Friday, 8 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 10


ரிஷபாரூடர் - ரிஷப வாகனர்
(தொடர்ச்சி)
சில கோயில்களில் ரிஷபம் பின்புறமோ பக்கத்திலோ நிற்க, சிவபெருமான் தன் இரு கால்களையும் மாற்றி நிற்கும் வடிவில் அவரின் வலது அல்லது இடக் கரம் ரிஷபத்தை அனுக்கிரகிக்கும் கோலத்தில் உள்ளது. இந்த வடிவம், ‘ரிஷபாந்திக மூர்த்தி’ எனப்படும்.


‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தஞ்சமடைய... அவர் தர்ம ரிஷபமாகிய அதன் மீது ஏறிக் கொண்டு, அருள் புரிந்த நிலையே ரிஷபாந்திக மூர்த்தி. தம்மை அன்புடன் வழிபடும் மெய்யடியவர்க்கு சிவபெருமான், தரும தேவதையான அறவெள்விடை (தரும ரிஷபம்) மீது அமர்ந்து காட்சி தந்து அருள் புரிவார் என்பது கருத்து. ரிஷபாரூடர் வடிவம் வேறு; ரிஷபாந்திகர் வடிவம் வேறு என்பது விளங்கும். திருமழிசை, இஞ்சிக்குடி, திருவெண்காடு, வேதாரண்யம், தண்டந்தோட்டம், திருநெல்வேலி மாவட்டம் திருவாலீசுரம் ஆகிய தலக் கோயில்களில் ரிஷபாந்திக மூர்த்தி திருக்கோலம் காணப்படுகிறது.


‘இடபம் ஏறி’, ‘எருதேறி’, ‘விடை ஏறி’, ‘பசு ஏறி’, ‘ஏறு உகந்தேறும் பெருமையான்’, ‘ஆன் உகந்தேறுவான்’ என்றெல்லாம் ரிஷபாரூடர் வடிவத்தைப் போற்றுவர் தேவார மூவர்.

கல்யாண சுந்தரர்

அன்புப் பிணைப்பில்தான் உலகமே உருண்டு வருகிறது. ‘அன்பே சிவம்’ என்பார் திருமூலர். நாம், ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்ந்தால் உலகமே இன்ப மயமாகும். உலகம் இன்புற்றிருக்க இறைவன் எடுத்ததே கல்யாண சுந்தரர் வடிவம். சிவபெருமானை மணக்கோல நாதராக- மணவழகராகப் பார்ப்பதில் நம் மக்களுக்கு எவ்வளவு களிப்பு!


இமவான் மகளான உமாதேவியை, சிவபெருமான் மணம் புரிந்ததை, வராஹ புராணம் காட்டுகிறது. அம்பிகை பர்வதராஜ குமாரியாக அவதரித்து, தவம் செய்து சிவபெருமானை மணம் புரிந்தது சிவ மகாபுராணத்தில் இடம் பெறுகிறது. தட்சனின் மகளாக தாட்சாயணி என்ற பெயரில் பார்வதி, பரமசிவனை மணம் புரிந்ததை கந்த புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி திருவிளையாடற் புராணம் தவிர பல வடமொழி நூல்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் காண்கிறோம். காளிதாசனது குமார சம்பவம், இதை விவரிக்கிறது. சைவத் திருமுறைகள் தமக்கே உரிய பாணியில் இந்தத் திருக்கோலத்தை அழகாகக் காட்டுகின்றன.


சிவபெருமான் திருக்கயிலையில் கல்லால மரத்தின் கீழ் யோகியாக அமர்ந்து அறம் உரைத்திருந்தார். உயிர்கள் செயலற்றுக் கிடந்தன. பிரம்மா, விஷ்ணு மற்றும் விண்ணோர் அனைவரும், உலக உயிர்கள் போக நுகர்ச்சியில் தலைப்பட்டு இன்புறுமாறு செய்தருளல் வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பித்து வேண்டினர். உயிர்கள் இன்புறுதற் பொருட்டும், உலகில் நல்லற வாழ்வு நடைபெறுதல் வேண்டியும், சிவபெருமான் மலைமகளைத் திருமணம் செய்தருளினார்.


அமர காதலரான சிவ- சக்தியின் பேரன்பை உலக உயிர்கள் பெற்று மகிழ இறைவனது திருமணக் காட்சி ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா! ஞான வடிவான இறைவியை, சத்திய வடிவான இறைவன் கூடுவதையே இறைவன் திருக்கல்யாணம் என்கிறோம். சத்தியமும், ஞானமும் இணையும்போது ஆனந்தம் கிட்டுகிறது. சத்- சித்- ஆனந்தம் அதுதான்!


அன்று குமரன் தோன்ற வேண்டும்; சூரபதுமன் முதலானோர் அழிய வேண்டும் என விண்ணோர் முறையிட்டனர். இறைவன்- இறைவி திருமணக் காட்சியை கயிலையில் நாம் காணும் பேறு பெறவில்லை. அந்தக் குறை நீக்கிட, ஆலயம் தோறும் இறைவனது திருமணக் காட்சியைக் காணும் வாய்ப்பு நமக்கு உள்ளது பெரும் பேறாகும். ‘இறைவன் நித்தம் மணாளர்! நிரம்ப அழகியர்! நம் சித்தத்திருப்பார்...’ என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர். அருட் சக்தியோடு சிவம் கலந்தால்தானே உலகம் இயங்கும். இதுவே இறைவன் திருமணத் தத்துவம்!



கயிலையில் எம்பெருமானது திருக்கல்யாணம் காணப் பெருங்கூட்டம். வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்து விடவும், புவியைச் சமநிலைக்குக் கொண்டு வர அகத்திய முனிவரை தென்திசை செல்லுமாறு பரமன் பணித்தார். திருமணக் காட்சி காணும் பேறு தமக்குக் கிட்டவில்லையே என வருந்திய குறுமுனிக்குத் திருக்குற்றாலத்தில் அதைக் காட்டினார் பரமன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் (டெலிவிஷனில்) பார்த்தவர் நம் அகத்திய முனிவர்தான்! திருக்குற்றாலத் தல புராணத்தில் திரிகூடராசப்ப கவிராயர் இந்தக் காட்சியைக் காட்டுகிறார்.


எங்கும் நிறைந்த சிவபெருமான் தலங்கள் தோறும் தனிப் பெயர் கொண்டு திகழ்வது போல், இறைவியும் விளங்குகிறாள். ஒவ்வொரு தலத்திலும் சிவன்- சக்தி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுவதைக் காண்கிறோம். அடியார் கண்டு வழிபட, இந்தத் திருமண விழா ஒன்றையன்று விஞ்சுவதாக அமைந்துள்ளன. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது, கள்ளழகர் மீனாட்சி திருமணத்துக்குப் புறப்பட்டு, வைகையாற்றில் இறங்குவதும், கல்யாண வைபவங்களும் இன்றும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. பாண்டியப் பேரரசன் மகளாக அவதரித்த, தடாதகைப் பிராட்டியான அங்கயற்கண்ணி, சோம சுந்தரப் பெருமானைக் கரம் பற்றிய கல்யாண விழா காண அங்கே கூடும் பக்தர்கள் பல கோடி! கள்ளழகர் நீர் வார்க்க, சுந்தரனை மீனாட்சி கைப்பற்றிய காட் சியை திருவிளையாடற்புராணம் காட்டுகிறது.


கௌதமர், மதங்கர், அத்ரி, காத்யாயனர், பரதர் ஆகிய முனிவர்களுக்கு மகளாகத் தோன்றி வளர்ந்த அம்பிகை, சிவபெருமானை மணம் புரிந்ததை புராணங்களில் காண்கிறோம். திருத்துருத்தி என்ற தலத்தில் பரத மகரிஷிக்கும், சுபத்திரை அம்மைக்கும் யாகத் தீயில் பார்வதிதேவி குழந்தையாகத் தோன்றினாள்.

மங்கைப் பருவம் எய்திய உமையம்மை, சிவபெருமானை துதித்தாள். சிவபெருமானும் அவளை மணக்க விழைந்து ரிஷப வாகனத்தில் புறப்படும் முன், கயிலை மலைச் சாரலில் தவம் செய்யும் உத்தால மரம் ஒன்றை, தமக்கு உமையுடன் திருமணம் நடக்கும் இடத்துக்கு நிழல் தந்தவாறு பின்னே வருமாறு பணித்தார். சிவபிரான் சிவ கணங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு காவிரிக் கரையில் உள்ள திருத்துருத்தியை அடைந்தார். பரத முனிவரும், சுபத்திரையும் அவர்களை எதிர்கொண்டு மணப்பந்தலுக்கு அழைத்துச் சென்றனர். திருமகள், கலைமகள் புடைசூழ மணப்பெண் ‘நறுஞ்சாந்து இளமுலையாளை’ சிவபிரான் வலப் பக்கத்தில் அமர்த்தினர். வேதங்கள் முழங்க வேள்வி நடத்தி முறைப்படி அம்பிகையை மணந்தார். பரத முனிவர்- சுபத்திரை வேண்டுகோள்படி அங்கேயே திருமணக் கோலத்துடன் பெருமான் காட்சியளித்தார்.
அம்பிகையாகத் தோன்றியதும், திருக்கல்யாணம் முடிந்ததும் சிவலிங்கத்துள் அவள் மறைந்ததுமான நிகழ்ச்சிகள் நடந்த திருத்துருத்தி எனும் உத்தால விருட்சத் தலம், தற்போது குத்தாலம் எனப்படுகிறது. இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. அம்பிகைக்கு மண நீராட்டு செய்து கங்கணம் அணிவித்து, மண வேள்வி செய்த இடம் வேள்விக்குடி. தேவர்கள், சிவபெருமானை எதிர்கொண்டு அழைத்த இடம் எதிர்கொள்பாடி. திருமணம் நடந்து தேவர்களுக்கு அருள் புரிந்த இடம் திருமணஞ்சேரி... என்று சுற்றியுள்ள தலப் பெயர்கள் வந்த வரலாறு, திருத்துருத்தி தல புராணத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment