர்த்தி, திருக்கல்யாண உற்சவம் செய்து திருமணப் பாடல்கள் பாடி வழிபடுகின்றனர். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், நல்ல இடத்தில் திருமணமும், உயர்ந்த இல்லற வாழ்வும், சிறந்த குழந்தைகளும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment